தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அருளாளர்கள் சுட்டும் அகவுழவு-முனைவர் சொ.சேதுபதி

Go down

அருளாளர்கள் சுட்டும் அகவுழவு-முனைவர் சொ.சேதுபதி  Empty அருளாளர்கள் சுட்டும் அகவுழவு-முனைவர் சொ.சேதுபதி

Post by இறையன் Sat Dec 17, 2011 12:34 pm

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குச் செய்ய வேண்டிய தொழில்கள் பலவுண்டு. மெய்வருத்தக் கூலி தரும் புறத்தொழில்கள் புரிந்து அறவழியில் பொருளீட்டல் வாழ்வுக்கு இன்றியமையாதது. அத்தகு பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. இம்மை வாழ்வும் செம்மையாகாது. எனவே, பொருள் சேர்க்கும் புறவாழ்விற்காகப் புரிய வேண்டியது தொழில்.


இந்தியத் திருநாட்டில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும், அவற்றுள் இன்றியமையாத தொழில், உழவு. ஏனைய தொழில்கள் அனைத்தும் இதன் பின்னர்தான் வந்தாக வேண்டும் என்ற கருத்தில்,

"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால்,
உழன்றும் உழவே தலை".

என்று வள்ளுவம் மொழிகிறது.


தனக்கு மட்டுமன்றி, பல்லுயிர்க்கும் உணவளிக்கும் அருள்தொழில் உழவு. இதனைப் புறத்தொழிலாக மட்டும் கருதாமல் அகத்தொழிலாகவும் ஆக்கிப் பார்த்தது, தமிழ் இலக்கியம். வாழ்வின் இலக்கு இன்பம். இம்மைக்காயினும், மறுமைக்காயினும் இன்பம் வேண்டும். அது, துன்பம் ஒன்றில்லாத் தூய இன்பம். எல்லாவுயிர்க்கும், இன்பம் விழைதல் இயல்பு. அவற்றுள் மானுட உயிர்க்கு இவ்வின்பம் சிற்றெல்லை கடந்து பேரின்பமாகத் தேடக்கிடைக்கிறது.


அதற்குச் செய்ய வேண்டிய அகப் புறத் தொழிலாக உழவை முன்வைக்கிறார்கள் இரு அருளாளர்கள்.


காடாகவும், மேடாகவும் கரடுமுரடாகவும் கிடக்கும் நிலத்தைக் கொத்திப் பண்படுத்தி, கலப்பை கொண்டு உழுது நீர் பாய்ச்சி, விதை விதைத்துக் களைபறித்து, வேலியிட்டுக் காத்து நிறைவில் விளைபயனை அடைதல் வேளாண் தொழிலுக்கு உரிய ஒழுங்குகள்.


இந்தப் புறவொழுங்குகளை, அகவொழுங்குகளாக அமைத்து உடலாகிய நிலத்தைப் பக்குவப்படுத்தி உழவுத்தொழில் நிகழ்த்தி, உரியன செய்து உயிரை மேம்படுத்திக் கொள்ளும் அகவுழவை ஆழமாகவும், அகலமாகவும் வலியுறுத்தும் அருளாளர்கள் மூவரின் சிந்தனைகளை இங்கு நோக்கலாம்.


அப்பர் சுட்டும் அருள் உழவு


சிவகதி எய்தத் தவநெறி நின்று தொண்டாற்றிய அருளாளர் அப்பரடிகள், உழவாரப்படை ஏந்தித் திருத்தொண்டு புரிந்த உயர்ந்த சீலர். அவர் சிவகதியாகிய விளைவினை, அனைத்து உயிர்களும் எய்தச் செய்யவேண்டிய ஞான உழவினைப் பின்வரும் பாடலில் இனிது புகட்டுகிறார்.


மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மாறே! (திருநாவுக்கரசர் தேவாரம் - 4 - 76:2)


பற்றற்றான் பற்றினைப் பற்றும் பற்றாகிய விருப்பம் என்பது இப்பாடலில் வித்தாகிறது.


வெட்ட வெட்ட முளைக்கும் களையாகிய பொய்ம்மையை முற்ற வாங்கி, பொறை என்னும் நீர் பாய்ச்சுதலோடு, தம்மையும் நோக்கிக் கண்டு, தகவெனும் வேலி இட்டுக் காத்தல் என்பது இன்றியமையாதது.


தம்நிலை கண்டு அதற்குத் தகுதியான நிலையில் வேலி அமைத்துக் காத்துச் செம்மையுள் நிற்பவர் நிச்சயம், சிவகதியை விளைவாகப் பெறுவார் என்கிறார் அப்பர்.


இப்பாடலில், "தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டு" என்ற அடி கவனத்திற்குரியது.


"சிவபோதத்தால் ஆன்ம தரிசனம். சிவ தரிசனத்தால் ஆன்ம சுத்தி. தகவு என்பது கொல்லாமை. கடவுள் உடலுக்குள் புகுந்து நின்று ஆட்டுவிக்கிறான். பின் பக்குவம் வந்து அவனுக்குள்ளேயே ஒளிந்து கொள்கிறான். முன்னையது சிவபோதம். பின்னையது சிவபோகம் என்று சித்தாந்த விளக்கம் தந்து ஞானவுழவின் மேன்மையை விளக்குவார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.


பாரதியார் சுட்டும் பயிர்த்தொழில்

இருபதாம் நூற்றாண்டில், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து பாடிய சொல்லேர் உழவர், மகாகவி பாரதியார். நமக்குத் தொழில் கவிதை என்று தம்மனத்திற்கு உரைத்த அவர், அகவுழவு பற்றியும் தம் கவிதையில் குறிப்பிடுகிறார்.


அன்புநீர் பாய்ச்சி, அறிவெனும் ஏருழுது
சாத்திரக் களைபோக்கி, வேதப் பயிர் செய்து
இன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தியின்
வேண்டுகின்றோம் அதனை அவள் தருக! (பாரதியார், வசனகவிதைகள் - சக்தி - 3)


அன்பினை நீராகப்பாய்ச்சி, அறிவினை ஏராகக்கொண்டு செய்யும் உழவுத்தொழிலில் முளைக்கும், பொய்ம்மைச் சாத்திரங்களாகிய களைகளைப் போக்கி, மெய்யறிவாகிய வேதத்தை வித்திட்டுப் பேணி வளர்த்து இன்பப்பயன் அறிந்து உண்டு மகிழுதற்கு மகாசக்தியின் துணையை வேண்டுகிறது, பாரதியார் பாடல்.


வஞ்சகம், பொறாமை முதலான கானல்நீர் பாய்ச்சி, அறிவுக்கூர் மழுங்கிய கலப்பை கொண்டு உழுத சாலிலேயே உழுவதாகப் பெயர் பண்ணி, பொய்ச்சாத்திரங்களாகிய களைகளையே பயிர்கள் எனக் கருதிக் காட்டி, மிக விளைத்த சொல்லேர் உழவர்கள் எனப் பெயர் பண்ணிக்கொண்டு திரிந்த கலியுகப் புலவர்களின் வறட்சிப் போக்கில் இருந்து தம்நாட்டையும், தமிழ் இலக்கியத்தையும் மீட்க வேண்டிக் களம் இறங்கிய பாரதியார்,


"பொய்க்கும் கலியைக் கொன்று பூலோகத்தார் கண்முன்னே மெய்க்கும் கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுவ விரதம்" கொண்டு புரிந்த வேளாண்தொழில், வேதப்பயிர் செய்தல்.


"எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்க" ஏற்ற தொழில், இந்த ஞான உழவுத்தொழில் என்று நுட்பமாய் உரைக்கும் இப்பாடல்.


உயிர் தங்கும் வீடான உடலுக்கு மிகவும் இன்றியமையாத, உணவு. அதனை விளைக்கும் அறத்தொழில், உழவு. அருள்வடிவான இறையை எங்கும் நிறைந்த பரம்பொருளைத் துணைக்கொள்ள, உயிரும் தொழில் பண்ண வேண்டியிருக்கிறது. அதற்காகப் புலங்களை உடல் உழுவதுபோல, புலன்களை உயிர் உழுதல் வேண்டும். புறவுழவு உணவு விளைக்க; அகவுழவு நல்லுணர்வு படைக்க. இம்மையிலும் மறுமையிலும் தடையிலாப் பேரின்பம் நின்று நிலைக்கத் தொழில் இன்றிமையாதது. அனைத்துத் தொழில்களிலும் அறத் தொழிலாக உயர்ந்து நிற்பது உழவுத்தொழிலே!


தன்னேரிலாத நற்றொழிலாகிய உழவு அகத்தும் புறத்தும் நின்று நிகழ்த்தப் பெறும்போது எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்தல் இயல்பாகும்.


அதுவே இந்த அருளாளர்களின் விழைவும் ஆகும்.


நன்றி:- தினமணி
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum