தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யோகாசன பயிற்சி-1

Go down

யோகாசன பயிற்சி-1 Empty யோகாசன பயிற்சி-1

Post by இறையன் Mon Jan 02, 2012 10:19 pm

இப்போதைய சமுதாயத்தில் பரபரப்பு, மனஅழுத்தம் என்று எத்தனையோ விடயங்களை அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கான தீர்வு என்ன

என்பது பற்றி சிந்தித்தால் விடாத இறை சிந்தனை மட்டுமே என்று ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு தொடர்ந்து இறைசிந்தனையில் திளைப்பதால் நம்முடன் ஒரு சக்தி உடன் இருப்பது போன்ற உணர்வை பெறுகிறோம். மனது கடினமான நிலையிலிருந்து விடுபடுகிறது.

உடலும், மனமும் ஒன்றுக்கொன்று மிகநெருங்கிய தொடர்பில் இருக்கிறது. மனதில் குழப்பமும், நெருக்கடியான எண்ணங்களும் சூழ்ந்து கொள்ளும் போது உடலானது இயற்கையாகவே சோர்ந்து போகிறது. தொடர்ந்து இது போன்ற நிலை எழும் போது ஒருகட்டத்தில் அது நோயாகவே மாறிப்போகிறது.

இப்போதும் கூட ஒரு நிகழ்வை காணமுடியும். மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள் என்று கூறப்படும் சாலையில் திரியும் நோயாளர்களை கவனிக்க யாரும் இருப்பதில்லை. அவர்களுக்கு நேரத்திற்கு தகுந்த உணவும் இருப்பதில்லை. ஆனாலும் அவர்கள் பெரிதாக நோயால் பாதிக்கப்படாதவர்கள் போல் தான் இருக்கின்றனர். இதற்கு காரணம், அவர்கள் மனதிற்கு பெரிதாக சிந்திக்கும் திறன் இருப்பதில்லை என்பதால் தான் அவர்கள் அவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அனைத்து திறனும் படைத்த சாதாரண வாழ்க்கையில் ஈடுபடும் சராசரி மனிதன் எப்போதும் இயல்பான அமைதியான மனநிலையிலும், நோயற்ற உடலை பெறுவதற்கும் ஒரே வழி யோகசானங்களை பயில்வதும், மனதை செம்மைப்படுத்தும் தியானங்களை கற்றுக் கொள்வதும் தான் என்பதே எப்போதும் தீர்வாக இருக்கிறது.

யோகாசனம் என்பது ஒரு அற்புதப் பயிற்சி. மனோதத்துவப்பயிற்சி என்றும் சொல்லலாம். மனநிம்மதியை இழந்து விடாமல் வாழ்க்கையை அமைதியாகவும், ஒரு ஒழுங்குடனும் சீரான மனநிலையில் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. தவிர்க்க முடியாத நிலையில் உடலில் தோன்றும் நோய்களை அகற்றும் அற்புத மருத்துவ விஞ்ஞானமாகவும் இது இருக்கிறது. கூடவே மனதில் எழும் கெட்ட எண்ணங்களை அகற்றி, மனதை ஒரு நிலைப்படுத்தும் தன்மையும் யோகாசனத்திற்கு உண்டு.

யோகம் என்ற சொல்லுக்கு தமிழில் சரியான பொருள் ஒருங்கிணைத்தல் என்பது. ஆசனம் என்றால் உடலை அமர்த்தும் நிலை. மனிதன் தன்னுள் நிறைந்து கிடக்கும் சக்தியை ஆற்றலை திறனுடன் கண்டு கொள்ளவும், அந்த ஆற்றலை அடக்கியாளக் கற்றுக் கொள்வதும் தான் யோகப்பயிற்சிகளின் மூல நோக்கம். இதே வேளையில் இந்த பயிற்சிகளை செய்யும் போது மனதையும் ஒரு நிலைப்படுத்த முடிகிறது. மூன்றாவதாக, இந்த பயிற்சிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்களை வராமல் தடுத்து விடுகின்றன. யோகசனக்கலை என்பது இந்திய நாட்டில் தான் முதலில் தோன்றியது. முனிவர்களும், சித்தர்களும் தங்களது தியான நிலையில் உறுதியுடனும், உடல் நோய்வாய்ப்படாமலும் இருக்க இந்த கலையை கண்டறிந்தனர்.

தமிழ்மருத்துவமான சித்தமருத்துவத்தின் அடிப்படையில் முக்கிய பங்கை யோகக்கலை வகிக்கிறது. சித்தர்கள் ஆயிரக்கணக்கில் இந்த உலகில் சூட்சுமாக இன்றும் இருந்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டு வருகிறது. இவர்களில் திருமூலர், ராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, லோகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதரு, பாம்பாட்டி சித்தர், சட்டை முனி, சுந்தாரனந்த தேவர், குதம்பைச்சித்தர், கோரக்கர் ஆகிய பதிணென் சித்தர்கள் தமிழ் மருத்துவத்திற்கு பெரும்பங்கை அளித்திருக்கிறார்கள்.

இவர்கள் தான் யோகாசனம் மற்றும் நாடிசுத்தி பிராணயாமம் ஆகியவற்றின் மனித உடலில் தோன்றும் நோயை போக்கவும், நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்று கண்டறிந்து மனித குலத்திற்கு அதற்கான சூட்சுமத்தை சொல்லியும் வைத்தார்கள். பதஞ்சலி முனியின் யோகசூத்திரத்தில், " மனதையும், மனதில் எழும் எண்ணங்களையும் நன்கு கட்டுப்படுத்துவதே யோகம். இந்த பயிற்சியில் ஒருவர் முழுமை பெறும் போது அவர் தமக்குரிய தூய்மை¬யும், பிரகாசமும் பொருந்திய நிலையில் நிறுத்தப்படுகிறார். மற்ற வழிகளை பின்பற்றும் போது மனநிலையில் ஏற்படும் விபரீத உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறார்" என்று சொல்லப்பட்டுள்ளது.

யோகாசனங்கள் உடலை நோயின் பிடியில் விழாமல் தடுத்து நிறுத்துகின்றன. தற்போது உலகம் முழுவதும் யோகசனத்தின் பலன்கள் உணரப்படுவதால் மேற்கத்தியர்களும் இந்த கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். யோகசனத்தை கற்றுக் கொள்ள உடல் நிலை இடம் தராத நிலையில் உள்ளவர்கள் சாதாரண அமர்ந்த நிலையில் இருந்த படி தியானிக்க கற்றுக் கொண்டு உடலையும், மனதையும் சாந்தப்படுத்திக் கொள்கின்றனர். கடுமையாக உடலை வளைத்து பிரயாசைப்பட்டு செய்ய தேவையில்லாத நிலையில் எளிதாக செய்த பத்மாசனம் போன்ற எளிதான உட்காரும் நிலை ஆசனங்களையும், படுத்தபடி தியானிக்க சவாசனத்தையும சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்.

இது பற்றி இனி இங்கு விரிவாக காணலாம். யோகாசனங்களுக்கு போகும் முன்பாக மனதை ஒழுங்குபடுத்துவது முக்கியமானது. அனைத்து விதமான கெட்ட பழக்கங்களையும் விட்டொழிப்பதும் முக்கியம். தொடக்க நிலையில் தியானத்தை கற்றுக் கொள்வது பற்றி பார்க்கலாம். பிறகு யோகாசனத்தின் சூரியநமஸ்காரம் முதல் நௌலி, ஒட்டியானா வரையிலான ஆசனங்களை கற்கலாம்.

தியானம்

எதிலும் ஒருங்கிணைப்பு உள்ளவர்களுக்கு எதுவுமே தியானம் ஆகி விடுகிறது என்பது தான் யதார்த்தம். இங்கு சுலபமாக தியானம் செய்யும் முறை குறித்து ராமகிருஷ்ண மடத்து துறவியான சுவாமி ஹர்ஷானந்தர் சொல்வது பற்றி பார்க்கலாம்." மதவித்தியாசம் இல்லாமல் எந்த தெய்வத்தையும் தியானிப்பதன் மூலம் இறைக்காட்சியை பெற்று முடிவில் மோட்சத்தை பெற முடியும் என்று பக்தியோகத்தில் கூறப்படுகிறது. எந்த தெய்வத்தை நாம் தியானிக்க விரும்புகிறோமோ அதனை இஷ்ட தெய்வம் என்கிறோம். தியானிக்க நினைக்கும் சாதகன் தனது மனதிற்கு இயைந்த இஷ்ட தெய்வத்தை எண்ணி தியானிக்கலாம். அந்த தெய்வம் என்பது அவனது குலதெய்வமாகவோ அல்லது வேறெந்த தெய்வமாகவோ இருக்கலாம்.

சிலர் தனக்கான குருவை மானசீகமாக எண்ணியிருப்பார்கள். அவர்கள் அந்த குருவிடம் தீட்சை பெற்று தியானத்தை தொடங்கலாம்.

தியானம் செய்யும் முறை

1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குல தெய்வமாகவோ உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.

2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.

3. வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜையறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜையறை இல்லையெனில் இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.

6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பதை எண்ணவும்.

7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகி பிரார்த்திக்கவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.

8. ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.

9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் "ராம, ராம" என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 இன் மடங்காக இருக்க வேண்டும்.

10. தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum