தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கள்ளக் காதல் - மது

Go down

கள்ளக் காதல் - மது Empty கள்ளக் காதல் - மது

Post by இறையன் Mon Dec 19, 2011 12:22 pm

முடி திருத்தும் இடம், டீக்கடை போன்ற இடங்களில் பெரும்பாலும் வாங்கி வைக்கப் படுகிற தினத்தந்தி, தினகரன் போன்ற பத்திரிக்கைகளைப் பார்த்தால் ஒரே அடியாகக் கள்ளக் காதல் கொலை செய்திகளே மிகுந்து இருக்கும். கள்ளக் காதலால் மனைவியைக் கொன்ற கணவன், கணவனைக் கொன்ற மனைவி, பெற்ற பிள்ளைகளையே கொன்ற தாய் என்று கோர சம்பவங்கள் தினம் நடந்து அது செய்தி ஆகி இருக்கும். இதைப் படிக்கவேன்றே ஒரு கூட்டம் இருக்கிறதோ என்று தோன்றும். இல்லாது போனால் ஒரு தினசரி இந்த செய்திகளையே மட்டும் நம்பி நடத்த முடியுமா…

கள்ளக் காதலில் ஈடுபடுபவர்கள் வித விதமாகக் காரணங்கள் சொல்லுவார்கள்: காதலித்து விட்டு பெற்றோரின் கெடுபிடியில் கலியாணம் செய்துகொண்டு பின் கள்ளக் காதலில் ஈடுபடுவது, கூட்டுக் குடும்ப அடக்குமுறையை மீறி கள்ளக் காதல், குடும்பப் பொறுப்புகளால் திருமணம் செய்ய முடியாத நிலையில் வேறு திருமணம் ஆன பெண்களுடன் காதல் என்றெல்லாம்.இது மாதிரி எந்த காரணமும் இல்லாமல் வெறும் காமத்தினால் கள்ளக் காதலில் ஈடுபடுபவர்களும் உண்டு.

இதெல்லாம் இயற்கை தான் – உயிரியல் ரீதியாக மனிதனும் ஒரு விலங்கினம் தான் – பல்வேறு நபர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதையே இயற்கை தூண்டுகிறது என்று விளக்கம் சொல்லி முறை தவறிய காதலை ஆதரிக்கிற பேர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் எயிட்சை ஏன் இயற்கை அனுப்பவேண்டும்? யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்கிற நிலையில் எயிட்ஸ் நோய் வந்து அவ்வாறு வாழ்பவர்களை ஏன் சாகடிக்க வேண்டும்? இயற்கை இத்தகைய உறவுகளை விரும்பவில்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.மகா பாரதக் கதையே ஐவருடன் ஒரு பெண் வாழும் வாழ்வை, சமூகம் புரிந்து கொண்டு, அதனுடன் இயல்புக்கு வந்து அந்த நிகழ்வை சீரணிக்க எடுத்த முயற்சிதான் என்று தோன்றுகிறது. பாரதத்தில் ஒரு இடத்திலும் திரௌபதியின் திருமணம் நியாயப்படுத்தப்பட வில்லை. கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது. ஆராயப் படுகிறது. ஐவருக்கு மனைவியாக இருந்ததால் தானோ, அவள் பலர் முன்னிலையில் துகிலுரியப் பட்டு ஒரு கணவனும் காப்பாற்ற முன் வராமல், அவமானப் பட நேர்ந்தது! திரௌபதியின் வாழ்க்கை முழுவதும் போராட்டமாகவே இருந்தது. இப்படி ஒரு திருமணம் நடந்த பின் பேரழிவே ஏற்பட்டது என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

சில நூறு வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று. திருவண்ணாமலையில் ஒருவர் இருந்தார். இளம் வயதில் அவருடைய தந்தை இறந்து விட்டார். அவருடைய அக்காள்தான் அவரை வளர்த்து வந்தது. வாலிப வயதை அடைந்த அவருக்கு காமம் அதிகம். பல பெண்களுடன் தொடர்பு. தினம் அவருக்கு ஒரு பெண் வேண்டும். அக்காலத்தில் தேவதாசிகள் என்று அழைக்கப் பட்ட விபசாரத்தொழிலில் ஈடுபடுபவர்கள் வீட்டிலேயே கிடந்தார்.

ஒருநாள் அவர் கையில் காசு இல்லை. தேவதாசிகள் வீட்டிலோ “காசு இல்லாமல் கடவுளே வந்தாலும் கதவைச் சாத்தடி” என்று இவர் வரும் போது கதவை மூடி விட்டார்கள். காமம் தலைக்கேற கோபமும் ஆத்திரமுமாக வீட்டுக்கு வந்து தன் அக்காளுடன் பணம் கேட்டு சண்டையிட அந்த பெண் கடைசியில் “தம்பி, உனக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை. வேண்டுமானால் என்னை யாரிடமாவது விற்று அந்த பணத்தில் சுகத்தை அனுபவித்துக் கொள்” என்று சொல்லி விட்டாள்.

அப்போதுதான் இவருக்கு தன் சுயநலம் உரைத்தது. தன் காம உணர்வு தன் குடும்பத்தை எவ்வளவு கீழ் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது என்று மனதார உணர்ந்தார். தன் நிலை கேவலமானதை உணர்ந்து கோவில் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்ய முயன்றார். அதன் பிறகு முருகப் பெருமான் அவரைக் காப்பாற்றினார் என்று கதை போகும். அவர் வேறு யாரும் அல்ல. மனம் உருகவைக்கும் வகையில் திருப்புகழ் பாடிய அருணகிரி நாதர் தான். ஒரு கணவனும் மனைவியும் மனம் ஒருமித்து இணைந்து வாழ்வதே நலம். குடும்பம் எக்கேடு கெட்டுப் போனால் என்ன நமது சுகமே பெரிது என்று இருப்பது சுயநலம். சுயநலம் தன்னையும் அழித்து தன் சுற்றத்தாரையும் அழித்து விடும்.

இன்றைய சமூகத்தில் தனியொருவரின் சுகங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் சுயநலத்தையே வளர்த்துக் கொண்டிருக்கிறோம். கூட்டுக் குடும்பத்தில் பெற்ற தாய் தந்தையர் மட்டும் அல்லாது சின்னாத்தா, பெரியாத்தா, சித்தப்பா என்று இவர்களே முதல் சுற்றில் ஒரு சமூகமாக இருப்பார்கள். ஒரு குடும்பத்தில் தூரத்து சொந்தத்தில் வயதானவர்களையும் தம் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றுவார்கள். இன்றோ பெற்ற தாய் தந்தையரையே ஒதுக்கி விடும் நிலை, அதற்கு சமூகத்தின் ஒப்புதல் என்று போய்க கொண்டிருக்கிறது.சுயநலம் முற்றிய இன்றைய நிலையில் முறை தவறிய உறவுகளோடு மட்டும் அல்லாமல், கொலைகளும் பெருகுவதே கவலை அளிக்கிற விஷயம். எதோ, எங்கோ ஒரு ஊரில் கிராமத்தில் நடப்பது. கொலையில் ஈடுபடுகிற நபருக்கு படிப்பறிவு இருந்திருக்காது; உலகம் தெரியாதவராக உணர்ச்சி வேகத்தில் செய்திருக்கக் கூடும் என்றெல்லாம் ஒரு புறம் சமாதானம் சொன்னாலும், படித்தவர்களும் இது போன்ற கள்ளக்காதலிலும் பின்னர் கொலையிலும் ஈடு படுகிறார்கள்.

இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடே இல்லை. அண்மையில் கள்ளக் காதலில் ஈடுபட்டு கொலை புரிவது அதிகரித்துள்ளது என்று தமிழக ஐஜி சிவனாண்டி ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். கடந்த எட்டு மாதங்களில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் மட்டும் 224 கொலைகள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் கள்ளக் காதல் மற்றும் பாலியல் தொடர்பான கொலைகளே அதிகம் என்று அவர் கூறுகிறார்.

சென்ற ஆண்டு நடந்த சம்பவம் இது. பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் கள்ளக் காதலில் ஒரு பெண்ணுடன் ஈடுபட்டு வந்தார். ஒரு நாள் அலுவலக நேரத்தில், அந்த காதலிக்காக தன் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்று போட்டு விட்டு நல்ல பிள்ளையாக அலுவலகத்துக்கு திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டார்.

பின்னர் போலிஸ் விசாரணையில் அலுவலகத்தில் நுழையும் வாசலில் உள்ள காமிராவில் அந்த நபர் வெளியே சென்று விட்டு வந்தது பதிவாகி இருந்தது. மேலும் விசாரித்ததில் கொலையை ஒப்புக் கொண்டார். படித்தவர்தான். பெரிய நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறார். நினைத்திருந்தால் விவாகரத்து வாங்கி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் கொலையில் இறங்கி விட்டார். கொலை செய்யும் போது அவருக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகி இருந்தன என்பதே அதிர்ச்சிக்குரிய செய்தி. மனிதன் சமூக மிருகம் (Social animal) என்ற பரிணாம வளர்ச்சியிலிருந்து கீழிறங்கி வெறும் மிருகமாக (animal) ஆகிக்கொண்டு இருக்கிறானோ என்று தோன்றுகிறது.

vikatan_coverகள்ளக் காதல்கள் அதிகரிக்க இருபத்திநான்கு மணிநேரமும் நம்மை ஆக்கிரமித்து ஆபாசம் நிரம்பி வழியும் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒரு காரணமோ என்று தோன்றுகிறது. திரைப்படங்களில் முற்றிலும் நடிகையின் இடையைச் சுற்றியே கதை இழைவதாக கொண்டு போகிறார்கள். ஆங்கிலத் திரைப்படங்களில் போர்னோ, டிராமா, த்ரில்லர், ஹாரர் என்று பல வகைகள் தனித்தனியாக இருப்பது போல நம் திரைப்படங்களில் இல்லை. மசாலா, செண்டிமெண்ட், காமெடி எல்லாமே கலந்துதான் இருக்கிறது.

இது போதாதென்று, தொலைக் காட்சிகளில் அதே மசாலா காட்சிகளைத் தொகுத்து போட்டுவிடுகிறார்கள். காமத்தை தூண்டுகிற நிகழ்ச்சிகள் எல்லா நேரத்திலும் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கின்றன. குமுதம், ஆனந்த விகடன் முதலான பத்திரிக்கைகளும் தொலைக் காட்சிகளுடன் போட்டி போடவேண்டிய நிர்பந்தத்தில் வித விதமான கவர்ச்சி ஸ்பெஷல் இதழ்களை வெளியிட்டு வியாபாரம் செய்கிறார்கள்.

ஒரு அளவில் இருக்க வேண்டிய காமத்தை, கடைச்சரக்காக்கி வீடு தோறும் பரப்பப் பட்டு வருவது சமூக மனநிலையை பாதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சாதாரணமான காமெடிக் காட்சிகளில் கூட ஒருத்தனுடைய சம்சாரம் இன்னொருத்தனுடன் ஓடிப் போவது பற்றிய காமெடி ஒரு நூறு திரைப் படங்களிலாவது வந்திருக்கும். இதைப் பார்க்கிற சிறார்கள் மனதில் எந்த வகையான உறவு சரி எது தவறு என்ற புரிதலில் பிழை ஏற்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது.

பல குடும்பங்களின் தொகுப்புதான் சமூகம் என்று ஆகிறது. திருமணம் என்பது நிறுவன அமைப்பு (Marriage is an institution) என்று சொல்வார்கள். சமூக நன்மைக்காக ஏற்பட்ட அமைப்பே திருமணம் என்பது. இந்த அமைப்பு குலைவதை சமூகம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அதனால் தான் ஒரு குடும்பம் சீரழியும் போது சமூகத்திடமிருந்து பதில் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கின்றன. மூன்று பெண்கள் இருக்கிற ஒரு வீட்டில் மூத்தவள் பலருடன் தொடர்பு வைத்துக் கொண்டு அலைந்தால், அவளுடைய சகோதரிகளையும், அவர்களுக்கு வாய்க்கும் குடும்ப வாழ்வையும் பாதிக்கிறது.இது எதோ பெண்களுக்கு மட்டும் என்று இல்லை. ஆண்களும் பல பெண்களுடன் தொடர்பு வைக்கும் போது, இறுதியில் அவர்கள் வாழ்க்கையும் வெறுமையைத்தான் அடைகிறது. ஆணாக இருந்தால் போதையில் மூழ்கி வெறுமையை மறக்க முயற்சிக்கிறான். இக்காலத்தில் பெண்களும் போதைப் பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை மிக மோசமாகி விடுகிறது.

ஒரு திரைப்படம் மோசமாக இருக்கிறது பார்க்காதே என்று சொன்னால் சிலர் கேட்க மாட்டார். அது எப்படி மோசமாக இருக்கிறது என்று பார்க்கிறேன் என்று பார்த்து விட்டு வந்து ஆமாம் மோசமாகத்தான் இருக்கிறது என்று ஒப்புக் கொள்வார். திரைப்படம் என்றால் இரண்டு மணி நேரத்துடன் முடிந்து போகிற விஷயம். வாழ்க்கை அப்படி அல்ல. பலருடன் தொடர்பு வைப்பது, போதை போன்ற பழக்கங்கள் ருசி பார்த்து விட்டு, விட்டு விடக் கூடியது அல்ல. போதைக்கு அடிமை என்று சொல்வார்களே அதாவது அந்த பழக்கம் ஏற்பட்டால் மனிதன் அடிமைதான். தன் இஷ்டப்படி திரைப்படக் கொட்டகையை விட்டு வெளியே வருவது போல வர இயலாது. இன்றைய காலத்தில் தனி மனித சுதந்திரம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. இதனைப் பயன் படுத்திக் கொண்டு கள்ளக் காதல், போதை என்று ஆராய்ச்சி செய்ய, நம்முடைய வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளக் கூடாது.

“விந்து விட்டவன் நொந்து கெட்டான்” என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். விந்து என்பதை உயிர்ச்சக்தி என்றே கொள்ளுகிறார்கள். அந்த உயிர்ச்சக்தியை தகாத முறையில் பலருடன் உறவில் ஈடுபட்டு வீணடிப்பது நொந்து கெடவே நேரிடும். நமது உபநிஷதங்கள், புராணங்கள் காமத்தை பாவமாக கருதவில்லை. ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் விரும்பி இணைந்து, நான் என்பது அழிந்து நாம் என்று ஆகும் போது அங்கே தெய்வீகம் ஏற்படுகிறது. தவறான உறவு முறைகள் இந்த தெய்வீகத்துக்கு இட்டு செல்லாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum