தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்

Go down

வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்  Empty வரமும் சாபமும் --எம்.எஸ்.சுப்பிரமணியன்

Post by இறையன் Mon Feb 20, 2012 4:04 pm

மறதி- என்பது பலமா, பலவீனமா? மறதி பலமாவ தும் உண்டு; பலவீனமாவதும் உண்டு. புறவுலகத்தை மறந்து தனக்குள்ளே இருக்கும் இறைவனைத் தேடுவதில் மறதியே பலம். ஆனால், அவசியமான காரியங்களில் மறதி ஏற்பட்டுவிட்டால், அதுவே நம்மை அழிப்பதாக வும் அமைந்துவிடுகிறது.

"நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.'

"எதையும் காலம் தாழ்த்திச் செய்தல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெட்டு அழிபவர்கள் விரும்பும் அணிகலன்கள்' என்று கூறுகிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள்.

ஊழ்வினைப் பயன் நன்கு அமையுமானால் தக்க தருணத்தில் மறதி நீங்கிவிடும். நல்நினைவு தோன்றிவிடும். கடுமையான போர்க்களத்தில் ஒரு காட்சி.

அரக்கன் சூரபத்மனின் வீரமகேந்திர புரம். போர்க்களத்தில் நிற்கிறான் சூரன். சுற்றிலும் ஆயிரம் ஆயிரம் வெள்ளம் அசுரர் சேனைகள். எதிரே லட்சத்து ஒன்பது வீரர்களுடன் தேவசேனா பதியாக பாலமுருகன் நிற்கி றான். அவனது அழகுத் திருமுகம் காண்கிறான் சூரன். பாலனென்று பரிகாசம் செய்தவனிடம் பாசம் பொங்குகிறது. முகத்தைப் பார்த்தவன் அந்த அழகில் மயங்கி அப்படியே கீழே பார்க்கிறான். இரு செம்மலர்த் திருவடிகள். அந்தத் திருவடிகளில் உள்ள சிலம்புகளில் ஓங்கார ஒலி கேட்கிறது.

அப்படியே நிமிர்ந்து ஆறு திருமுகங்களின் பேரழகைக் காண்கிறான்.

"ஆஹா, என்ன தெய்வீகக் களை!' என்று வியக்கிறான். கணநேரம் தன்னை மறந்து வணங்குவதற்கு கைகளைத் தூக்கு கிறான். அவ்வளவுதான்! அடுத்த கணம், "சீ, இச்சிறு பாலனுடனா நான் போரிடுவது?' என்ற ஆணவம் தலை உச்சிக்கு ஏறிவிட்டது. ""ஏ, சிறுவனே! நான் கையில் ஆயுதம் எடுக்குமுன் ஓடிவிடு!'' என்று உறுமுகிறான்.

அருகேயிருந்த தம்பி சிங்க முகன் மெதுவாகக் கூறுகிறான்: ""அண்ணா, அது சிறுபாலன் அல்ல; சிவபாலன். அவனை எதிர்ப்பது சிவனையே எதிர்ப்பதாகும்.''

""ஏய் சிங்கமுகா, என்ன பிதற்றுகிறாய்? சிவனாம் பாலனாம். சிவனும் சக்தியும் எப்பொழுதடா கூடிக்குலவினார்கள்? குழந்தை பெற்றார்கள்? என்னிடமே புதுக்கதை கூறுகி றாயா?''

""மன்னிக்க வேண்டும் அண்ணா. புதுக்கதை இல்லை; பழங்கதைதான். நாம் சிவனாரிடம் வரம் பெற்றபோது அவர் சொன்னதை மறந்து விட்டீர்கள் அண்ணா.''

"சிங்கமுகா, சூரியப்பகைஞனான எனது மகன் பானுகோபன் இறந்ததும் உனக்கும் பயம் வந்துவிட்டது! அன்று சொன்னதை நான் ஒன்றும் மறக்கவில்லை. சிவனார்தான்

எனக்கு "யாவராலும் வெலப்படாய்' என்று வரம் தந்திருக்கிறார்.''

""நீங்கள் சொன்னது சிவன் தந்த வரத்தின் பிற்பகுதி. முற்பகுதியில் அவர் சொன் னது "எமது சக்தி ஒன்றின் அல்லால் யாவராலும் வெலப்படாய்' என்பதுதான்.''

""நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''

""எமது சக்தி என்று சிவனார் அன்று சொன்னதை நான் மறக்க வில்லை. நீங்கள் மறந்துவிட்டீர்கள். சிவனது சக்தியாக- சிவனிடமிருந்து மட்டுமே தோன்றியவன்தான் இந்த சிவபாலன். நீங்கள் எண்ணியிருப்பதுபோல் ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவனல்ல! முழுக்க முழுக்க ஓர் ஆணின் சக்தியில் மட்டுமே தோன்றிய ஆண் மகன்! எனவே அவர் அன்று சொன்ன "எமது சக்தி' என்பது இச்சிறு பாலனே.''

அப்போதும் அதன் உண்மையை சூரன் உணரவில்லை. ""எவரானாலும் சரி; இதற்கெல் லாம் அஞ்சி நான் தேவர்களை சிறையிலிருந்து விடுவிக்க மாட்டேன். முன்வைத்த காலைப் பின்வைப்பவன் இந்த சூரனல்ல. சிங்கமுகா, அந்த சிறுவனை நீயே தொழுதுகொண்டிரு!'' என்றான்.

இவ்வாறு சூரபத்மன் வாங்கிய வரத்தை மறந் தது இயல்புதான். அந்த மறதிக்குக் காரண மாயிருந்தது மனதில் குடிகொண்டுவிட்ட ஆணவம்! எனவேதான் கருணை வள்ளலாகிய முருகனும் சூரனை அழிக்காமல் அவனது ஆணவத்தை மட்டுமே அழித்தான்.

பொதுவாக அசுரர்கள் கடுந்தவம் புரிவதில் வல்லவர்கள். அதன்பின் தந்திரமாக சாகாவரம் கேட்பதும் அவர்களது வழக்கம். வரம் கொடுப்பதில் எளியவர்கள் சிவனும் பிரம்மனும். இவர்கள் கேட்டபடி வரத்தைக் கொடுத்து விடுவர். பின்னர் அசுரர்கள் ஆணவத்தில் அழிவுகளைச் செய்யும்போது இவர்களாகவோ அல்லது சக்திதேவியின் துணைகொண்டோ அல்லது திருமாலின் துணையினாலோ அந்த அரக்கர்களை அழிப்பதும் புராணங்கள் காட்டும் உண்மை.

இவர்கள் கொடுக்கும் வரத்தில் எங்காவது சிறு விஷயம் அசுரர்களின் அழிவுக்கு ஆதார மாய் அமைந்துவிடும். சூரன் விஷயத்திலும் அதுதான் நடந்தது. அவன் வரம் வாங்கும் பொழுது, "தாங்கள் அன்னை சக்திதேவியுடன் கூடாமல் பிறக்கும் ஒரு பிள்ளையால்தான் எனக்கு மரணம் வரவேண்டும்' என்று சாமர்த் தியமாகக் கேட்டான். ஆண்- பெண் சேர்க்கை இன்றி பிள்ளை பிறக்காது என்ற அவன் எண் ணம் தவறாகிப் போனது. இரணியன் பெற்ற வரமும் இப்படித்தான் அமைந்துவிட்டது.

இராவணன் சிவபெருமானுக்கு விருப்ப மான சாமகானம் இசைத்தான். கலை வல்லா னாகிய அவன் எப்படியும் சிவனின் பெரும் பாராட்டைப் பெற்றுவிட வேண்டும் என்று பேராசை கொண்டான். தனது உடல் நரம்பையே எடுத்து யாழில் பூட்டி இசைத்தான். அந்த தேவகானத்தில் மகாதேவன் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது.

இராவணன் கேட்கும் முன்னாலேயே, ""முப்பத்து முக்கோடி வாழ்நாள் பெறுவாய்; எத்திக்கிலும் யாவராலும் வெலப்படாய். இதோ இந்த சந்திர ஹாசம் என்ற வாளையும் பெற்றுக்கொள். ஆனால் ஒன்று- எக்காரணம் கொண்டும் நீ இதனை நிராயுதபாணிமேல் பயன்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் அப்பொழுதே அது எம்மிடம் திரும்பி வந்துவிடும்'' என்றார்.

இந்த வரத்தை இராவணன் எப்படி- எப்பொழுது மறந்தான்?

சீதையைக் கவர்ந்து வந்து அசோக வனத் தில் சிறை வைத்துவிட்டான். அவளை தன் விருப்பத்துக்கு இசைவிக்கும்படி அரக்கியர்க்கு உத்தரவிட்டான். கலக்கத்துடன் மண்டோதரி யின் அந்தப்புரத்துள் நுழைகிறான்.

வருகிற கணவனின் நடை தளர்ந்திருக்கிறது. தலை குனிந்திருக்கிறது. முகம் வாடியிருக்கிறது.

""சுவாமி, தங்கள் முகம் ஏன் வாட்டமுற்றுள் ளது? வந்ததும் நேரே பூஜை அறைக்குச் சென்று சந்திரஹாச வாளை வைத்துவிட்டு வருவீர்களே. அது எங்கே?'' என்று பதட்டத் துடன் கேட்டாள் பத்தினி.

இராவணன், ""அந்த வாள் எங்கே போயிற்று என்று தெரியவில்லை தேவி'' என்றான்.

""என்ன சுவாமி இது? நிராயுதபாணி யார் மீதாவது பயன்படுத்தினால் அதைக் கொடுத்த சிவனிடமே திரும்பிவிடும் என்று சிவனார் அன்று சொன்னதை என்னிடம் சொல்லி இருக்கிறீர்களே. இப்பொழுது எந்த நிராயுத பாணிமீதாவது பயன்படுத்தினீர்களா?'' என்று கவலையுடன் கேட்டாள் மண்டோதரி.

இராவணன் மண்டோதரி முகத்தைப் பார்க்காமலே சொன்னான். ""ஆம் தேவி. இப்பொழுதுதான் நினைவு வருகிறது. சீதையை புஷ்பக விமானத்தில் கொண்டு வரும்பொழுது ஒரு பெருங்கழுகு என்னைத் தடுத்தது. அதன் அலகால் என்னை பயங்கரமாய் தாக்கியது.

அப்பொழுது ஆத்திரமடைந்த நான் அந்தக் கழுகின் சிறகுகளை அந்த வாளால் வெட்டி கழுகை வீழ்த்தினேன்.''

""அந்தக் கழுகிடம் ஆயுதம் ஏதும் இல்லையா?''

""அதன் அலகுதான் ஆயுதமாகப் பயன் பட்டது. வேறெதுவும் இல்லை.''

""சுவாமி, அலகு ஓர் உறுப்பல்லவா? அது எப்படி ஆயுதமாகும்? அப்படியானால் அந்தக் கழுகு நிராயுதபாணிதான். வாள் சிவனிடம் திரும்பிச் சென்றிருக்கும். பெற்ற வரத்தை மறந்துவிட்டீர்களே சுவாமி!''

""ஆத்திரத்தில் அறிவிழந்துவிட்டேன் தேவி.''

ஆத்திரம் மட்டுமல்ல; மாற்றான் மனைவி யாகிய சீதைமீது கொண்ட காமம்தான் அறிவு மயங்கச் செய்துள்ளது என்பதை மண்டோதரி தன் மனத்துக்குள் நினைத்து வருத்தினாள்.

இராவணனின் மறதிக்கு காமமே காரணமானது. காமமே துன்பங்களுக்குக் காரணம் என்கிறார் திருவள்ளுவர்.

"காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றன்
நாமம்கெடக் கெடும் நோய்.'

source:nakkeeran.in
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum