தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மழைச்சிறுமி -அய்யப்பமாதவன்

Go down

மழைச்சிறுமி -அய்யப்பமாதவன்  Empty மழைச்சிறுமி -அய்யப்பமாதவன்

Post by இறையன் Wed Feb 15, 2012 11:22 pm

அந்தி தன் நிறங்களால் ஒரு மாலையில்

பெயர் தெரியாத அவளை மெலிதாக வரைகிறது

சிவந்த தோலில் படர்ந்த வண்ணங்களில்

ஒளிர்ந்த பரிதியின் தாழ்ந்த வெயிலில்

சாந்தத்திலுறைந்த பிரதிமையாக நிற்கிறாள்

கண்ணூன்றி என் இமைகளில் கசிந்த

அவளின் எழுத்தப்படாத அழகினில்

மரமரத்துக்கொண்டிருக்கிறேன்

யாருடனோ இதழ்களைப் பிரிப்பது தெரியாமல்

பிரிக்கையில் சத்தத்தில் காயப்படாத

சொற்கள் காற்றின் தொடுபுலத்தில் மிதக்கின்றன

உடுப்புகளின் நிறங்களில் வெளியேறிய

அரிய மினுமினுப்பில் வண்ணமாகிய என் இமைகள்

கூர்ந்த என் கண்களில் அவள் தவிரவும்

யாரும் குறுக்கிடாத உலகம்

புருவங்களின் கீழ் சலனிக்காதிருந்த கண்ணாடியில்

மெருகேறி சுடர்ந்த விழிகளில்

ஆரண்யத்தின் குலையாத அமைதி

ஒலி எழுப்பாத விரல்களிடையில்

அன்னத்தை குழந்தையென அசைபோடுகிறாள்

நீர் இறங்கிய தொண்டையினிடையே

மழைநீர் கசியும் இதமான ஓசை

அவளின் ஒப்பற்ற உயிர் ஓவியத்தில்

பார்வைகளை ஆழத்தில் புதைத்திருக்கிறேன்

சுற்றித் திரிந்த பாதங்களிடையில்

மிக மெல்லிய தோலோடு ஒட்டிய

சின்னக் கொலுசுகள் அவளிருப்பை

அவ்வெளியிடையில் இசைக்கிறது

நான் அவளிடம் விடைபெற்ற தருணம்

எந்த ஓவியனும் தீட்ட மறந்து ஓவியம்

போன்றதொரு சித்திரப் பெண்ணை

எனக்கு காண்பித்துவிடுகிறது

சில பொழுதுகளில் காலம்.


இருளையழுதுகொண்டிருந்தாள்

ஒளி மேய்ந்த பொழுதினிடையே

அழுகையில் இமைத்தது மாடி

மழையில் மூழ்கிய தனித்த நடுக்கம்

பாடம் எழுதத் தவறியவளின் செவிகளில்

தந்தை உள்குடைந்திருந்தார் வலியை

பிரம்புகளாலான விரல்களில்

முதுகின் மீது குருதி சிவக்கத் தீட்டிய

உள்ளங்கை ரேகைகள்

யாரின் குரலும் தடுக்க முனையாதபொழுது

மாடியின் விளிம்பில்

கொட்டிய நீர்க்கோடுகள் விழுமழகில்

கசங்கிய புருவங்களையசைத்தாள்

நீள்கிற ஆழ்ந்த அமைதியில்

நட்சத்திர மினுமினுப்பின்

மகிழ்வை அழித்திருந்தாள்

அவளின் கொடிய இரவில்

சினம் சொட்டி மறைந்த

முத்தங்களிலிருந்துகொண்டு

பழைய சிரிப்பினில் மீண்டாள்

மழையுள்ளிருந்து உறைந்துவிட்ட

வசைகளிடம் திரும்பினாள் சிறுபெண்

கார்முகில்களும் கலைந்திருந்தவேளை.


மூடிய கண்களுக்குள் எவ்வளவு அழகாகயிருக்கிறேன்

புஷ்பங்களைச் சொரியும் ஒரு மரத்தின் கீழ்

பிஞ்சுக்குழந்தையின் திறந்த உடலினிடையே

இயற்கை தீண்டிய காற்று

தழுவிச் செல்கிறது காட்டின் நறுமணங்களுடன்

எங்கும் இலைகளின் சலசலப்பு

சொற்களற்ற வெளியின் தூய்மை

காழ்ப்பில்லாது சங்கீதமிசைக்கும் பறவைகள்

நதியின் தெளிந்த கண்ணாடிப்பரப்பில்

என் வெகுளியின் பிரதிபலிப்புகள்

பெய்த மழையின் வழியும் துளிகளில்

நிலத்தில் மெல்லிய ஓசைகளின் கவித்துவம்

கர்ஜிக்கும் விலங்குகளின் குரல்களில்

புலனாகும் வனத்தினிடையே

பயத்தில் கவிழும் தனிமை

துன்புறுத்தாத மிருகங்களிடையே

உரையாடலில் கொல்லும் தந்திரங்களில்லை

உடைமைகளைப் பற்றிய உரிமைக்கோரல்களில்லை

நான் நானாக எவ்வித உறவுகளற்று

என்னை நானே கானகத்தின் பொருளாக்கித் திரிகிறேன்

களங்கமற்ற சேறற்ற கறையற்ற அப்பழுக்கற்ற

உயர்ந்த உத்தமமான மனித அரவமற்ற

அமானுஷ்யம் வரைந்த தனித்த மகா உலகிடையில்

மூடிய கண்களுக்குளிருக்கிறேன்

சப்திக்கும் உலகத்தின் நெருக்கடிகளிலிருந்து

தப்பித்து யாரோ அருளுகிற அக்கனவில்

உண்மையில் காணக்கிடைக்கா வாழ்வில்

களிப்பின் உச்சத்திலிருக்கிறேன்

நினைத்தவேளை ஒரு பட்ஷியின் குரலிலிருந்து

இசைக்கிறேன். புலியின் குரலிலிருந்து உறுமுகிறேன்.

பூவின் இதழ்களிலிருந்து அமைதியாகிறேன்

நதியின் நீரிலிருந்து ஓடுகிறேன்

பெய்யும் மேகமாகிறேன்

என்னில் என்னைத் தவிரவும் மூடிய கண்களுள்

அற்புதக் கனாவில் வேறொருவனிருக்கிறான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum