டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா

Go down

டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா  Empty டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா

Post by இறையன் on Sat Jun 15, 2013 12:46 pm

              நகரமொன்றில் செருப்பு தைக்கும் மனிதன் ஒருவன் வாழ்ந்தான். அவனுடைய பெயர் மார்ட்டின் அவ்டேயிச். ஒரு கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் அவனுக்கு ஒரு சிறிய அறை இருந்தது. அதன் ஒரு ஜன்னல் வழியாக தெருவைப் பார்க்கலாம். அதன் வழியாக தெருவில் நடந்து செல்பவர்களின் பாதங்களை மட்டும் ஒருவர் பார்க்கலாம். ஆனால், காலணிகளை வைத்தே மனிதர்களை அடையாளம் கண்டு பிடித்து விடுவான் மார்ட்டின். அவன் அந்த இடத்தில் நீண்ட காலமாக வசிப்பதால், ஏராளமான மனிதர்களை அவனுக்கு பழக்கமுண்டு. அங்கிருப்ப வர்களின் காலணிகளில் ஒன்றோ இரண்டோதான் அவன் கைபடாதவைகளாக இருக்கும். அதனால் ஜன்னல் வழியாக அவன் தன்னுடைய கைத்தொழிலின் நேர்த்தியை காலணிகளில் பார்க்கிறான் என்றுதான் அர்த்தம். அவற்றில் சில காலணிகளை அவன் நேரடியாகச் செய்திருப் பான். சிலவற்றை ஒட்டு போட்டிருப்பான். சிலவற்றைத் தைத்திருப் பான். வேறு சில காலணி களுக்கு அவன் புதிதாக மேற்பகுதி அமைத்துத் தந்திருப்பான். அவன் எவ்வளவோ  காலணி களைச் செய்திருக்கிறான். அவன் எப்போதும் செய்யும் தொழிலை ஒழுங்காகச் செய்வான். நல்ல  தரமான பொருட்களை பயன் மார்ட்டின் எப்போதும் ஒரு நல்ல மனிதனாகவே இருந்து வந்திருக்கிறான்.  எனினும், வயது அதிகமாகி விட்டதால் அவன் தன்னுடைய ஆன்மாவைப் பற்றியும் கடவுளிடம் நெருங்கிச் செல்வதைப் பற்றியும் அதிகமாகச் சிந்திக்க ஆரம்பித்தான். தான் தனியாகத்  தொழில் பண்ணாமல் வேறொரு முதலாளிக்குக் கீழே பணியாற்றும்பொழுதே அவனுடைய மனைவி மூன்று வயதுள்ள ஒரு பையனை அவனிடம் விட்டுவிட்டு இந்த உலகை விட்டுப்போய் விட்டாள். அவனுடைய மூத்த குழந்தைகள் யாரும் உயிருடன் இருக்கவில்லை. அவர்கள் எல்லாரும் சிறு குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார்கள்.  முதலில் சிறு வயது மகனை ஊரிலிருக்கும் தன்னுடைய தங்கையின் வீட்டிற்கு அனுப்பி வைக்கத்தான் மார்ட்டின் நினைத்தான். ஆனால், பையனைப் பிரிந்து இருப்பதற்கு அவன் மிகவும் கவலைப்பட்டான். அவன் நினைத்தான்: "அறிமுகமில்லாத அந்தக் குடும்பத்துல போய் வளர்றதுன்றது என் சின்னப் பையனுக்கு உண்மையிலேயே ரொம்பவும் கஷ்டமான விஷயம்தான். அவனை என் கூடவே நான் வச்சிருக்குறதுதான் சரி...'

மார்ட்டின் தன் முதலாளியை விட்டு விலகி தன்னுடைய சிறு மகனுடன் தனியே வசிக்கக் கிளம்பினான். ஆனால், அவனுக்கும் பிள்ளைக்கும் சிறிதுகூட அதிர்ஷ்டம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தச் சிறுவன் படிப்படியாக வளர்ந்து ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்து தன் தந்தை மகிழும் வண்ணம் அவனுக்குத் தொழிலில் பக்கபலமாக இருக்கும் நிலையை அடைந்திருக்கும் நேரத்தில் கடுமையான காய்ச்சல் வந்து அவனை பாதிக்க, அவன் ஒருநாள் மரணமடைந்து விட்டான். மார்ட்டின் தன் மகனை மண்ணில் புதைத்தான். அதற்குப் பிறகு வாழ்க்கைமீதே அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. எந்த விஷயத்திற்கும் அவன் சந்தோஷப்படுவதில்லை. கடவுளுக்கு எதிராக அவன் மனதிற்குள் முணுமுணுத்தான். மனம் முழுதும் கவலையுடன் அவன் கடவுளைத் திரும்பத் திரும்ப பிரார்த்தனை செய்தபடி இருப்பான். தான் அன்பு செலுத்திய தன்னுடைய ஒரே மகனின் உயிரை எடுத்துவிட்டு, வயதான மனிதனான தன்னை ஏன் உலகில் இன்னும் வாழவைக்க வேண்டும், தன்னையும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று அவன் கடவுளிடம் கேட்டான். அதற்குப் பிறகு மார்ட்டின் தேவாலயத்திற்குப் போவதை நிறுத்திக் கொண்டான்.

ஒருநாள் மார்ட்டினின் பூர்வீக கிராமத்தைச் சேர்ந்த- கடந்த எட்டு வருடங்களாக புனிதப் பயணம் போய்க் கொண்டிருக்கும்  ஒரு வயதான மனிதர் ட்ராய்ட்சா மடத்திலிருந்து வரும் வழியில் அங்கு வந்தார். மார்ட்டின் மனம் திறந்து தன்னுடைய எல்லா கவலைகளையும் கூறினான்.

""எனக்கு இனிமேல் இந்த உலகத்துல வாழவே பிடிக்கல.'' அவன் சொன்னான்: ""நான் கடவுள்கிட்ட கேட்கணும்னு நினைக்கிறது ஒண்ணே ஒண்ணுதான். நான் சீக்கிரம் சாகணும். எந்தவித நம்பிக்கை யும் இல்லாம நான் இப்போ இந்த உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கேன்.''

அதைக் கேட்டு அந்த வயதான மனிதர் சொன்னார்: ""இப்படி யெல்லாம் மனம் போனபடி பேசுறதுக்கு உனக்கு உரிமையே இல்ல, மார்ட்டின். நாம கடவுளோட செயல்களைப் பற்றி தீர்மானிக்கவே முடியாது. நாம அதைப் பற்றி எந்தவித அர்த்தமும் சொல்லக் கூடாது. அவர் தீர்மானிக்கிறாரு. நடக்குது. அவ்வளவுதான். உன் மகன் மரணத்தைத் தழுவி, நீ உயிரோட இருக்கணும்ன்றது கடவுளோட விருப்பம்னா, அப்படித்தான் நடக்கும். நீ உன் சொந்த சந்தோஷத்தை நினைக்கிறே. அதனாலதான் இந்த வெறுமை தோணுது!''

""அப்படின்னா ஒரு மனிதன் எதுக்காக வாழணும்?'' மார்ட்டின் கேட்டான்.

""கடவுளுக்காக, மார்ட்டின்.''  அந்த வயதான மனிதர் சொன்னார்: ""அவர்தான் உனக்கு வாழ்கைன்ற ஒண்ணைத் தர்றாரு. அவருக்காக நீ வாழ்ந்துதான் ஆகணும். அவருக்காக வாழப் பழகிட்டா, உனக்கு எந்தவித வருத்தங்களும் மனசுல உண்டாகாது. எல்லா விஷயங்களும் உனக்கு சாதாரணமானதா தெரியும்.''

மார்ட்டின் அமைதியாக இருந்தான். பிறகு கேட்டான்: ""கடவுளுக்காக ஒரு மனிதன் வாழுறதுன்னா எப்படி?''


அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார்: ""ஒரு மனிதன் கடவுளுக்காக வாழுறது எப்படின்றதை கிறிஸ்துவே நமக்குக் காட்டியிருக்காரு. அதை நீ படிச்சிருக்கியா? இல்லைன்னா புனித நூல்களை வாங்கிப் படிச்சுப்பாரு. கடவுள் எப்படி உன்னை வாழ வச்சுக்கிட்டு இருக்காருன்றதை நீ தெரிஞ்சுக்கலாம். உனக்கு என்னவெல்லாம் தெரியணுமோ, அவை எல்லாமே அந்த நூல்கள்ல இருக்கு!''

அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மார்ட்டினின் இதயத்திற்குள் ஆழமாக நுழைந்தன. அன்றே அவன் போய் தனக்கென்று பெரிய அளவில் இருந்த ஒரு புனித நூலை வாங்கிக் கொண்டு வந்து படிக்க ஆரம்பித்தான்.

முதலில் விடுமுறை நாட்களில் மட்டும் அதைப் படிக்க வேண்டும் என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால், படிக்க ஆரம்பித்தவுடன் தன்னுடைய மனம் மிகவும் எளிமையாக இருப்பதைப்போல் உணர்ந்ததால் தினந்தோறும் அதைப் படிப்பது என்ற முடிவுக்கு அவன் வந்தான். சில நேரங்களில் அவன் படிப்பதில் மிகவும் ஆழமாக மூழ்கி விடுவான். நூலில் முழு கவனமும் இருக்கும்போது விளக்கில் இருக்கும் எண்ணெய் தீர்ந்து விளக்கு அணைந்துபோன சம்பவம்கூட நடந்ததுண்டு. தினமும் இரவு நேரங்களில்  தொடர்ந்து அவன் அதைப் படித்தான். அந்த நூலை மேலும் படிக்கப் படிக்க, அவனிடமிருந்து கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும், தான் கடவுளுக்காக எப்படி வாழ்வது என்பதையும் தெளிவாக அவன் புரிந்து கொண்டான். அவனுடைய இதயம் நூலைப் படிக்கப் படிக்க மென்மையாகிக் கொண்டே வந்தது. முன்பெல்லாம் படுக்கைக்குத் தூங்கச் செல்லும்போது கனமான இதயத்துடன்தான் அவன் செல்வான். தன்னுடைய இறந்துபோன சிறு மகனை மனதில் நினைத்து நினைத்து புலம்பிக் கொண்டிருப்பான். ஆனால், இப்போது அவன் வாய் திரும்பத் திரும்ப முணுமுணுப்பது இதைத்தான்: "எல்லாப் புகழும் உமக்கே, எல்லாப் புகழும் உமக்கே, கடவுளே! நீர் நினைச்சா எல்லாம் நடக்கும்.'

அந்த நேரத்திலிருந்து மார்ட்டினின் முழு வாழ்க்கையும் மாறி விட்டது. முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் அவன் உணவு விடுதிக்குச் சென்று தேநீர் அருந்துவான். ஒன்று அல்லது இரண்டு வேளை வோட்கா அருந்துவான். சில நேரங்களில் யாராவதொரு நண்பருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, மனதில் உண்டான உற்சாகத்தில் முட்டாள்தனமாக ஏதாவது உணவு விடுதியில் மற்றவர்களிடம் உளறிக் கொண்டிருப்பான். யாரையாவது பார்த்து தேவையில்லாமல் கத்துவான். இல்லாவிட்டால் திட்டுவான். இப்போது அப்படிப்பட்ட எல்லா விஷயங்களும் அவனிடமிருந்து முழுமையாக விலகிப் போய் விட்டன. அவனுடைய வாழ்க்கை அமைதியானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாறிவிட்டிருந்தது. அவன் காலையில் வேலை செய்ய உட்காருவான். அன்றைய தன்னு டைய வேலை முடிந்துவிட்டால் சுவரிலிருக்கும் விளக்கை கீழே எடுப்பான். அதை மேஜைமீது வைத்துவிட்டு அலமாரியிலிருந்து நூலை எடுத்துத் திறந்து படிக்க உட்கார்ந்து விடுவான். அவன் அந்த நூலை அதிகமாகப் படிக்கப் படிக்க, பல விஷயங்களையும் பற்றி அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. தன்னுடைய மனம் தெளிவானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருப்பதை அவனே உணர்ந்தான்.

ஒருநாள் இப்படித்தான் மார்ட்டின் இரவு நேரத்தில் உட்கார்ந்து நூலில் முழுமையாக மூழ்கிப் போயிருந்தான். அவன் லூக்கா எழுதிய வேத நூலைப் படித்துக் கொண்டிருந்தான். அதன் ஆறாவது அத்தியாயத்தில் இந்த வார்த்தைகள் இருந்தன: "உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் நீ அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டு. உன்னிடமிருந்து ஒருவன் அங்கியை எடுத்தால், அவனுக்கு உன்னுடைய கோட்டையும் கொடுத்துவிடு. யார் உன்னி டம் கேட்டாலும், நீ கொடு. உன்னிடம் இருக்கும் பொருட்களை யாராவது எடுத்தால், அதை அவர்களிடம் திருப்பிக் கேட்காதே. மற்றவர்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கி றாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்.'

அவன் கடவுள் கூறுவதாக வரும் இந்த வார்த்தைகளையும் படித்தான்:


"என்னை கடவுள் கடவுள் என்று அழைக்கிறாய். ஆனால் நான் சொன்னபடி நீ நடக்கிறாயா? எவன் என்னிடம் வந்து, நான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கிறானோ, அவன் எப்படிப் பட்டவன் என்பதை உனக்கு நான் கூறுகிறேன். மிகவும் ஆழமாகத் தோண்டி பாறையில் அடித்தளம் அமைத்து ஒரு வீட்டைக் கட்டியவன் போன்றவன் அவன். வெள்ளம் மேலெழுந்து நீர் பயங்கர வேகத்துடன் அந்த வீட்டின்மீது மோதுகிறபோது, அந்த வீடு சிறிதும் நிலை குலையாது கம்பீரமாக நின்றிருக்கும். காரணம்- அந்த வீடு பாறைமீது கட்டப்பட்டிருப்பதே. அதே நேரத்தில் நான் கூறும் வார்த்தைகளை வெறுமனே கேட்டுவிட்டு வாழ்க்கையில் அதன்படி நடக்காதவன் மணலில் அடித்தளமில்லாமல் வீட்டைக் கட்டிய ஒரு மனிதனைப் போன்றவன் என்கிறேன் நான். நீர் பலமாக அந்த வீட்டின்மீது மோதுகிறபோது, அது உடனடியாகக் கீழே சரிந்து விடுகிறது. அந்த வீட்டின் இழப்பு உண்மையிலேயே மிகப்பெரியதாக இருக்கும்!'


மார்ட்டின் இந்த வார்த்தைகளைப் படித்தபோது, தன்னுடைய மனம் மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதை அவன் உணர்ந்தான். அவன் தன்னுடைய கண்ணாடியைக் கழற்றி நூலின்மீது வைத்து விட்டு, தாடையை மேஜைமீது வைத்து தான் படித்ததைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். நூலில் இருந்த வரிகளுடன் தன்னுடைய சொந்த வாழ்க்கையை இணைத்துப் பார்த்த அவன் தனக்கு தானே கேட்டுக் கொண்டான்:

"என் வீடு பாறைமீது கட்டப்பட்டதா? மணல்மீது கட்டப் பட்டதா? பாறைமீது கட்டப்பட்டதா இருந்தா, உண்மையிலேயே அது ஒரு நல்ல விஷயமாக இருக்கும். இப்படி தனியா உட்கார்ந்து ஒரு மனிதன் கடவுள் சொன்ன கட்டளைகள்படி நாம வாழ்ந் திருக்கிறோமான்றதை நினைக்கிறது சந்தோஷமான விஷயம்தான். நான் அப்படி நினைக்கிறதை எப்போ நிறுத்திடுறேனோ, அப்போ நான் திரும்பவும் பாவம் செய்ய ஆரம்பிச்சிடுவேன். இதை மனசுல பதிய வச்சுக்கிட்டு நான் வாழ்க்கையை நடத்தணும். எனக்கு உதவிசெய்யும், கடவுளே!'

அவன் இப்படி பல விஷயங்களையும் நினைத்துக் கொண்டே படுக்கையை நோக்கி நடந்தான். ஆனால், வேதநூலை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. அதனால் அந்நூலை எடுத்து அதன் ஏழாவது அத்தியாயத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். விதவையின் மகனைப் பற்றியும், ஜானின் சீடர்களுக்கு கூறப்பட்ட பதில்களும் அதில் இருந்தன. ஒரு பணக்கார மதவாதி கடவுளைத் தன்னுடைய வீட்டுக்கு அழைக்கும் பகுதியை அவன் படித்தான்.  பாவம் செய்த ஒரு பெண் கடவுளின் பாதங்களைத் தொட்டு அவற்றை எப்படி அவள் தன் கண்ணீரால் கழுவினாள் என்பதையும், அவர் எப்படி அவளுக்கு ஆறுதல் கூறினார் என்பதையும் அவன் படித்தான். நாற்பத்து நான்காவது வசனம் வந்தபோது அவன் படித்தான்:

""அந்தப் பெண் இருக்கும் திசையைத் திரும்பிப் பார்த்த அவர் சைமனைப் பார்த்துச் சொன்னார்: "இந்தப் பெண்ணைப் பார்த் தாயா? நான் உன்னுடைய வீட்டிற்கு வந்தேன். நீ என் கால்களை நீரால் கழுவவில்லை. ஆனால், இவளோ தன் கண்ணீரால் என் கால்களை ஈரமாக்கினாள். அவற்றை தன் தலை முடியால் துடைத் தாள். நீ எனக்கு முத்தம் தரவில்லை. ஆனால், இவள் முத்தம் தந்தாள். நான் இங்கு வந்தவுடன், இவள் என் பாதங்களை முத்தமிடுவதை நிறுத்தவேயில்லை. என் தலையை நீ எண்ணெய்யால் தடவவில்லை. ஆனால், இவளோ என் பாதங்களை களிம்பு கொண்டு தடவினாள்.''

அவன் இந்த வரிகளைப் படித்துவிட்டு நினைத்தான்: "அவன் ஆண்டவரின் பாதங்களை நீரால் கழுவவில்லை. முத்தம் தரவில்லை. தலைக்கு எண்ணெய் தேய்த்து விடவில்லை...' மார்ட்டின் தன் கண்ணாடியைக் கழற்றி நூலின்மீது வைத்துவிட்டு தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தான்.

"அந்த மதவாதி என்னை மாதிரி ஒரு ஆளா இருக்கணும். அவன் எப்பவும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கக்கூடிய ஆளா இருந்திருக்கணும். ஒரு கோப்பை தேநீரை எப்படி அடையிறது, எப்படி குளிர்ல இருந்து விடுபட்டு உடம்பை கதகதப்பா வச்சிக் குறது, எப்படி வசதியா இருக்குறது... இப்படி... அவன் தன்னோட விருந்தாளியைக் கொஞ்சம்கூட மனசுல நினைக்கவேயில்ல... அவன் தன்னைப் பற்றி மட்டுமே நினைச்சான். வந்திருந்த விருந்தாளியைப் பற்றி சின்ன அளவுலகூட அக்கறை எடுத்துக்கல. அப்படி வந்திருந்த விருந்தாளி யார்? சாட்சாத் கடவுள்! அவர் என்னைத் தேடி வந்தா, நான் அதே மாதிரிதான் நடப்பேனா?'

மார்ட்டின்  தன் தலையை இரண்டு கைகள்மீதும் வைத்துக் கொண்டு தன்னை மறந்து அப்படியே தூங்கிவிட்டான்.

""மார்ட்டின்...!'' ஒரு குரல் கேட்டது. அவனுடைய காதுக்கு மிகவும் அருகில் யாரோ தன் பெயரைச் சொல்லி அழைப்ப தைப்போல் அவன் உணர்ந்தான்.

தூக்கத்திலிருந்து விடுபட்ட அவன் கேட்டான்: ""யார் அங்கே?''

அவன் சுற்றிலும் பார்த்துவிட்டு, கதவைப் பார்த்தான். யாரும் அங்கு இல்லை. அவன் மீண்டும் குரல் எழுப்பினான். அந்தக் குரல் இப்போது முன்பிருந்ததைவிட தெளிவாகக் கேட்டது: ""மார்ட்டின்! மார்ட்டின்! நாளைக்கு தெருவைப் பார்த்துக்கிட்டே இரு. நான் வருவேன்!''

அவ்வளவுதான்- உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு மார்ட்டின் எழுந்தான். தன் கண்களை அவன் கசக்கி விட்டான். தான் கேட்ட அந்தக் குரல் வந்தது கனவிலா அல்லது உண்மையான விழிப்பு நிலையிலா என்பதில் அவனுக்கு ஒரு குழப்பம் உண்டானது. அவன் விளக்கை அணைத்துவிட்டு தூங்க ஆரம்பித்தான்.

மறுநாள் காலையில் வெளிச்சம் வருவதற்கு முன்பே அவன் படுக்கையை விட்டு எழுந்தான். பிரார்த்தனைகளைச் சொல்லிவிட்டு நெருப்பை எரிய வைத்து முட்டைக் கோஸ் சூப்பையும், கோதுமைக் கஞ்சியையும் தயாரித்தான். பிறகு கனப்பை எரிய வைத்துக் கொண்டு மேலங்கியை அணிந்து ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கினான். வேலை செய்யும்போது நேற்று இரவு என்ன நடந்தது  என்பதைப் பற்றி அவன் மனதில் நினைத்துப் பார்த்தான். அது ஒரு கனவைப்போல சில நேரங்களிலும், அந்தக் குரல் உண்மையாகவே தான் கேட்டதைப்போல் சில நேரங்களிலும் அவனுக்குத் தோன்றியது. "இப்போ நடந்தது மாதிரியே இருக்கு...' அவன் மனதிற்குள்  சொல்லிக் கொண்டான்.

அவன் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்து வேலை செய்வதைவிட வெளியே தெருவைப் பார்ப்பதிலேயே அதிக கவனத்தைக் கொண்டிருந்தான். இதற்கு முன்பு பார்த்திராத காலணிகளுடன் யார் கடந்து சென்றாலும் அவன் பாதத்தைப் பார்ப்பதோடு நிற்காமல் தலையைத் தூக்கி மேலேயும் பார்த்தான். கடந்து செல்பவர்களின் முகங்களையும் பார்க்கவேண்டும் என்பதே அவன் எண்ணம். ஒரு வீட்டு வேலைக்காரன் புதிய காலணிகளுடன் நடந்து போனான். பிறகு நீர்  எடுத்துக்கொண்டு போகும் ஒரு மனிதன் நடந்து சென்றான். இப்போது நிக்கோலஸ் ஆட்சியின்போது போர் வீரராக இருந்த ஒரு மனிதர் கையில் ஒரு தோண்டியுடன் ஜன்னலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தார்.

அவருடைய காலணிகளை வைத்தே அவர் யார் என்பதை மார்ட்டின் தெரிந்து கொண்டான். அந்தக் காலணிகள் மிகவும் பழமையானதாகவும், அழுக்கடைந்து போயும் இருந்தன. தோல் கொண்டு இங்குமங்கும் அது ஒட்டுப் போடப்பட்டிருந்தது. அந்த வயதான மனிதரின் பெயர் ஸ்டெபானிச். அவர்மீது கொண்ட கருணை காரணமாக அருகிலிருந்த ஒரு வியாபாரி அவரைத் தன் வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதித்திருந்தான். வீட்டு வேலைக் காரனுக்கு உதவியாக இருக்க வேண்டியது அவருடைய வேலை. மார்ட்டினின் ஜன்னலுக்கு முன்னால் படிந்திருந்த பனியை அவர் நீக்கிக் கொண்டிருந்தார். மார்ட்டின் அவரைப் பார்த்துவிட்டு, தன் வேலையில் கவனம் செலுத்தினான்.

"நான் வயசானதுனால பைத்தியக்காரன் மாதிரி ஆயிட்டேன்.'  மார்ட்டின் தன் மன ஓட்டத்தை நினைத்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். ஸ்டெபானிச்  பனியை நீக்க வந்திருக்காரு. ஆனா, கிறிஸ்துதான் என்னைத் தேடி வந்திருக்காருன்னு நான் கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கேன். நான் ஒரு கிழட்டு ஆளுன்றது சரியாத்தான் இருக்கு...'

கிட்டத்தட்ட பன்னிரண்டு தையல்களைப் போட்டு முடித்த பிறகு, அவன் மீண்டும் ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பதிக்க ஆரம்பித்தான். ஸ்டெபானிச் தன் கையில் வைத்திருந்த தோண்டி யைச் சுவரின்மீது சாய்த்து வைத்துவிட்டு ஓய்வு எடுக்கவோ, தன்னை கதகதப்பு ஆக்கிக் கொள்ளவோ முயன்று கொண்டிருந் தார். அவர் மிகவும் வயதாகித் தளர்ந்து போய் காணப்பட்டார். அங்கிருந்த பனியை நீக்கும் அளவுக்கு சொல்லப்போனால் அவர் உடம்பில் தெம்பே இல்லை.

"அவரை நான் உள்ளே வரவழைச்சு, தேநீர் கொடுத்தா என்ன?' மார்ட்டின் நினைத்தான். "தண்ணி கொதிக்கிற நிலைமையில இருக்கே!'

அவன் தன்னுடைய ஊசியை அதே இடத்தில் வைத்து விட்டு, எழுந்தான். மேஜைமீது கனப்பை வைத்து, தேநீர் தயாரித்தான். பிறகு ஜன்னலை தன் விரல்களால் தட்டினான். ஸ்டெபானிச் திரும்பி ஜன்னலை நோக்கி வந்தார். மார்ட்டின் அவரை உள்ளே வரும்படி சொன்னதுடன், தானே கதவைத் திறப்பதற்காக நடந்து சென்றான்.

""உள்ளே வாங்க''. அவன் சொன்னான்: ""கொஞ்சம் உடம்பை கதகதப்பு ஆக்கிக்கங்க. நீங்க சரியான குளிர்ல இருந்தீங்கன்னு நினைக்கிறேன்.''

""கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.''  ஸ்டெபானிச் சொன்னார்: ""குளிர்ல என் எலும்பு ஒவ்வொண்ணும் பயங்கரமா வலிக்குது.'' அவர் உள்ளே வந்து முதலில் தன்மீது படிந்திருந்த பனியை உதறினார். கால்களால் நடக்கும்போது தரையில் கறை படிந்தது. அதை நீக்குவதற்காக அவர் பாதங்களைத் தேய்த்தார். அப்போது எங்கே அவர் தடுமாறிக் கீழே விழுந்து விடுவாரோ என்பதைப் போல இருந்தது.

""நீங்க ஏன் சிரமப்படுறீங்க?'' மார்ட்டின் சொன்னான்: ""நான் தரையைத் துடைச்சிக்கிறேன். அது ஒரு பிரச்சினையே இல்ல. வாங்க நண்பரே, உட்காருங்க. கொஞ்சம் தேநீர் குடிங்க.''

இரண்டு குவளைகளில் தேநீரை ஊற்றிய மார்ட்டின் அவற்றில் ஒன்றை விருந்தாளியிடம் தந்தான். தனக்காக  ஊற்றிய குவளையிலிருந்த தேநீரைக் கோப்பையில் ஊற்றிப் பருக ஆரம்பித்தான்.

ஸ்டெபானிச் குவளையைக் காலி செய்தார். பிறகு அதை தலைகீழாகக் கவிழ்த்து வைத்தார். மீதமிருந்த சர்க்கரைக் கட்டியை அதன்மீது வைத்தார். அவர் தன் நன்றியை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். மேலும் சிறிது தேநீர் கிடைக்கும்பட்சம், அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்பது தெரிந்தது.

""இன்னொரு குவளை தேநீர் குடிங்க.'' மார்ட்டின் சொன்னான். மீண்டும் விருந்தாளியின் குவளையையும் தன்னுடைய குவளையையும் அவன் தேநீரால் நிரப்பினான். தேநீரைப் பருகிக் கொண்டிருக்கும் பொழுதே, மார்ட்டின் தெருவையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

""நீங்க யாரையும் எதிர்பார்க்கிறீங்களா?'' விருந்தாளி கேட்டார்.


""நான் யாரையும் எதிர்பார்க்கிறேனா? நீங்க சொல்றது சரிதான். இதை உங்கக்கிட்ட சொல்றதுக்கு எனக்கே வெட்கமா இருக்கு. உண்மையாகவே நான் யாரையும் எதிர்பார்க்காமத்தான் இருந்தேன். ஆனால், நேற்று ராத்திரி நான் கேட்ட குரலை என்னாலே இப்போக்கூட மறக்கவே முடியல. அது உண்மையிலேயே நடந்ததா இல்ல வெறும் கனவான்னு என்னாலேயே சரியா சொல்ல முடியல. இங்க பாருங்க, நண்பரே... நேற்று ராத்திரி நான் வேத நூலைப் படிச்சிக்கிட்டு இருந்தேன். கடவுள் எப்படியெல்லாம் தொல்லை களை அனுபவிச்சார், பூமியில் அவர் எப்படி நடந்தார்னு படிச்சிக் கிட்டு இருந்தேன். அதுல என்ன சொல்லப்பட்டிருக்குன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.''
""அதைப் பற்றி நான் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்.'' ஸ்டெபானிச் சொன்னார்: ""ஆனா, நான் ஒரு அப்பிராணி மனிதன். எனக்கு படிக்கத் தெரியாது.''

""அப்படியா? சரி... நான் அவர் எப்படி பூமியிலே நடந்தார்ன்றதை படிச்சிக்கிட்டு இருந்தேன். அவர் ஒரு மதவாதிக்கிட்ட போறார். அவன் அவரை சரியாவே வரவேற்கல. ஆமா நண்பரே, அந்த ஆளு ஆண்டவரான கிறிஸ்துவை எப்படி முறையான மரியாதையுடன் வரவேற்காம போனான்றதை மனசுல நினைச்சுப் பார்த்தேன். அதே மாதிரி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடந்திருந்தா, நான்  எப்படி நடந்திருப்பேன்னு சிந்திச்சுப் பார்த்தேன். அந்த ஆளு கடவுளை கொஞ்சம்கூட கண்டுக்கல. சரி, நண்பரே... நான் அந்த விஷயத்தை நினைச்சுக்கிட்டே இருந்ததுல, அசந்து போய் தூங்கிட்டேன். என்னை மறந்து தூங்கிக்கிட்டு இருக்குறப்போ, என் பேரைச் சொல்லி யாரோ கூப்பிடுறது மாதிரி இருந்துச்சு. அடுத்த நிமிடம் நான் எழுந்தேன். யாரோ மெதுவா முதல்ல "என்னை எதிர்பார்த்திரு. நாளைக்கு நான் வருவேன்'னு சொன்னாங்க. இப்படி ரெண்டு முறை கேட்டுச்சு. அந்தச் சம்பவம் என் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு. அதுக்காக என் மேலயே எனக்கு வெட்கமா இருக்கு. நான் ஆண்டவரை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்.''

அதைக் கேட்டு ஸ்டெபானிச் அமைதியாகத் தன் தலையை ஆட்டினார். தேநீர் குடித்து முடித்துவிட்டு குவளையை ஒரு ஓரத்தில் கவிழ்த்து வைத்தார். ஆனால், மார்ட்டின் அதை மீண்டும் நேராக வைத்து, அதில் தேநீரை அவருக்காக ஊற்றினான்.

""இன்னும் ஒரு குவளை தேநீர் குடிங்க. ஆண்டவர் எப்படி கால்நடையா நடந்து போனார்ன்றதை நான் நினைச்சுப் பார்த்தேன். அவரை ஒருவர்கூட அடையாளம் கண்டு பிடிக்கல. இவ்வளவுக்கும் அவர் சாதாரண மக்கள் மத்தியில்தான் நடந்து போறாரு. ஏழை மக்கள் இருக்குற இடங்களைத் தேடி அவர் போறாரு. நம்மை மாதிரி இருக்கிற ஆட்கள்ல இருந்து சீடர்களை அவர் தேர்ந் தெடுக்குறாரு. நம்மை மாதிரி தொழிலாளிங்க, பாவம் செய்தவங்க மத்தியில இருந்து... "எவன் ஆணவம் கொண்டிருக்கிறானோ, அவன் அடக்கப்படுவான்... எவன் அடக்கமாக இருக்கிறானோ, அவன் உயர்த்தப்படுவான்'னு அவர் சொல்றாரு. அவர் மேலும் "என்னை நீ ஆண்டவரே என்று அழைக்கலாம்.  நான் உன் பாதங்களைக் கழுவுகிறேன்'னு சொல்றாரு. "எவன் முதலில் இருக்கிறானோ, அவன்தான் எல்லாருக்கும் வேலைக்காரனாக இருக்கிறான். ஏழைகள், அடக்கமானவர்கள், கருணை உள்ளம் கொண்டவர்கள்- இவர்களே ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்'னும் அவர் சொல்றாரு.''

ஸ்டெபானிச் தேநீர் குடிக்க வேண்டும் என்பதையே மறந்து விட்டார். அவர் மிகவும் வயதான மனிதராக இருந்ததால் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்த ஆரம்பித்துவிட்டார். அவர் உட்கார்ந்து மார்ட்டின் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த போது, கண்ணீர் தாரை தாரையாக அவருடைய கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.

""வாங்க... இன்னும் கொஞ்சம் குடிங்க...'' மார்ட்டின் சொன்னான். ஆனால், ஸ்டெபானிச் தன்மீது சிலுவையை வரைந்தவாறு மார்ட்டினைப் பார்த்து நன்றி கூறிவிட்டு, தன்னுடைய தேநீர் குவளையை சற்று தள்ளி வைத்துவிட்டு உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார்.

""நன்றி, மார்ட்டின் அவ்டேயிச்.'' அவர் சொன்னார்: ""நீங்க என் மனசுக்கும் உடலுக்கும் உணவும் ஆறுதலும் தந்திருக்கீங்க.''

""நீங்க இங்கே வந்ததுல எனக்கு ரொம்பவும் சந்தோஷம். மீண்டும் இன்னொரு முறை நீங்க வரணும். இங்கே ஒரு விருந்தாளி வர்றதை நினைச்சு நான் மனப்பூர்வமா சந்தோஷப்படுறேன்...'' மார்ட்டின் சொன்னான்.

அடுத்த நிமிடம் ஸ்டெபானிச் அங்கிருந்து கிளம்பினார். மார்ட்டின் மீதமிருந்த தேநீரை ஊற்றிக் குடித்தான். பிறகு தேநீர் குவளைகளை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு தன் வேலையில் தீவிரமாக அவன் ஈடுபட்டான். ஒரு காலணியின் பின்பகுதியைத் தைக்கத் தொடங்கினான். காலணியைத் தைக்கும்போது ஜன்னலுக்கு வெளியேயும் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். கிறிஸ்து வருவதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனம் கிறிஸ்துவையும், அவருடைய செயல்களையும் நினைத்துக்  கொண்டிருந்தது. கிறிஸ்துவின் சொற்கள் அவனுடைய தலையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.

இரண்டு சிப்பாய்கள் கடந்து போனார்கள். அவர்களில் ஒருவன் அரசாங்க காலணிகளை அணிந்திருந்தான். இன்னொருவன் தன்னுடைய சொந்த காலணிகளை அணிந்திருந்தான். பிறகு அருகி லிருக்கும் ஒரு வீட்டு உரிமையாளர் பளபளக்கும் காலணிகளுடன் நடந்து போனார். அதற்குப் பிறகு ரொட்டிக்காரன் ஒரு கூடையு டன் போய்க் கொண்டிருந்தான். அந்தக் காட்சிகள் ஒவ்வொன்றும் கடந்து சென்றன. பிறகு ஒரு பெண் ஒரு மோசமான நிலையிலிருந்த கால் உறையுடனும் விவசாயி செய்த காலணிகளுடனும் வந்தாள். அவள் ஜன்னலைக் கடந்து, அவருக்குப் பக்கத்தில் வந்ததும் நின்றாள். மார்ட்டின் ஜன்னல் வழியாக அவளைப் பார்த்தான். அவள் தனக்கு இதற்கு முன்பு அறிமுகமில்லாதவள் என்பதை அவன் தெரிந்து கொண்டான். அழுக்கடைந்த ஆடை களை அவள் அணிந்திருந்தாள். அந்தப் பெண்ணின் கைகளில் ஒரு சிறிய குழந்தை இருந்தது. அவள் சுவரோரமாக காற்றுக்கு முதுகைக் காட்டியவாறு நின்றிருந்தாள். குழந்தையைச் சரியாக மூடுவதற்கு எதுவுமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு மூட முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் கோடை காலத்திற்கு அணியக்கூடிய ஆடைகள் மட்டுமே இருந்தன. அவைகூட மிகவும் அழுக்கடைந்து போயும் கிழிந்துபோயும் இருந்தன. ஜன்னல் வழியாக மார்ட்டின் பார்த்தபோது, அந்தச் சிறு குழந்தை அழும் குரல் கேட்டது. அந்தப் பெண் குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சித்தாள். ஆனால், அவளால் முடியவில்லை. மார்ட்டின் எழுந்து கதவைத் திறந்துகொண்டு வெளியே போனான். படியில் நின்றவாறு அவளை அவன் அழைத்தான்:
""பெண்ணே, இங்கே வா.''

அந்தப் பெண் அவன் அழைப்பதைக் கேட்டு இந்தப் பக்கம் திரும்பினாள்.


""குளிர்ல குழந்தையை வச்சுக்கிட்டு ஏன் அங்கே நிக்கிற? உள்ளே வா. வெப்பம் இருக்குற இடமா இருந்தா, நீ அவனை நல்லா போர்த்தி வச்சிக்கலாம். இந்த வழியா வா!''

அங்கியை அணிந்திருக்கும், மூக்கு கண்ணாடி அணிந்த ஒரு வயதான மனிதன் தன்னை அழைப்பதைப் பார்த்து அந்தப் பெண் மிகவும் ஆச்சரியப்பட்டாள். எனினும், அவள் அவனைப் பின்பற்றி உள்ளே வந்தாள்.

அவர்கள் படிகள் வழியே நடந்து உள்ளேயிருந்த சிறிய அறைக்குள் வந்தார்கள். மார்ட்டின் அவளிடம் அங்கிருந்த படுக்கையைக் காட்டினான்.

""அங்கே அந்த அடுப்புக்குப் பக்கத்துல உட்காரும்மா. குளிர் காய்ஞ்சுக்கிட்டே குழந்தைக்குப் பால் கொடு.''

""என்கிட்ட பால் இல்ல. நானே காலையில இருந்து இப்போ வரை எதுவும் சாப்பிடல.'' அந்தப் பெண் சொன்னாள். எனினும், அவள் அந்தக் குழந்தையைத் தன்னுடைய மார்பை நோக்கிக் கொண்டு சென்றாள்.

மார்ட்டின் தலையை ஆட்டினான். அவன் ஒரு பாத்திரத்தையும் கொஞ்சம் ரொட்டியையும் கொண்டு வந்தான். அடுப்பிலிருந்து அந்தப் பாத்திரத்தில் கொஞ்சம் முட்டைக்கோஸ் சூப்பை ஊற்றினான். அடுப்பிலிருந்து அவன் கஞ்சி பாத்திரத்தையும் எடுத்தான். ஆனால், கஞ்சி இன்னும் தயாராகாமல் இருந்தது. அதனால் அவன் மேஜைமீது ஒரு  துணியை விரித்து சூப்பையும் ரொட்டியையும் அதில் வைத்தான்.

""உட்கார்ந்து சாப்பிடும்மா. நான் குழந்தையைப் பார்த்துக்குறேன். எனக்கும் குழந்தைங்க இருந்தாங்க. அதனால குழந்தைகளை எப்படி பார்த்துக்குறதுன்னு எனக்கு நல்லா தெரியும்.''

அந்தப் பெண் தன்மீது சிலுவை வரைந்தவாறு கீழே மேஜைக்கு அருகில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். மார்ட்டின் குழந்தையைப் படுக்கைமீது வைத்து அதற்குப் பக்கத்தில் உட்கார்ந்தான். குழந்தை வாயைச் சப்பிக் கொண்டே இருந்தது. அதற்குப் பற்கள் எதுவும் இல்லாததால், அதற்குமேல் சப்ப முடியாமல், குழந்தை அழ ஆரம்பித்தது. மார்ட்டின் தன் விரலை வைத்து அந்தக் குழந்தையின் அழுக

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

http://tamilan.forumta.net

Back to top Go down

டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா  Empty Re: டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா

Post by கே இனியவன் on Thu Aug 28, 2014 9:58 am

cheers sunny

கே இனியவன்

Posts : 10
Join date : 28/08/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum