தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துன்பமே.............தூரப் போ...- பவள சங்கரி திருநாவுக்கரசு.

Go down

துன்பமே.............தூரப் போ...- பவள சங்கரி திருநாவுக்கரசு.      Empty துன்பமே.............தூரப் போ...- பவள சங்கரி திருநாவுக்கரசு.

Post by இறையன் Sat Dec 17, 2011 10:51 pm

இன்பம் மட்டுமே என் வாழ்க்கையில் நிரந்தரம். துன்பத்திற்கு அங்கே இடமில்லை என்று உறுதியாக எண்ணுபவர்கள், இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டியத் தேவையில்லை

.

கோடைக் காலமும், குளிர் காலமும், மாறி, மாறி வருவது போல, வாழ்க்கையிலும் இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவதும் இயற்கையே! இன்பம் வரும் போது குதூகலிக்கிற மனது, துன்பம் வரும் போது துவண்டு விடுகிறது

.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருண்ட பகுதி என்பது ஒன்று உண்டு, என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த இருண்ட பகுதி ஒவ்வொரு நாளும் கடந்து போய்க் கொண்டேதான் இருக்கிறது. அந்தச் சூழலை ஏற்றுக் கொள்வது எளிதான காரியம் அல்ல என்றாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் படிப்படியாக, அந்த ரணம், மறதி என்ற மருந்தினால் ஆற்றப் படுகிறது என்பதே நிதர்சனம்

.

இந்த உலகத்தில் ஏதும் நிலைத்து நிற்பதில்லை. அது துன்பங்களுக்கும், துக்கங்களுக்கும் கூடப் பொருந்தும். பல துன்பங்கள் நாமாக அதை புதுப்பிக்காத பட்சத்தில், வெகு குறைந்த நேரமே நிலைக்கக் கூடியதாகிறது. தம்மைத் துரத்தி வரும் துன்பத்தை, திரும்பி நின்று ஏறிட்டால் போதும், கண்டிப்பாக அது கடந்து ஓடியே போய்விடும்

.

பயணம் செய்யும் படகில் அடைக்க இயலாத ஓட்டை விழுந்தால் அதை தேவையில்லாமல் சரி செய்ய முயற்சிப்பதை விட்டு, வெளியில் வர வேறு உபாயம் தேடுவதே அந்த நேரத் தேவையாகும்

.

வாழ்க்கையில் நிலையான ஒன்றே ஒன்று மாற்றங்கள்தான். மாற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அந்த மாற்றங்களை தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முடியும். அதன் மூலம் இருண்ட பாதையை முழுக்க அடைத்து விட்டு, அதிலிருந்து மீண்டு ஒளிமயமான மறு பாதையை நோக்கி நம்பிக்கையோடு நடைப் போட முடியும்

.

சில மாதங்களோ, சில நாட்களோ, சில நிமிடங்களோக் கூட நினைவில் நிலைத்து நிற்க முடியாத அந்த நிகழ்வுகளை, ஏன் உணர்வுப் பூர்வமாகக் கட்டுண்டு வேதனைப் பட வேண்டும்? காலம் அனைத்து துக்கங்களையும் மறக்கச் செய்யும் மருந்துதான். ஆயினும் அந்தக் காலத்திற்காகக் காத்திருக்க வேண்டியதில்லை, "உடனே மறந்து விடு"

.

இந்தப் பகுதி எழுதுவதற்கும், படிப்பதற்கும் சங்கடமான ஒன்றாக இருந்தாலும், என்றாவது ஒரு நாள் இதயம் பிளக்கும் துன்பத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. காரணம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும், ஏதோ ஒரு வகையில், சொந்த இழப்பு நிகழ்வதைத் தவிர்க்க முடியாது. வாழ்க்கையின் அந்த துக்கம் ஒரு பகுதியாகும். இந்த இடத்தில் வியாக்கியானத்திற்கு வேலை இல்லை. மீண்டு வரக் கூடிய உபாயம் தான் அவசியம்.


என்ன செய்யப் போகிறோம்?


என்ன செய்ய முடியும் ?


என்ன செய்ய வேண்டும் ?


முழு நம்பிக்கை வைத்து ஒரு காரியம் செய்ய முற்பட்டால், அதற்குரிய சக்தி தானாகக் கிடைக்கும் என்பதே இயற்கை விதி!


மனம் தளராத நம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை உடைய ஒருவர் வாழ்க்கையில் எந்த ஒரு துக்கமான சூழ்நிலையிலும், " என்னால் கண்டிப்பாக இந்தச் சூழலையும் கையாள முடியும், அதை நான் செய்யப் போகிறேன் ", என்றே முதலில் எண்ணுவர்

.

என் தோழி ஒருவரின் அனுபவமே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சசிகலா, தன் கணவர், இரண்டு குழந்தைகளுடன் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந்தாள். கணவர் ஒரு தொழிலதிபர். ஒரு நாள் இரவில் தூங்கி, காலையில் எழும் போது கணவருக்கு பக்க வாதம், கடுமையாக தாக்கியிருந்தது. திடீரென்று எந்த எச்சரிக்கையும் இல்லாமல் அவரை படுத்தப் படுக்கையாக்கி விட்டது. அவர் பார்த்துக் கொண்டிருந்த வியாபாரமும் ஸ்தம்பித்து நின்றது. சசிகலா பள்ளியிறுதி வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாள். என்ன செய்வதென்று புரியாமல், நிலைகுலைந்து போனதென்னமோ உண்மைதான். மூன்றாம் மனிதரை நம்பி தொழிலையும் விட முடியாத நிலை. குழந்தைகளின் படிப்பு, குடும்ப பராமரிப்பு, கணவரின் வைத்தியம் இப்படி அனைத்தும் ஒன்று சேர்ந்து அவளை அலைக்கழித்தது

.

அவள் மனதில் தோன்றிய முதல் கேள்வி, தான் எப்படி அதை ஈடுசெய்யப் போகிறோம் என்பதுதான். அடுத்து, அந்தச் சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்தே ஆக வேண்டும் என்ற உறுதியான தீர்மானம் கொண்டாள்

.

அவர்களுடைய குடும்ப நண்பரின் ஆலோசனையுடன், தந்தையை உடன் வைத்துக் கொண்டு, தானே வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுத்தாள். கணவரிடம் முக்கியமான ஆலோசனைகள் பெற்று, வங்கியில் காசோலை மாற்றுவது முதல், ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டாள். இன்று குடும்பம், தொழில் என்று பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறாள்

.

ஆக்கப்பூர்வமான சிந்தனை [optimist] உடையவர்கள் என்றும், எல்லாம் எளிதாகச் சரியாகிவிடும் என்ற எண்ணத்துடனே இருப்பார்கள். அதனால் அதற்கேற்றார்போல் செயல்படவும் ஆரம்பித்து விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள், அது எத்தகையச் சூழ்நிலையாக இருந்தாலும், அதைத் தன்னுடைய முன்னேற்றத்துக்கு ஏற்றவாறு பயன் படுத்திக் கொள்வார்கள். இப்படித்தான் சசியும், ஒரே வருடத்தில், தேர்ந்த வியாபாரியாகி விட்டாள். தன் கணவரும் ஓரளவிற்கு உடல் தேறி, இன்று, உடன் இருந்து உதவி செய்யும் வகையில் உள்ளதால் இன்னும் நன்றாகத் தொழிலைத் தொடர முடிகிறது அவளால்

.

உண்மையிலேயே சில சூழ்நிலைகள் மிகுந்த கொடூரமானவையாகிற போது ஆக்கப் பூர்வமான சிந்தனையோடு எதிர் கொள்ள முடியுமா என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. விஜியின் கணவர், ஊர்க்காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், தன்னுடைய 35வது வயதில் திடீரென மாரடைப்பால் இறந்து போனார். நண்பர்கள், உறவினர்கள் எல்லாம் ஆறுதல் கூறிவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் அவள் மனதில் ஒரு பீதி கிளம்பியது. இரண்டும் பெண் குழந்தைகள். குழந்தைகளின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியானது. அப்பொழுதுதான் அவள் தன் சக்தி முழுதும் துக்கத்திலேயே கரைந்துப் போனதை உணரத் தொடங்கினாள்.


வாழ்க்கையின் யதார்த்தம் புரிந்தது. தன் புதிய வாழ்க்கையை குழந்தைகளுக்காக வாழ முடிவு செய்தாள். அடுத்த நாளைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல், பெரிய எதிர் காலத் திட்டம் எல்லாம் தீட்டாமல் அன்றைய பொழுது கழிந்தால் போதும் என்று யோசிக்க ஆரம்பித்தாள்

.

எதிர்காலத்தைப் பற்றி தீவிரமாக யோசிக்கும் போதுதான் வாழ்க்கை மலைப்பாகத் தோன்றும். எந்தக் காரியமாக இருந்தாலும் அதைச் சிறு பாகங்களாகப் பிரித்துப் பார்க்கும் போது அதனை கையாள்வது எளிதாகும். வாழ்க்கை முழுவதும் எப்படி ஓட்டப் போகிறோம் என்று எண்ணுவதைவிட அடுத்த 15 நிமிடத்தை எப்படி கடக்கப் போகிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தாலே போதும், அன்றாடப் பணிகளைக் கவனிக்கக் கூடியத் தெளிவு பிறந்து விடும். இன்று விஜி தன் கணவர் விட்டுச் சென்ற அதே ஊர்க்காவல் அலுவலகத்தில் எழுத்தராகத் தன் பணியைத் தொடர்ந்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்த்தும் விட்டாள்

.

தவிர்க்க முடியாத அது போன்ற, சூழலை வெற்றி கொள்ள முதலில் வேண்டியது, அந்த சூழலைப் பற்றிய உண்மையான விழிப்புணர்வு. அதாவது ஏற்றுக் கொள்ளச் சிரமமான உண்மைகளை புறக்கணிக்காமல் இருக்க வேண்டியது, மிக அவசியம். ஏதோ ஒரு ஆழ்ந்த திடமான நம்பிக்கையை ஆதாரமாக்கிக் கொள்ள வேண்டும். அக்கரை கொண்ட உறவினர்கள், நல்ல நண்பர்கள் இவர்களின் ஆதரவை ஏற்றுக் கொள்ளத் தயங்கக் கூடாது. காரணம் அது பெரும் பலமாகும்.


திடீரென்று ஏற்படுகிற, உயிர் கொல்லும் வியாதி, ஊனம் இப்படி வாழ்க்கையில் எதிர்பாராமல் எது நடந்தாலும் அதனை எதிர் கொண்டு சமாளித்துப் போராடி வெற்றி கண்டவர் பலர். வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது, என்பது அனைவரும் அறிந்ததே. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வாழ்ந்தேத் தீருவது என்ற வைராய்க்கியம் இருந்தால் போதும். இப்படி ஒரு முறை சமாளித்தவர்கள் எப்பேர்ப்பட்ட சவால்களையும் கண்டு அஞ்சாமல், எந்தச் சூழலையும் எளிதாக வெற்றி கொண்டு விடுவார்கள்!!

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum