தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அலாதி பிரதி -தமிழச்சி தங்கபாண்டியன்

Go down

அலாதி பிரதி -தமிழச்சி தங்கபாண்டியன்  Empty அலாதி பிரதி -தமிழச்சி தங்கபாண்டியன்

Post by இறையன் Wed Feb 15, 2012 11:18 pm

வாழ்வுப் பெருங்கருணையுடன்
கரிசலை மோகித்துப் பெய்த
அடைமழைக்குக் கிடை ஒதுங்கிய ஆடுகளை
நெருக்கி கதகதப்பாய்த்
தார்ப்பாய் போர்த்துகின்ற இடையனே...


கள்ளிச் செடியின் கரிய பசும் இலைநெய்த
கயிறு தழுவுகின்ற தோள் உனது.
நெடுங்கிளைகளை இழுத்துக் கனி பறிக்கின்ற
நீண்ட துரட்டி பிடித்துக் காய்ப்பேறிய கைகள் உன்னுடையவை.
வெடித்த சுடுமணல் மேடுகளில் அலைந்து
ஆடுகளின் பசி தீர்க்கும் பச்சயம் தேடி
தடித்துக் கருத்த கால்கள் உனது.
பால் தேடும் குட்டிகளுக்குக் கூடுதலான
கவனிப்பு தருபவை சிவந்திருக்கும் உன் கண்கள்.


தன் கூடாரம் விடுத்தொரு பாழ்வெளியில்
தனிமை உடுத்தியிருந்த இடைச்சி ஒருத்தி
தற்செயலாய் உனைக் கண்ணுற்று,
பாலையின் வெயிலனையக் காதலுற்றாள்.
தன் காமம் செப்பாத் தேமலை
என் அருகிருக்கும் ஒற்றை நட்சத்திரமென
அணிந்திருக்கும் அவளை
அச்சொட்டாய் அறிந்தவள் நிலவாகிய நான் மட்டுமே!


தேனடை பழுத்திருக்கின்ற பலா மரங்கள்
நிறைந்த குறிஞ்சி நிலம் நாடி
உன் ஆடுகளை ஓட்டியபடி
அடுத்த கிடைக்கு நீ விரைவில் கிளம்பலாம்.


மேய்ச்சலின் சுகமுணர்ந்து உனைப் பின் தொடர்கின்ற
கிடைக்கான பொறுப்பினைக்
கொண்டவன் நீ என்பதை அறியாதவளா அவள்?


கொடும் பசி தீர்த்த
ஒரு சொட்டு ஆட்டுப் பாலென
உயிர் குடித்த உன் காதலை
பார்வையில் பகிர்ந்துவிட்டுப் புறப்படும் முற்பொழுதில்
உனைத் தொடரும் கிடை ஆட்டுக் காலடிகளில்
இருப்பதவள் நெஞ்சமென்பதை அறியாதவனா நீ?


கிடை எங்கும் மணத்துக் கிடக்கும் கருங்
காட்டு மலர்களணிந்த விரிமார்பனே
பேச்சி என்றழைக்கும் உன் ஒற்றைச் சொல் அன்றி
ஆகச் சிறந்த அன்பென யாதொன்றுமில்லையாம் இடைச்சிக்கு!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum