தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துரியோதனனின் நாய்க்கறி-வி. பத்மா

Go down

துரியோதனனின் நாய்க்கறி-வி. பத்மா  Empty துரியோதனனின் நாய்க்கறி-வி. பத்மா

Post by இறையன் Mon Dec 19, 2011 11:32 pm

மிகுந்த ஒழுக்கசீலரான ஜென் குரு ஒருவரை வெறுப்பேற்ற நினைத்தான் உள்ளூர் பண்ணையார் ஒருவன். குருவை ஒருநாள் தன் வீட்டு விருந்துக்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

யார் கூப்பிட்டாலும் எப்போதும் மறுக்காத குரு, அவன் வீட்டு விருந்துக்குச் சென்றார். முன்னதாகத் தன் பண்ணை ஆள்களிடம் சொல்லிவைத்து, செத்துப் போன நாயின் உடலை எடுத்துவந்து சுத்தப்படுத்தி அதில் கறி சமைத்து குருவுக்குப் பரிமாறினான் பண்ணையார்.

வாயில் வைத்ததுமே குருவுக்கு விஷயம் புரிந்துவிட்டது. ஆயினும் பேசாமல் சாப்பிட்டார்.

‘என்ன குருவே, நாய்க்கறி ருசித்ததா?’ என்று நக்கலாகக் கேட்டான் பண்ணையார். ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு திரும்பி நின்று வாலாட்டுவதுபோல் சைகை செய்துவிட்டுப் போய்விட்டார் குரு.

வெகுநேரம் யோசித்துப் பார்த்து, பண்ணையாருக்கு குரு நடந்துகொண்டவிதம் புரியவில்லை. இனம்புரியாத அச்ச உணர்வு வந்துவிட்டது. ஒருவேளை சபித்துவிடுவாரோ?

எனவே அவன் மடாலயத்துக்குச் சென்று குருவின் காலில் விழுந்து, தன் துடுக்குத் தனத்தை மன்னிக்கக் கோரினான்.

சடாரென்று முகம் மாறினார் குரு. அவரது சீடர்கள் அதுவரை பார்த்தறியாத உக்கிரம் அவர் முகத்தில் தாண்டவமாடியது. உட்கார்ந்த இடத்திலிருந்து அப்படியே அந்தப் பண்ணையார்மீது பாய்ந்தார். அவன் முகம், தோள், வயிறு என்று அகப்பட்ட பிரதேசங்களிலெல்லாம் வடுக் வடுக்கென்று கடித்தார். அவன் ஐயோ, அம்மா என்று அலறிக்கொண்டு ஓட்டமெடுத்ததும், சட்டென்று அமைதியாகி, தன் வழக்கமான தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

சீடர்களுக்கே புரியவில்லை. ‘குருவே, உங்கள் நடவடிக்கை வினோதமாக இருக்கிறதே’ என்று கேட்டார்கள்.

குரு சிரித்தார். ‘சாப்பிட்டது ஜெரிக்க அவகாசமெடுக்காதா?’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

விருந்துக்குக் கூப்பிட்ட மரியாதையை கௌரவப்படுத்தவே அவன் வீட்டில் குரு வாலாட்டுவதுபோல் சைகை செய்தார். நீ நாய்க்கறி உணவிட்டது எனக்குத் தெரியும் என்பதும் அதன் பொருள். ஆனால் பண்ணையார் செய்தது பெரும்பிழை அல்லவா? பயத்தில் மன்னிப்புக் கேட்க வந்தானே தவிர, செய்தது பிழை என்பது பிறகு எப்படிப் புரியும்? அதனால்தான் இல்லாத கோபத்தை வந்ததாகக் காட்டிக்கொண்டு நாயின் குணத்தை அவனிடம் வெளிப்படுத்தினார்.

நமது இதிகாசத்திலும் ஒரு கதை உண்டு.

குருக்ஷேத்திரப் போர்.

பிதாமகர் பீஷ்மர் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்பட்டார். அம்புப் படுக்கையில் விழுந்தார்.

அதன்பிறகு கௌரவர்களாலும் ரொம்ப நாள் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்தது. பாண்டவர்கள் ஜெயித்துவிட்டார்கள். ஆனால் பீஷ்மர் இன்னும் அம்புப் படுக்கையில்தான் இருக்கிறார்.

தர்மருக்கும் கண்ணனுக்கும் பீஷ்மரின் உலக ஞானத்தைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆகவே அவர்கள் தங்களுடைய தம்பிகள், உறவினர்கள், மற்ற படைத் தலைவர்கள் எல்லோரையும் அழைத்துக்கொண்டு அவர்முன்னே போய் நிற்கிறார்கள். தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெறுகிறார்கள். பீஷ்மரும் ஓர் அரசன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதில் தொடங்கிப் பல விஷயங்களை முப்பது நாள்களுக்கு உபதேசிக்கிறார்.

இத்தனையும் முடிந்தபிறகு சகாதேவன் ஒரு துடுக்கான கேள்வியைக் கேட்டான். ’பீஷ்மரே, இப்போ நீங்க நல்லா வக்கணையா நியாயம் பேசறீங்க. ஆனா இவ்வளவு நாளா அயோக்கியனான துரியோதனனோட சேர்ந்துதானே சண்டை போட்டீங்க? அப்போ நீங்க நியாயத்துக்கு எதிராப் போர் செஞ்சதா அர்த்தமாகாதா?’

‘உண்மைதான் மகனே’ என்றார் பீஷ்மர். ‘அதற்கு நான் சாப்பிட்ட உணவுதான் காரணம்!’

‘உணவா?’

‘ஆமாம். உணவு உணர்வைக் கெடுக்கும் என்று சொல்வார்கள். நான் பல ஆண்டுகளாக துரியோதனனின் உணவை உண்டேன். அது என்னை நியாயம் மறக்கச் செய்துவிட்டது. தர்மத்துக்கு எதிராகப் போரிடச் செய்துவிட்டது. ஆனால் இப்போது, அர்ஜுனனின் அம்புகள் அந்தக் கெட்ட ரத்தத்தை நீக்கிவிட்டது. நான் மீண்டும் தர்மத்தின் பக்கம் திரும்பிவிட்டேன்.’

பீஷ்மர் அதிர்ஷ்டசாலி. அவருக்கு அர்ஜுனன் கிடைத்ததுபோல் நம் உடம்பில் இருக்கும் ரத்தத்தைச் சுத்தப்படுத்த யாரும் வரமாட்டார்கள். குஷன் படுக்கையையே அம்புப் படுக்கையாக நினைத்துக்கொண்டு தினம் தினம் நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளவேண்டியதுதான்.

ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்வதற்குச் சற்று முன்பாக, ஐந்தே நிமிடங்கள் இந்தச் சிந்தனைக்காக ஒதுக்குவீர்களா? அன்றன்றைக்கு நாம் உண்ட உணவு நியாயமான வழியில் சம்பாதித்ததுதானா என்று யோசிப்பீர்களா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum