தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழறிஞர்களும் நகைச்சுவையும் - ஜ.ப.ர

Go down

தமிழறிஞர்களும் நகைச்சுவையும் - ஜ.ப.ர Empty தமிழறிஞர்களும் நகைச்சுவையும் - ஜ.ப.ர

Post by இறையன் Wed Dec 14, 2011 11:11 pm

தமிழறிஞர்களின் பேச்சுக்களில், பாடல்களில் அந்தக் காலம் தொட்டு இன்றைய காலம் வரை நகைச்சுவை பரவியிருக்கிறது. காளமேகப்புலவர் சிலேடையிலேயே நகைச்சுவையாகக் கவிதை பாடுவதில் வல்லவர்.

நாகப்பட்டினத்தில் உள்ள காத்தான் என்பவரது சத்திரத்திற்கு உணவு அருந்துவதற்காக காளமேகம் ஒரு தடவை சென்றிருந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் உணவு வந்த பாடில்லை. காளமேகம் பொறுமையை முற்றாக இழந்து போன பின்னர்தான் உணவு அருந்த அழைப்பு வந்தது. பசியின் உச்சத்துக்குப் போயிருந்த காளமேகம் கவிதை பாடினார்.

“கத்துக்கடல் நாகைக்
காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
ஓரகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.”

பாடலைக் கேட்ட பின்னர்தான் உரிமையாளருக்கு, வந்திருப்பது காளமேகம் என்பது தெரிந்திருக்கிறது. இந்தப் பாடலினால் எங்கே தனது சத்திரத்திற்கு அவப்பெயர் வந்து விடுமோ என்று பயந்த காத்தான், காளமேகத்திடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். காளமேகம் நிலைமையைச் சரி செய்ய பாடலுக்கான விளக்கத்தை இவ்வாறு சொல்லிக் கொண்டார்.

”காத்தானது சத்திரத்தில், அத்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில் உணவின்றி பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்தில் அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டு அந்த ஊரே பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம், வெள்ளி நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும்.”

ஆனால், உண்மையான அர்த்தம் என்ன என்பது கவிதையைப் படித்தவர்களுக்குப் புரியும்.

ஒளவையாரும் நகைச்சுவையில் சளைத்தவரல்ல. அவருக்கு ஒருமுறை காளமேகப் புலவர் மீது கோபமுண்டாக, அவர் பாடினாராம்.

“எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
யாரையடா சொன்னாய் அது.”

தமிழில் "அ" என்ற எழுத்து "எட்டு" என்ற எண்ணைக் குறிக்கும். அதேபோல் "வ" என்பது "1/4" ஐ குறிக்கும். அப்படியானால் "எட்டேகால்" என்பது "அவ" என்றாகிறது. முதல் சொற்றொடர் "அவ லட்சணமே" என்று பொருள் தருகிறது.

எமன் ஏவும் பரி என்பது "எருமை". பெரியம்மை என்பது "லட்சுமியின் தமக்கையான மூதேவி".
முட்டமுட்ட கூரையில்லா வீடு என்பது "மேகம்" (அதாவது காளமேகம்). குலராமன் தூதுவன் "குரங்கு". அப்படியே "யாரையடா சொன்னாய் அது".

ஏழ்மையிலேயே வாழ்ந்து கந்தையே கட்டினாலும் அந்தக்காலப் புலவர்களுக்கு நகைச்சுவை உணர்வு மட்டும் என்றும் குறைந்ததில்லை. இரு புலவர்கள் தங்களது இற்றுப்போன துணியைத் துவைத்தவாறு பாடுகிறார்கள்.

"அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ?"
(அப்பு = தண்ணீர்)

அதற்கு இளையவர்,
"ஆனாலும் கந்தை அதிலேஓர் ஆயிரம்கண்
போனால் துயர் போச்சுப் போ" என்று பாடி முடித்தார்.

மனம் பொறாத முதியவரோ விடாமல்,
"கண்ணாயிரம் உடைய கந்தையே ஆனாலும்
தண்ணார் குளிரையது தாங்காதோ" என்றார்.

அதற்கு இளையவர்,
"இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை" என்று பாடி முடித்தார்.
(இக்கலிங்கம் = இந்தக் கலிங்கம். கலிங்கம் = துணி)

வள்ளல் ஒருவர் புலவருக்கு பணத்தினை ஒரு வெள்ளித்தட்டில் தர, புலவர் ‘பணத்தட்டு’
(பணத்தட்டுப்பாடு என்றும் பொருள் வரும்) யாருக்கு என்று வினவ, வள்ளல் “பணத்தட்டு புலவருக்குத்தான்” என்றாராம்.

மன்னர் ஒரு புலவருக்குப் போர்த்திய பழைய பொன்னாடையைப் பற்றி புலவர், “அரசே!
இந்தப் பொன்னாடையில் மரமும் இருக்கிறது, கிளையும் இருக்கிறது, கனியும்
இருக்கிறது, காயும் இருக்கிறது, 'பிஞ்சும்' இருக்கிறது என்றாராம். இப்படி அந்தக்காலம் தொட்டு வார்த்தைகளில் சிலம்பமாடிய புலவர்களும் அறிஞர்களும் இன்றும் தொடர்கிறார்கள்.

பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை “பாரதி சின்னப்பயல்” என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை.

“காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்” என்று பாடினார்.

இசை விமர்சகர் சுப்புடுவின் விமரிசனங்களில் நகைச்சுவை இழையோடும். அவர் ஒரு விமரிசனத்தில் எழுதியது, “பாடிய அம்மையாரின் காதிலும் கம்மல், சாரீரமும் கம்மல்"என்று.

சிலேடைச் செல்வம் என்று கி.வா.ஜவைக் கூறுவார்கள். அவரது பேச்சில் நகைச்சுவை துள்ளிவரும்.

கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்கு பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்கள். “ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார். கி.வா.ஜ.

கி. வா. ஜ. அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை - மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றிவிட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ. உடனே “இம்’மைக்’கும் சரியில்லை, அம்’மைக்’கும் சரியில்லை" என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது “இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார், “இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்.”

உமையாள்புரம் சிவராமனை சங்கீத அன்பர் ஒருவர் அவரை வீட்டில் விருந்துக்கு அழைத்தார். சாப்பாடு தரையில்தான். மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு வந்திருந்த உமையாள்புரம் சிவராமன் அமராமல் நின்று கொண்டே இருந்தார். அவர் நிற்கக் காரணம், உணவு வகைகள் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்த சங்கீத அன்பர் மறந்து போய் தரைச் சாப்பாட்டுக்கு முக்கியமான ஒரு பொருளை ஏற்பாடு செய்யாததுதான். 'ஏன் நிற்கிறீர்கள்?' என்று தயங்கியவாறே சிவராமனைக் கேட்டார் அவர்.

''மேஜைச் சாப்பாடு என்றால் சாப்பிட எனக்கு இரு கை போதும், தரைச் சாப்பாடு என்றால் இரு கை போதாது. பல‘கை’ வேண்டும்'' என்றார் சிவராமன்.

ஆன்மீகப்பெருமானான கிருபானந்தவாரியாரின் சிலேடை நயம் பற்றி சொல்லவே தேவையில்லை. அந்தக் காலத்தவரையும், இந்தக்காலத்தவரையும் ஒப்பிட்டுப் பேசும்போது, ஒருமுறை “அவர் அந்தக் காலத்தில் பழங்கள் சாப்பிடுவார்கள். இப்போதோ பழங்’கள்’ சாப்பிடுகிறார்கள்” என்றார்.

இந்த நகைச்சுவைகள் எல்லாம் இப்பெரியோர்களின் அறிவாற்றலை வெளிப்படுத்துவதோடு காலத்தால் அழியாமலும் நிலைபெற்று நிற்கின்றன.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum