தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கூத்தானாச்சி ஒரு தெய்வீக காதல் கதை -தமிழாதன்

Go down

கூத்தானாச்சி ஒரு தெய்வீக காதல் கதை -தமிழாதன்  Empty கூத்தானாச்சி ஒரு தெய்வீக காதல் கதை -தமிழாதன்

Post by இறையன் Wed Feb 15, 2012 11:06 pm

பெருவாழ்வு வாழ்ந்து மரித்த நம் முன்னோர்களையே குலதெய்வங்களாக வழிபடுகிறோம். அப்படி ஒரு தெய்வம்தான், கூத்தனாச்சி! ஒரு வகையில் இவளை 'காட்டு ஆண்டாள்' என்றே அழைக்கலாம். ஆம்... ஆண்டாள் கண்ணனுக்கு உருகியது போலவே, தன் குலதெய்வமான கூத்தனை தன் மணாளனாக ஏற்று வணங்கியவள். கண்ணனைப் போல், கூத்தன் வரவில்லை கூத்தனாச்சியைக் கரம்பிடிக்க. இருந்தாலும், அவளுடைய காதல், அவளைத் தெய்வமாக்கிய கதை... மேகமலை எங்கும் தென்மேற்குப் பருவக் காற்றோடு கலந்து உலாவுகிறது!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு அழகான அரணாக இருப்பது மேகமலை. காமய கவுண்டன்பட்டியிலிருந்து இந்த மலை அடிவாரத்துக்கு போகும் வழியில் உள்ள ஆறு, ஓடை, மலை, கரடு, பள்ளம், மேடு என அனைத்தும் கூத்தனாச்சி பெயரை சுமந்து நிற்க, காமயகவுண்டன் பட்டியிலிருந்து நான்காவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூத்தனாச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது சின்னதாக ஒரு கோயில். அதில் நிறைந்திருக்கிறாள் கூத்தனாச்சி!
''இந்தப் பக்கம் போறவங்க எல்லாம் அங்கங்க குமிழ் குமிழா இருக்கற இந்த மண்ணை எடுத்து நாக்குல வெச்சுக்குவாங்க... நீங்களும் வெச்சுப் பாருங்க..!'' என்றார் ஊர்க்காரர் ஒருவர்.மண்ணை சிறிது எடுத்துச் சுவைத்தோம். ''என்ன இது... தயிரின் சுவை..?!'' என்று நாம் சொன்னதுமே...

''அதுதேன் கதை!'' என்று துண்டை உதறியபடி நடந்தார் ஊர்க்காரர்.

அந்தக் கதையை நம்மிடம் பகிர்ந்தார்... வரலாற்று ஆய்வாளர் கூடலூர் தமிழாதன்.

''கூத்தனாச்சி, இடையர் குலத்துல பிறந்த வீரமும் அழகும் கொண்ட பெண். தன்னோட வீரத்தால மலை அடிவாரத்துல ஆடு, மாடு கிடை போட்டு, தனி ஆளா வாழ்ந்தவ. அவளோட வீரத்தை மெச்சிய சேர, பாண்டிய மன்னர்கள் எல்லாம்... அவகிட்ட ஆடு, மாடுகளை வாங்கிட்டுப் போனாங்க. தன்னோட ஆடு, மாடுகள் தவிர, பிற வியாபாரிகளையும் அந்த எடத்துல வியாபாரப் பொருட்களை விற்க அனுமதிச்சா. இதனால எல்லாப் பொருள்களும் கிடைக்குற சந்தையா அது மாறிச்சு. சேர, பாண்டியர்கள் கூடியதால கூத்தனாச்சி சந்தை... 'கூடலூர் சந்தை’னு பேரும் வாங்குச்சு.

தன்னோட சந்தைக்கு வர்ற எல்லா வியாபாரிகளுக்கும் தானே தயிர் கொடுத்து பசி ஆத்தினா. அவளோட பேரழகுல மயங்குன சேர நாட்டுத் தளபதி குட்டியா பிள்ளை, அவகிட்ட தன்னோட விருப்பத்தைத் சொன்னான். அவளோ... 'என் குலதெய்வமான கூத்தனுக்கு என் உடலையும், உயிரையும் கொடுத்துட்டேன். இந்தப் பிறப்பே அவனுக்காகத்தான்’னு மறுத்துட்டா.
கூத்தானாச்சி ஒரு தெய்வீக காதல் கதை -தமிழாதன்  Avl54(1)
இதுக்கு இடையில வேறெங்கயும் கெடைக்காத தரமான மேகமலை, வெள்ளிமலை வைடூரிய, மரகத கற்கள் கூடலூர் சந்தையில கிடைச்சதால... கூத்தனாச்சி சந்தை, நாடு கடந்து பேசப்பட்டது. வெளிநாட்டுல இருந்து பட்டானி ஒருத்தன் மரகதக் கற்கள் வாங்க படைகளோட இங்க வந்தான். வந்த இடத்துல அவளோட அழகுல மயங்கினவன், அவளை அடையத் திட்டமிட்டான்.

'ராவாயிட்டதால இங்கயே தங்கிட்டுப் போறேன்’னு அனுமதி வாங்கினவன், சந்தையில வேலை பார்த்த எல்லாருக்கும் சாப்பாட்டுல மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து சாய்ச்சான். ராத்திரியில கூத்தனாச்சியை அடைய அவன் முயற்சி செய்ய, சீறிப் பாய்ஞ்சவ... அவனை அடிச்சுத் துவைச்சா. சந்தைக்கு வர்றவங்களுக்கு கொடுக்கறதுக்காக எடுத்து வெச்சுருந்த தயிர் எல்லாம் சிதறி மண்ணுல கொட்டிருச்சு. கீழே விழுந்த அந்த பட்டானி 'அவளைப் பிடிச்சுட்டு வாங்க’னு தன்னோட படைகளுக்கு உத்தரவிட, கூத்தனாச்சியை வளைச்சுப் பிடிச்சுட்டாங்க.அவங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாதுங்கிறத உணர்ந்தவ, கூத்தனைக் கும்பிட்டு, 'நான் கற்புக்கரசி கண்ணகி வழி வந்தவங்கறது உண்மைனா... உன்னைத் தவிர நான் வேற யாருக்கும் உடைமை ஆகக் கூடாது. எனக்குப் பக்கத்துல இருக்குற இந்த வாகை மரம் ரெண்டாப் பிளந்து, நான் உள்ளே போகணும். இந்தப் பட்டானி... கல்லா மாறணும். சனங்க பசி தீர நான் வெச்சுருந்த தயிர் கொட்டின இந்த மண்ணு, எப்பவும் தயிரா மணக்கணும்... அதைத் தின்னவங்க பசி அடங்கணும்!’னு கூத்தன்கிட்ட வேண்டினா. அடுத்த நொடியே வாகை மரம் ரெண்டா பிளக்க, அவ, அதுக்குள்ள அடங்கினா. பட்டானி, கல்லாச் சமைஞ்சார். இந்த மண்... இன்னிக்கு வரைக்கும் தயிர் மணக்குது!'' என்று தமிழாதன் சொல்லி முடிக்க... வியப்பும் சிலிர்ப்பும் நம்மை ஆட்கொண்டன.

தொடர்ந்த தமிழாதன், ''கூத்தனாச்சி தெய்வமா அடங்கியது கேட்டு சேர மன்னர் வந்ததாவும், கோயில் கட்டியதாவும் செவி வழிச் செய்தி உண்டு. சென்னை, ஓலைச் சுவடி நூலகத்துல 'கூடலூர் கூத்தனாச்சி சந்தை' பத்தி நான்கு பக்கங்களுக்கு குறிப்புகள் இருக்கு. இந்த மண்ணுல பொறக்குற தலைப்புள்ளை ஆணா இருந்தாலும், பொண்ணா இருந்தாலும் அதுக்கு கூத்தனாச்சி பேரைத்தான் வெப்பாங்க'' என்றார் மகிழ்வுடன்!

காதல்... பலரை மனிதனாக்கும்; சிலரைத் தெய்வமாக்கும்!

source:vikatan.com

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum