தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

Go down

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு  Empty ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

Post by இறையன் Tue Dec 13, 2011 12:05 am

• விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.

• சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.

• இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயே, “ஈழத் தமிழர்களோ, விடுதலைப் புலிகளோ, தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.

• ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும், பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்து, ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் - எம்.ஜி.ஆர். தான்!

• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்., தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹாட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே, ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டு, பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.

• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர்., ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் - இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும், திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.

• “திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு அய்ந்து கோரிக்கைகளை முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி, 12 நாட்கள் ஒரு சொட்டு நீர்கூட குடிக்காமல் 26.9.87 இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் - தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவிக்கிறேன்” என்று தமிழக அரசின் ‘அஞ்சலி’யை திலீபனுக்கு காணிக்கையாக்கியவர் எம்.ஜி.ஆர்.

• அது மட்டுமல்ல; புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 விடுதலைப் புலிகளை போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த பிறகு ஒப்பந்தங்களுக்கு எதிராக, அவர்களைக் கைது செய்து, அவர்களை சிங்கள ராணுவம் கொழும்புக்கு விசாரணைக்கு அழைத்துப் போனது; நியாயமாக, ஒப்பந்தத்துக்கு எதிரான இந்த செயலை ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்; வேண்டுமென்றே அதை செய்யவில்லை. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 புலிகள் இயக்கத்தின் மரபுக்கேற்ப, ராணுவத்திடம் உயிருடன் பிடிபடக் கூடாது என்று ‘சைனைடு’ அருந்தி பலியானார்கள். அமெரிக்க மருத்துவமனையிலிருந்து இந்த செய்தி அறிந்து துடித்த எம்.ஜி.ஆர். அங்கிருந்து - உயிரிழந்த மாவீரர்களுக்கு இரங்கல் செய்தியையும், இந்தியாவின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டியும் செய்தி அனுப்பினார். “தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும், இலங்கை கடற்படை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்திருக்குமானால், அவர்களுள் 12 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும் வெடித்திருக்காது. இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில், வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும் கவலைக்குரியது. இந்தக் கடினமான பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகளைத் தொடர்ந்து முயற்சிப்பேன். தமிழக அரசு இது பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்” (11.10.1987 நாளேடுகள்) - என்று அறிக்கை விட்டு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்மூடித்தனமான ஆதரவைக் காட்ட மாட்டேன் என்று வெளிப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.

• புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 போராளிகள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து பிரபாகரனைக் கைது செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டது. ‘பிரபாகரன் கைது’ என்று ஊடகங்கள் வழியாக செய்திகளைப் பரப்பினார்கள். இத்தகவல் அமெரிக்காவில் சிகிச்சை பெறும் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தரப்பட்டது. விடுதலைப்புலிகளுடன் இந்திய ராணுவம் மோதலுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இந்திய ராணுவம் அப்படி ஒரு போரை நடத்தக் கூடாது என்று தமிழகத்தில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றை கூட்டினர். அதில் அ.தி.மு.க. சார்பில், பிரதிநிதியைப் பங்கேற்கச் செய்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து செய்தி அனுப்பினார்.
ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு  Mgr-veluppillai-prabhakaran
• விடுதலைப் புலிகளும் இந்திய ராணுவமும் மோதுவதை நிறுத்திவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்என்று தமிழ்நாட்டில் 17.10.1987 அன்று கடையடைப்பு, முழு வேலை நிறுத்தம் நடத்துவது என பழ.நெடுமாறன அவர்கள் முயற்சியால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டம் முடிவு செய்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து முதல்வர் எம்.ஜி.ஆர். முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். “சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது. வன்முறையும் பெருமளவில் வெடித்தது. இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுதும் 17.10.1987 அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்” (16.10.1987 நாளேடு செய்திகள்) என்று இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக துணிந்து குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

• 31.10.1987 இல் தமிழகம் திரும்பிய எம்.ஜி.ஆர். அடுத்த நான்கு நாட்களிலேயே விடுதலைப் புலிகள் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்திய ராணுவம் போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கினார். பதறிப் போன இந்திய ஆட்சி, உடனே அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வராமல் தடுப்பதற்கு வெளிநாட்டுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி, எம்.ஜி.ஆரை சந்திக்க வைத்தது. எம்.ஜி.ஆர். தமது எதிர்ப்பு உணர்வுகளை நட்வர்சிங்கிடம் வெளிப்படுத்தினார்.

• உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு, அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் - அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்தனது இரங்கல் செய்தியில் கூறினார்:

“ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும், ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே! தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும், ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” - என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

ஒரு முதல்வராக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை - வெளிப்படுத்திய கொள்கை உறுதியை - அவர் கலைஞரைப் பட்டியல் போட்டுக் காட்டியதில்லை. ஆனால் நன்றியுள்ள தமிழினம் இதை வெளிப்படுத்த வேண்டும்.

ஈழத் தமிழினம் கடும் நெருக்கடியை சந்தித்த காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் செயல்பட்டதையும், இழைத்த துரோகத்தையும் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆம்; அப்போதுதான் எம்.ஜி.ஆர். பெருமை - அருமை புரிகிறது. ஈழத் தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எம்.ஜி.ஆர். அவர்களின் பங்களிப்பு பிரிக்க முடியாத பக்கங்களாகவே இருக்கும்.

thankyou:http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15621&Itemid=139
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum