தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டைகர்-வைக்கம் முஹம்மது பஷீர்/ தமிழில் : சுரா

Go down

டைகர்-வைக்கம் முஹம்மது பஷீர்/ தமிழில் : சுரா Empty டைகர்-வைக்கம் முஹம்மது பஷீர்/ தமிழில் : சுரா

Post by இறையன் Mon Dec 19, 2011 3:21 pm

டைகர் என்ற நாயை ஒரு பாக்யவான் என்று சொல்லலாம். நாடே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு இல்லாமல் எலும் பும் தோலுமாய்க் காட்சியளித்தாலும், டைகருக்கு ஒரு பிரச் சினையும் இல்லை. அவன் எப்போது பார்த்தாலும் சதைப் பிடிப்புடன் கம்பீரமாக இருப்பான். கால்கள் நான்கும் வாலும் வெண்மை நிறத்தில் இருக்கும். கண்கள் சிவப்பு கலந்த தவிட்டு நிறத்தில் இருக்கும். போலீஸ்காரனின் கண்களைப்போலவே, டைகரின் கண்களிலும் ஒரு குரூரத்தனம் தெரியும்.

டைகர், தெருவில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சொறி நாயின் மகன்தான். நகரத்தில் சாக்கடையில் பிறந்து கிடந்தவன்தான் அவன். ஆனால், அவனுக்கே இந்த விஷயமெல்லாம் தெரியாது. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் இருப்பது போலீஸ் ஸ்டேஷனில்தான். வானம் தெரிகிற மாதிரி சதுரமாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத் தின் மையப்பகுதிதான் அவனது இடம். கைதிகளும் போலீஸ் காரர்களும்தான் அவனது நண்பர்கள். ஒவ்வொருத்தரையும் அவனால் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியும். போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் அவனுக்கு ஒட்டுதல் அதிகம். இன்ஸ்பெக்டரின் கண்களும் டைகரின் கண்களும் ஒரே மாதிரி இருக்கின்றன என்று பொதுவாக அங்கிருக்கும் கைதிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.

டைகரைப் பொறுத்தவரை கைதிகளில் வேறுபாடு பார்ப்ப தில்லை. கொலைகாரனும், திருடனும், அரசியல் கைதியும் அவனுக்கு ஒன்றுதான். டைகரின் கணக்கில் மனித இனம் என்றால் இரண்டே இரண்டு பிரிவுகள்தாம். ஒன்று- போலீஸ்காரர்கள். இன்னொன்று- குற்றவாளிகள். லாக்-அப்பில் அடைக் கப்பட்டிருக்கும் நாற்பத்தைந்து கைதிகளையும் டைகர் ஒரே மாதிரிதான் பார்ப்பான். நான்கு பேர் தனியாக அரசியல் கைதிகள் என்ற பெயருடன் அடைக்கப்பட்டிருப் பதை எல்லாம் அவன் பொருட் படுத்துவதே இல்லை. அவன் அப்படி ஒரே மாதிரி நினைப்பதற்கு இன்னொரு காரணம்- அங்கிருக்கும் எல்லா லாக்-அப்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். வெளிச்சமோ காற்றோ எதிலும் இல்லை. மலம், மூத்திரம் ஆகியவற்றின் துர்நாற்றத்திற்கு மத்தியில், மூட்டைப்பூச்சிகளின் கடியைத் தாங்கி, பழைய- கிழிந்துபோன ஆடைகளை அணிந்து, தாடி, மீசை வளர்த்துக் கொண்டு, கஷ்டங்கள் பலவற்றையும் சகித்துக் கொண்டு அங்கு தங்களின் வாழ்க் கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள். அவர்களுக்கு- சொல்லப்போனால் இருட்டுக்கும் பகலுக்கும்கூட வேறுபாடு தெரியாது. இந்த நிலையில் இருக்கும் போலீஸ் லாக்-அப்கள் நாடு முழுக்க பல இடங்களிலும் இருக்கவே செய்கின்றன. இந்த லாக்-அப்களில் இருந்து வெளிவரும் கெட்ட நாற்றம் மனித இதயங்களை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றுவிடும். இருந்தாலும், அங்குள்ள கைதிகளின் சிந்தனை இது பற்றி எல்லாம் இருக்காது. உணவைப் பற்றிய ஒரே சிந்தனைதான் அவர்களுக்கு எப்போதும். இரவில் அவர்கள் தூங்குவது காலையில் எழுந்ததும் கஞ்சி குடிக்கத்தான். கஞ்சி குடித்து முடித்தால், அவர்களின் மனம் மதியச் சாப்பாட்டைப் பற்றி எண்ண ஆரம்பிக்கும். அது முடிந்தால், இரவு உணவைப் பற்றி நினைக்க ஆரம்பிப்பார்கள். மொத்தத்தில் அங்குள்ள எல்லாக் கைதிகளின் மனமும் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பது உணவைப் பற்றித்தான். அவர்களின் பசி ஒருபோதும் அடங்குவதில்லை. எல்லாரின் விருப்பமும் என்னவென்றால், தண்டனை விதிக்கப்பட்டு எவ்வளவு சீக்கிரம் சிறைக்குள் செல்வது என்பதுதான். போலீஸ் பதிவு செய்த வழக்குகளில் இருந்து தப்புவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. தண்டனை விதிக்கப்பட்டு விட்டால், அடுத்த நிமிடமே தாமதம் செய்யாமல் அவர்கள் கைதிகளைச் சிறைக்கு அனுப்பி விடுவார்கள். கைதிகளின் சொர்க்கம் சிறை என்றுகூடச் சொல்ல லாம். அவர்களுக்கு நரகம் எது என்றால் போலீஸ் லாக்-அப்தான். ஒவ்வொரு கைதியின் இதயத்திலும் கடுமையான வெறுப்பும் கோபமும் இருக்கும். தங்களின் கண்கள் வழியாக அதை அவர்கள் டைகர்மேல் பாய்ச்சுவார்கள். அதற்காக டைகர் கவலைப்படுவதே இல்லை. கம்பீரமாக லாக்-அப்புக்கு முன்னால் இங்குமங்குமாய் அவன் நடப்பான். இல்லாவிட்டால் ஏதாவதொரு லாக்-அப் வாசலில் போய் படுத்துக் கொள்வான். உணவு நேரத்தில் இன்ஸ்பெக்டரின் அறை வாசலில் அவன் காவல் காப்பான். இன்ஸ்பெக்டர் சாப்பிட்டு முடித்து, ஏப்பம் விட்டவாறு எச்சில் இலையை எடுத்து நாய்க்கு முன்னால் வைப்பார். ஒரு ஆள் சாப்பிடக் கூடிய உணவை அவன் சுவைத்துச் சுவைத்து சாப்பிடுவான். டைகர் சாப்பிடுவதைப் பார்க்கும் கைதிகளின் வாயில் எச்சில் ஊறும்.

டைகர் சாப்பிட்டு முடித்து தோட்டத்திற்குள் நுழைந்து செடிகளின் நிழலில் போய் படுப்பான். ஒரு சிறிய தூக்கம் போட்டுவிட்டு, அவன் மீண்டும் லாக்-அப் வாசலுக்கு வருவான். அவன் கண்களில் அப்போது தெரியும் பிரகாசத்தைப் பார்க்க வேண்டுமே! எல்லா விஷயங்களும் தனக்குத் தெரியும் என்பது மாதிரி அவன் காட்டிக் கொள்வான். அங்குள்ளவர்களின் பெரும் பாலான வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்டவையே! போலீஸ் காரரும் இன்ஸ்பெக்டரும் கைக்கூலி வாங்கிக் கொண்டு பதிவு செய்த வழக்குகள் அவை. சிலர் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை திருடியிருப்பார்கள். அதற்குப் பிறகு நாட்டில் நடக்கும் எல்லா திருட்டையும் அவர்கள் மேல்தான் சுமத்துவார்கள். தாங்கள் செய்யாத குற்றங்களைக்கூட லாக்-அப்பில் உள்ளவர்கள் செய்ததாக ஒப்புக் கொள்வார்கள். நீதிமன்றத்தில் நீதிபதிக்கு முன்னால் நிற்கும்போதுகூட தாங்கள்தான் அந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர்கள் கூறுவார்கள். காரணம்- எப்போதும் போலீஸ்காரர்கள் உடன் இருப்பதே. அரசாங்கம் நாளொன்றுக்கு ஒரு கைதிக்கு உணவுக்கென்று இவ்வளவு செலவிடப்பட வேண்டும் என்று ஒரு தொகையை நிர்ணயித்திருக்கிறது. ஒரு போலீஸ்காரனின் ஒரு மாதச் சம்பளத்தைவிட இந்தத் தொகை அதிகமாக இருக்கும். போலீஸ் காரன் சாப்பிட வேண்டும். ஆடைகள் அணிய வேண்டும். மனைவி யையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும். வேறு எந்த வழியில் அவன் பணம் பண்ண முடியும்? சாதாரண ஒரு சம்பளத்தை வைத்து போலீஸ்காரர்கள் தங்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்வது? கைதிகள் கம்பி வழியே கையை நீட்டி பயங்கரமான கோபத் துடன் டைகரைத் தடவுவார்கள்.

""எங்களோட சோறு இது...'' அவர்கள் கூறுவார்கள்.

டைகர் வாலை ஆட்டுவான்.

"ஆமா.. இதுதான் வாழ்க்கை. இதை மாற்ற யாராலயும் முடியாது...' என்று கூறுவது மாதிரி டைகர் அவர்களைப் பார்ப்பான். மாற்ற முடியுமா? முன்பு சிலர் சொல்வார்கள்.

""எங்களுக்குப் பசி அடங்கல. அரசாங்கம் நிச்சயிச்ச தொகைக்கு உள்ள சாப்பாடு எங்களுக்குக் கிடைச்சாகணும்.''

ஆனால், அவர்களுக்குக் கிடைத்தது என்ன தெரியுமா? போலீஸ்காரர்களின் அடியும் இன்ஸ்பெக்டரின் பூட்ஸ் மிதியும்தான். அதோடு நிற்காமல் இன்ஸ்பெக்டர் பயங்கரமான கோபத்துடன் கர்ஜனை செய்தார்.

""அரசாங்கம் நிச்சயிச்சதை உனக்குத் தரணுமா? உன்னோட அப்பன் பாரு அரசாங்கம்...''

""அரசாங்கம் யாருக்குத் தந்தை?'' அவர்கள் ஒருமித்த குரலில் கத்தினார்கள்.

""அரசாங்கம் டைகராக்கும்...''

அவர்கள் சொல்வது சரிதானா? ஒவ்வொரு கைதிக்கும் அரசாங்கம் நிர்ணயம் செய்திருக்கிற தொகைக்கு உணவு வழங்கவேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பது ஒரு ஹோட்டல் காரன். அவன் ஹோட்டலை ஆரம்பிக்கும்போது மிகமிகச் சாதாரண நிலையில் இருந்தவன். கைதிகளுக்கு உணவு தயாரித்துத் தர ஆரம்பித்தான். அதிர்ஷ்டம்! "கிடுகிடு' என அவன் வாழ்க்கையில் உயர ஆரம்பித்துவிட்டான். பெரிய அரிவாள் மீசையும் தொந்தியும் வைத்திருப்பவன்தான் அந்த ஹோட்டல்காரன். அவனுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் நெருக்கமான உறவு இருக்கிறது. அந்த ஹோட்டல் உணவைத்தான் தினமும் இன்ஸ்பெக்டரும் ஸ்டேஷன் ரைட்டரும் சாப்பிடு கிறார்கள். உணவுக்கும், காப்பிக்கும் அவர்கள் காசு தரவேண்டிய அவசியம் இல்லை. அதோடு விஷயம் நிற்கவில்லை. ஒவ்வொரு மாதமும் இன்ஸ்பெக்டருக்கும் ரைட்டருக்கும் ஹோட்டல்காரன் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தவறாமல் தரவும் செய்கிறான். அந்த நஷ்டத்தை கைதிகளுக்குத் தரும் உணவில் எப்படிச் சரி பண்ணுவது என்பது ஹோட்டல்காரனுக்குத் தெரியாதா என்ன? ஒவ்வொரு நாளும் ஐம்பதோ அறுபதோ கைதிகள் போலீஸ் லாக்-அப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சாப்பாடே கொடுக்கவில்லை என்றால்கூட இங்கு கேட்க யார் இருக்கிறார்கள்? வழக்குக்காக நீதிமன்றத்துக்கு அவர்களைக் கொண்டு செல்லும்போது, நீதிபதியிடம் எங்கே இதை எல்லாம் இவர்கள் சொல்லி விடுவார்களோ என்று நினைத்தால், திரும்பவும் அவர்கள் இங்குதானே கொண்டு வரப்பட வேண்டும்? இன்ஸ்பெக்டர் கேட்பார்- சிரித்துக் கொண்டே. ஆனால் அந்த சிரிப்பு இருக்கிறதே... அப்பப்பா...

""நீ சொல்லிட்டே, இல்லையாடா?''

அவ்வளவுதான்- அவன் மயக்கமடைகிற வரை அவனை அடிப்பார்கள். அதற்குப் பிறகு அவன் என்ன சொல்லப் போகிறான்? இங்குள்ள எல்லாக் கைதிகளின் நிலைமையும் இதுதான். அவர்கள் இந்தக் கோபத்தை டைகரின் மேல் காட்டுவார்கள். கைதிகள் யாருக்கும் டைகரைப் பிடிக்காது என்பது எல்லாருமே நன்கு அறிந்த விஷயம். இன்ஸ்பெக்டரே இந்த விஷயத்திற்காக மிகவும் ஆச்சரியப்படுவார். ஒன்றுமே தெரியாத இந்த அப்பாவி நாயை இவர்கள் ஏன் வெறுக்க வேண்டும்?

ஆனால், கைதிகள் டைகரின் மேல் அன்பு காட்டுவதே இல்லை. வாய்ப்பு கிடைக்கிறபோது அவர்கள்- சொல்லப்போனால் அதற்குத் தொந்தரவு கொடுக்கக்கூடத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தன்னைத் தொல்லைக்குள்ளாக்கப் போகிறார் கள் என்பது முன்கூட்டியே தெரிந்துவிட்டால், டைகர் "உர்...உர்...' என்று தன் கொந்தளிப்பைக் குரல் மூலம் வெளிப்படுத்துவான்.

""யார்டா நாய்க்குத் தொந்தரவு தர்றது?'' இன்ஸ்பெக்டர் லத்தியுடன் வெளியே வருவார்.

""நாய்களே... டைகரை ஒரு பயலும் தொடக்கூடாதுன்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன். தொட்ட வன் ஒழுங்கா கையை நீட்டு...''

கம்பி வழியே ஒரு கை வெளியே நீளும். அந்த விரலை இறுகப் பிடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் வெறித்தனமாக அவனை அடிப்பார். அந்தக் கைதி வலியால் அழும் சத்தம் அந்தப் பகுதி முழுக்க கேட்கும். கை, இன்ஸ்பெக்டர் கொடுத்த அடியால் வலிக்கும். ரத்தம் "சொட்... சொட்...' என்று கீழே விழும். டைகர் அதை நக்கித் துடைப்பான்.

கைதிகள் ஏற்கெனவே செய்த குற்றத்தை மீண்டும் செய்வார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் தண்டனை அனுபவிக்கிறபோதும், அவர்கள் மேலும் பலசாலிகளாக ஆகின்றனர் என்பதே உண்மை. நாயைத் தொட்ட குற்றத்திற் காக அங்குள்ள பலரும் பல முறை தண்டனை பெற்றிருக்கின் றனர். நாயைப் பொறுத்தவரை, அவர்களைக் குற்றவாளியாக்க எப்போதும் அது தயாராகவே இருக்கிறது.

டைகர் வெளியே எங்கும் செல்வதில்லை. அவன் பயங்கர கோழை. வேறு நாய் ஏதாவது அங்கு வந்தால், அவன் குரைத்து அதை விரட்ட முயற்சிப்பான். ஒரு புலிபோல் இருப்பான் டைகர் அந்த நேரத்தில். ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே எப்போதாவது போக நேர்ந்தால், ஏதாவது ஒரு சொறி நாயைத் தெருவில் பார்த்தால், டைகர் தன் வாலைச் சுருக்கிக் கொண்டு, அதைப் பின் கால்களுக்கு நடுவே உள்ளே விட்டு பயந்துபோய் உள்ளே ஓடி வந்துவிடுவான். டைகரின் இந்தச் செயலைப் பார்த்த ஒரு அரசியல் கைதி ஒருநாள் சிரித்தவாறு சொன்னான்:

""பார்த்தீங்களா, நம்ம இன்ஸ்பெக்டர் எப்படி பயந்துபோய் ஓடி வர்றார்னு...''

அப்போது தத்துவம் பேசும் இன்னொரு கைதி சொன்னான்:

""ஒரு வகையில் பார்த்தால் ஒவ்வொருவருமே ஒவ்வொரு இன்ஸ்பெக்டர்கள்தாம்.''

அவன் அப்படிச் சொன்னது, அங்கு ஒரு விவாத விஷயமாகி விட்டது. மூன்று கைதிகள் ஒரு பக்கமும், ஒரே ஒரு கைதி மட்டும் தனிக் கட்சியாகவும் ஆனார்கள். அவர்கள் இந்த விஷயத்தை அலசி சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு சந்தோஷச் செய்தியுடன் அங்கு வந்தார் இன்ஸ்பெக்டர்.

""என்ன இங்கே சண்டை?''

யாரும் ஒன்றுமே பேசவில்லை.

""கதவைத் திற.'' பாராக்காரனைப் பார்த்து இன்ஸ்பெக்டர் கட்டளையிட்டார். பாராக்காரன் லாக்-அப் கதவைத் திறந்தான். அவர்கள் வெளியே வந்தார்கள். இன்ஸ்பெக்டர் சொன்னார்:

""உங்களைப் பார்க்க சில ஆளுங்க வந்திருக்காங்க.''

அவர்கள் அங்கு சென்றபோது, சண்டைக்குக் காரணமான இளைஞனின் நண்பர்கள் சிலர் அங்கு நின்றிருந்தனர். அவர்கள் கையில் பலகாரங்களும் ஆரஞ்சுப் பழங்களும் இருந்தன. ஆரஞ்சுப் பழங்களில் இரண்டை இன்ஸ்பெக்டர் சாப்பிட்டார். மீதி இருந்த பலகாரங்களை அவர்கள் தின்றார்கள். நாட்டில் அப்படியொன்றும் சிறப்பாக நடப்பது மாதிரி தெரியவில்லை. நாட்டில் வறுமை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. சாப்பாடு இல்லாமல் மனிதர்கள் நித்தமும் செத்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து போரைப் பற்றிய செய்தி, பொருட்களின் விலை உயர்வு, தாங்க முடியாத அளவிற்குப் பஞ்சம்...

""நாங்களும் அதை அனுபவிக்கிறோம்.''

வந்திருந்த ஆள் சொன்னான்:

""உங்களுக்கு என்ன? வேளா வேலைக்குச் சாப்பாடு. எதைப் பற்றியும் கவலைப்படணும்னு அவசியமே இல்ல. கொடுத்து வச்ச மனிதர்கள்...''

அப்போது வாசலில் வந்து நின்ற டைகரைச் சுட்டிக் காட்டிய வாறு அந்த இளைஞன் சொன்னான்:

""இந்த நாய்க்கு கிடைச்சிருக்கிற அதிர்ஷ்டம் மட்டும் இங்கே உள்ள கைதிகளுக்குக் கிடைச்சிருந்தா...''

இன்ஸ்பெக்டர் வாய்விட்டுச் சிரித்தார். மற்ற கைதிகளும் சிரித்தார்கள். அவர்கள் மீண்டும் லாக்-அப்பில் அடைக்கப்பட்டார்கள். நான்கு பேருக்கும் ஒரு வகையில் திருப்தியே. பலகாரம் சாப்பிட்டதால் அவர்கள் வயிறு நிறைந்த மாதிரி இருந்தது. அன்று இரவு அவர்கள் சாப்பிட்டார்கள். கொஞ்சம் சோறு மீதம் வந்தது. அதை அவர்கள் தங்களுக்கு முன்பே லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளின் அறை வாசலில் வைத்தார்கள். அங்கிருந்த இருபத் தியிரண்டு பேரும் ஆர்வத்துடன் வாசல் பக்கம் வந்து நின்றனர். ஒருவன் கம்பி வழியே இலையையும் சாதத்தையும் உள்ளே எடுத்தபோது, சோறு முழுவதும் தரையில் சிதறியது. அதை நக்கித் தின்பதற்காக பக்கத்திலேயே டைகர் தயாராக நின்றிருந்தான். லாக்-அப்பில் இருபத்தியொரு கைதிகள் இருக்க, ஒருவன் சாதத்தை அவர்களுக்குப் பரிமாறினான். இருபத்தியிரண்டு பிடி சோறு நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அவர்கள் அதைச் சாப்பிடத் தீர்மானித்தார்கள். சாதத்தைப் பரிமாறிய ஆள் ஐந்து பேரின் கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தைப் போட்டான். டைகர் முன்னால் சென்று, நிலத்தில் விழுந்த சோறையும் குழம்பையும் நக்கித் தின்னத் தொடங்கினான். அதைப் பார்த்த ஒரு கைதி அவனை எட்டி உதைத்தான். உதை விழுந்ததும், உயிருக்கு பயந்துபோன டைகர் "ஓ'வென கூக்குரலிட்டான். அவ்வளவுதான்- பாராக்காரன் ஓடி வந்தான். சில போலீஸ் காரர்கள் ஓடி வந்தார்கள். இன்ஸ்பெக்டரும் வந்தார். அந்த இருபத்தியிரண்டு பேரின் இதயங்களையும் ஒரே நேரத்தில் பிடுங்கி ஏறிவது மாதிரி அந்த இன்ஸ்பெக்டர் இலையுடன் இருந்த சாதத்தைப் பறித்து டைகருக்குக் கொடுத்தார். அதோடு நிற்காமல் லாக்-அப்புக்குள் நுழைந்து ஒவ்வொருவரையும் இஷ்டம்போல அடித்து மிதித்து ஆசை தீர்ந்தவுடன் வெளியே வந்தார்.

அந்தச் சம்பவம் நடந்து முடிந்தது. அன்று இரவு பத்து மணி இருக்கும். டைகர் பயங்கரமாக- இடைவிடாது ஓலமிட்டான். போலீஸ் ஸ்டேஷனே அந்த ஓலம் கேட்டு விறைத்துப் போனது. பாராக்காரன் என்னவென்று ஓடிச் சென்று பார்த்தபோது, இரண்டு பேர் நாயைப் பிடித்துக் கொண்டு அதன் முகத்தைப் கம்பி வழியே உள்ளே இழுத்துக் கொண்டிருந்தார்கள்: இரண்டு பேரில் ஒரு ஆளை மட்டுமே பாராக்காரனுக்குத் தெரியும்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அவனை வெளியே வரவைத்தார். ஒரு திருட்டு வழக்கில் கைதாகி உள்ளே வந்தவன் அவன். இன்ஸ்பெக்டர் அவனின் முகத்தில் ஒரு அடி கொடுத்தார். தொடர்ந்து பல அடிகள்- மிதிகள். அவ்வளவுதான்- அவன் தரையில் ஒரு மூலையில் போய் மல்லாந்து விழுந்தான். அதற்குப் பிறகும் அவனை இன்ஸ்பெக்டர் விடவில்லை. "நச் நச்' என்று மிதித்தார். மீண்டும் முகத்தில் பல அடிகள். அவன் வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. தரையில் ஒரு பல் வந்து விழுந்தது. ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை.

அந்தக் காட்சியை நாற்பத்தைந்து கைதிகளும் ஒன்பது போலீஸ்காரர்களும் டைகரும் பார்த்தார்கள். நிலத்தில் கிடந்த ரத்தத்தை டைகர் நக்கினான்.

இன்ஸ்பெக்டர் கேட்டார்:

""இன்னொருத்தன் எங்கடா...''

ஆனால், அவன் சொல்லவில்லை. சொல்வானா? அவனின் கால்கள் இரண்டையும் கம்பிகளுக்கு இடையே வெளியே கொண்டு வந்து கட்டி, கால் பாதத்தில் பிரம்பால் பல அடிகள் கொடுத்தும் அவன் சொல்லவேயில்லை. பாதங்கள் அடிபட்டுச் சிவந்தன. வீங்கிப்போயிருந்தன. ரத்தம் கொட்டியது. அப்போதும் அவன் யார் என்று சொல்லவில்லை. அவனுக்கு மயக்கம் வந்தது. அதனால் தானோ என்னவோ, பாதத்தின் காயங்களைத் தன்னுடைய நாக்கால் டைகர் நக்கியபோதும், அவன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தான்.

டைகர் உண்மையிலேயே பாக்யசாலியான ஒரு நாய்தான்.

source:http://www.nakkheeran.in

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum