தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது!-என்.கணேசன்

Go down

உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது!-என்.கணேசன் Empty உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது!-என்.கணேசன்

Post by இறையன் Wed Feb 08, 2012 10:46 pm

நம் வாழ்க்கையில் பல சமயங்களில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள ஆசைப்படுகிறோம். வாழ்க்கைப் புத்தகத்தில் புதியதொரு பொலிவான பக்கத்தைத் திருப்பி அதிலிருந்து அத்தனையையும் சிறப்பாய் செய்யத் துவங்க விரும்புகிறோம். எத்தனையோ புத்தாண்டு ஆரம்பங்களில் அப்படி ஆரம்பித்தும் இருக்கிறோம். சில நேரங்களில் தவறுகளால் வாழ்க்கையில் அடிபட்டு, ‘போதுமடா சாமி இனி கண்டிப்பாய் இப்படி இருக்கக் கூடாது’ என்று நினைத்தும் இருக்கிறோம். ஆனால் நம்மையும் அறியாமல் ஒருசில நாட்களிலேயே பழைய வாழ்க்கைக்குத் திரும்பி விடுகிறோம். இது தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்க்கையில் நியதியாக இருக்கிறது.

‘உண்மையாகத் தானே அப்படி ஆசைப்பட்டோம். நம் நன்மையை எண்ணித் தானே அதை செயல்படுத்த முனைந்தோம். ஆரம்பித்த நேரத்தில் மிகவும் உறுதியாகத் தானே இருந்தோம். பின் எங்கே ஏமாந்தோம்? அந்த உறுதி எப்போது தளர்ந்து போனது? ஏன் பழைய நிலைக்கே மாறி விட்டோம்’ என்ற கேள்விகள் ஆத்மார்த்தமாய் நமக்கு எழாமல் இருக்க முடியாது. அந்தக் கேள்விகளுக்கு பதிலை நாம் வெளியே தேடினால் கிடைக்காது. பதிலை நமக்குள்ளேயே தான் தேட வேண்டும்.

எல்லா மாற்றங்களும் உள்ளத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. உள்ளம் மாறாமல் எதுவும் மாறாது. மாறுவதற்கு வெளியே இருந்து எத்தனையோ உதவிகள் கிடைக்கலாம். மாறுவதற்கு எத்தனையோ சாதகமான சூழ்நிலைகள் வெளியே இருக்கலாம். ஆனால் மனம் நூறு சதவீதம் ஆசைப்பட்டால் ஒழிய எந்த நிரந்தர மாற்றமும் நம்மிடம் ஏற்படாது. இது மிகப்பெரிய மாற்றங்களுக்கு மட்டும் பொருந்தும் உண்மை அல்ல. மிகச்சிறிய மாற்றங்களுக்கும் இதே விதி தான்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி வீட்டை மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளக் கூடியவர். அவர் மகளோ அவருக்கு நேர்மாறானவர். வீட்டில் எல்லாம் அங்குமிங்கும் இரைந்து கிடக்கும். வேண்டியது வேண்டாதது என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லாம் கண்டபடி விழுந்து கிடக்கும். தாய் மகள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது தலை சுற்றி விழாத குறை தான். மிகுந்த சிரமம் எடுத்து தாய் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தியதோடு நிற்காமல் அதை அப்படியே தொடர்ந்து ஒழுங்காகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார். என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நல்ல ஆலோசனைகளும் வழங்கினார்.

தாய் முயற்சியால் வீடு மிக அழகானதைப் பார்த்த மகள் “இது என் வீடு தானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது” என்று வியந்து போனார். ”ஒவ்வொன்றையும் தேடியே நான் இது வரை நிறைய சலித்து விட்டேன்.” என்றார். இனி இதே அழகுடன் வீட்டைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதாக தாயிடம் உறுதிமொழியும் தந்தார். ஆனால் தாய் போன பிறகு மூன்றே நாளில் வீடு பழைய நிலைக்கு மாறியது.

இன்னொரு உதாரணத்தையும் பார்ப்போம். மருமகன் ஏகப்பட்ட கடன் தொல்லையில் இருப்பதை அறிந்த மாமனார், தன் மகளும் பாதிக்கப்படுவதைச் சகிக்க முடியாமல் மருமகனுக்கு உதவ முன் வந்தார். மகளின் அத்தனை நகைகளும் அடகு வைக்கப்பட்டு வெறும் தாலிச்சரடுடன் இருப்பதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. மருமகனின் வருமானம் முழுவதுமே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கே சரியாக உள்ளது என்பதை அறிந்த அவர் யார் யாருக்கு எவ்வளவு தர வேண்டும் என்ற கணக்கெடுத்து அத்தனையும் தந்து மருமகனைக் கடன் தொல்லையில் இருந்து முழுவதுமாக மீட்டார். மகளின் நகைகளையும் மீட்டுத் தந்தார்.

மருமகன் கண்கலங்க மாமனாருக்கு நன்றி சொன்னான். கடன் தொல்லை இல்லாததால், வட்டி கட்டும் தேவையும் இல்லாததால், ‘இனி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வோம்’ என்று உறுதியளித்தான். மாமனாரும் நிம்மதியாக வீடு திரும்பினார். ஆனால் ஆறே மாதங்களில் அந்த மருமகன் பழைய நிலைக்கே வந்து விட்டான். பல இடங்களில் கடன் வாங்கி வட்டி கூடத் தர முடியாமல் திண்டாட ஆரம்பித்து விட்டான். மனைவியின் நகைகள் அத்தனையும் அடகுக்கடைக்கு போய் விட்டன.

இந்த இரண்டு உதாரணங்களும் அபூர்வமானதல்ல. ஒவ்வொருவரும் தினசரி காண முடிந்தவையே. மாற வேண்டும் என்கிற ஆசையும் அந்த உள்ளத்தில் தானே தோன்றியது. மாறா விட்டால் இருக்கும் சிரமங்களையும் அவர்கள் உணர்ந்தவர்கள் தானே. பின் ஏன் அவர்கள் மாறவில்லை? திரும்பத் திரும்பப் பழைய நிலைக்கே அவர்களை இழுத்துச் செல்வது எது?

மனிதன் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்கள் அந்த நேரத்தில் பலம் வாய்ந்தவை அல்ல. அந்த எண்ணங்கள் திரும்பத் திரும்ப எண்ணப்பட்டு, அதனுடன் அதற்கான முக்கியத்துவமும் தொடர்ந்து வலியுறுத்தப்படும் போதுதான் அவை பலம் பெற ஆரம்பிக்கின்றன. அப்போது தான் அவை ஆழ்மனதில் பதிகின்றன. உண்மையிலேயே மாற விரும்புபவன் அந்த எண்ணங்கள் வேரூன்றும் வரை மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். சில முறை நினைத்தால், திடீர் உற்சாக தருணங்களில் நினைத்தால் போதாது. அதே நேரத்தில் அந்த எண்ணங்களுக்கு எதிர்மறையான எண்ணங்களை, எதிரான மனோ பாவத்தை அறவே நீக்க வேண்டும். இந்த இரண்டையும் ஒருங்கே செய்தால் மட்டுமே உண்மையில் உள்ளம் மாறும். அதன்படி எல்லாம் மாறும்.

மாற முடியாதவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு இந்த இரண்டையும் தொடர்ந்து செய்யாமல் இருப்பது தான். மேலே சொன்ன இரண்டு உதாரணங்களிலும் ஏற்பட்ட தவறுகளைப் பார்ப்போம்.

வீட்டைத் தாய் சுத்தப்படுத்தி விட்டுப் போன பிறகு அந்த மகள் முதல் நாள் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டது உண்மை. ஆனால் இரண்டாம் நாள் அந்த எண்ணம் வலுவிழந்தது. மூன்றாம் நாள் அது மிகப் பலவீனமாகவே உணரப்பட்டது. தொடர்ந்த நாட்களில் அந்த எண்ணம் சமாதியாக்கப் பட்டது. அதனால் தாயிடம் உறுதியளித்த படி ஒவ்வொன்றையும் அந்தந்த இடத்திலேயே வைப்பதும், அவ்வப்போதே உபயோகித்த இடங்களை சுத்தப்படுத்துவதும் செய்ய முடியாமல் போனது. அந்தச் சில்லரை சிரமங்களைக் கூட எடுக்க விடாமல் முன்பே பழகி இருந்த ஒழுங்கீனம் பழையபடி அவர் வாழ்க்கையை தன் கையில் எடுத்துக் கொள்ளக் காரணம் அதுவே.

அந்த மருமகனும் கடன் தொல்லையால் அவதிப்பட்ட போது, ‘இதிலிருந்து ஒரு முறை தப்பித்தால் போதும், பின் எப்போதும் ஒழுங்காக நடந்து கொள்வேன்’ என்று உறுதியாக நினைத்தது உண்மை தான். ஆனால் அவனிடம் காணும் பொருளை எல்லாம் வாங்கும் பழக்கம் இருந்தது. அது தேவையோ, தேவை இல்லையோ, யாரிடமாவது பார்த்தால் தானும் வாங்கி விடுவான். தன்னிடம் இருக்கும் பொருளை அடிமாட்டு விலைக்கு விற்று அதிலேயே புதிய மாடலை கடன் வாங்கியாவது வாங்கிக் கொள்வான். இந்தக் குணம் தான் அவனை பெரும் கடனில் ஆரம்பத்தில் தள்ளியது. மாற ஆசைப்பட்டவன் மாறுதலுக்கு எதிரான, கண்ட பொருள்களை எல்லாம் வாங்கும் பழக்கத்தை விடுவதற்குத் தேவையான மன உறுதியை வளர்த்துக் கொள்ளவில்லை.

முதல் பொருளை வாங்கும் போது இப்போது தான் பழைய கஷ்டம் இல்லையே இதை வாங்குவதால் என்ன பெரிய பிரச்சினை வந்து விடப்போகிறது என்று நினைத்தான். அதாவது மாமனாரிடம் சொன்ன போது இருந்த உறுதிக்கு எதிராக சின்ன செயல் செய்தார். அந்த மன உறுதியை தொடர்ந்து காப்பாற்றி இருந்தால் அந்த சின்ன விலகலைக் கூட அவன் அனுமதிக்காமல் இருந்திருப்பான். ஒரு விலகல் இன்னொரு விலகலுக்கு வழி ஏற்படுத்த, பின் ஏற்பட்ட சின்ன சின்ன விலகல்கள் சிறிது சிறிதாக ஆரம்ப உறுதியைத் தகர்த்து விட முன்பே பலமாயிருந்த அந்தப் பழக்கம் மீண்டும் அவனை ஆட்சி புரிய ஆரம்பித்தது.

எனவே மாற விரும்புபவர்கள் உள்ளத்தை மாற்றுங்கள். மாற்ற விரும்பும் ஆசையில் முழுமையாக இருங்கள். அடிக்கடி அதை உறுதிப்படுத்துங்கள். உள்ளத்தில் அதற்கு முரணாக உள்ள ஆசைகளையும் எண்ணங்களையும் அனுமதிக்காதீர்கள். உங்கள் தீர்மானம் உறுதிப்படும் வரை சர்வ ஜாக்கிரதையாக இருங்கள். பழைய ஆசைகளும், எண்ணங்களும் வேரோடு பிடுங்கப்படும் வரை ஜாக்கிரதையாக இருங்கள். அப்படியானால் மட்டுமே விரும்பும் மாற்றங்கள் சாத்தியப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum