தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்

Go down

சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்  Empty சனி மூலையில் தான் நானும்--வெங்கட் சாமிநாதன்

Post by இறையன் Fri Mar 16, 2012 3:56 pm

சனி மூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா? பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைத் திருப்பதும், சனி மூலை ஒரு புத்தகமாக உருவாவதும் நல்ல விஷயங்கள் தான். நமக்கு வேண்டிய விஷயங்கள் தான். இது சம்பிரதாயமான பாராட்டு அல்ல. பாசாங்குகளும் பாவனைகளும் அற்ற தனக்கு நேர்மையும் உண்மையுமான மனப் பதிவுகள் ஒன்று சொல்ல வேண்டும். ஏற்கனவே போட்டிருக்கும் பாதையில் செல்லாமல் தனக்கென வழி ஒன்று தேடிக்கொண்டு அவஸ்தைப் படுகிறவர்களால் தான் உலகத்தில் புதிய சிந்தனைகளும் பாதைகளும் உருவாகின்றன. பெர்ட்ராண்டு ரஸ்ஸல் தன் History of Western Philosophy என்னும் மேற்கத்திய தத்துவ வரலாற்று நூல் மிக எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் ஹாஸ்யம் அவ்வப்போது குமிழிட எழுதப்பட்டுள்ள ஒன்று. அனேகமாக அவரது எல்லா புத்தகங்களையும் போல. அதில் . புனிதர் அகஸ்டினின் Confessions-ஐப் பற்றி எழுதும்போது அவர் சொல்கிறார்.


“இது போன்று அடிக்கடி தான் செய்யும் காரியங்களில் இல்லாத பாபங்களையெல்லாம் கண்டு அவற்றுக்காக மன்னிப்புக்கேட்டுk கசிந்துருகியே வாழ்ந்த ஜீவன் உலகத்திலேயே இன்னொருவர் தான் அறிந்தவர் மோஹன்தாஸ் கரம் சந்த் காந்தி. அவருடைய சுய சரிதம், The Story of My experiments with Truth –படிக்கும் போதும் இப்படித் தான் எனக்குத் தோன்றியது”


என்று கிட்டத் தட்ட இந்த அர்த்தத்தில் அவருடைய நடையில் சொல்லி யிருக்கிறார்... ரஸ்ஸலுக்கு செயின்ட் அகஸ்தின் மன்னிப்புக் கோரும் பாபங்களைப் போலவே காந்தி நெக்குறுகும் பாபங்களும் பாபங்களாகத் தோன்றாது தான். நமக்கும் தான்.


அப்படித்தான் இன்னொரு விதத்தில் சனி மூலையும், ராகவன் தம்பி கிருஷ்ணகிரியில் கழிந்த தன் சிறு பிராயத்தில் தன் விளையாட்டுத்தனத்தில் செய்தவற்றோடு, தில்லியில் தன் வயது காலத்தில் தன் அக்கறைகளின் ஈடுபாட்டில் ”நாடகம் போடறேன்,” என்று கிளம்பினால், நம் எல்லோருடைய அப்பாக்களைப் போல் அவருடைய அப்பாவுக்கும் பிடிக்காது போய் அவருக்கு துக்கம் தந்த வேதனை நிறைந்த கணங்கள். இதெல்லாம் நம் எல்லோருக்கும் நேர்வது தான். தன் தில்லி வாழ்க்கையில் மட்டுமல்ல, இளமையில் கிருஷ்ணகிரியில் வாழ்ந்த நாட்களிலும் கூட. அதற்கு அவருடைய சுபாவமும் காரணம். படபடப்பு, முன் கோபம் பின் அதன் விளைவுகளை நினைத்துப் பிறகு வருத்தம்.


ஆனால் பொதுவாக கொஞ்சம் மெல்லிய தோலும் சுரணையும் உள்ளவனுக்கு இன்றைய தமிழ்ச் சூழலில் காலம் தள்ளுவது சிரமம் தான். அதில் ஒரு பகுதி கல்லுக்கும் மண்ணுக்கும்னு தோன்றிய கூட்டம் தில்லிக்கு இடம் பெயர்ந்து தில்லியிலும் நமது விதி தொடர்ந்தால் சிரமம் தான். ஆனால் பெரும்பாலான தமிழர்களுக்கு எந்த வித்தியாசமும் தெரியாது காலம் சுகமே, ஒளியும் ஒலியும் பார்த்தே கடந்துவிடும் தான். அதை எதிர்கொள்ளும்போது ராகவன் தம்பி சிரமப் பட்டாலும், அந்த சிரமத்திற்குக் காரணம் அங்கு எதிர்கொள்ள நேரும் தில்லி சூழல் மாத்திரம் அல்ல, அதற்கும் மேலாக தில்லிக்கும் இடம் பெயர்ந்து முன்னிற்கும் தில்லித் தமிழர்களும் தான். அது மட்டுமல்ல. நமக்கு ராகவன் தம்பியையும் சேர்த்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுவும் அவ்வப்போது சிரமம் தரும் விஷயமாகத் தான் எனக்கும் இருந்தது. அது ராகவன் தம்பிக்கும் தெரிந்து தான் இருந்தது. அவருக்குத் தெரிவது பின்னால் தானே. அது சாவகாசமாக சனி மூலையிலும் பதிவாயிருக்கிறதென்றால் அது ஒரு தனிமனிதனின் விசேஷ குணம். அப்போது கோபத்தைத் தூண்டியது இப்போது மெல்லிய புன்னகையைத் தூண்டும்.


ராகவன் தம்பியின் நட்புணர்வு பொங்கித் ததும்பும்போது அதன் இதத்துக்கும் பாத்தியமானவனான நான் சில முறைகள் இனந்தெரியாத, யோசனையில்லாத, முன் கோபத்தாக்குதலுக்கும் வெறுப்பிற்கும் கூட இரையானவன் தான். இதெல்லாம் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட விஷயங்கள் இல்லை. இங்கும் அவை ஒளிக்காமல் பதிவாகியிருக்கின்றன., அதற்கான சால்ஜாப்புகளை கற்பித்துக்கொள்ளாமல், நடந்தவற்றைப் பதிவு செய்யும் இந்த குணம் ராகவன் தம்பிக்கு தன்னைத் தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை மறுக்கிறது. அது தான் சனி மூலையை அனேகமாக பெரும்பாலான தமிழர்களின் சொல்லிலிருந்தும் பதிவுகளிலிருந்தும் தனித்துக் காட்டுகிறது. வாழ்ந்த உண்மைகள். அதேசமயம் நட்பின் தடையற்ற இயல்பான வெளிப்பாட்டிற்கும் நான் பாத்தியனானவன். எதுவும் காற்றோடு வாழ்ந்த கணங்களோடு மறைவன அல்ல. எல்லாம் வாழ்ந்தவாறே பதிவாகியுள்ளன, வாழ்ந்தவாறே என்று தான் சொன்னேன். வாழ்ந்த கணங்களில் பார்த்தவாறு அல்ல.


வாழ்ந்த கணங்கள் என்று நான் சொன்னால், அது சனி மூலையில் பதிவாகியிருப்பதன் ஒரு பகுதி. இந்த சனி மூலையின் கதாநாயகனான தில்லிநகரை, தில்லி வாழ் மக்களை, அதன் தமிழர்களை எனக்கு ஐம்பதுகளின் பின் பாதியிலிருந்து கடந்த நூற்றாண்டின் கடைசி வருடம் வரை தெரியும். கிட்டத்தட்ட ஐம்பத்து நான்கு ஆண்டுகள். இதில் சுமார் இருபது ஆண்டுகள் ராகவன் தம்பியின் தொடக்க இருபது ஆண்டுகள். எனக்குக் கடைசி இருபதாண்டுகள். ஆக, சனி மூலையில் பதிவாகியிருக்கும் தில்லி வாழ்க்கை நானும் ராகவன் தம்பியும் சேர்ந்து கழித்த வாழ்க்கை தான். பகிர்ந்து கொண்ட தில்லி தான். தில்லி தமிழர் தான். இவற்றையெல்லாம் நான் 1957 தொடங்கிய தில்லி வாழ்க்கையில் அனுபவித்தவன் தான். ராகவன் தம்பி அதுபற்றி எழுதும் போது, நான் கண்ட தில்லியையும் பதிவு செய்திருப்பது, அதைக் கேலியுடனும், வேதனையுடனும் பதிவு செய்திருப்பது, எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை எனினும், அதில் ராகவன் தன்னையும் பரிகசித்துக்கொள்வது எனக்கு நான் அறியாத ஒரு ராகவன் தம்பியை சனி மூலை எனக்கு அறிமுகப் படுத்துகிறது. தன்னையே பரிகசித்துக்கொள்ளும் மிக அரிதான ஒன்று. அது தான். தில்லி வாழ் தமிழ் வாழ்க்கையை அதன் பாமர ரசனையை, அசட்டுத்தனங்களை, அது தன்னைப் பாதித்ததை வேதனையோடும் பதிவு செய்யும் போது அதைத் தன்னைப் பரிகசித்துக்கொண்டே பதிவு செய்வது, வெறும் விவர அடுக்கல், சம்பவக் கோர்வை என்பதிலிருந்து மேன்மைப் பட்ட அனுபவமாக உயர்த்தியுள்ளது என்று சொல்ல வேண்டும்.


தில்லி வாழ்க்கை சிவாஜி கணேசன் படம் பார்க்க காலை எட்டு மணிக்கு ரீகல் டாக்கிஸுக்கு விரையும் வாய்ப்பையும் கொடுக்கும். அதே சமயம் தில்லி புராணா கிலாவை பின்னணியாகக் கொண்டு இப்ராஹீம் அல்காஷி மேடையேற்றிய கிரீஷ் கர்நாடின் துக்ளக் நாடகமும் பார்க்கக் கிடைக்கும். நான் 1961-ல் ஃபெரோஸ்ஷா கோட்லா கோட்டை பின்னணியில் அந்தாயுக் பார்த்த போது எனக்கு யாரும் தமிழர்கள் கண்ணில் படவில்லை. மெரினாவின் நாடகமும் பார்க்கக் கிடைக்கும். தேர்ந்து கொள்ள வேண்டியது அவரவரது சுரணையின் பாற்பட்டது. நான் தில்லியில் பெற்றதை வேறு யாரும் பெறவில்லை என்று தான் என் நினைப்பு. ஒன்றிரண்டு பேர் இது தவறு என்று நிரூபிப்பது சாத்தியம்தான். ஆனால் அனேக தமிழருக்கு அந்த தில்லி தெரிவதில்லை. இது ஒரு கோடி. இன்னொரு கோடி, 1950-க்களின் இடைப்பட்ட காலத்திலிருந்து சுமார் முப்பது வருட காலம் தில்லியில் இருந்த போதிலும், தன்னைச் சுற்றி ஒரு பாளையங்கோட்டைச் சூழலை உருவாக்கிக்கொண்டு அதிலேயே சிறைப்பட்டு தில்லி தரவிருந்ததையெல்லாம் தனக்கு மறுத்துக்கொண்ட தில்லி வாழ் தமிழ் மேதைகளும் உண்டு.


ஐம்பது வருடங்களாக எழுதி வரும் நான் இவ்வளவு எழுத வேண்டியிருக்கிறது. இதையே ராகவன் தம்பி கோமல் ஸ்வாமிநாதனின் தில்லி வருகையின் போது நடந்த கூட்டத்துக்குச் செல்லும் பிரபாவத்தை எழுதுகிறார். எவ்வளவு அநாயாசமாக அவரால் எழுதிவிட முடிகிறது?


“கையில் ஒரிரு சுபமங்களா இதழ்களையும் கொடுத்துச் சென்றார். ஒரு வித அலட்சியத்துடன் படிக்கத் தொடங்கினேன். கையில் எடுத்ததும் ஒரு விஷயம் புரிந்தது.எவ்வித குழு மனப் பான்மையும் இல்லாது சகல கோஷ்டிகளுக்கும் இடமளித்திருந்தார் கோமல். அதில் ஒன்றிரண்டு குப்பைகளும் இருந்தன. அவை அவ்வப்போது வெகுஜன இதழ்களில் மிகவும் பிரபலமாக இருந்த குப்பைகளின் எச்சங்கள். இது போதாதா? எனக்குச் சிறுபத்திரிகைகளின் அறிமுகம் கிடைத்து சில வருடங்கள் ஆகியிருந்த நேரம். சிறு பத்திரிகை எழுத்தாளப் பெருந்தகைகளின் சகவாசத்தால் அருளப்பட்ட ஞானஸ்நானம். நவீன நாடகப் புலவர்களுடன் சகவாசம். அதன் விளைவாகக் கொஞ்சம் பெரிய மனிதனாகக் காட்டிக்கொள்ளப் பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட தாடி, வாயில் எப்போதும் புகையும் சிகரெட். ஜோல்னாப் பையில் கொஞ்சம் புத்தகங்கள். அரைகுறை ஞானம் .கண்களில் எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம் இவை அனைத்தயும் சுமந்து கொண்டு வித்தல் பாய் படேல் ஹவுஸ் நோக்கிப் படையெடுத்தேன். பேசிய எல்லோரும் கோமலை வாழ்த்தினார்கள். அவருடைய முயற்சியை வாழ்த்தினார்கள்.. தில்லித் தமிழர்களின் வழக்கப்படித் தங்களைக் கொஞ்சம் புகழ்ந்துகொண்டு, மிச்சம் கிடைத்த நேரத்தில், தங்களைப் போலவே கோமலும் இருப்பதற்கு ஆச்சரியம் தெரிவித்துக் கொண்டு அவரை வாழ்த்தினார்கள். அடுத்து என் முறை வந்தது. கோமலின் முயற்சியை எதோ போனால் போகட்டும் என்று பாராட்டி விட்டு சிறு பத்திரிகை வாசக மரபுப்படி, கொஞ்சம் அவநம்பிக்கையும் தெரிவித்து பல நல்ல சிறுபத்திரிகை ஞானவான்கள் எழுத முனைந்திருக்கும் இந்தப் பத்திரிகையில் குப்பைகளையும் தெளிக்க கோமல் முன் வந்திருப்பதைக் கண்டித்து விட்டு அடுத்த சிகரட் பிடிக்க வாசல் நோக்கி ஓடிப்போனேன் கோமல் தன் முறை வந்த போது மிகவும் அற்புதமாகச் சிரித்துக்கொண்டே என் ஐயப்பாடுகளுக்கும் அச்சத்துக்கும் மிகத் தெளிவாகப் பதில் அளித்தார்” (ப. 33)


நான் சொன்னதெல்லாம் இந்தப் பத்து பதினைந்து வரிகளில் சாட்சியம் பெறுவதைக் காணலாம்.


இந்த எளிய, சரளமான தன்னையும் கேலி செய்துகொள்ளும் பாவனையில், சுற்றியிருக்கும் அறியாமையின் மேதாவித்தன பாசாங்குகளையும் கேலி செய்யும் எழுத்துத் திறன் எங்கிருந்து வந்தது?. ராகவன் தம்பியின் தான் நினைத்ததைச் சாதிக்க விரும்பும் பிடிவாதம் தான் எனக்குத் தெரியும். தமிழ் நாட்டிலேயே நாடகம் வரலாற்றுப் பழங்கதையாகிவிட்ட பிறகு அதே சூழலையும் ரசனையையும் கொண்ட தில்லியில் நான் நாடகம் போடப் போறேன் என்று கிளம்புவது கிருஷ்ணகிரி அப்பா என்ன, நானே பைத்தியக்காரச் செயல் என்று தான் சொல்வேன். ஆனால் ராகவன் தம்பி தட்டுத் தடுமாறி எழுந்து நின்று நடை பழகி முறைப் பெண் வரை வளர்ந்துவிட்டது வெற்றி தான். தமிழ் நாட்டில் செலவாணியாகாத விஷயத்தை செய்து காட்டி, தமிழ் நாட்டுக்கும் எடுத்துச் சென்றது பெரிய விஷயம் தான். அதை நவீன நாடக மேதைகள் காண மறுத்து கண்மூடிக் கொள்வது வேறு விஷயம். என்னைக் கேட்டால் ஏதோ கோடைகாலத் தூறல் போல, தமிழ் நாடகத்தின் ஒரு சில தூறல்கள், என செ.ராமானுஜத்தின் வெறியாட்டம், சி.சு.செல்லப்பாவின் முறைப்பெண், ஆறுமுகத்தின் கருஞ்சுழி என ஒரு சில தான் சொல்லமுடியும். தூறல் நின்று மறுபடியும் வெக்கையின் தாக்கம் தான்.


கன்ணப்பத் தம்பிரானையும், சி.சு.செல்லப்பாவையும் மையமாகக் கொண்டு ஆவணப் படங்களாகப் பதிவு செய்ததும் தடம் மாறிய காரியம் தான். அவர்கள் இருவரோடும் பென்னேஸ்வரன் சம்பந்தப்பட்டதும் இல்லை. நெருக்க உறவு கொண்டதும் இல்லை. ஆயினும் ராகவன் தம்பிக்குத் தோன்றியது சிஷ்ய கோடிகள் சிந்தனையில் உதிக்கவில்லை. காரணம், எல்லாரும் ரொம்பப் பெரியவர்களாகிவிட்டார்கள். முறைப்பெண் ஒரு நாடகம் என்றே தமிழ் நாட்டு நாடக மேதைகளுக்குப் பட்டதில்லை .சொல்லப் போனால் நம் நாடக மேதைகள். தமக்குள் ஒருவரை ஒருவர் கண்டதாகக் கூட காட்டிக்கொண்டதில்லை. இதை ராகவன் தம்பியும் அவருக்கே உரிய சுய பரிகாசத் தொனியில் சொல்லியும் இருக்கிறார். கோமல் ஸ்வாமிநாதன், சி.சு.செல்லப்பா, கண்ணப்ப தம்பிரான் பற்றி எழுதும்போதெல்லாம், தான் ஒரு லெஜெண்ட் போன்ற ஆளுமையின் முன் இருக்கும் உணர்வும் அதே சமயம் ஒரு பாசம் தரும் நெருக்க உணர்வையும் வெளிப்படுத்துகிறது அந்த எழுத்து.


நான் சொல்லிக்கொண்டே போகலாம். அவசியமில்லை. புத்தகம் கைக்கு வந்துவிட்டது. சிலவற்றைக் கோடிக்காட்டினால், சிலவற்றை உதாரணமாகச் சொன்னாலே போதும். ராகவன் சும்மா தமாஷ் பண்ணவில்லை. பட்ட வேதனைகளும் அவஸ்தைகளும், நிராகரிப்பும் சுய இகழ்ச்சியாகவும், பரிகாசமாகவும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் உடன் பிறந்த பிடிவாதம் கரையேற்றும். கிருஷ்ணகிரியிலும் தில்லியிலும் கழித்த கழித்து வருகிற ஒரு ஐம்பத்தைந்து வருட சுய வரலாற்றை உதிரி சம்பவங்களாக, கொண்ட நட்புக்களை நினைவுகொள்ளும் பாவனையில் சொல்லும் போக்கில். தமிழர்களின்,, அவர்கள் எங்கிருந்தாலும் தரும் சுய சித்திரத்தை, அவர்களது கலாசார, முகங்களை வெகு சரளமாகச் சொல்லிவிடுகிறார். இதில் கோமல் ஸ்வாமிநாதன், சி.சு.செல்லப்பா, தன் தில்லி நாடக நண்பர்கள், தில்லி தமிழ்ச் சங்கம், இடம் பெயர்ந்து கூலி வேலை செய்யும் நாட்டுப்புற வாத்தியக்காரர்கள். இங்கும் அடுத்தடுத்துக் குடிசைகளில் வாழ்ந்தாலும் தம் சாதியை விட்டுக் கொடுக்காத பெருமை எல்லாம் நம் கண்முன்.


இது தான் தில்லி. நானும் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள். நானும் அறிந்த பெரியவர்கள், நண்பர்கள். நானும் வாழ்ந்த வாழ்க்கை.


ஆனால் எனக்கு தில்லி காட்டிய முகங்கள் இன்னும் பல; அவற்றில் சில ரவீந்திரனுக்கும் தெரியும். அது பற்றி நான் தான் எழுத முடியும். அதை ராகவன் தம்பி எழுதும் அளவுக்கு சுவாரஸ்யமாக நான் எழுத முடியாது. ஒரு கால கட்டத்தில் சென்னையை விட தில்லி தான் தமிழ் இலக்கியத்துக்கும் கலைகளுக்கும் புது வளம் சேர்த்தோரின் உறைவிடமாக இருந்தது. தி.ஜானகிராமன், க.நா.சுப்ரமண்யம், இந்திரா பார்த்த சாரதி, ரவீந்திரன் சுஜாதா, சம்பத், ஆதவன், வாசந்தி, கிருத்திகா, பி.ஏ.கிருஷ்ணன் என்று இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் (சாலை இளந்திரையனை விட்டு விட்டேன் என்று சிலர் கோவித்துக் கொள்ளக் கூடும்) இவர்கள் தமிழ் எழுத்துக்கு உயிர்த் துடிப்பாக இருந்தவர்கள். கணையாழியும் தில்லியில் விளைந்தது தான். அதில் சிலர் தனியாக தமக்கு நாற்றங்கால் வைத்துக்கொண்டிருந்தாலும்
.
இன்று அந்தப் பட்டாளம் இல்லை. பெண்ணேஸ்வரன் தனித்து விடப்பட்டிருக்கிறார். சனி மூலை அவரது இன்னொரு பரிமாணத்தை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. இந்த எழுத்து அவரது முத்திரை தாங்கியது இங்கு வேறு யாரிடமும் நான் காணாதது. வேடிக்கையாக எழுதப்பட்ட ஒரு சுய சரிதம் எத்தனை பரிமாணங்களைப் பெற்றுவிடுகிறது! வியப்பு மட்டுமல்ல சந்தோஷமும் தான். இப்படி தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் எழுத்து வேறு யாரிடம் இருக்கிறது?
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum