தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்

Go down

குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்  Empty குழந்தைகளும் தெய்வங்களும்- வெங்கட் சாமிநாதன்

Post by இறையன் Fri Mar 16, 2012 3:13 pm

மூன்று வருடங்கள் ஆகின்றன. கணினி வாங்கி. கணினியை வைத்துக்கொண்டு என்னென்னமோ மாயங்கள் செய்கிறார்கள். இந்த மூன்று வருடங்களில் எனக்கு இது ஒரு தட்டச்சு யந்திரமாகத்தான் இருக்கிறதே ஒழிய, இதற்கு மேல் அதன் எல்லையற்ற சாத்தியங்களை எனக்குச் சாத்தியமாக்கிக் கொள்ள முடியவில்லை. அதாவது எனக்குத் தெரியவில்லை. நான் இதன் ஆரம்பப் பாடங்களை என் பையனிடமிருந்து கற்றுக்கொண்டேன். இப்பவும் அந்த ஆரம்பப் பாட நிலையில் தான் இருக்கிறேன் என்பதும் சுவாரஸ்யமான விஷயம் தான். இந்த அனா ஆவன்னா எனக்குச் சொல்லிகொடுப்பதற்குள் என் பையன் பட்ட பாடு பற்றி அவனைத் தான் கேட்கவேண்டும். ஐந்து வயது சின்னச் சின்ன வால்கள் கூட என்ன அனாயாசமாக இதன் எதிரில் உட்கார்ந்து என்னென்னமோ மாயங்கள் செய்கின்றன. எப்படி இந்தக் குஞ்சு குளுவான்களுக்கு இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு புரிந்து விடுகின்றது! இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. புதிய தலைமுறைக் குழந்தைகள் தனக்கு முந்திய அத்தனை தலைமுறைகளும் சேர்த்து வைத்துள்ள அறிவார்த்த, அனுபவ சேகரிப்பு அத்தனைக்கும் அவை வாரிசு. அவ்வளவும் அவற்றிற்கு பிதிரார்ஜிதமாகக் கிடைத்துவிடுகின்றன. இரண்டாவது அவை வளரும் சூழல். இந்தக் குழந்தைகளுக்கு இப்போது கிடைப்பதைவிட நமக்கு நம் சிறு பருவத்தில் கிடைத்தது மிக மிகக் குறைவு.



இருப்பினும் நம் குழந்தைகளுக்கு நாம் மோழைகள் தான். இதை ஒப்புக்கொள்ள நமக்குப் பல தயக்கங்கள் இருக்கலாம். கலாம் என்ன கலாம். இருக்கிறது. எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் பங்களாதேஷின் ஒரு ஒதுங்கிய கிராமத்தில் இருக்கும் சிறுவர் சிறுமியருக்கு தன்னைத் தெரிந்திருக்கிறதே, தன்னை ஒரு ஹீரோவாகக் கொண்டாடுகின்றனவே என்று ஃப்ரெஞ்சு கால்பந்தாட்ட வீரன் ஜினதீன் ஜிடானுக்கு ஒரே ஆச்சரியம். அந்த குழந்தைகள் ஜிதானைச் சூழ்ந்து கொண்டு அட்டகாசமாக ஆர்ப்பரிப்பதைப் பார்த்து மனம் எவ்வளவு சந்தோஷப்படுகிறது! மனித குலம் தன் வேற்றுமைகளை யெல்லாம் மறந்து ஒன்றுபடுவது கண்டு மகிழ்ச்சி அடைவது வெறும் சித்தாந்த கோஷம் அல்ல. எனக்கு வயது 74. ஆனால் நான் ஜிதானைப் பற்றி அறிந்ததே இந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டியின் போது தான். இந்த குழந்தைகளுக்கு 9-10 வயதிலேயே ஜிதானைத் தெரிந்து விட்டது. உலகம் அவர்களுக்கு ஒன்றாகிவிட்டது. வென்டல் வில்கியோ அல்லது வேறு யாருமோ அவர்களுக்கு போதிக்க வேண்டிய அவசியமில்லை.



இதெல்லாம் டி.வி. செய்த மாயம் என்று சொல்லலாம். சொல்லலாம் தான். ஆனால் 1957-ம் வருடம். தில்லிக்குச் சென்ற புதிது. தியாகராஜ உத்சவத்தை ஒட்டி தில்லி கரோல்பாகில் ஒரு சங்கீத விழா தினம் தினம். ஒரு நாள் பந்தலினடியில் அமர்ந்திருந்த கூட்டத்தில் என் பக்கத்தில் ஒரு குடும்பம். அதில் ஒரு குழந்தை கச்சேரியின் நடுவில் "சங்கராபரணம் நன்னால்லே" என்று சொல்லிச் சிணுங்கியது கேட்டு அந்தப்பக்கம் பார்த்தால் அது நான்கு வயதுப் பெண் குழந்தை. ' அப்படியெல்லாம் சொல்லப்படாதுடி குழந்தே" என்று தான் அவர்களால் அதை அடக்க முடிந்தது. அந்தக் குழந்தை என்ன பத்திரிகைக்கு விமர்சனம் எழுதணுமா என்ன? "எல்லாம் பாத்துத் தான் எழுதணும் எனக்குத் தான் தெரியும்னு வார்த்தையைக் கொட்டிடப்படாது" என்று தன் தொழில் தர்மம் பேச? குழந்தைகளுக்கு இவ்வளவு நுண்ணிய உணர்வுகள் எப்படி சாத்தியமாகின்றன. இதில் தென்னிந்தியாவே ஒரு தனிக் கலாச்சாரம் தான். இங்கு தான் குழந்தைகளை மேதைகளாக நாம் கொண்டாடுகிறோம். இங்கு தான் ஒரு பாலமுரளி கிருஷ்ணா, மாலி, ரவிகிரன், மாண்டலின் சீனுவாசன், போன்றோர் போற்றப்படுகிறார்கள். மேடைக் கச்சேரி வாழ்க்கை குழந்தை மேதையாகவே தொடங்கி விடுகிறது. ஆனால் வட இந்தியாவில் என்ன மேதமை தெரிந்தாலும், மேடை குழந்தைகளுக்குத் தரப்படுவதில்லை. அந்தக் குழந்தை 'சங்கராபரணம் நன்னால்லே" என்று சொன்னதை எத்தனை நாட்கள் நான் கேட்பவர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனேன் என்பது நினைவில் இல்லை. ஒரு நாள், இது 1953 சமாச்சாரம், புர்லாவில் நடந்தது, என் மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தால், அவர் "சரி, சரி நான் கேக்கறேன், பாடு" என்று டெலிபோனில் சொல்லிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்து பேசாமல் உட்காரச் சொல்லி டெலிபோனில் வைத்த காதோடு முகம் மலர கேட்டுக் கொண்டிருந்தார். பின் சொன்னார், "பேத்தி பாடுவாளாம். நான் கேட்டே ஆகணுமாம். டெலிபோனிலேயே கச்சேரி நடத்திட்டாள்" என்று ஒரு பொய் அலுப்போடு சந்தோஷமாகச் சொன்னார். அந்த பேத்தியின் கச்சேரியை நானும் கேட்டேன் ஒரு நாள் ஒரு ஆண்டு விழாவிலோ எதிலோ. ஒருவர் பாடி முடித்து அடுத்த கச்சேரி ஆரம்பிக்க இருக்கும் இடைவெளியில், அவர் மைக்கு முன்னால் வந்து, "இவளுக்கும் பாடணுமாம். கேளுங்கோ" என்று சபைக்கு அறிவித்துக் கொண்டிருக்கும் போதே, அந்தப் பேத்தி தாத்தாவின் கைப்பிடியை உதறிக்கொண்டு மேடையில் உட்கார்ந்து கொண்டு விட்டது. அதுவும் ஒரு வாண்டு தான். அது பாடியது, குழந்தை பாடறது என்று நம்மைச் சமாதானம் செய்து கொள்கிற பாட்டாக இல்லை.



அந்த நாட்களில் கரோல் பாக் எனக்குப் பல ஆச்சரியங்களைத் தந்தது. அவசர அவசரமாக அலுவலகம் செல்ல பஸ்ஸுக்கு விரையும் போது, உப்புமா எப்படி பண்றது என்று ஒரு ஆறு வயது வாண்டு எட்டு வயது வாண்டுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கடந்திருக்கிறேன்.



ஆனால் புர்லாவில் இருந்த போது என் அலுவலக நண்பன் மனோஹர் லால் சோப்ராவின் குட்டித் தங்கையைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். அவன் ஒரு நாள் தன் வீட்டுக்கு என்னைச் சாப்பிட அழைத்திருந்தான். அதற்கு முன்னால் தான் அவன் தங்கை ரோஹ்தக்கிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லியிருந்தான். தங்கை புர்லாவிற்கு வந்த தகவல் சொல்லி ரோஹ்தக்கிற்குத் தந்தி கொடுத்துவிட்டு வந்தான். இப்போது, ஞாயிற்குக் கிழமையாதலால் " வீட்டிற்கு வா, என் தங்கை ரொட்டி பண்ணிப் போடுவாள் சாப்பிட்டு எப்படி இருக்கு சொல்லு," என்று அழைத்தான். அவன் ஒரு தமாஷ் பேர்வழி. அவன் பெயரைக்கூடச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்று என்னைக் கிண்டல் செய்வான். இப்போ சரியாச் சொல்லு. என் உதட்டைப் பார். ச்ச்சோப்ரா, சொல்லு, ச்ச்சோப்ரா" என்பான். நான் எத்தனை தடவை சோப்ரா சொன்னாலும் அப்படியில்லை. உனக்கு ச்ச் வரவேமாட்டேங்குது. நீ மதராஸி இல்லியா, அவ்வளவுதான் உனக்கு வரும்" என்று தென்னிந்தியாவையே தூக்கி உடைப்பில் போட்டுவிடுவான். உருக உருக வங்காளியில் சோக கீதங்கள் பாடுவான். இந்தப் பஞ்சாபி இவ்வளவு அழகாக வங்காளியில் பாட எப்படி, எப்போ கற்றுக்கொண்டான் என்று திகைப்பேன். ஏனெனில் அவன் வங்காளியில் பாடுவானே தவிர, பேசத்தெரியாது, ஒரு வார்த்தை கூட. ரோஹ்தக்கை விட்டால் தில்லி தெரியும். தில்லியை விட்டால் அவனுக்குத் தெரிந்தது புர்லா தான்.



மறு நாளே ஞாயிற்றுக் கிழமை தான். போனேன் சோப்ரா தன் தங்கை என முன் நிறுத்தியது ஒன்பதே ஒன்பது வயது சிறுமி. இதுவா எனக்கு ரொட்டி பண்ணிப் போடப்போறது என்று எனக்குத் திகைப்பு.


"என்னடா டேய் சோப்ரா இது குழந்தைடா. இதைப் போய் இப்படி வேலை வாங்கறயே, கொஞ்சம் கூட இரக்கமே கிடையாதா உனக்கு, இது விளையாடற வயசில்லியாடா?" என்று கேட்டேன். "இவள் பண்ற ரொட்டியைச் சாப்பிட்டு விட்டு பிறகு சொல்", என்றான். "ரொட்டி செய்யறது ஒரு பக்கம் இருக்கட்டும். இவள் செய்த காரியத்தைச் சொல்லட்டுமா?. கேக்கறியா. சொன்னால் நம்ப மாட்டாய்" என்றான். அவள் உள்ளே வேலை செய்யப் போய்விட்டாள். "இவளுக்கு என் கிட்ட ரொம்ப பாசம். என்னை விட்டு இருக்க மாட்டாள். நான் இங்கே வந்த பிறகு ஒரு மாசம் இரண்டு மாசம் பார்த்தாள். பின், "அண்ணா எப்போ வருவான்?", என்று நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள். "இப்போதானே புர்லா போயிருக்கான் ஒரு வருஷம் கழிச்சுத் தான் வருவான்" என்று அம்மா சொல்லிவிட்டாள். நச்சரிப்பு தாங்காது எனக்கு அப்பா எழுதினார். நானும் அவளுக்கு எழுதினேன். சரி, எல்லாம் சமாதானமாகிவிட்டது என்று இருந்தால் இவள் வந்து நிற்கிறாள். வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி வந்து விட்டாள். எனக்குத் திகைப்பாக இருந்தது. இந்தச் சின்னப் பெண் வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் ஒரிஸ்ஸாவில் எங்கோ இருக்கும் ஒரு காம்ப்புக்கு வந்து சேர்ந்திருக்கிறது அண்ணாவைப் பார்க்க. காசு இல்லாது. எப்படி வழி தெரிந்தது? இரண்டு நாட்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்தது? ஆச்சரியமாக இருந்தது. 1950 களில் இப்போது போல் ரயில் பிரயாணம் சுலபமாக இருக்கவில்லை. ரோதக்கிலிருந்து தில்லிக்கு பஸ்ஸில் வந்துவிடலாம். சில மணி நேர பிரயாணம் தான். ஆனால் தில்லியிலிருந்து புர்லா வருவது மிகச் சிக்கலான காரியம். நேராகச் செல்லும் ரயில் வண்டிகள் கிடையாது. தில்லியிலிருந்து பீனா வரை செல்லலாம். பிறகு அங்கு ரயில் மாறி கட்னி வரவேண்டும். பின் மறுபடியும் ரயில் மாறி பிலாஸ்பூர் வரை செல்லலாம். பின் மறுபடியும் அங்கு ரயில் மாறி ஜெர்ஸ்குடா என்ற சந்திப்பில் இறங்கி, சம்பல்பூர் போகும் வண்டிக்கு மாறவேண்டும். சம்பல்பூர் வந்து சேர்வதோடு ரயில் பிரயாணம் முடிகிறது. சம்பல்பூரிலிருந்து பஸ் ஏறி புர்லாவுக்கு வரவேண்டும். நன்கு எல்லா விவரங்களும் தெரிந்தாலே இது மிகவும் அயற்சி தரும் பயணம். இதை இந்தப் பெண், ஒன்பது வயதுச் சிறுமி காசில்லாமல், வழிகாட்டுவார் இல்லாமல், பயணம் செய்திருக்கிறது. இப்போது என் முன் சிரித்துக் கொண்டு நின்ற பெண். இப்போது ஆலு பராட்டா செய்யப் போகிறேன் என்று உள்ளே உட்கார்ந்திருக்கிறது அமைதியாக. அப்பா அம்மா கவலைப்படுவார்களே என்ற கவலை அதற்கில்லை. ப்ராஜியைப் (அண்ணாவை) பார்க்கவேண்டும். அவளுக்கு இருந்த ஒரே சிந்தனை அது தான். எப்படி வந்தாள்? கேட்டாயா? என்று என் அருமார்ந்த ச்சோப்ராவைக் கேட்டால் அவன் சிரித்துக் கொண்டே சொல்கிறான். ஏதோ கொஞ்சம் காசு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிறாள் அம்மாவை நச்சரித்து. இதன் நச்சரிப்பு பொறுக்காமல், அப்பப்போ கொடுக்கும் பணம் தான். தனியாக ஒரு துணிப்பையுடன் இருக்கும் சிறுமியை யாரும் தொந்திரவு செய்யவில்லை. ஏதும் கேட்டால் குழந்தையாச்சே என்று அக்கறையுடன் பதில் சொல்லி வழியும் காட்டுவார்கள்.. நாம் நினைக்கும் பலவீனம் அதுக்கு பலம். என்றாலும் எனக்கு மனம் சமாதானமடையவில்லை. அண்ணனிடம் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாளோ அதற்கும் மேல் ஒரு பிடிவாதமும், நினைத்ததைச் செய்து முடிக்கும் தைரியமும் அதற்கு இருந்திருக்கிறது.



தட்டு நிறைய ஆலு பராட்ட்டா. இன்னொரு தட்டில் வெறும் ரொட்டி. இன்னொரு பெரிய தட்டில் சாலட். ஆனந்தமாக இருந்தது. மிக நன்றாக, சுவையாக செய்திருந்தாள். நிறைய சாப்பிட்டேன். அக்காலங்களில் அந்த 19 வயது பிராயத்தில் நான் நிறையவே சாப்பிடுவேன். "நீ எப்படி வந்தாய்?. அந்தக் கதை பூராவும் சொல்லு" என்றேன். சொன்னாள். ரோஹ்தக்கிலிருந்து தில்லி வரை பஸ்ஸில் வருவதற்குத் தான் அவள் காசு கொடுத்தாள். பின் வழியில் பசிக்கும் போது பழம், பூரி, டீ சாப்பிடுவதற்கு கையில் காசு வைத்துக் கொண்டாள். வழியெல்லாம் கேட்டுக் கேட்டுத் தான் பயணம். ஒரு இடத்தில் ரயில் மாறுவதற்கு நிறைய நேரம் இருந்ததால், கேட்டுக் காத்திருந்து வருவதில் சிரமமிருக்கவில்லை. நீளமா நீட்டி முழக்கிக் கதையெல்லாம் சொன்னாள். வீட்டுப் பாடம் ஒப்பிப்பது போல வேகமாகச் சில சமயம். சில சமயம் தட்டுத் தடுமாறி யோசித்து என்ன செய்தோம் என்று நினைவு படுத்திக்கொண்டு, வெட்கமாகச் சிரித்துக் கொண்டும் அவள் கதை பூராவும் சொன்னாள்.

பின் அவளுக்கு நான் கும்பகோணத்திலிருந்து டாடா நகருக்கு 16 வயசில் வந்த கதை சொன்னேன், எவ்வளவு பேருக்குக் கடிதம் எழுதி, விவரம் கேட்டு, வழியில் உறவினர் இருந்தால் அவர்களைச்சாப்பாடு கொண்டு வரச்சொல்லி, இடையில் 5-6 மணி நேரம் ரயில் மாற நேரம் இருந்தால் அங்கு யார் வீட்டில் இறங்கி குளித்து சாப்பிடுவது போன்ற ஏற்பாட்டு முஸ்தீஃபுகளை எல்லாம் சொல்லி, இந்தச் சின்ன வயசில் இவ்வளவு கஷ்டங்களோடு கண் காணாத, பாஷை தெரியாத தேசத்தில் என் பிள்ளை எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என்று என் அம்மாவும் அப்பாவும் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொல்லச் சொல்ல அந்தப் பொண் சிரித்துக்கொண்டே கேட்டாள். அவள் சிரிப்பில் அங்கிள் தன்னையே கேலி செய்துகொண்டும், அவளைப் புகழ்ந்து கொண்டுமிருக்கிறார் என்பது புரிந்து சந்தோஷப்படுவது தெரிந்தது. கஷ்டப்பட்டு இவ்வளவு அருமையான பராட்டா வயிறு முட்ட கொடுத்ததற்கு நான் அவளை சந்தோஷப்படுத்த வேண்டாமா? அவள் கள்ளமற்ற சிரிப்பைப் பார்க்க எனக்கும் சந்தோஷமாகத்தான் இருந்தது. மறு நாள் அலுவலகத்தில் சோப்ராவின் குட்டித் தங்கையின் சாகஸப் பிரயாணத்தைப் பற்றியும் அருமையான ஆலு பராட்டாவைப் பற்றியும் சொன்னேன். அவர்களுக்குச் சோப்ரா என்னை (ஒரு மதராஸியை )மாத்திரம் அழைத்தது பொறாமையாக இருந்தது. ராம்சந்த் என்னும் பஞ்சாபி மாத்திரம் கடைசியில் உற்சாகத்தோடு பலமாகச் சொன்னான். "ஆக்கிர் வஹ் பஞ்சாபி ஹை, ஷேர்னி ஹை ஷேர்னி, க்யோ(ன்) நஹி கரேகி" (அவள் ஒரு பஞ்சாபிப் பெண். சிங்கக் குட்டி அவள்? ஏன் செய்யமாட்டாள்?) அவன் சொன்னது வாஸ்தவம். பல தடவை நான் அதன் நிரூபணத்தைப் பார்த்திருக்கிறேன்.



இவையெல்லாம் மிக புத்திசாலிக் குழந்தைகள், சில மிகத் துணிச்சல் மிக்கவை. நம் மரபில் குழந்தைகளை தெய்வம் என்போம். அதற்குக் கள்ளம் கிடையாது. பொய் அறியாது. நான் நினைத்துப் பார்ப்பேன். அயோக்கிய சிகாமணிகளாகக் காட்சி தரும் நாட்டைச் சூறையாடும் இந்த அரசியல் பிரமுகர்களைப் பார்த்தால் எனக்குத் தோன்றும். இவர்களும் சின்ன வயசில் குழந்தைகளாக இருக்கும்போது நமக்கு இவர்கள் என்ன குட்டிப் பிசாசுகளாகவா இருந்திருப்பார்கள்? பால் மணம் மாறாத என்றெல்லாம் சொல்வோம். தூக்கி மடியில் வைத்துக்கொண்டு "என்னடா கண்ணு வேணும்? என்று அன்பாகக் கேட்போம். இப்போ வேண்டாம். பெரியவனான பிறகு நானே பார்த்துக்கொள்கிறேன் என்றா சொல்லும் அது.



நாம் குழந்தைகளைத் தெய்வங்களாகப் பார்க்கிறோம். தெய்வங்களைக் குழந்தைகளாக பாவித்து அன்பையும் பாசத்தையும் பொழியும் ஒரு பார்வை நமக்குப் பெரியாழ்வாரிடமிருந்து தொடங்குகிறது. வரலாற்றிலேயே முதன் முதலில் அவர் தான் தெய்வத்தைக் குழந்தையாக்கி மகிழ்ந்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய கற்பனை? ஆனந்தமான கற்பனை. . "திண்ணக் கலத்தில் திரையுறி மேல் வைத்த வெண்ணை விழுங்கிடுவான், எண்ணைக் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளியெழுப்பி, கண்ணை புரட்டி விழித்துக் கழகண்டு செய்வான்,செங்கமலப் பூவில் தேனுண்ணும் வண்டேபோல், பங்கிகள் வந்து அவன் பவளவாய் மொய்ப்பர், கன்னற்குடம் திறந்தால் ஒத்தூறி, கணகண சிரித்து உவந்து முன் வந்து நின்று முத்தம் தருவான்" என்றெல்லாம் சிறு பருவத்து விளையாட்டையும் குறும்புகளையும் சொல்லி ஒரு புதிய உலகையே தந்துச் சென்றிருக்கிறார் பெரியாழ்வார். அதைத் தான் பாகவதம் சொல்ல, வடநாடு முழுதும் அது பக்தி இயக்கம் பரவச் செய்தது. கதக் நாட்டியத்தின் "பாவ் பதானா"வே{அவர்கள் சஞ்சாரி பாவம்} இந்த வெண்ணெய் திருடும் கண்ணனைத் தான் நம்பித் தொடங்கியது. இதை விட்டால் வேறு வழியில்லை கதக்கிற்கு. பெரியாழ்வாருக்கு முன் கண்ணனைக் குழந்தையாக வட இந்தியா அறிந்ததில்லை. துவாரகை மன்னனாகத்தான் அதற்குத் தெரியும். ஊத்துக்காடு வெங்கட சுப்பயரும், பாபனாசம் சிவனும் மனதை அள்ளிக் கொள்ளை கொள்ளும் பதங்களையும் கீர்த்தனைகளையும் தெய்வத்தைக் குழந்தையாகப் பாவித்த மரபில் இயற்றியிருக்கின்றனர். பாலன் என்று எண்ணி அவனை அழைத்து அணைத்துக் கொண்டால், அவன் செய்யும் விஷமங்களை வெளியில் சொல்ல முடியவில்லை என்று பெண்கள் புகார் செய்கின்றனர். பாபநாசம் சிவன் காபி ராகத்தில் இயற்றிய "என்ன தவம் செய்தனை? என்று தாய் யசோதாவைக் கேட்கும் கீர்த்தனை தரும் பரவசம் சொல்லித் தீராது. அவரே என்ன பக்தி பரவசத்தில் அதை இயற்றியிருக்க வேண்டும், எப்படி வார்த்தைகள் அவ்வளவு அழகாக வந்து விழுந்துள்ளன என்று நினைத்துப் பார்ப்பதே பரவசம் தரும்.



இது நமக்கே உரிய பாவம் என்று நான் நினைத்திருந்தேன். தவறு. டோரன்டோவில் உள்ள ஒன்டேரியோ கலைக் கூடத்தில் குழந்தைப் பருவ ஏசுவை பாதிரியார் ஒருவர் விரல் பிடித்து இட்டுச் செல்லும் ஒவியம் ஒன்றைப் பார்த்தேன். "ஏசு குழந்தையாக இருந்த போது பாதிரியார் எங்கிருந்து வந்தார்?" என்று கேட்டேன். அது ஏசுவை குழந்தையாகப் பாவித்த கற்பனை என்று எனக்கு விளக்கம் சொல்லப் பட்டது.


இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum