தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்

Go down

இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்  Empty இலங்கையில் கிறிஸ்தவம்-நெல்லைச்சொக்கர்

Post by இறையன் Thu Dec 15, 2011 2:13 pm

இலங்கையின் வடபாகம் பண்டைக் காலத்தில் நாகர்களின் உறைவிடமாய்த் திகழ்ந்தது. இயக்கர்களும் இலங்கையில் இருந்தனர். கௌதம புத்தர் இலங்கைக்கு 3 முறை வந்தார் என `மகாவம்சம்' கூறுகிறது. அக்காலந்தொட்டு புத்தமதம் இலங்கையில் பரவுவதாயிற்று


ஆயினும் யாழ்ப்பாணப் பகுதியில் பழைய நாக வழிபாட்டோடு, சோழர் காலத்தில் ஹிந்துமதமும் தழைக்க ஆரம்பித்தது. கி.பி. 15ஆம் நூற்றாண்டு வரையிலும் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையில் ஹிந்து மதமும் பௌத்தமும் மட்டுமே இருந்தன.

கி.பி. 1505ல் லூறென்சோ-தே-அல்மேதா (Lourenco - de -Almeida) என்ற போர்ச்சுக்கல் நாட்டுத் தளபதி கொழும்பு வந்தான். கொழும்பில் ஆட்சி செய்த தர்மபராக்கிரமவாகு மன்னனோடு, பண்டகசாலை அமைப்பதற்கு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டான்.

1578ல் கொழும்பில் போர்ச்சுக்கீசியர்கள் களிமண், கல்லால் ஆன நிலையான கோட்டை ஒன்றை வியாபாரத்திற்காகக் கட்டிக் கொண்டனர். தர்மபராக்கிரமவாகு காலத்திற்குப் பிறகு கி.பி.1534ல் அவனது பேரன் புவனேகவாகு பதவியேற்றான்.

புவனேகவாகு தனது பதவி ஆசையால் போர்ச்சுக்கீசியர்களோடு உறவாடினான். தனது பேரன் தர்மபாலனைப் போல தங்கத்தில் ஒரு சிலையும், அதற்கு முடிசூட ஒரு கிரீடமும் செய்து போர்ச்சுக்கலுக்கு அனுப்பினான். 1541ல் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் மன்னர் தலைமையில் முடிசூட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

முடிசூட்டிக் கொண்ட அச்சிலையோடு புவனேகவாகு கேட்டுக்கொண்டபடி பிரான்ஸிஸ்கன் சபை பாதிரிகள் கி.பி. 1543ல் இலங்கை வந்து இறங்கினர். புவனேகவாகு கிறிஸ்தவனானான். அவன் பேரன் தர்மபாலன் கிறிஸ்தவனானான். ஆட்சியைப் பிடிப்பதற்கு சூழ்ச்சி செய்த போர்த்துக்கீசியர் புவனேகவாகுவைத் தற்செயலாகச் சுடுவது போலச் சுட்டுக்கொன்றனர்.

தர்மபாலனைப் பெயரளவில் வைத்துக்கொண்டு போர்த்துக்கீசியர் மத்திய இலங்கையைப் பிடித்துக் கொண்டனர். கி.பி. 1560ல் மன்னாரில் போர்த்துக்கீசியர் கோட்டைக் கட்டினர். இதற்கு ஏற்கனவே கடலால் அழிவுபட்டிருந்த திருக்கேதீச்சரக் கோயிலின் கற்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.

மதமாற்ற வன்முறை

போர்த்துகீசியர் , டச்சுக்காரர், ஆங்கிலேயர் என மூவர் காலத்திலும் கிறிஸ்தவ மதம் இலங்கையில் திணிக்கப்பட்டது. முன்னர்க் கூறியபடி இக்கொடுமைக்கெல்லாம் வித்திட்டவன் கோட்டை அரசனான புவனேகவாகுதான். இவர்களுள் முதலிருவர் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க மதமும், புராடஸ்டன்டு மதமும் வெளிப்படையாகத் திணிக்கப்பட்டன. குறிப்பாகப் போர்த்துக்கீசியர்கள் மிகக் கொடூரமாக ஹிந்து மதத்தை - மக்களை அழிக்க முயன்றனர்.

போர்த்துக்கீசியர்களின் வன்முறை

இது குறித்து `யாழ்ப்பாணச் சரித்திரம்' எனும் நூலிலே அதன் ஆசிரியர் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை இவ்வாறு கூறுகிறார்:

"அவன் (பரநிருபசிங்கன்) இறந்தவுடன் அவர்கள் (போர்த்துக்கீசியர்) நல்லூர்க் கோட்டையைத் தமது வாசஸ்தானமாக்கினார்கள். புறமதிலை இடித்து அக்கற்களைக் கொண்டு யாழ்ப்பாணத்தில் இப்போதுள்ள கோட்டையைக் கட்டினார்கள். சிவாலயம், சுப்பிரமணியர் ஆலயம், விநாயகராலயம் என்பவைகளை எல்லாம் இடித்தார்கள். அங்கிருந்த அரிய நிதிகளையெல்லாம் கவர்ந்தார்கள்.... சனங்களையெல்லாம் கிறிஸ்தவர்களாகுமாறு நெருக்கினர். அது செய்யாதாரை ஒறுத்தனர் (தண்டித்தனர்). கிறிஸ்தவராயினாருக்குப் பலவித உத்தியோகங்களைக் கொடுத்தனர். அவர்கள் தண்டத்துக்கஞ்சி அகத்தே சைவராகவும் புறத்தே கிறிஸ்தவராகவும் நடிப்பார் பலராயினர். கிறிஸ்தசமயப் பிரவேசம் செய்யோம் என உயிர்விடுத்தாரும் அநேகர். அந்நியதேசம் சென்றாரும் அநேகர்...."

டச்சுக்காரர்கள் வன்முறை

போர்த்துக்கீசியர் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை பரப்பினர். டச்சுக்காரர்கள் புராடஸ்டன்டு கிறிஸ்தவத்தைப் பரப்பினர். இதில் வேடிக்கை என்னவென்றால் டச்சுக்காரர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை புராடஸ்டன்டு கிறிஸ்தவர்களாக ஆக்கினர். இது குறித்து முத்துத்தம்பிப்பிள்ளை இவ்வாறு கூறுகிறார்:-

"ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) கொடி உயர்த்தியவுடன் தமது புதிய கிறிஸ்தமதத்தை (Protestant Christianity)ப் பிரசங்கித்தனர். பல்டியாஸ் பாதிரி என்பவர் முதல் முப்பது வருஷத்தில் (1688-ல்) யாழ்ப்பாண நாட்டில் 1,80,000 பேரைக் கிறிஸ்தவராக்கியதாக விஞ்ஞாபனம் செய்திருக்கின்றனர்."

ஈழத்து வாழ்வும் வளமும் என்ற நூலில் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை இவ்வாறு கூறுகிறார்:-

"ஒல்லாந்த அரசினர் (டச்சுக்காரர்) சீர்திருத்திய கிறிஸ்தவ மதத்தை நாட்டிலே பரப்ப முயன்று வந்தனர். அதற்காக 35 கோயில்களும் (சர்ச்சுகள்) 4 குருமார்களும் இருந்தனர். அன்றியும் அவர் வருகைக்கு முன் போர்த்துக்கேயர் காலத்தில் அங்கிருந்த உரோமன் கத்தோலிக்கக் கோயில்களையும், கன்னியர் மடங்களையும் அழித்துவிட்டு, தாம் உண்மை எனக் கண்ட தமது சமயத்தைப் பரப்ப பெரும் பொருள் செலவிட்டு ஒரு சமயக் கல்விச் சாலையையும் நடத்தி வந்தனர்."

"இனி மார்க்க விஷயத்தில் யாது செய்தார்கள்? அவர்கள் தொடக்கத்தில், பறங்கிக்காரரைப் போல் அச்சுறுத்தியாயினும் மதஸ்தாபனம் செய்யாது, குடிகளாயுள்ளவர் வலிந்து போய்ச் சேர்ந்து கிறிஸ்தவராவதற்கேதுவான கொலைத்தண்டனையும் பிற துன்பங்களுமாகிய தீய உபாயங்களால் தம் மதத்தைப் பரவச் செய்தார்கள்" என்கிறார் முத்துத்தம்பிப் பிள்ளை.

ஆங்கிலேயரின் வஞ்சம்


மதமாற்றச் செயல்களில் ஆங்கிலேயரின் நயவஞ்சகத் தன்மையை நாமறிவோம். இலங்கையில் போர்த்துக்கீசியர், டச்சுக்காரர் இருவரும் ஹிந்து பௌத்தக் குடிகளை வலுக்கட்டாயமாக மதமாற்றினர். கோயில்களை இடித்தனர். கொலைத்தண்டனை விதித்தனர். ஆனால் ஆங்கிலேயரோ வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல பாதிரிகளின் பிரச்சாரம் மூலமும், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகளை நிறுவுவதன் மூலமும், ஹிந்துமத தெய்வங்களை நிந்திப்பதன் மூலமும் மதமாற்றத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி `யாழ்ப்பாணச் சரித்திரம்' நூலாசிரியர் கூறுவதாவது:


"அமெரிக்கன் மிஷன், வெஸ்லியன் மிஷன், சர்ச் மிஷன் என்னும் மூன்று கிறிஸ்த சங்கத்தாரும்... வித்தியாசாலைகளைத் (பள்ளிக்கூடம்) தாபித்தும், கோயில்களைக் (சர்ச்சுகள்) கட்டியும், ஊர்கள்தோறும் போதகர்களை (பாதிரிகள்) அனுப்பியும் துண்டுப் புத்தகங்கள் கொடுத்தும் தமது கிறிஸ்தமதத்தைப் பரப்புவாராயினர். அவர்களுடைய வித்தியாசாலையில் உபாத்தியாயர்களாக விரும்புபவர் கிறிஸ்தவராதல் வேண்டுமென்றும் அவர்களுக்கு விசேஷ சம்பளங் கொடுக்கப்படுமென்றும் விஞ்ஞாபனம் செய்து அநேகரைக் கிறிஸ்தவர்களாக்கினர். சுகமாக உலாவிச் சனங்களோடு சல்லாபித்துவிட்டு மாச முடிவில் சம்பளம் பெறும் போதக வேலையை விரும்பித் தமது பயிர்த் தொழிலை வீசி விட்டுக் கிறிஸ்தவர்கள் ஆயினவர் பலர். பாதிரிமார் சிவதூஷணங்களை வரைந்து துண்டுகளும் துண்டுப் புத்தகங்களும் பல்லாயிரக்கணக்காக அச்சிட்டு எங்கும் பரப்புவாராயினர்."

கோயில்கள் இடிப்பு

கி.பி. 1505ல் இலங்கையுள் நுழைந்த போர்த்துக்கீசியர் ஆட்சியைப் பிடித்ததும் செய்த முதல்வேலை ஹிந்துக் கோயில்களை அழித்து நிர்மூலமாக்கியதுதான். கோயில்களிலிருந்த பெருஞ் செல்வத்தைக் கொள்ளையடித்தனர். இலங்கை முழுதுமிருந்த ஆயிரக்கணக்கான கோயில்கள் அடியோடு அழிக்கப்பட்டன.

அவர்களால் நிர்மூலமாக்கப்பட்ட கோயில்களுள், திருக்கேதீச்சரம், திருக்கோணேசுவரம், நகுலேசுவரம், முன்னேசுவரம், ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப் பெறும் காரைநகர் சிவன்கோயில், நயினை ஷ்ரீ நாகபூஷணி கோயில், நல்லூர் கைலாயநாதப் பிள்ளையார் கோயில், பரராச சேகரப் பிள்ளையார் கோயில், கதிர்காமம் முருகன் கோயில், சீதவாக்கை வைரவ ஆண்டிகோயில், முனீஸ்வர சிவாலயம், தெய்வந்துறை விஷ்ணு ஆலயம், நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், துன்னாலை ஷ்ரீவல்லிபுர ஆழ்வார் கோயில் ஆகியன முக்கியமானவை.


இவற்றுள்ளும் சில முக்கியமான கோயில்களின் வரலாறுகளை மட்டும் இங்கே காண்போம்.

திருக்கேதீச்சரம்

தலைமன்னார் துறைமுகத்திலிருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் பாலாவித் தீர்த்தக்கரையில் இத்தலம் உள்ளது. ஆதியில் மாந்தை, மாதோட்டம் என இந்நகர் அழைக்கப்பட்டது. கி.பி. 1590ல் போர்த்துக்கீசியர் இவ்வாலயத்தைத் தாக்கி அழிக்கத் திட்டமிட்டனர்.


இதனை எவ்வாறோ அறிந்த கோயிலைச் சார்ந்தோர் முக்கியமான பொருட்களையும், அழகுமிக்க கௌரியம்மன் திருவுருவத்தையும் எடுத்துக்கொண்டு இரவோடிரவாக ஊரைவிட்டோடி காட்டு வழியில் சென்று ஒரு சிறு கிராமத்தில் தங்கினர்.


பின்னர் அவ்விடத்தில் சிறுகோயிலொன்றை அமைத்து, திருக்கேதீச்சரம் திருக்கோயில் அம்மன் என்று பெயரிட்டு வழிபட்டு வந்தனர். இக்கோயில் பின்னர் அந்நியரால் அழிக்கப்பட்டு மடுமாதா ஆலயம் கட்டப்பட்டது.


திருக்கேதீச்சரம் ஆலயத்துள் நுழைந்த போர்த்துக்கீசியர் விலைமதிப்பற்ற ஆபரணங்கள், பொருட்களைக் கொள்ளையடித்து, சுவாமி திருவுருவங்களையும், கோயிலையும் உடைத்து நாசம் செய்தனர். திருக்கோயில், மதில், கோபுரம் ஆகியவற்றைப் பீரங்கியால் தாக்கி அழித்தனர். கோயில் கற்களைக் கொண்டு மன்னார் துறைமுகத்தைக் கட்டினர்.

கி.பி. 1827ல் ஷ்ரீலஷ்ரீ ஆறுமுக நாவலர் `யாழ்ப்பாணச் சமயநிலை' என்ற தமது பிரசுரத்தில் திருக்கேதீச்சர ஆலயத்தின் அவலநிலை பற்றி எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்தார். திருஞானசம்பந்தராலும், சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடப் பெற்ற இத்தலத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக ஒரு கால பூசை மட்டுமே நடப்பதாகத் தெரியவருகிறது.

திருக்கோணேசுவரம்


இலங்கையின் கிழக்குப் பகுதியில் முல்லைத் தீவின் அருகில், சுவாமிமலை என்ற குன்றில் இக்கோயில் அமைந்துள்ளது. இலங்கையின் மிகப்பழமையான கோயில்களுள் ஒன்றான இது திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றதாகும். அப்பரும் சுந்தரரும் இத்தலத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளனர்.

கி.பி. 1622ல் போர்த்துக்கீசியர் இவ்வாலயத்தைத் தாக்கி நிர்மூலமாக்கினார். அவ்வாறு அழிக்கும் முன்பு, இவ்வாலயத்தைப் பற்றிய தரவுகளை முழுமையாக எடுத்துள்ளனர். இவ்வாலயத்தை அழித்த போர்த்துக்கீசிய தளபதி கான்ஸ்டான்டைன் டிசா நொரங்ஹா என்பவன் எழுதிவைத்த வரைபடங்கள், குறிப்புகளை வைத்துப் பார்க்கும்போது, இக்கோயில் மிகப் பெரியப் பரப்பளவில் மூன்று பிரிவாக அமைந்திருந்ததை ஊகிக்க முடிகிறது.


சுவாமிமலையில் மூன்று சமதளப் பகுதிகள் இருந்தன. அவற்றில் மாதுமை அம்பிகையின் மிகப்பெரிய கோயில், ஷ்ரீநாராயணர் கோயில், மலையுச்சியில் கோணேசர் கோயில் என மூன்று கோயில்கள் இருந்தன. மாதுமை அம்பிகையின் ஆலயத்தைச் சுற்றி தேரோடும் வீதி அமைந்திருந்தது. ஷ்ரீநாராயணர் கோயிலில் ஷ்ரீமகாலட்சுமி சமேத நாராயண மூர்த்தி எழுந்தருளியிருந்தார். பிரதான கோயிலான கோணேசர் ஆலயத்தில் கருவறையில் பாணலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

கோயிலை இடித்த தளபதி டிசா வரைந்த படங்களில் ஒன்று போர்ச்சுக்கல்லிலுள்ள அஜுடா நூலகத்தில் உள்ளது. கோயில் கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையை டிசா கட்டினான். அப்போது கோயிலிலிருந்த கல்வெட்டு ஒன்று கோட்டை வாசலில் வைத்துக் கட்டப்பட்டது. அதனை டிசா படமெடுத்து போர்ச்சுக்கல்லுக்கு அனுப்பி உள்ளான். ஏனெனில் அக்கல்வெட்டில் `கோணேசர் ஆலயம் பறங்கிகளால் இடித்தழிக்கப்படும்' என்ற தீர்க்க தரிசனம் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி `யாழ்ப்பாணச் சரித்திரம்' நூலாசிரியர் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை கூறுவதாவது:


"....1622ல் திரிகோணமலையிலே சுவாமிமலை மேலிருந்த மகோந்நதமானதும் அதிவிநோத சித்திர சிற்பாலங்காரங்கள் அமைந்ததுமாகிய கோபுரத்தோடு கூடிய ஏழுமதிலும் அநேக மண்டபங்களும் உடைய சிவாலயத்தையும் தகர்த்து விட்டார்கள்."

(கி.பி. 1639ல் டச்சுக்காரர்கள் திருகோணமலையைக் கைப்பற்றினார்கள். போர்த்துக்கீசியரால் அழிக்கப்பட்டு எஞ்சிய தூண்களை இடித்துத் தங்களுடைய கோட்டையைக் கட்டினர். இவர்கள் காலத்தில் ஆலயத்திற்குச் செல்வதற்கும், வணங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனினும் பக்தர்கள் ஒளிந்திருந்து தங்கள் வணக்கத்தைச் செலுத்தி வந்துள்ளனர்.)

பிரிட்டிஷ் ஆட்சியில் கி.பி. 1803 ல் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டது. 1950ல் கோயில் திருப்பணிக்காக கிணறு வெட்டும் பொழுது, விநாயகர், சிவன், பார்வதி, திருவெங்கவடிவ அம்பாள், அஸ்திரதேவர், சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களோடு அன்னவாகனம் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன. 1963ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. குளக்கோட்டு மன்னன் காலத்திலிருந்து சிறப்பாக நடைபெற்ற தெப்பத் திருவிழா 1973 முதல் மீண்டும் நடைபெறுகிறது. 1981, 1993ல் கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன.

நல்லூர்க் கந்தசுவாமி கோயில்


யாழ்ப்பாண அரசின் தலைநகராக விளங்கிய பெருமையை உடையது நல்லூர். ஷ்ரீலஷ்ரீ ஆறுமுக நாவலர் அவதரித்ததும் இந்தத் தலத்தில்தான். நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டியவன் புவனேகவாகு என்ற திரிசங்கபோதி ஆவான். Conquest of Ceylon நூலாசிரியரான குவெறோஸ் (Queroz) தமது நூலில், "நல்லூர்க் கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணத்திலேயே பெரிய கோயில். இக்கோயிலைச் சுற்றி நெடுமதில்கள் அமைக்கப்பட்டிருந்தன" என்று கூறியுள்ளார்.

கி.பி. 1560 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி, கொன்ஸ்தாந்தீனு தே பிறகன்சா என்ற தளபதி தலைமையில் போர்த்துக்கீசியர் கப்பற்படை யாழ்ப்பாணக் களப்பில் இறங்கியது. 1200 பேரைக் கொண்ட பறங்கிப் படையினர் கரையில் நின்ற தமிழ்ப்படையை வென்று, நல்லூர் நகர் மதிலை உடைத்து உள்ளே சென்றனர். யாழ்ப்பாண அரசனான சங்கிலி கோப்பாய்க்கு ஓடிவிட்டான். பின்பு பறங்கியர் அவனுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டனர். சங்கிலியின் புறக்கணிப்பால் ஆந்திரேபூர்த்தோடு தே மென்டொன்சா என்ற தளபதி 1591, அக்டோபர் 26 ஆம் தேதி கொழும்புக்கு வந்தான். அக்டோபர் 28 ஆம் தேதி பறங்கிப் படை நல்லூரை அடைந்தது.

ஹிந்துக்களின் போராட்டம்


தங்கள் நாட்டையும் நகரையும் கோயிலையும் காக்க ஹிந்துக்கள் ஒன்று திரண்டெழுந்தனர். பறங்கிப் படையை எதிர்த்து ஹிந்து மக்கள் போர்புரியத் தொடங்கினர். இதில் நல்லூர் கோயில் அர்ச்சகர்கள், யோகிகள் ஆகியோரும் ஈடுபட்டனர். வீரமாகாளியம்மன் கோயிலுக்கும் கந்தசுவாமி கோயிலுக்கும் இடையில் சங்கிலி அரசனின் மெய்க்காப்பாளர்கள் படையான `அத்தப்பத்துப்படை' பறங்கியரை எதிர்த்து கடும்போரில் ஈடுபட்டது. இப்போரில் ஈடுபட்டோரெல்லாம் மாண்டனர். இவர்களை உற்சாகப்படுத்திய ஒரு யோகியாரும் மாண்டார். நல்லூர்க் கோயில் பிராமணரும் மாண்டார்.

கந்தசுவாமி கோயில்


இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இடையிடையே தஞ்சாவூர்ப் படைகளுடன் ஹிந்துக்கள் பறங்கிகளுக்கெதிராகப் போராடியும் பயனில்லாமற் போயிற்று. யாழ்ப்பாணத்து அரசர்களும் ஒழுங்காகத் திறை கொடுக்கவில்லை. இக்காரணங்களை முன்னிட்டுக் கொழும்பிலிருந்து போர்த்துக்கீசிய அதிபதி கொன்ஸ்தாந்தீனு தே பிறகன்சா, பிலிப்தெ ஒலிவேறா என்ற தளபதியை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினான். இவன் யாழ்ப்பாணத்து அரசனைச் சிறைப்படுத்தி, 1621ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நல்லூரைத் தனது உறைவிடமாக்கினான்.

நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கி அஃது இருந்த இடமும் தெரியாமல் அஸ்திவாரத்தையும் கிளறி விடும்படி கட்டளையிட்டான். ஊர்க்காரர்கள் மனம்நொந்து கதறினர்; பதறினர்; ஓலமிட்டனர். இக்கோயிலை அழிக்காமல் விட்டால் அவன் கேட்பதை எல்லாம் தருவதாகக் கெஞ்சினர். அவன் அதற்கெல்லாம் செவிகொடுக்காமல் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டம் ஆக்கினான்.

கோயிலை இடிக்கும்முன் கோயில் மெய்க்காப்பாளர் ஒருவர் செப்புச் சாசனங்கள், ஆபரணங்களை எடுத்துக் கொண்டு மட்டக்களப்பிற்கு ஓடினார். அக்கோயில் அர்ச்சகர்கள் சிலா விக்ரகங்களை எடுத்துப் பூதவராயர் கோயிலுக்கு அருகிலுள்ள குளத்தில் போட்டுவிட்டு, நீர்வேலிக்கு ஓடிவிட்டனர். இக்காலத்தில் ஹிந்துக்கள் தமது வீடுகளில் போர்த்துக்கீசியருக்குத் தெரியாதபடி வழிபட்டு வந்துள்ளனர்.
கி.பி. 1658, ஜூன் 21ல் யாழ்ப்பாணம் டச்சுக்காரர் வசமானது. அச்சமயம் நல்லூர்க் கோயிலிலிருந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச் கட்டப்பட்டது. ஹிந்துக்கள் ரகசியமாக தங்கள் வீடுகளில் வழிபாடு செய்தனர். பின்பு 1734ல் சிறுமடாலயமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயில் அமைக்கப்பட்டது. 1902ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.



வரலாறு தரும் பாடம்


இங்ஙனம் அன்பைப் போதிக்கும் மதம் எனக் கூறப்படும் கிறிஸ்தவம் இலங்கையில் ஹிந்துமதத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருக்கின்றது. அத்தனைத் தாக்குதல்களையும் எதிர்கொண்டு இலங்கையில் ஹிந்துமதம் தழைத்து வருகிறது.


இன்னும் போர்த்துக்கீசியர் செய்த கோயில் இடிப்புகளும், கட்டாய மதமாற்றமும், ஆங்கிலேயர் காலத்தில் மதமாற்றத்திற்கு எதிராக ஷ்ரீலஷ்ரீ ஆறுமுக நாவலர் போராடியதும் மிகப்பெரிய வரலாறுகளாகும். நாம் தெரிந்து கொண்டு விழிப்புணர்வு பெற வேண்டிய வரலாறுகள் அவை.

இறுதியாக, அந்நியரின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து ஹிந்துமதத்தைக் காப்பாற்றிய நம் முன்னோர்களைப் பற்றி `யாழ்ப்பாணச் சரித்திரம்' நூலாசிரியர் ஆ.முத்துத் தம்பிப் பிள்ளையின் சில வார்த்தைகளோடு இக்கட்டுரையை முடிப்போம்.

"பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் அரசு செய்த இருநூறு வருஷ காலமும் தமது சமயத்தில் பிரவேசிக்கும்படி பெருந்துன்பங்கள் செய்து குடிகளை வருத்தினர். அதற்காற்றாது அச்சமயத்தைக் (கிறிஸ்தவம்) கைக்கொண்டார் போலப் புறத்தே நடித்தும் அகத்தே சைவசமயிகளாயே இருந்தார்கள். பறங்கிக்காரரும் ஒல்லாந்தரும் தமது சமயத்தின் மேற்கொண்ட பேரபிமானம் பற்றி மற்றைச் சமய ஆலயங்களையும் சமய நூல்களையும் கல்வி நூல்களையும் எரியூட்டி அழித்தார்கள். அழித்தும் நம் முன்னோர்கள் சைவத்திலும் சமய நூல்களிலும் கல்வி நூல்களிலும் வைத்த அசையாப் பேரன்பினாலே அவற்றை இரகசியத்திற் பாதுகாத்து வந்தனர். அங்ஙனம் அவர்கள் பாதுகாத்து வையாதிருப்பரேல் யாழ்ப்பாணம் சைவமணமும் தமிழ்க்கல்வியும் சிறிதுமில்லாத நாடாயிருக்கும்."

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum