தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சே குவேரா - புரட்சிக்காரர்களின் இதயத் துடிப்பு
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்

» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்

» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்

» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்

» பிரம்மராஜன் கவிதைகள்
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்

» K Iniyavan
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்

» K Iniyavan -karuththu
பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  EmptyThu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்


பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்

Go down

பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  Empty பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்

Post by இறையன் Thu Dec 15, 2011 2:08 pm

இன்னூல்திரட்டு இதனுக்குஏது நிகர்இன்று எனவே
பன்னூல்திரட்டு ஒன்று பாலித்தான் – நன்நூல்கட்கு
ஈண்டுஇத்துரையே இடமென யாவும் தேர்ந்த
பாண்டித்துரை யாம் பதி.
– வை. மு. சடகோபராமாநுஜாசாரியார்.


2001ல் ஒரு சனிக்கிழமை இரவு 9 மணி. வழக்கம் போல் (சைவ) சித்தாந்த வகுப்பு முடிந்ததும் என் ஆசிரியர் ரத்னவேலன் ஐயா இரவு உணவினை முடித்துக் கொண்டு தெற்கு மடத்திற்குப் புறப்பட்டார். காந்திமதியம்மன் சந்நிதியிலிருந்து தெற்கு மடம் வரையிலும் செல்லும் அந்தக் குறுகிய நேரத்தில் என்னுடைய சந்தேகங்கள் பலவற்றை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன். நானும் அன்று அவருடன் நடக்கலானேன். இன்னின்ன நூல்களைப் படியுங்கள் என்பதோடு இந்த நூலுக்குப் பிறகு இந்நூல் என்று வரிசையாகப் படிக்க வேண்டிய முறையையும் எனக்குச் சொல்வார்.

அன்றைக்கு அப்படிப் பேசிக்கொண்டே போகும் போது பாண்டித்துரைத் தேவர் தொகுத்து அச்சிட்ட ‘பன்னூல் திரட்டு’ எனும் நூலினைப் பற்றி எடுத்துக் கூறி, வாய்ப்பிருந்தால் பிரதி கிடைத்தால் அதைப் படித்துப் பார்க்கும்படி சொன்னார். பின்னாளில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ‘பன்னூல் செய்யுள் திரட்டு’ என்றொரு நூல் வெளியிட்டதாகவும், அது தேவரின் நூலுக்கு ஏணி வைத்தாலும் எட்டாது , கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடினது போல எனவும் ஒப்பிட்டு தேவர் நூலின் உயர்வை எடுத்துக் கூறினார். இதே கருத்தினை சந்தர்ப்பம் வாய்த்த போது வகுப்பிலும் சொன்னார். நான் தேவரைப் பற்றியும் பன்னூல் திரட்டு பற்றியும் அறிந்து கொண்டது அதுதான் முதல் தடவை.

எட்டாம் வகுப்பில் என்று நினைக்கின்றேன்.... தேவர் பற்றிய பாடம் ஒன்று எனக்கு இருந்தது. அவரது தொப்பி போட்ட, முறுக்கிய மீசை வைத்த படமும், பிழையாக அச்சிட்ட திருக்குறள் புத்தகங்களை அவர் வாங்கி எரித்ததும் தான் என் நினைவில் இருக்கின்றது. எனது பள்ளிக் காலங்களில் தமிழை இயல்பாக இனிமையாக எந்த ஆசிரியரும் எங்களுக்குக் கற்பிக்கவில்லை.

ரத்னவேலன் ஐயா மறைவிற்குப் பின் பன்னூல் திரட்டினைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.

திருநெல்வேலி பெரியதெரு பழனியாண்டி முதலியார் சித்தாந்த வகுப்பிற்கு தவறாமல் வந்துவிடுவார். இனிமையாக கஞ்சிரா வாசிப்பார். சிவபூஜைக்காரர். அரிய பல நூல்களைச் சேமித்து வைத்திருக்கின்றார். நொறுங்கித் தூள்தூளாகப் போகும் நிலையில் இருக்கக் கூடிய நூல்களை எழுதி வைத்துக் கொள்வார். இந்த 70+ வயதிலும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளக் கூடியவர்.

அவரிடம் பன்னூல் திரட்டு நூல் பிரதி ஒன்றிருக்கின்றது என்று கேள்விப்பட்டு அவர் வீட்டுக்குச் சென்று அந்நூலை வாங்கிப் பார்த்தேன். அது எந்தப் பதிப்பு என்பதும் இப்போது என் நினைவில் இல்லை. ராமபாணம் (கரையான்) ஆங்காங்கே அந்நூலைத் துளைத்திருந்ததனால் அவர் அப்படியே பெரிய நோட்டில் எழுதி வைத்திருக்கிறார், அருமையான கையெழுத்தில். எனக்கு இருக்கும் சின்ன சின்ன ஆசைகளுள் இந்நூலைப் பிழையில்லாமல் தேவையான ஆராய்ச்சி முன்னுரை, குறிப்புரைகளோடு அச்சிடுவதும் ஒன்று. நிற்க.

பாலவநத்தம் ஜமீந்தார் பரம்பரையில் வந்தவர் பாண்டித்துரைத் தேவர். சிறந்த சிவபக்தர். சிவபூஜைக்காரர். திராவிட மகாபாஷ்யகாரர் ஸ்ரீ சிவஞான சுவாமிகள் மீது மட்டில்லாத பக்தி உடையவர். ஆழ்ந்த தமிழ்ப்புலமையும். ஆங்கில அறிவும் கொண்டவர். கேட்பாரைப் பிணிக்கும் தகைமையுடைய பேச்சாளர். நினைத்தவுடன் கவி பாடும் வல்லமை படைத்த ஆசுகவி. நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல். அரிய பல நூல்களை அச்சிடுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர். தமிழ்மொழி வளச்சிக்குப் பெரிதும் துணை நின்றவர். தமிழுக்கு இடையூறு ஏற்படும்போதெல்லாம் எதிர்த்து நின்றவர். மொத்தத்தில் தமிழை வைத்து அரசியல் பண்ணத் தெரியாதவர் எனவும் சொல்லலாம்.

அவரமைத்த 4 ஆம் தமிழ்ச்சங்கம் தமிழுக்குப் பலவகையிலும் போற்றற்குரிய தொண்டுகள் புரிந்திருக்கின்றது. இன்று அரசாலும் மக்களாலும் மறக்கப் பட்டுவிட்டது. பல்வேறு கருத்து வேறுபாடுடைய தமிழறிஞர்கள் தேவரமைத்த தமிழ்ச்சங்கத்தால் ஒன்றுபட்டனர். அரிய பல ஆராய்ச்சி நூல்கள் இச்சங்கத்தின் வாயிலாக வெளிவந்தன. சங்கத்தின் சார்பில் வெளிவந்த ‘செந்தமிழ்’ இதழில் அரிய கட்டுரைகளும், வெளிவராத இலக்கியங்களும் பிரசுரமாகின.

தேவர் அரிய நூல்கள் பிரசுரமாவதற்குப் பொருளுதவி செய்திருக்கிறார். அவர் பொருளுதவி பெற்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அச்சிட்ட திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும் நூலும்., சிவஞான யோகிகள் பிரபந்தத் திரட்டும் என்னிடம் உண்டு.

தமிழ்மொழியிலுள்ள பல நூல்களிலிருந்து முக்கியமான செய்யுட்களை பல தலைப்புகளின் கீழ் தொகுத்ததுதான் ‘பன்னூல் திரட்டு’ . இத்தகையதொரு தொகுப்பு வெளியிட வேண்டியதன் அவசியத்தை தேவர் அந்நூலின் முகவுரையில் இப்படிக் கூறுகின்றார்:

“உலகில் தோன்றிய ஆன்மகோடி பலவற்றுள்ளும் கிடைத்தற்கரிய மானிடப் பிறப்பு எய்தியார்க்கு உறுதிப் பொருளாய் உள்ளன அறம் பொருள் இன்பம் வீடென நான்கே.... இத்தகைச் சிறப்பு வாய்ந்த தமிழ்மொழி ஆதரவற்றுக் கற்போரின்றி நலிவடைந்து வருதல் பற்றி யாவரும் விசனிக்கத் தக்க இக்காலத்து, இலைமறை காய்போன்று கலவிக் கிடக்கும் பலவிஷயங்களைப் பன்னூல் ஓதிப் பயனொருங்கு அறிதல் கூடாமையால் அவற்றை எளிதில் உணரவும், ஒவ்வொரு விஷயத்தையும் குறித்துச் சிறந்த பல நூலாசிரியர் கருத்தையும் ஒருங்கே அறிந்து கொள்ளவும்....... முயன்று அதற்கு வேண்டிய நூல்களை ஆராய்ச்சி செய்தேன்”

இந்நூலானது தமிழில் உள்ள 1,33,961 செய்யுட்களில் இருந்து ஆராய்ந்து தொகுக்கப்பட்ட 2132 செய்யுட்களை உடையது.

முதல் பதிப்பு 1898 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 2ஆம் பதிப்பு 1906ல் வந்தது. 3 ஆம் பதிப்பு தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவராயிருந்த ஆண்டிபட்டி ஜமீந்தார் சா.ராம.மு.சித.பெத்தாச்சி செட்டியார் பொருளுதவியோடு சங்க வெளியீடாக வந்தது. 4ஆம் பதிப்பு 1931ல் சங்க வெளியீடாக அச்சானது.

“.......சென்னை சருவகலாசங்கத்தாரும் (பல்கலைக்கழகம்) இதனை நன்கு மதித்துப் பல வருடங்கள் தொடர்பாகப் பிரவேச பண்டித வகுப்புக்கும், பிரதம கலாசாலை வகுப்புக்கும் பயிற்றற்குரிய தமிழ்ப்பாடங்களை இதிலிருந்து தெரிந்தெடுத்துக் கொண்டனர். அவற்றுட் கல்வியதிகாரம் என்னும் ஒருபகுதிக்குத் தேவரவர்களால் ஓர் அரிய விரிவுரையும் எழுதப் பெற்றது” என்பார் செந்தமிழ்ப் பத்திரிக்கை ஆசிரியர் திரு.நாராயணையங்கார்.

முதல் பதிப்பில் 1647 செய்யுட்கள் இருந்தன. தேவர் கூடுதலாக 51 நூல்களில் இருந்து தொகுத்த 485 செய்யுட்களைச் சேர்த்து 2132 செய்யுட்கள் உடையதாக 2 ஆம் பதிப்பினை வெளியிட்டார்.

பெத்தாச்சி செட்டியார் உதவியுடன் வெளிவந்த 3 ஆம் பதிப்பில் ’இன்பச்சிறப்பு’ எனும் அதிகாரம் நீக்கப்பட்டு 2072 பாடல்களே பதிப்பிக்கப்பட்டன.

4 ஆம் பதிப்பில் முன்னமே நீக்கப்பட்ட ‘இன்பச்சிறப்பு’ அதிகாரம் சேர்க்கப்பட்டு பழையபடி 2132 பாடல்களோடு ‘பன்னூல் திரட்டு’ அச்சிடப்பட்டது.

இந்த நூலைத் தொகுப்பதற்கு தேவருக்கு 1 ½ வருடங்கள் ஆகியுள்ளன. பின்னும் ராமநாதபுரத்திலேயே அச்சிடுவதற்காக 8 மாதங்கள் தாமதம் ஆகியுள்ளது. ஆக முதல்பதிப்பு தொகுத்து அச்சிடுவதற்கு தேவர் 2 வருடகாலம் எடுத்துக்கொண்டார்.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்  Empty Re: பன்னூல் திரட்டு தந்த பாண்டித்துரைத் தேவர்-நெல்லைச்சொக்கர்

Post by இறையன் Thu Dec 15, 2011 2:08 pm

பன்னூல் திரட்டு ‘கடவுள் வாழ்த்து’ முதலாக ‘கற்பனை’ ஈறாக 54 அதிகாரங்கள் உடையது. இவ்வதிகாரங்களில் பெரும்பாலன திருக்குறள், நாலடியார் போன்ற நீதிநூல்களில் உள்ளன போல வழக்கமானவையே. கடவுள் வாழ்த்து, பெரியோர் இயல்பு, கல்வி, மானம், அறம், இல்லறம் போன்ற வழக்கமான அதிகாரங்களுக்கிடையே பெற்றோர்ப் பேணல், மனம், அடைந்தோர்ப் புரத்தல், காமக்கேடு, செல்வச்செருக்கு, அருமை, கற்பனை ஆகிய புதிய தலைப்பிலான அதிகாரங்களையும் தேவர் வைத்துள்ளார்.


தேவர் தமது காலத்தில் கிடைத்த நூல்களைப் பயன்படுத்தியுள்ளார். அவர் காலத்தில் சங்க இலக்கியங்களுள் புறநானூறு தவிர பிற அச்சாகாமையால் அவற்றிலிருந்து பாடல்களை நாம் காண இயலாது. எனவே பெரும்பான்மையும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களிலிருந்தும் தலபுராணங்களிலிருந்தும் அரிய பாடல்களைத் தொகுத்துள்ளார்.

புராணங்களில் கந்தபுராணம், விநாயக புராணம், சேது புராணம்,
காஞ்சிப் புராணம், கூர்ம புராணம், காசிகண்டம், காசி ரகசியம், திருக்குற்றாலப் புராணம், திருப்பரங்கிரிப் புராணம், பேரூர்ப் புராணம், திருக்கூவப் புராணம், சீகாளத்திப் புராணம், பிரமோத்தர காண்டம், உபதேச காண்டம், இலிங்க புராணம், தணிகைப் புராணம், செவ்வந்திப் புராணம், திருவிளையாடற் புராணம், திருக்குடந்தைப் புராணம், கருவூர்ப் புராணம், திருப்பெருந்துறைப் புராணம், திருவாப்பனூர்ப் புராணம், பாகவதம், மாயூரப் புராணம், திருக்கழுக்குன்ற புராணம், உறையூர்ப் புராணம், திருப்பூவணப் புராணம் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.

கம்ப ராமாயணம், பெருந்தேவனார் பாரதம், வில்லிபாரதம், நளவெண்பா, நைடதம் ஆகிய இதிகாசங்களிலிருந்து தொகுத்துள்ளார்.

சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, யசோதர காவியம் ஆகிய காப்பியங்களிலிருந்தும்,

மேருமந்தர புராணம், சாந்தி புராணம் ஆகிய சமண புராணங்களிலிருந்தும் பாடல்களை எடுத்துள்ளார்.

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் பெரும்பாலானவற்றிலிருந்து செய்யுட்களைத் தொகுத்துள்ளார்.

தத்துவ நூல்களில் சூதசங்கிதை, பிரபோத சந்திரோதயம், ஞானவாசிட்டம், ஒழிவிலொடுக்கம், பகவற்கீதை, சிவதருமோத்தரம், ஞானாமிர்தம், பதிபசுபாச விளக்கம், சிவஞான தீபம், வைராக்கிய சதகம் ஆகிய நூல்களில் இருந்து எடுத்தாண்டுள்ளார்.

திருமுறைகளில் அப்பர் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து தொகுத்துள்ளார்.

துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த பெருந்திரட்டு, குறுந்திரட்டு தொகுப்புகளிலிருந்தும் பிரபு லிங்க லீலையிலிருந்தும் பல பாடல்களைப் பயன்படுத்தியுள்ளார்.

இது போக, அரிச்சந்திர புராணம், சிதம்பர மும்மணிக்கோவை, நாரத சரிதை, பெரும் பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பா மாலை, தாயுமானவர் பாடல்கள், ஸ்ரீ சிவஞான சுவாமிகளின் சோமேசர் முதுமொழி வெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், குளத்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகியவற்றின் செய்யுட்களையும் தொகுத்துத் தந்துள்ளார்.

தனிப்பாடல்களிலிருந்தும் பல பாடல்களை இந்நூலில் தந்துள்ளார்.

தனி நபர் ஒருவர் இத்துணை நூல்களிலும் பயிற்சி பெற்றிருத்தல் என்பது இன்று நம்மால் நினைத்துக்கூட பார்க்க இயலாத அருஞ்செயலாகும்.

2009 ஜனவரி, சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் சில நூல்களை வாங்கினேன். காவ்யா பதிப்பகக் கடைக்குச் சென்றபோது ‘பாண்டித்துரைத் தேவரின் சங்கத் தமிழ்க் களஞ்சியம்’ எனும் தலைப்பில் ஒரு நூலைக் கண்டேன். புறத்தோற்றத்தில் அந்நூல் மிகச் சிறப்பாக காட்சி தந்து கொண்டிருந்தது. நூலின் பின்புறம் ‘இதில் தேவரின் சங்கத் தமிழ்த் தொண்டையும் பன்னூல் திரட்டையும் காணலாம்’ என்ற குறிப்பு இருந்தது. யோசிக்காமல் வாங்கிவிட்டேன்.

நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட வள்ளல் தொகுத்த ’பன்னூல் திரட்டு’ எனும் அரிய நூலை 78 வருடங்களுக்குப் பிறகு மீளவும் அச்சேற்றி உலாவரச் செய்த காவ்யா பதிப்பகத்திற்குத் தமிழ்கூறு நல்லுலகம் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் இத்தகைய அரிய நூலை வெளிக்கொணரும்போது ஏனோதானோவென்று வெளியிடுவது வருந்தத் தக்கது.

தேவரின் வரலாற்றில் ஒழுங்கின்மை, பக்கந்தோறும் பிழைகள், சொன்னவற்றையே திரும்பச் சொல்லல், பாராக்களில் பல வரிகள் விடுபட்டிருப்பது, பன்னூல் திரட்டில் பயன்படுத்தப்பட்ட நூல்களின் அகராதி இன்மை, செய்யுள் முதற்குறிப்பு அகராதி இன்மை எனப் பல குறைபாடுகள் இந்நூல் முழுதும் காணப்படுகின்றன.

இவர்கள் அச்சிட்ட பன்னூல் திரட்டு, 3 ஆம் பதிப்பினை அனுசரித்து வெளிவந்துள்ளது. காவ்யாவின் பன்னூல் திரட்டில் இன்பச் சிறப்பு அதிகாரம் இல்லை. இந்தத் தகவலும் பன்னூல் திரட்டு பற்றிய கட்டுரையில் கொடுக்கப்படவில்லை.

ஞானவாசிட்டம் ஞானவாசீட்டமாகவும், சிறுபஞ்ச மூலம் சிறுபஞ்ச ழலமாகவும், சோமேசர் முதுமொழி வெண்பா சோமேசர் ழதுமொழி வெண்பாவாகவும், மேருமந்தர புராணம் மேருமந்தா புராணமாகவும், யசோதர காவியம் யசோதா காவியமாகவும், சூத சங்கிதை சூத சங்கீதையாகவும், ஞானாமிர்தம் ஞானாமீர்தமாகவும், தத்துவரத்நாவளி தத்துவாத்நாவளியாகவும் அச்சாகியுள்ளன. இவை வாசிப்பவருக்கு எரிச்சலைத் தரும்.

இன்றைய காலத்தில் பதிப்புலகில் பல சிக்கல்கள் உண்டுதான். அதற்காக ஒரு நூலை – அதுவும் தமிழுக்காகவே உழைத்தவரின் நூலை – அச்சுப் பிழையும் ஒழுங்கின்மையும் மலிந்ததாக வெளியிடுவது எவ்வகையில் நியாயம்?

பன்னூல் திரட்டுக்குத் தேவர் இரண்டு முகவுரைகள் எழுதியுள்ளார். இவ்விரண்டையும் கலந்து முதற்பதிப்பு முகவுரையாக காவ்யா தந்துள்ளது. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்நூல் எவ்வகையில் பயன்படும்?

அச்சிடுதல் ஆரம்ப கட்டத்திலிருந்த போதே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ.வே.சா. போன்றோர் பிழைகளற்ற உயர்தரப் பதிப்புக்களை நமக்களித்துள்ளனர். அதனால்தான் இன்று வரையிலும் அவர்களது பதிப்புகள் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படும் உன்னத நிலையில் இருக்கின்றன.

தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்பட்ட பின்பு அச்சிடுதலில் அவசரம்தான் கூடியிருக்கின்றதே தவிர அக்கறை காணாமல் போய்விட்டது.

மொத்தத்தில் காவ்யாவின் பதிப்பு பற்றி அதிகமாகக் கூற ஒன்றுமில்லை. அப்பதிப்பில் பக்கம் 72ல் உள்ளபடி,

“தேவர் பிழைகளற்ற தமிழையே பெரிதும் விரும்பினார். பிழை மலிந்த நூற்பதிப்புக்களைப் பெரிதும் வெறுத்தார். தமிழ்ச் சங்க வெளியீடுகள் செம்பதிப்புகளாக வெளிவந்தன”

எனும் வார்த்தைகளை மனத்தில் இருத்தினால் நன்று.
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum