தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஒரு தேவஅணங்கின் நினைவுகள் பத்மா சச்தேவ் - தமிழில் சா. தேவதாஸ்

Go down

ஒரு தேவஅணங்கின் நினைவுகள் பத்மா சச்தேவ் - தமிழில் சா. தேவதாஸ் Empty ஒரு தேவஅணங்கின் நினைவுகள் பத்மா சச்தேவ் - தமிழில் சா. தேவதாஸ்

Post by இறையன் Tue Feb 28, 2012 9:51 pm

டோக்ரி மொழியின் முதலாவது கவிஞரான பத்மா சச்தேவ் (பி.1940-) புகழ்பெற்ற உருது எழுத்தாளரான இஸ்மத் சுக்தாய் குறித்த தன் நினைவுகளை, நீண்ட கால நட்பின் அடிப்படையில், பதிவு செய்திருக்கிறார். இக்குறிப்புகளில் சாகித்ய அக்காதெமி பரிசும் பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ள பத்மா, இந்தியிலும் இரு நூல்கள் எழுதியுள்ளார். வானொலி நிலையப் பணியாளராக விளங்கிய அவர், சிறந்த உரைநடை எழுத்தாளரும் கூட.
Indian Literature May - June 2006 - இதழிலிருந்து . . .

மும்பையை ஒரு 'குட்டி இந்தியா' என்றழைப்பது மிகைப்படுத்தலாயிருக்காது. ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இங்கு வரும் மக்கள், அங்கே தங்கி, தமக்கென்ற ஒரு நகரினை மறுபடைப்பு செய்து கொள்கிறார்கள். உத்தரபிரதேசத்திலிருந்து வரும் பையாக்களின் இனிய சைக்கிள் மணி, விடிவதற்கு முன்னமேயே பாலின் வருகையை அறிவிக்கின்றது. சௌபாத்தியிலும் ஜøஹிவிலும் பசும் இளநீர்க்காய்கள் நீண்ட அரிவாள்களால் வெட்டி நாசூக்காகத் தரப்படுகின்றன. சிதாராதேவியின் சொந்த ஊரான பனாரûஸச் சேர்ந்த பீடாவியாபாரிகள், இமாசலபிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிடர் - மருத்துவர்கள் லக்னோ, அலிகார், பண்டிட் சிவ் குமார் சர்மா, உஸ்தாத் அல்லாரகா கான், தம்மொழியை விடாப்பிடியாகப் பற்றிக் கொண்டிருக்கும் சிந்திகள், குஜராத்தியர், பார்ஸிகள், இந்துக்கள் முஸல்மான்கள், ஜோதியின் சீக்கீயர் என எல்லோரும் மும்பையைத் தமதென்று கருதுகின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் இந்நகரின் எங்கோ ஓரிடத்தில் தமக்கென வெளியை ஏற்படுத்திக் கொண்டு, அதேவேளையில் தம் பழைய வாழ்க்கை முறையினையும் மரபினையும் உயிர்ப்புடன் பாதுகாத்துக் கொண்டுள்ளனர். நகரின் ஒரு மூலையில் எழுத்தாளர்களுக்கென விளக்கொன்று எரிகின்றது - அங்கே அவர்கள் தவறாது கூடி, கடந்த காலத்தினை உயிர்ப்பிக்கின்றனர். இஸ்மத் சுக்தாய் இக்கூட்டத்தின் மைய அச்சாக இருந்தார். 'இருந்தார்' என்று உச்சரிப்பது கூரிய கத்தியால் இருதயத்தைக் குத்துவது போன்றதாகும். இத்தகு ஆளுமைகள் ஒருபோதும் மடிந்து போவதில்லை. அவர்கள் ஆயுள் பரியந்தம் நம்முடனே தங்கி விடுகின்றனர்.

ராஜ்பேடி அண்ணன் குரு மற்றும் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான மிட்டெர் பேடியும், அண்ணன் மாரே. டாக்டர் தரம்வீர் பாரதி, கமலேஸ்வர், மோகன் ராகேஷ், சரத் ஜோதி, கிரிதாரி வைத் (அ) இஸ்மத் அக்கா என யாராயிருந்தாலும் மும்பையில் பல எழுத்தாளர்களுக்கு இரண்டாவது இல்லமாக இருந்தது ராஜ்பேடியின் இல்லமே. அக்காவின் அடுக்குமாடிக் குடியிருப்பு, ராஜ் பேடியின் வீட்டுக்கு அருகாமையில் Marine Driveஇன் A Road (Induscourt)இன் முதல்தளத்தில் இருந்தது. ராஜம் அக்கா பாசத்துடன் உஜ்லா என்று அழைத்த அவரது மனைவி உஜ்வாலாவும் எப்போதும் தம் இல்லக் கதவை நண்பர்களுக்காகத் திறந்து வைத்திருந்தனர். நாங்கள் மும்பைக்குப் புதிதென்றபோதிலும் தன் மகளின் திருமணத்திற்காக ராஜ்பேடி எங்களை அழைத்தார் - அது டாக்டர் பாரதிக்காக இருக்கக்கூடும். மும்பையின் திருமண கொண்டாட்டங்கள், வீட்டினை விடவும் ஓட்டல்களில்தான் ஏற்பாடு செய்யப்படும்.

ஓட்டல்கள் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்ளும். ஒருவர் நிகழ்வில் கலந்துகொண்டு, மணப்பெண்ணுடன் திரும்ப வேண்டும், அவ்வளவுதான். ஆனால் ராஜ்பேடி தன் இல்லத்தில் ஏற்பாடு செய்தார். புஷ்பா பாரதியின் வற்புறுத்தலால் வேர்த்து விறுவிறுக்க நான் டோலக்கை வாசித்தேன். பேடி சாஹிப் பெரிதும் சந்தோஷப்பட்டார். தன் மகளின் திருமண வைபவத்திற்கு டோலக்குடன் கூடிய திருமணப்பாடல்கள் இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை. டோலக் அதன் உச்சத்தில் அதிர்ந்தபோது, விளக்குகள் அணைந்து விட்டன - பம்பாயில் அது அரிதானது, அம்மின்னல் கானங்களின் இருளில் இரு விஷயங்கள் துலங்கித் தெரிந்தன - அக்காவின் தலையிலிருந்த நரை முடிக் கிரீடம் மற்றும் தனது மூக்குத்திக் கல், விளக்குகள் எரியத் தொடங்கியதும் ஒவ்வொருவர் முகத்திலும் என்னால் புன்னகையினைக் காண முடிந்ததை ஒவ்வொருவரும் கவனித்திருக்க வேண்டும்.

எங்கள் முதல் சந்திப்பு இத்தகைய வெளிச்சத்தில் நடந்தது. அன்பு, நேசம், பாசம் நிறைந்த புன்னகையை அவர் வெளிப்படுத்தினார். 'நீண்ட நாட்களாக எங்கே போயிருந்தாய்?' என்று விருந்தின்போது வினவினார். 'இங்கேதான் இருந்தேன்' என்றேன், நாங்கள் தோழிகளானோம். அதிலிருந்து, எங்கே நாங்கள் சந்தித்தாலும், ஆண்டுக்கணக்கில் நாங்கள் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என, எங்கள் விழிகளில் அசைந்த அன்பிலிருந்து தோன்றிற்று. தன் ஆயுள் முழுவதும் தன்னுடனிருந்த ஒரு தோழியிடம் பேசுவது போல் என்னுடன் அவர் பேசுவது வழக்கம். அவரைச் சந்திக்கும் யாரும், குழந்தைப் பருவத்திலிருந்து தம்மை அறிந்து கொண்டிருப்பது போன்று உணருவார்கள் என்பது அவரின் இளம் பருவத்திலிருந்து தம்மை அறிந்து கொண்டிருப்பது போன்று உணருவார்கள் என்பது அவரின் பெருமையே. ஒரே நேரத்தில் குழந்தைகளுடன் குழந்தையாகி விடுவார் மற்றும் சமவயதினருக்கும் மூத்தவர்களுக்கும் தோழியாகி விடுவார். அவரைப் போன்ற தோழி அபூர்வம், அதுவும் அதிருஷ்ட சாலிகளாகிய சிலராலேயே பெற முடியும்.

அது 1973-74இல் எனது ஒரு மணிநேரப் பேச்சுக்கும் மும்பையின் உருது கவிஞர்களின் கவிப் பொழிவுக்கும் லண்டனின் (பிபிசி) ஏற்பாடு செய்திருந்தது. ஜனாப் அலி சர்தார் ஜாஃப்ரி, அக்தாருல் இமான், ரஜீந்தர் சிங் பேடி, ஜி.ஏ. அன்சாரி, மஜ்ரூ சுல்தான்புரி, குர்துல்ஆன் ஹைதர், வாஜ்டா டபாஹீம் மற்றும் இஸ்மத் அக்கா இக்கவியரங்கில் கலந்து கொண்டனர். அக்காவை அழைத்து வர அவரது வீட்டுக்கு நானே சென்றேன். என் அடுக்குமாடிக் குடியிருப்பின் அழைப்பு மணியை அழுத்தியதும், என் கணவர் பதிலளித்தார். எட்டிப் பார்த்த அக்கா, குடியிருப்பை வெளியிலிருந்து உற்று நோக்கினார். "அக்கா, இவர் என் கணவர்" என்று நான் அறிமுகப்படுத்தியதும், "இக்குடியிருப்பு யாருடையது?" என்று வினவினார். "அவருடையது" என நான் கூறினேன்.

என் கணவர் மீது பார்வையைச் செலுத்திவிட்டு, "இது அடுக்கு மாடிக் குடியிருப்புப் பற்றியதெனில், மோசமில்லை" என்றார் விஷமத்துடன். இந்த வார்த்தைகள் குடியிருப்பினுள்ளே சென்றுசேர்ந்த கணமே, அறை சிரிப்பினால் அதிர்ந்தது. தன் வருகையை அவர் இப்படித்தான் அறிவித்தார். அவ்வேளையில் விவாதம், சுவையான வாதப் பிரதிவாதத்தால். பையிலிருந்து ஒரு புட்டியை எடுத்தார். அப்போது என் கணவர் குடிக்காதவராக இருந்தார். அன்றிரவு சூடான பகோடா தட்டுகள் எண்ணிக்கையின்றி காலியாகின. ஒரு தட்டு காலியானதும் என் கணவரிடம் " உங்களால் இங்கே எப்படி இருக்க முடிகிறது?" என்றார். " ஜீ. இங்கே இருக்கிறேன். நான் என்ன செய்யக் கூடுமென்று தயவுசெய்து கூறுங்கள்?" என்று பதிலளித்தார் என் கணவர். அப்போது ஒன்றுமறியாதவராக அக்கா வினவினார், "அப்படியானால் இப்பகோடாக்களைப் பொரித்தெடுப்பது யார்?" இப்போது சிரிப்பு உரத்து விடவே, பக்கோடா பொரித்துக் கொண்டிருந்த பாபி, மாவுக் கைகளுடன் வெளிவந்து, பக்கோடாவில் ஏதேனும் கோளாறா என்று கேட்க வந்துவிட்டார்.

"பத்மா, எழுத்தாளர்களைச் சந்திக்க வைப்பது உயிருள்ள தவளைகளைத் தராசில் நிறுப்பதுபோல. உன்னால் எப்படி முடிகிறது?" என்று என்னைக் கேட்டார் பேடி. சாஹிப், இஸ்மத் சுக்தாய் சந்தர்ப்பத்தை விட்டுவிடக் கூடிய நபரில்லை. "நீங்கள் ஒரு தவளை என்றெண்ணுகிறீர்களா?" என்றார். இதுதான் அக்கா என் வீட்டுக்கு வந்த முதல் தடவை ஆகும். இதன்பின்னர் நாங்கள் கிஷன்ஜியின் வீட்டிலும் சர்தார் பாயின் வீட்டிலும் பிற இடங்களிலும் சீராகச் சந்திக்கலானோம்.

அந்நாட்களில் நான் டாக்டர் பாரதியின் ஆலோசனைப்படி உரைநடை எழுதத் தொடங்கியிருந்தேன். புஷ்பா பாரதி சிறுகதைகள் எழுத உத்வேகமளித்தார். கதைகள் எழுதுமுன்னரே அவை பற்றி விவாதிக்கத் தொடங்குமளவுக்கு அக்கா என் தன்னம்பிக்கையை வளர்த்துவிட்டார். நானொரு ஸ்தாபிதமாகிவிட்ட எழுத்தாளர் போல என்னுடன் அவர் பேசுவதுண்டு. "மண்டோ, கிஷன் சந்தர், பேடி ஆகியோரை அவர்தாம் உச்சங்களில் கண்டிருந்த இச்சீமாட்டி, என்னைப் பரிகாசம் பண்ணவேண்டும்" என்று நான் பிற்பாடு எண்ணுவதுண்டு. எனினும் நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கினனேன். ஒரு நாள் என் குடியிருப்பில் அவரிருந்தபோது, ஒரு கதையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரங்கழித்து கதாநாயகியின் மொழியில் "அக்கா! என்வீட்டின் பின்னுள்ள குன்றின் மீது அவனது குதிரை நிற்பதுண்டு. தொலைவிலிருந்து கூட அவன் கண்களிலிருந்த காதலின் கதகதப்பை என்னால் உணரமுடிந்தது. அவன் அக்கிராமத்தைச் சேர்ந்த லால்கான், நானோ ஏழை மௌல்வியின் மனைவியான நூர்" எனப் பேசத் தொடங்கிவிட்டேன்.

அவர் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். இதற்கிடையே என் மூன்று வயதுப் பெண் கோபத்துடன் அறையிலிருந்து வெளியேறினாள். இசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக என் கணவர் ஏற்கனவே கிளம்பியிருந்தார். அது ஜனவரி அவர் திரும்பும்போது காண்பிப்பதற்காக வாழ்த்து அட்டைகள் கொண்ட கட்டு ஒன்றினை வைத்திருந்தேன். அவர் திரும்பியதும் வாழ்த்தட்டைகளுடன் அவரிடம் சென்ற என் மகள், அம்மாவுக்கு ஆண்சிநேகிதர் ஒருத்தர் இருக்கிறார். அவரே அக்காவிடம் இதனைக் கூறினார். அவர் ஏராளமான வாழ்த்தட்டைகள் அனுப்பியிருப்பதைப் பாருங்கள்" என்றாள். அவரின் சிரிப்பைக் கேட்டதும் நான் சங்கீத அறைக்குப் போய் விட்டேன். என்னைப் பார்த்த என் மகள் வெறுப்புடன் வெளியேறினாள். "உன் ஆண் சிநேகிதருள் ஒருவர் இவ்வாழ்த்தட்டைகளை அனுப்பியுள்ளதாக பெண் கூறிக் கொண்டிருந்தாள்." என்று அவர் மடிமீது இருத்தியபடி, "குட்டிச் சூனியக்காரியே! அம்மாவுக்கு ஆண் சிநேகிதன் இருக்கக் கூடாதா?" என்று கேட்டார். தர்மசங்கடத்திற்குள்ளான அவள் ஓடிப்போனாள். அக்கா என் மகளைப் பெரிதும் நேசித்தார். டெல்லியில் தான் இருக்க நேரும்பொழுதெல்லாம் அவளுடன் கதைப்பதும் மணிக்கணக்கில் சீட்டாடுவதுமாகவும் இருந்தார்.

அக்கா பெரிதும் தன் வீட்டிலேயே இருந்தார். மடிப்புகளுக்கு ஊசி குத்தி, ஒரு சேலையை அவர் எப்போதும் தயாராய் வைத்திருப்பதுண்டு. வெளியாரைச் சந்திக்கும் பொருட்டு அதனை அணிந்து கொண்டார். அவரது கீர்த்தி மிகு வெற்றிலைச் செல்லம், இந்திய மற்றும் வெளிநாட்டுப் பத்திரிகைகள், செய்தித்தாள்கள். புத்தகங்கள், நிறைவு பெறாத அவரது கதைகளின் பக்கங்கள், பாக்கு மற்றும் "கிமாம்" கொண்ட பாக்கெட்டுகள், சிகரெட், லைட்டர், வாசனைத்திரவியங்கள், கடிதங்கள், சீட்டுக்கட்டுகள்ஆகியன அவரது கட்டிலைச் சுற்றி சிதறிக கிடக்கும். ஹபீபுடன் கவனமாக சீட்டாடிக் கொண்டிருப்பார். ஹபிப் அவரது வயதான வேலையாள் - அவரது கட்டிலருகே ஒரு ஸ்டூலில் அமர்வதுண்டு. அக்கா வெற்றிலை ஒன்றினை மடித்து, அலிகாரிலிருந்து விசேடமாகத் தருவிக்கப்பட்ட கிமாமில் தோய்த்து, வாயில் போட்டுக் கொள்வார்.

ஹபியைப் செல்லமாய் திட்டிவிட்டு சீட்டாட்டத்தைத் தொடருவார். வாயில் உள்ள பீடாவைக் கவனமாய் குதப்பியபடி, ஹராம்ஜேட்! இத்தடவை நீ ஜெயித்தால் விளைவுகளை கவனத்தில் வைத்துக்கொள்" என்பார். ஹபீப் புன்னகைப்பதுடன் சரி. பின்னர் அவனை நேசத்துடன் நோக்கி " உனக்கு ஒரு பீடா வேண்டுமா?" என்பார். சமயங்களில் அவரே ஒரு பீடாவைத் தயாரித்து சிறிது கிமாமில் தோய்த்து எனக்குத் தருவதுண்டு. அக்கா, நானொரு சர்தார்ணி. குருஜி எரிச்சலடையப் போகிறார்." என்பேன். அவர் சிரித்து விடுவார். உன்னைக் கவனிப்பது தவிர்த்து அவருக்கு வேறு வேலை ஏதேனும் கிடையாதா? ஒரு முறை பீடாவில் கிமாம் சற்றுக் கூடுதலாகி விட்டது. புகையிலையால் என் விழிகள் பிதுங்கிவிட்டன. முகத்தைக் கழுவிக் கொண்டு குளியலறையிலிருந்து நான் வந்ததும் "பிராமணனின் மகளாகிய உன்னால் கிமாமை செரித்துக் கொள்ள முடியவில்லை. சர்தார்ணியாக இருந்திருந்தால் இதனை நீ சீரகம் போல் தின்றிருப்பாய். இப்போது கவனி என் செல்லமே. நீ கிமாம் உட்கொண்டிருப்பதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று நான் சர்தாரிடம் கூறவேண்டியுள்ளது."என்றார். அப்புறம் ஒரு கண்சிமிட்டலுடன் குறிப்பிட்டார். "அப்போது நீ என்னுடன் தங்கி விடலாம். ஆனால் சர்தாரும் வேண்டப்பட்ட ஒரு நபரே."

அவர் வீட்டில் ஒரு பூனை இருந்தது. ஒரு முனகலைக் கேட்டு, "இந்தச் சத்தம் போடுவது எது?"என்று வினவினேன். "சொல்வது சிரமம். தனக்குப் பொருத்தமாக இருக்கக் கூடியதை தேர்ந்தெடுக்க அது ஓர் ஏற்பாடு செய்திருக்கும். சாளரங்கள் உள்ளிட்ட எல்லா வழிகளையும் மூடியிருக்கிறேன். அதன் எண்ணற்ற குட்டிகளது பளுவைத் தாங்கப் போவது யார்?" என்றார். சில நாட்கள் கழித்து ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. "அது யாருடைய பூனையென்று எனக்கெப்படித் தெரியும்? இந்த விவகாரங்களில் என்னை ஏன் இழுக்கிறீர்கள்? நான்கு ஆண் பூனைக் குட்டிகளை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?" என்றார். அக்காவின் எச்சரிக்கை மிக்க கவனிப்பு இருந்தும், பூனைக் கருத்தரிக்குமாறு நேர்ந்து விட்டது. அக்கா அதனை அறியவந்ததுமே, தன் நண்பர்களில் ஒருவர் மூலம் பூனையை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டார். இதன் பின்புலம் அறியாத நண்பர் மருத்துவமனையில் அக்காவின் தொலைபேசி எண்ணைத் தந்தார். ரூ. 700- கோரிய மருத்துவமனை, குட்டிகளை கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டது. மருத்துவமனை அலுவலர்கள் தன்னைச் சந்தேகிக்காதது குறித்து திருப்தியுற்றார்.

பெரும்பாலும் அவர்தான் சேலையை கட்டிலில் வைத்துவிட்டு, லுங்கியில் இருப்பார். ஒரு நாள் அழைப்பு மணிக்குப் பதில் தெரிவித்த ஹபீப், அக்காவிடம் "தயவுசெய்து சேலை கட்டிக் கொள்ளுங்கள், உங்களைப் பார்க்க யாரோ ஒருவர் வந்து கொண்டிருக்கிறார்." என்றான். அவசர கோலத்தில் சேலையைச் சுற்றிக் கொண்ட அக்கா, உயரமான இளைஞன் ஒருவன் வரக் கண்டார். சட்டென்று சேலையை உதறி யெறிந்து விட்டு " முட்டாள்! இது என் மருமகன்" என்று குறிப்பிட்டார். ஹபீப் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். "நான் கண்டு கொள்ளமுடியாதபடிக்கு துரிதமாய் வளர்ந்திருக்கிறார்."

அந்நாட்களில் சபீர் தத், எழுத்தாளர்கள் குறித்துச் சிறப்பிதழ்கள் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஜான் நிஸôர் அக்தார், சாஹிர் லூதியான்வி, கிஷன் சந்தர் மற்றும் பேடி சாஹிப் ஆகியோர் தம் சிறப்பிதழ்கள் வெளியானதும் இறந்து விட்டனர் (அ) வெளிவரும் முன்பே இறந்து விட்டனர் என்பது தற்செயலானது என்று கூறமுடியும். உயிர் பிழைத்திருந்த மற்ற பலருக்கும் அவர் சிறப்பிதழ்கள் கொண்டு வரவே செய்தார். அவர் அக்காவிடம், "அக்கா, உங்களைக் குறித்து சிறப்பிதழ் ஒன்று கொண்டுவர விரும்புகிறேன். ஏற்கனவே இன்னின்னபடி சிறப்பிதழ்கள் வெளியாகி உள்ளன" என்றார். "இந்தச் சிறப்பிதழில் என்ன வரப்போகிறது?" என்று அக்கா கேட்டதற்கு சபீர் விளக்க முற்பட்டார்.

சட்டென்று அக்கா கூறினார். " நான் வருந்துகிறேன். என்னை விட்டு விடுங்கள் நீங்கள் சிறப்பிதழ் வெளியிட்டுள்ள ஒவ்வொருவரும் இறந்து போயுள்ளனர். நான் அவ்வளவு சீக்கிரம் இறக்க விரும்பவில்லை." சபீர் பொறுத்துக் கொள்ள வேண்டிய வகையில் விளக்கினார் - "அவரைப் பற்றிப் பேசவேண்டாம். அவர் ஒரு வெட்கங்கெட்ட இந்து. அவர் சாகப்போவதில்லை. நான் பக்தி நிறைந்த முஸ்லிம் பெண். நான் சட்டென்று இறந்து விடுவேன். நான் செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது. தயவு செய்து என்னை விட்டு விடவும்." அக்கா ஒவ்வொருவரையும் மனித உயிராகக் கருதினாரே ஒழிய இந்து - முஸ்லிம் என்று பார்க்கவில்லை என்பதை, அக்காவைப் பற்றி நன்கறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.

ஒரு நாள் அக்காவிடம் வந்த மௌல்வி ஒருவரிடம், ஏற்கனவே தந்திருந்த ஒரு புத்தகம் பற்றி இப்படிக் கூறினார். " மௌல்வி சாஹிப், என்னால் இன்னும் படிக்க முடியவில்லை." இன்னொரு கவியரங்கத்தின் போது அவர் மீண்டும் சந்தித்தார். அப்போது அக்கா குறிப்பிட்டது "மௌல்வி சாஹிப், நான் படித்து விட்டேன், இந்துவாக மாறிக் கொண்டிருப்பதாக உணருகிறேன்." அப்புத்தகம் (குரான் ஷெரீபின்) விளக்கம் கொண்டது கையெழுத்துப் படிகளைப் பெற்றுச் செல்ல அவராக வராத போது சபீர் தத் மூலம் கொடுத்தனுப்பினேன்" . ஆனால் அதன் பின்னரும் அவர்களுடன் இணக்கமான உறவைப் பேணினார்.

ஒருமுறை ஒருவர் அக்காவிடம் வேண்டிக் கொண்டார், தயவுசெய்து உறுதி கொடுத்து விடுங்கள். மரகதக் கண்கள் பளிச்சிட அக்கா பதிலளித்தார் - "எதற்கு? கண்களை நான் இங்கே விட்டுச் சென்றால், அங்கே போனபின் அல்லாவைப் பார்ப்பது எப்படி? நான் என் கண்களைத் தானமளிக்கப் போவதில்லை. அல்லா எரிச்சலடைவார்."

ஒரு மாலைப்பொழுதில் சர்தார்ஜி, அக்காவிடம், "பத்மா சரியில்லை. நாங்கள் மணவிலக்குப் பெறப் போகிறோம்" என்றார். அவருடன் பானங்கள் அருந்திய பின்னரும் அவரது விசுவாசம் என் பக்கமாயிருந்தது. அன்றிரவு அவரால் சரியாகத் தூங்க இயலவில்லை. காலையில் விசேசமாய் ஒரு பண்டம் தயாரித்துக் கொண்டிருந்தேன். அது அவருக்குப் பிடித்தமானதும் கூட. சமையலறைக்கு நேராக வந்த அவர், பூசணிக்காய்த் தோலை தூக்கி எறிந்து விட்டாயா?" என்றார். நான் " இல்லை" என்றதும், அதிலிருந்து ருசியான பண்டம் செய்யலாம் என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டுவிட்டு, பூசணிக்காய் தோலையும் விதைகளையும் óசேகரிப்பதையும் பறிப்பதுமாக இருந்தார்.

வெளியிலிருந்து கூப்பிட்ட சர்தார்ஜி, "பத்மா, என் கால்சாரய்கள் எங்கே?" என்றார். "இதோ வருகிறேன்" என்று கூறியதும் சமையலறையை விட்டு வெளியேறினேன். என்னுடன் வந்த அக்கா, "நீங்கள் மணவிலக்கு கோரினீர்கள்! உங்கள் கால்சராய்களைக் கூட தேடி முடியாத நீங்கள்? சபாஷ்! அப்படியொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் நிர்வாணமாய்த் திரிய நேரும்." என்றார். அவரைச் சமாதானம் செய்வதற்காக சர்தார்ஜி அவரைத் தழுவினார். அப்போதும் கூட அவர் குறிப்பிட்டார், "இம்மனிதரின் துணிச்சலைப் பார்! இவர் மணவிலக்கு கோரினார்!"

நான் மும்பையில் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். நான் போகும் வழியில் அக்காவின் வீடு. நான் போகும்போது (அ) திரும்பும்போது அடிக்கடி அங்கு செல்வதுண்டு. ஒரு நாள் அவரது குடியிருப்பிலிருந்து வானொலி நிலையத்திற்குச் சென்று கொண்டிருக்கையில், இரண்டு மூன்று ஜோடிக் கண்கள் இனம்புரியாத வகையில் என்னை உற்று நோக்கின. அக்குறுகுறுப்பான பார்வை குறித்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன்.

திரும்புகையில், குறுகுறுப்பின் காரணமாக அக்காவிடம் வினவினேன். "அதுவா, இன்றைக்கு அது வேடிக்கையாய் இருந்தது. உன்னைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்களை ஞாபகப்படுத்திக் கொள்! இப்பெண் இல்லை, ஆனால் நிச்சயமாக சீமாபோலவே தோன்றுகிறாள் என்று கூறிக்கொண்டிருந்தனர். "இப்போது என்னிடம் கண்டறிந்துள்ளதால் உண்மையைக் கூற அனுமதியுங்கள். அவள் என் நிஜமான மகளே, ஆனால் திருமணத்திற்கு முன் பிறந்தவள். ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். இப்போது அறியவந்துள்ள அவள், அவ்வப்போது என்னைப் பார்த்துச் செல்கிறாள். என்று அவர்களிடம் கூறினேன். இதனைக் கேட்ட பிறகு அவர்கள் தேநீர் அருந்தாமலேயே போய்விட்டனர். நாம் சிறிது தேநீர் பருகலாம்" என்றார்.

சிறிது நேரம் கழித்து தொடர்ந்தார். "நீ பெரிதும் சீமாவை ஒத்திருப்பதால் சிலவேளைகளில் நானும் குழம்பிப்போகிறேன். சீமா பிறந்தபோது நானும் சாஹித்தும் சேர்ந்து திரைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். சீமாவுக்காக ஓர் ஆயாவை ஏற்பாடு செய்தோம். ஒவ்வொரு மாலையிலும் அழுக்குத் துணிகள் குவிந்தன. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. கூரையின் இரு புறங்களிலும் இரு கயிறுகளைக் கட்டி துணி ஒன்றைத் தொங்க விட்டேன். ஒரு துணியைக் குழந்தையின் அடியில் போட்டு, அது அழுக்கானதும் இன்னொரு துணியைப் போடுவேன். மாலையில் அந்தத் துணி மட்டுமே சுத்தம் செய்ய வேண்டியதாக இருந்தது." இந்தக் கதைகளை கேள்விப்பட்ட அக்கா கதை போல எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். என் மாமியார் வந்தார். மாமியார் போன்றதொரு நிகழ்வுகளை ஒருபோதும் எண்ணிப் பார்த்திராத நான் பயத்தால் உறைந்து விட்டேன்.

ஆனாலும் என்ன செய்வது அவரை வணங்கி, அறைக்குள் வரவழைத்தேன். சாஹித் ஏற்கனவே கிளம்பியிருந்ததால், படப்பிடிப்புக்கு நான் போக வேண்டிய அவசரம் குறித்து விட்டு வந்தார். அவர் என் கீர்த்தியைக் கேள்விப்பட்டிருந்தனர். உன்னால் காலைச் சாப்பாட்டைச் செய்ய முடியுமா?" என்பதாயிருந்தது. "முடியும் ஆம்லெட்கள் மட்டும். நீங்கள் வந்துவிட்ட பின் நானெதற்கு கவலைப்பட வேண்டும்? இந்த வேலையாட்கள் நம்மைக் கொள்ளையடித்து விடுகிறார்கள். அம்மா சாஹித்திற்கு கெபப் என்றால் பிரியம். கெபபைப் பொறுத்த மட்டில் தன்தாயை யாரும் விஞ்சிட முடியாது என்று அடிக்கடி கூறுவார். வேலையாட்களைக் கறிவாங்கிவருமாறு கூறி, அவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் கற்றுக் கொடுத்து விடுங்கள்." தன் ஆயுளில் முதல் முறையாக சவாலுக்கு உள்ளான அவர், தன் பாணியை மாற்றிக் கொண்டார்.

"உன் மாமனார் முன் முகத்தில் பர்தாபோட்டுக் கொள்வதில்லை என்று கேள்விப்பட்டேனே" என்றார். "எனக்கு அவமானம்! ஏன் போடவேண்டும்? எனக்கு தருமசங்கடமாயிருக்கிறது" என்று பதிலளித்தேன். கிழவி இத்தகைய பதிலை எதிர்பார்க்கவே இல்லை. இருநூறு ரூபாயைத் தந்ததும், இதனை வைத்துக் கொள்ளுங்கள். கூறி தவிர சமையலறையில் வேறென்ன இல்லை என்று தெரியவில்லை" என்றேன். கிழவி இருநூறு ரூபாய்களைத் தன் பர்ஸில் கவனமாக வைத்துக் கொண்டு, இத்தகைய மருமகளிடம் எதனையும் எதிர்பார்ப்பது சரியல்ல என்று எண்ணிக் கொண்டவர்போல, அக்காவை ஒரு தினுசாகப் பார்த்தபடி சமையலறைக்கு விரைந்தார். விஷமமான புன்னகையுடன் அக்கா கூறினார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன் பணத்தைத் தந்துவிடுவேன். வகை வகையான பதார்த்தங்கள் தயாராகின. நண்பர்களைக் கூட அழைத்தோம். எங்கள் தந்திரங்களைக் கண்டு அவர் எரிந்து விழுவதுண்டு, என்றாலும் அவர் இருந்த மட்டிலும் சொர்க்கமாயிருந்தது.

அக்கா, அவரது பெற்றோருக்கு எஞ்சியிருக்கும் குழந்தைகளில் பத்தாவது ஆவார். "நான் பிறந்தபோது என் அம்மாவுக்கு குழந்தைகளிடமான ஆர்வம் இல்லாது போயிற்று. அவள் நிஜமாகவே என்னை வெறுத்தாள். என் சேட்டைகளுக்காக அவள் என்னை அடித்தபோது நான் ஓடவேண்டியதாயிருந்தது. என்னைப் பிடித்து தருவதற்காக என் சகோதரர்களுக்கு அவள் காசு தருவாள். "உங்களுக்குக் காசு கிடைக்கும் வகையில் சரணடைகிறேன். அப்புறம் ஓடிவிடுவேன். ஆனால் உங்களுக்குக் கிடைப்பதில் எனக்குப் பாதி வந்துவிட வேண்டும்." என்று என் சகோதரர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டேன். "மற்றவர்கள் நிறையச் சாகும்போது நீ ஏன் ஒளிய மாட்டேன் என்கிறாய், திருடி நீ என்று திட்டுவாள், ஒவ்வொரு இரண்டாவது ஆண்டும் என்தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள். இடையே இரண்டல்லது மூன்று குழந்தைகள் இறந்து விட்டன. கடைசியில் இந்தச் சோதனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெற்றிகண்டது ஒரு குரங்குதான். கருவுற்றிருந்த அம்மா, குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தை நெருங்கி இருந்தாள். முற்றத்தில் அமர்ந்து வயிற்றில் ஒரு தட்டைத் தாங்கிப் பிடித்தபடி, பயறு தின்று கொண்டிருந்தாள். பயிற்றின் மீதான ஆசையைக் கட்டுப்படுத்த முடியாத ஒரு குரங்கு, அவள் வயிற்றில் தாவிவிட்டது. கருக்குலைந்து போன அவளுக்கு அதன் பின்னர் பிள்ளை இல்லாது போயிற்று.

"என் தாய் என்னைத் தன் மடியில் வைத்துக் கொண்டதே கிடையாது. எனக்குப் பால்தர ஒரு பசு இருந்தது, என் அக்காதான் என்னைத் தூக்கிக் கொண்டு திரிந்தாள். எனக்கு நான்கு வயதே ஆகியிருந்த போது உயர்ந்து, ஒல்லியாயிருந்த. வத்தலும் தொத்தலுமான நான் ஒரு மாலையை பிய்த்துக் கொண்டிருந்தேன் என்று எண்ணுகிறேன். அவர் ஒரு போலீஸ்காரர், சகோதரியின் மெட்டியில் மணி ஒன்றுள்ளது. போலீஸ்காரருடன் சகோதரி கிளம்புகிறாள், என்று என் குடும்பத்தினர் என்னைச் சீண்டுவதுண்டு.

"சந்துகளில் திரிந்து கொண்டிருக்கும் அபலைப் பெண்ணொருத்தியைக் குறித்து அடிக்கடி கனவு வருவதுண்டு. அது நானே, என் சகோதரர்கள் சேர்ந்து விளையாடுவார்கள் மற்றும் சகோதரிகளும் சேர்ந்தமர்ந்து தம் எதிர்காலக் கணவன்மார் பற்றிக் கனவு காண்பார்கள், இரு தரப்புகளும் என்னை வெறுக்கவே, அரசியல் மொழியில் நான் "சுதந்திரமானவளாக"தனித்திருந்தேன். வேலைக்காரர்களிடையே ஒரு சிநேகிதி இருந்ததால், அவர்கள் இருந்த பகுதிக்கு அடிக்கடி போனேன். அவளுக்கு பன்னிரண்டே வயதாயிருந்தபோது திருமணமாகிவிட்டது. நான்கு நாட்களுக்குப்பின் அவள் புக்ககத்திலிருந்து திரும்பி வந்ததும், "திருமணமே செய்து கொள்ளாதீர்கள், கணவர்கள் படுமோசம்" என்றாள்.

"படிப்படியாக, வீட்டில் உட்கார்ந்திருந்ததை விட, கொய்யா மரங்களில் ஏறுவது பிடிக்கலாயிற்று, வேலைக்காரர்களிடம் வாதிட்டுக் கொண்டிருந்ததைவிடவும், குரங்குகளைக் கவனிப்பது வேடிக்கையாயிருந்தது, வரதட்சணை பற்றி மண்டையை உடைத்துக் கொள்வதற்குப் பதிலாக, கோழிகள் பின்னே ஓடுவது சந்தோஷமாயிருந்தது.

"என் உறவினர் வீட்டுப் பிள்ளைகள் எங்கள் வீட்டில் தங்கினர், ஆனால் யாரும் என்னுடன் சேர்ந்து விட துணிவு கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்த என் அப்பாவின் பெரிய மாளிகையில் பன்னிரண்டு ஆண்டு காலத்தை சடுகுடு ஆடியும் கால்பந்தாடியும் பட்டங்கள் விட்டும் கழித்தேன். என் சகோதரர்கள் வெள்ளை நிற மட்டக்குதிரைகளில் சவாரி செய்தபோது, நான் அழுவதுண்டு, ஒருமுறை நான் அழுவதைக் குதிரைக்காரனிடம் கூறினார். இப்படியாக குதிரைசவாரி செய்யத் தொடங்கினேன். இத்தகையவளை யாரே மணம்புரிந்து கொள்வார்? என்று அம்மா விசனப்படுவதுண்டு.

"வீட்டுப் பிரச்னைகள்" அதிகரித்து வரும் உறவினர் எண்ணிக்கையால், என் அப்பா சலிப்புற்றுப் போனார். அவர் ஒரு பெண்ணுக்கு வீடொன்று கட்டிக் கொடுத்திருப்பது பற்றியும் அங்கே தெரியவந்தது. அந்நாட்களில் அவர் வீட்டுக்குத் தாமதமாக வந்துகொண்டிருந்தார். சூனியம், தாயத்து என எல்லாத் தந்திரங்களையும் அம்மா கையாண்டு பார்த்தும் பலனில்லை. அப்புறம் அவளுக்குப் புதிரான யோசனை ஒன்று தோன்றிற்று. ஒரு மாலைநேரத்தில் தன் காமக்கிழத்தியுடன் அவர் இருந்தபோது, இரண்டு - மூன்று டோங்கா வண்டிகளில் சிறுவர்களுடன் வந்து சேர்ந்தாள் அம்மா சொல்லி வைத்தபடி, வீட்டுக்குள்ளே போன சிறுவர்கள் கூச்சலிடத் தொடங்கினர்.

"தந்தையே, வீட்டுக்கு வாருங்கள். மாமாவே, வீட்டுக்கு வாருங்கள், தாத்தாவே, வீட்டுக்கு வாருங்கள்."

"எனக்குப் பன்னிரண்டு வயதாகும் வரையும் என்னால் குரானை மட்டுமே வாசிக்க முடிந்தது. பாருங்கள், இந்த வயதில் இவளால் குரான் ஷாரிஃபை மட்டுமே வாசிக்க முடிகின்றது. யாரோ ஒருவரின் மருமகள் ஐந்தாவது வயதிலேயே அதனைப் படித்து விட்டாள். அத்துடன் அவளால் துணிகளைத் தைக்கவும் முடியும். இந்தப் பெண் விதவையாகி விட்டிருந்த என் பெரிய அக்காவின் மகள். இந்தச் செய்தி வந்து சேர்ந்த அன்றைக்கு பெரிய களேபரம் நடந்தது. என் சகோதரியைக் கூட்டிச் சென்றது போலீஸ்காரர் என்றெண்ணினேன். இப்போது அவள் திரும்பிவிடுவாள், அந்த அநாதைப் பெண் பற்றி நான் கனவு கண்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் ஆண்டவனின் சித்தம் அப்படி இருக்கவில்லை.

"எனக்குப் பன்னிரண்டு வயதானதும் இதனை உணர்ந்து கொண்ட அம்மா, பழைய ஆடை ஒன்று, நூல் மற்றும் ஊசி தந்து, தைக்கச் சொன்னாள். அம்மா இருந்தவரை முயன்று பார்த்தேன், அது மூச்சுத்திணறுவதாய் இருந்தது. சுற்றித் திரியும் கோழிகளின் பின் சென்றேன் (அ) மரத்தில் ஏறும் சகோதரர்களுடன் சென்றேன், அதன் காரணமாக என் விரல்களில் முட்கள் குத்தின. கடைசியில் அடுத்த குளிர்காலம் வரையிலும் தேடி எடுக்க முடியாதபடிக்கு, ஆடைகளை ஓரிடத்தில் போட்டு விட்டேன்...."

ஒரு நாள் அக்கா பக்கோடா வறுப்பதை "எப்படி இருக்கிறது, பார். மிகவும் சுவையானது. இரண்டு-மூன்று நாளான தயிருடன் சேர்த்து பரிமாறுவதற்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். பக்கோடாவையே எடுத்துக் கொள்ளலாம் என்று இப்போது கருதுகிறேன். உனக்குப் பிடிக்கின்றதா?"என்றார்.

"அற்புதம்! இதில் என்ன சேர்ந்துள்ளன?"

"கையில் கிடைக்கும் எல்லாமும்"

"யாரேனும் ஒருவரிடமிருந்து நீங்கள் சமையல் கற்றுக் கொண்டிருக்க வேண்டும்?"

"என் அம்மா முடிந்தவரை முயன்றார், நான் மறுதலித்து விட்டேன். அவள்கூச்சலிட்டபோது, என் சகோதரன் ஷாநாûஸக் கற்றுக் கொள்ளுமாறு அவள் ஏன் கேட்பதில்லை என்று வினவினேன். அவன் மனைவி வரும்போது அவள் சமைத்துக் கொள்வாள்"என்றாள். "அவன் மனைவி இறந்து போனால் (அ) யாரேனும் ஒருவருடன் ஓடிப்போனால், என்னாவது?" என்றேன். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஷாநாஸ்பாய் அழத் தொடங்கினான். "என் மனைவி ஏன் ஓடிப்போகவேண்டும்." அவன் அழுவதை அப்பா பார்த்தார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டுக் கூறினார். உணவு பெண்டிரால் சமைக்கப்படுகிறது. உனக்குத் திருமணமாகும்போது நீ என்ன செய்வாய்?" நான் கூறினேன். "மணமகன் ஏழையானால் அவர் கிச்சடி செய்து சாப்பிட்டுக் கொள்வார், வசதி கொண்டவரானால் சமையல்காரனை வைத்துக் கொள்வார்!

என்னைப் புரிந்து கொண்ட அப்பா, இந்தப் பெண்ணை நம்பிப் புண்ணியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இவளைத் திருத்த முடியாது. "என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறாய்?" என்றேன். ஒருமாதம் என் தாய்வழி மாமா கற்றுக் கொடுத்ததில், நான்காம் வகுப்பில் சேருமளவுக்கு கற்றுக் கொண்டேன். பிற்பாடு ஆறாம் வகுப்பிற்கு இரட்டைத் தகுதி பெறுமளவுக்கு நன்றாகப் படித்தேன். படிக்காத பெண்கள் "முட்டாள்கள்" "மக்குகள்" என்ற அவர்தம் கணவன்மார்களால் அழைக்கப்படுவார்கள் என்பதை அப்போது அறிந்து கொண்டேன். இருந்தபோதிலும் அவர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடந்தபடியே சுற்றிவந்து கொண்டிருப்பார்கள். எது வந்தாலும் தொடர்ந்து படிக்கப்போவதாக உறுதி கொண்டேன். கணவராலே வேறு யாராலுமோ அதனைத் தடுக்கவும் இயலாது!

கவிதை பற்றி அக்கா மிகவும் அக்கறை கொண்டார் என்று என்னால் நிச்சயிக்க முடியாதிருந்தது. அவரைச் சீண்டுவதற்காக அவ்வப்போது ஒன்றிரண்டு வரிகளை நான் கூறுவதுண்டு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

ஒரு தேவஅணங்கின் நினைவுகள் பத்மா சச்தேவ் - தமிழில் சா. தேவதாஸ் Empty Re: ஒரு தேவஅணங்கின் நினைவுகள் பத்மா சச்தேவ் - தமிழில் சா. தேவதாஸ்

Post by இறையன் Tue Feb 28, 2012 9:54 pm

"மீண்டும் மீண்டும் மடிகின்றோம் விசுவாசமற்றவருக்காக, திரும்பவும் அவரிடம் சரண்புகுகின்றோம் வாழ்க்கையினை வாழ வேண்டியிருப்பதால்"

அக்கா என்பக்கமாய் திரும்பி, "உனது வாழ்க்கையின் விசுவாசமற்ற காலகட்டத்தில் இப்போது நீ வாழ்ந்த கொண்டிருக்கிறாயா?" என்று வினவினார். இருவருமே சிரித்துவிட்டோம்.

"அக்கா, நீங்கள் எப்போதேனும் காதல்வயப் பட்டிருந்தீர்களா?" என்று கேட்டேன். "அய்யோ, அதுபற்றி கேட்காதே. நான் மணமுடிக்க விரும்பாதிருந்தேன், அதற்காக காதல்வயப்படுவதினின்றும் தடுக்க முடியாதே. எனக்கு 12 (அ) 13 வயதாயிருந்த போதே, எனக்கு அண்டை வீட்டிலிருந்த 26 (அ) 27 வயதுப் பையனை விரும்பினேன். காலையில் அவன் குதிரை ஒன்றில் சவாரி செய்வதுண்டு. நான் அடைபட்டுக் கிடக்கும் இடத்திலிருந்து அவனை உற்றுநோக்குவது வழக்கம். இச்சிறுபெண் தன்னிடம் பைத்தியக்காரத்தனமாக காதல் கொண்டிருந்ததை அவன் கனவு கண்டிருக்க மாட்டான். அதன்பிறகு சில தடவைகள் காதல் கொண்டேன், ஆனால் இம்முதல்காதல் குழந்தைமை மற்றும் இளமையின் நினைவை எப்போதும் அழகாக்கிவிட்டது. ஒரு நாள் சாஹித்தின் படத்தில் உதிரிவேடம் ஒன்றில் நடிப்பதற்கான நபர்களின் வரிசையில் கிழவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் ஓடோடிவந்து தழுவினான். இவன்தான் எனது முதல்காதலுக்குரியவன் என்றறிந்ததும், அக்கால கட்டத்தில் இவன் ஒருமுறையேனும் தழுவி இருந்தால், வாழ்க்கை வேறுவிதமாயிருக்கும் என்றெண்ணினேன். "முட்டாளே, என் குழந்தைப் பருவத்தை இப்போது அசிங்கமானதாக ஆக்கிவிட்டாய்" என்றேன்.

"அதன் பின்னர் வேறு யாரையும் விரும்பவில்லையா?"என்று கேட்டேன். அக்காவிடமிருந்து உடனே பதில் வந்தது. "ஏன் இல்லை? பெண்கள் சுற்றித்திரிந்து கொண்டிருந்த, அழகானதும் புத்திசாலியுமான பையன்கள் பலர் இருந்தனர். கோளாறு கொண்டவர்களும் வத்தல் - தொத்தலுமான பையன்களே பெண்கள் பின்னர் ஓடினர். ஒரு கிறித்தவப்பையனால் பல பெண்கள் தூக்கத்தை இழந்தனர். அவன் எனக்கு நல்ல சிநேகிதன். தேசியத் தலைவர் யாரேனும் வரும்போதெல்லாம் பல்கலைக்கழகத்தில் அவர்களின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கத்திற்குள் அவர்கள் அமைதியாகவும் அமரிக்கையாகவும் இருப்பார்கள், அங்கிருந்து வெறியேறிவிட்டால் ஆபாச நகைச்சுவைகள் கவிதைவரிகளுடன் பெண்களின் பின்னே திரிவார்கள். பெண்கள் பெரிதும் சிரமத்துடன் அக்கட்டத்தை கடந்து போவார்கள். பையன்கள் எங்களுடன் சிநேகமான இருக்க விரும்புகிறார்களே ஒழிய, தீங்கிழைக்கப் போவதில்லை என்று கருத்துக் கூறினேன். ஆனால் ஒருவரும் அதனை ஒத்துக் கொள்ளவில்லை.

ஒருநாள் இத்தகைய சொற்பொழிவு முடிந்து நாங்கள் திரும்புகையில் சாலையின் அடுத்த பக்கத்தில் ஒருவன் கவிதைவரிகளைக் கூறினான். "இது ஜிகாரின் கவிதையா"என்று கேட்டேன். தன் காதுகளை நம்பமுடியாத அவன், அப்பெண்குரல் எங்கிருந்து வந்தது என்று சுற்றுமுற்றும் நோக்கினான். "அய்யோ இது (ஈழ்ஹஞ்)லிருந்து வரும் வரிகள். இருளில் எதற்கு தேடிக் கொண்டிருக்கிறாய்?"என்று மீண்டும் கூறினேன். மிகவும் நடுக்கமுற்ற அவன் பெண்களிடம் "அவர்கள் சிநேகிதராக விரும்புவதைப் பாருங்கள்"என்றான். அவர்தம் பெற்றோர் அனுப்பியிருந்த மாம்பழங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நாங்கள் பெரிய சிநேகிதரானோம்.

ஒருநாள், மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான பிண்டி பஸôருடன் தொடர்புடைய கதை ஒன்றினை அக்கா கூறினார். "சீமாவுக்கு மலர் அலங்காரங்கள் என்றால் பிரியம். அப்பகுதியில் சிறிது பூக்களை வாங்கிவிட்டு, டாக்ஸிக்காக காத்திருந்தபோது தன் காரிலிருந்து இறங்கிய ஒரு நபர் "போகலாமா?"என்று வினவினான். சரி என்று கூறிய அவர், காரில் அமர்ந்தார். "ஓட்டலுக்குப் போவோமா?"என்று அவன் கேட்டதும், "ஏன்?, என் இடத்திற்குப் போகலாம், அது பணத்தைச் சிக்கனமாக்கும்"என்று கூறினார். அவன் சந்தோஷப்பட்டான். வீட்டுக்குப் போகும் வழியை அக்கா சுட்டிக் காட்டினார். அவர்கள் வீட்டை அடைந்தபோது அங்கே சீட்டாடிக் கொண்டிருந்தவர்கள். அலி சர்தார் ஜாஃப்ரி, மஜ்ரூ, சுல்தான்பூரி, சாஹிர் லூதியான்வி, சாஹித் மற்றும் வேறு இரண்டு-மூன்று நபர்கள்.

திண்டாடிப்போன அந்நபர், ஏதோ கோளாறு என்பதை உணர்ந்து கொண்டான். அவனை ஓர் இருக்கையில் அமருமாறு அக்கா கூறியதும், "இஸ்மத், உனக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்தன" என்று சாஹித் குறிப்பிட்டார். அப்போது இஸ்மத்தை அடையாளங் கண்டு கொண்ட நபர், கிளம்புவதற்காக நடுக்கத்துடன் அனுமதி வேண்டினான். "என்னை இங்கே இறக்கிவிட நிறையச் சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறாய். தேநீர் தராது உன்னை எப்படி நான் கிளம்ப அனுமதிப்பது? அத்துடன் கெபாபும் தயாராகிவிட்டது. சிறிது சாப்பிடு" என்றார். அக்கா. அந்நபர் பெரிதும் குழம்பிப் போனான். அவசர வேலை எதனையோ கூறிஅங்கிருந்து கிளம்பினான். மற்றவர்களிடம் இக்கதையை அக்கா கூறியதும், அவர்கள் அந்த ஆட்டத்தை கைவிடவேண்டியதாயிற்று. கடைசியில் அக்கா அவனுக்காகப் பரிந்து பேசினார். " அது அவன் தவறல்ல. அந்நாட்களில் நான் வேசியைப் போலவே தோற்றமளித்தேன். கரியமுடி எனக்குப் பொருந்தவில்லை என்பதுதான் உண்மை. அவற்றை வெண்மையாக்கிட நான் பெருமுயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. பிற்பாடு என் தோற்றம் மாறிவிட்டது, நன்மை அளிக்கும் வகையில்."

அக்காவின் பேரன் ஆஸ்ஸீக்கு வயதான நாளன்று, "பாட்டி, எனக்கு 21 வயதாகிறது, என்றதும், 71 தான் ஆகிறது" என்று கூறியிருக்கிறார். "அப்போது நீதான் எனது முதல் பெண் சிநேகிதி" என்று ஆஸ்ஸி குறிப்பிட்டானாம். ஆஸிஸ் கிளம்பியபின் அக்கா என்னிடம் சொன்னார். " உன் மகளுக்கு இப்போது ஐந்து வயது. ஆஸிஸ் அவளது (Rakhi) சகோதரனாகிவிட இது சரியான நேரமல்லவா?"

அக்கா அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடுவதுண்டு. "என் குழந்தைப் பருவத்தில் தீபாவளி கொண்டாடியாக வேண்டும் என்று நாங்கள் ஒருமுறை பிடிவாதம் காட்டினோம். அம்மா அகல்களை ஏற்றினார். அப்பா திரும்பி வந்ததும் வேடிக்கையாக "முஸல்மானின் வீட்டுக்குள் லட்சுமி எப்படி நுழைவாள்?" என்று குறிப்பிட்டார். கள்ளங்கபடமில்லாத அவரின் மனைவி, அவள் விளக்குகளைப் பார்த்துவிட்டு நுழைவாள். இது முஸல்மானின் வீடென்று அவள் எப்படி, பிரித்துப் பார்ப்பாள்?" என்று கூறினாள்.

தனது குழந்தைப் பருவத்தில் ஜன்மாஷ்டமியின்போது அக்கா அண்டைவீட்டார் ஒருவரின் வீட்டுக்குச் சென்றார். அலங்கரிக்கப்பட்டு தொட்டிலில் கிடத்தப்பட்டிருந்த கிருஷ்ணர் பொம்மை மீது அவருக்குக் கொள்ளை ஆசை. ஆரத்தி எடுக்கையில், கற்பூரத்திலிருந்தும் ஊதுபத்திகளிலிருந்தும் எழுந்த புகை மண்டியபோது, அவர் பொம்மையை எடுத்துக்கொண்டு, கிளம்பிவிட்டார். அவர் தொட்டிலில் குனிவதைச் சிலர் பார்த்து விடவே, பெரும் அமளி உண்டானது. கேள்விகள் கிளம்பின.

அம்மாவிடம் சரியான அடி கிடைத்தது. ஆனால் அவர் உறுதியாக மறுதலித்தார். அப்போது அவர் பொம்மையினை கழிவுநீர்க் குழாயில் மறைத்து வைத்திருந்தார். பின்னர் அம்மா அறையைச் சுத்தம் செய்தபோது கழிவு நீர் அடைத்துக் கொண்டு நிற்கவே, சின்னகிருஷ்ணன் குழாய்க்குள் நடுங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அம்மா அதனைச் சுத்தம் செய்து அண்டை வீட்டாருக்குக் கொடுத்தனுப்பினாள். ஆனால் அக்காவோ அவர்களிடம் போராடி அதனை மீட்டுவந்து விட்டாள். அதிலிருந்து இன்றுவரையும் சின்னக்கண்ணன் அவர் வீட்டை அலங்கரித்துக் கொண்டு வருகின்றான்.

"என் குழந்தைகளில் நால்வரை இழந்து விட்டேன். இதனை ஏன் இழந்திருக்கக் கூடாது? அல்லாவுக்குக் கூட இவள் தேவைப்பட மாட்டாள்" என்று அவரின் அம்மா அழுவதுண்டு.

அக்கா அசாதாரணமான முறையிலே சிறுகதைகள் எழுதினார். அவள் கதைகளைக் கொண்ட, சீராக கோடு போடப்பட்ட தாள்கள் படுக்கையறையில் சோம்பேறித்தனமாகக் கிடக்கும் நீல முத்துக்களால் ஆன நெக்லஸ் போல் அவர் பேனாவிலிருந்து கடிதங்கள் பிரவகித்தன. எழுதத் தொடங்கியிருந்த போதும் ஒட்டுமொத்தக் கதையினையும் அவரால் கூறமுடியும். அதன் ஆதாரம், அவர் மேற்கொண்ட மாற்றம் (அ) அது பின்னப்பட்டுள்ள விதத்தை எடுத்துரைப்பார். அவர் இறந்த பிறகு அக்கதைகள், கட்டிடம் ஒன்றின் முழுமையுறாத பகுதிகளாக அங்கு கிடந்தன. அக்கதைகளுக்கு இறுதி வடிவம் தந்திடும் நிலையில் யாரும் இல்லை. அவன் வசிக்கும் போது அவர் எடுத்துரைத்ததின் ஒவ்வொரு துளியையும் என்னால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். (Bacchi Bufi) அவரது நிஜமான அத்தை,

ரஜீந்தர் சிங் பேடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்ப்பதற்காக அக்காவுடன் போனேன். அவர் வயிற்றுப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது ஆரம்ப காலம் தொட்டு நண்பர்களாயிருந்த யாரும் அவரைப் பார்க்க வரவில்லை. ஒருநாள் அவர் கட்டிலிலிருந்து விழுந்து மோசமான நிலையில் இருந்தார். அக்காவைப் பார்த்ததும் "இப்போது சாவது மோலானதில்லையா" என்றழுதார். "உயிர்த்திருந்தது பெரிதாக ஏதேனும் செய்திருக்கிறீர்களா? நீங்கள் இறந்து விட்டால் பெரிதாக என்ன இருக்கப் போகிறது? நீங்கள் இருந்தபடியே உயிருடன் தங்கிவிடுவது மேலானது" என்றார் அக்கா. அவ்வளவு வேதனையிலும் பேடி சாஹிப் சிரிக்கத் தொடங்கினார்.

நாங்கள் டெல்லிக்குப் புறப்பட்டபோது அவர் மிகவும் சோகமாயிருந்தார். 1984 கலவரங்களின்போது சீமாவிடமிருந்து எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. "நாள்பூராவும் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்த அம்மா உங்களைத் திட்டினார்" என்றாள் அவள். " என்னைப் புண்படுத்துவதற்காகவே அவள் சர்தாரை டெல்லிக்குக் கூட்டிப் போயிருக்கிறாள்." "நாங்கள் இங்கே நலம்! கவலைப்பட வேண்டாம்" என்று அப்புறம் தெரிவித்தேன். பிற்பாடு அவர் மும்பையில் சர்தார்ஜியைச் சந்தித்ததும், தழுவிக்கொண்டு அழுதார். "அய்யோ, சர்தார்ஜி, நீங்கள் உயிரோடு இருப்பது ஆண்டவன் கருணையில்தான். எவ்வளவு குரூரமாய் உங்களைத் துண்டாடி இருப்பார்கள் என்று கவலைப்பட்டேன்."

டெல்லிக்கு நாங்கள் வந்து சேர்ந்ததுமே என் சிநேகிதி அஜித் கௌருக்கு சாஹித்ய அக்காதெமி பரிசு கிடைத்தது. அதன் பொருட்டு என் வீட்டில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன். இஸ்மத் அக்கா, சிவாணி மற்றும் பல பெண் எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டனர். ஒரு சம்பிரதாயத்திற்காக சில ஆண் எழுத்தாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இஸ்மத் அக்காவும் குந்துல் ஹைதரும் மனஸ்தாபம் கொண்டிருந்தனர் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. ஒரு நண்பருடன் மூலையில் அமர்ந்திருந்த ஹைதரிடம் சென்ற அக்கா, "சூனியக்காரியே, என்னுடன் பேசப்போகிறாயா, இல்லையா?" என்று கூச்சலிட்டார். பிற்பாடு அவர்கள் திரும்பவும் சிநேகிதியர் ஆகிவிட்டனர், நண்பர்களுக்கிடையேயான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள இத்தகைய முயற்சியை ஏன் செய்ய மாட்டார்கள்?

அக்கா ஒரு முறை கூறினார். "நான் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில், வரன்கள் வரத் தொடங்கின. அவர்களுள் ஒருவர் துணை ஆட்சித் தலைவர். தனது சூனியக்காரி போன்றவளான மகளை சட்டென்று மணம் செய்து தந்துவிடவேண்டும் என்று அம்மா உடனே தீர்மானித்து விட்டாள். பொற்கொல்லரும் டெய்லர்களும் அமர்த்தப்பட்டனர். ஒருநாள் பள்ளியிலிருந்து திரும்பிய நான் வீட்டில் நடந்த அமர்க்களத்திற்குக் காரணத்தைக் கேட்டறிந்து கொண்டேன். நான் திருமணம் செய்யப் போவது இல்லை என்று உடனே அறிவித்தேன். எனக்குப் பைத்தியம்" என்றாள் அம்மா. திருமணம் செய்து கொள்ளாவிட்டால் வேறென்ன செய்யப்போகிறாய்?" என்று கேட்டார் அப்பா. " நான் படிக்கப் போகிறேன்" என்றேன். "உன் மாமனார் - மாமியார் வீட்டில் படிப்பைத் தொடரலாம்" என்றார் அப்பா. அக்கா விடவில்லை. "பெண்கள் அங்கே செய்யக்கூடியதெல்லாம் பிள்ளைகளைப் பெற்றெடுப்பதே, அங்கே படிப்பதற்கு யார் அனுமதிக்கிறார்கள்?"

"ஒரு வழி கண்டுபிடித்தாக வேண்டும் என்று இரவெல்லாம் யோசித்த பிற்பாடு, மும்பையிலுள்ள மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் மாமா மகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவனுடைய குறுக்கீடு மட்டுமே மறுதலிக்கப்பட மாட்டாது என்பதால், இச்சிக்கலிலிருந்து என்னைக் காப்பாற்றுமாறு அவனை வேண்டினேன. என் தாய் மாமாவின் மகனான அவன் என்னைத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக என் தந்தைக்கு எழுதினால் போதும், இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும்.

நான் ஒருபோதும் மனம் செய்துகொள்ளப் போவதில்லை என்று குரான் ஷாரிஃப், அல்லா மீது மற்றும் என் படிப்பின் மீது பிரதிக்ஞை செய்தேன். என் சகோதரன் பொறியில் சிக்கிவிட்டான். வீட்டை வெள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளை என் அம்மா செய்திருந்த நான்கு-ஐந்து நாட்கள் கழித்து, என் தாய்-மாமா ஓடிவந்தார். "இவளை சௌகத் மணந்து கொள்ள விரும்புகிறான். இவளை நீ அந்நியன் ஒருவனுக்கு மணம் செய்து தர முடியாது" என்று தன் சகோதரியிடம் தெரிவித்தார். என் அம்மாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அரைகுறையாக தைத்திருந்த துணிமணிகளை மற்றும் உருக்கிய பொன்னுடன் டெய்லரும் பொற்கொல்லரும் அனுப்பப்பட்டனர் மற்றும் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது" .

"அக்கா, உங்கள் குழந்தைப் பருவத்தில் ஒருபொழுதும் புர்கா போட்டுக்கொண்டதில்லையா?" என்று கேட்டேன்.

"நான் புர்காவைக் கைவிட்டு நீண்ட காலமாகிறது. மிகவும் அவசியமாயிருந்தால், யாரேனும் ஒருவரிடமிருந்து இரவல் பெற்றுக் கொண்டேன். சிறிது காலத்திற்குப் பின் கதர் அணியத் தொடங்கிவிட்டேன். காந்திஜி லக்னோவுக்கு வந்தார். நாங்கள் சிலர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கச் சென்றோம். நாங்கள் கதர் அணிந்தால் மட்டுமே கையொப்பம் இட்டுத் தருவதாகத் தெரிவித்தார். மாலையில் நாங்கள் ஒவ்வொருவரும் 200-ரூபாய்க்கு கதர்வேட்டிகள் வாங்கினோம். அடுத்த நாள் முரடானதும் சுருக்கங்கள் நிறைந்ததுமான கதர்வேட்டிகளைச் சேலைகளாக உடுத்திக்கொண்டு, காந்திஜியைச் சந்தித்தோம். சந்தோஷமடைந்த அவர், எங்கள் ஒவ்வொருவருக்கும் கையொப்பமிட்டுத் தந்தார். கதர் அணிந்ததற்காக கைது செய்யப்படுவதினின்றும் எப்படித் தடுக்கப்பட்டேன் என்னும் கதையைக் கூறுகிறேன்.

அந்நாட்களில் நான் ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவைப் பார்ப்பதற்காக இரயிலில் ஜோத்பூர் சென்றேன். பகலில் மூன்றாம் வகுப்பிலிருந்தேன். இரவில் முதலாம் வகுப்பு டிக்கெட் வாங்கிவிட்டேன். பளிச்சிடும் வெள்ளைச்சேலை, கண்ணாடி, தோளில் தொங்கும் பை சகிதமாக நான் ஜோத்பூரில் வந்திறங்குவதாக அவர்களுக்குத் தந்தி வந்திருந்தது. அதிருஷ்டவசமாக என் மாமா அங்கே துணை ஆய்வாளராக இருந்தார். காங்கிரஸ் தலைவரின் இடத்தில் நானிருந்ததைக் கண்டதும் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. " நீயா! இவள் என் மருமகள்" என்று கூறினார். அவர் வேறெதுவும் சொல்லவில்லை. நாங்கள் வீடுவந்து சேர்ந்ததும் ஏன் இந்த வேடிக்கை பண்ணிக் கொண்டிருந்தாய்," என்று திரும்ப திரும்ப கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். "எந்த வேடிக்கை? கதர்சேலைதானே உடுத்திருந்தேன்" என்று நான் பதிலடி கொடுத்தேன்."

"அச்சமயத்தில் தலைமை ஆசிரியைப் பணியிடம் காலியாயிருந்தது. ஜோத்பூரிலிருந்து முஸ்லிம்களுக்கு சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய முழக்கம் முன் வைக்கப்பட்டபோது, எனக்கு அந்த வேலை கிடைத்தது. " கவனி! பள்ளிக்குப் போகையில் நீ புர்கா அணிந்து கொள்ள வேண்டும்" என்று தாய்-மாமா அறிவுறுத்தினார். ஆரம்பத்தில் அவர் இதனை இலேசாகவே கூறிக்கொண்டிருந்தார் என்று கருதினேன். பின்னர் நான் சட்டை அணிவதையும் கைவிட்டு, "புர்கா போட்டுக் கொள்ளவேண்டும் என நீங்கள் 'பிடிவாதம் காட்டினால், நான் வேலையை விட்டுவிடுவேன்' என்று கூறினேன். என் பிடிவாத குணத்தை அவர்கள் நன்கறிந்து இருந்தால், அதன்பிறகு யாரும் வற்புறுத்தவே இல்லை. மெட்ரிக் முடித்தபிறகு படிப்பைத் தொடர்வதற்கு அப்பா அனுமதிக்காததால், "மிஷனுக்குப்போய் கிறிஸ்தவத்திற்கு மாறிவிடுவேன்"என்று நான் மிரட்டுவதுண்டு. "நீ எப்படி அங்கேபோவாய் ? என்று அவர் வினவியதற்கு இரயில்பாதை வழியே போய்விடுவேன். எனக்கு வழி தெரியும். என்னை அவர்கள் உடனடியாக கிறிஸ்தவத்திற்கு மாற்றி விடுவார்கள். என்றேன்."

"நான் படிக்க விரும்பினேன் மற்றும் மணம் செய்துகொள்ளும் உத்தேசம் என்னிடம் இல்லை என்பதை என் அப்பா உணர்ந்து கொண்டதும், ஆக்ராவிலுள்ள சிறியதொரு வீட்டினை என் பெயருக்கு மாற்றித் தந்தார். அந்தக் காலத்தில் அது மூவாயிரத்திலிருந்து நான்காயிரம் ரூபாய்வரை மதிப்பிடப்பட்டது. பிற்பாடு நான் இங்கிலாந்து செல்வதற்கான செலவுக்கு உதவும் வகையில் அதனை விற்றுவிடலாம், அப்புறம் நல்லதொரு வேலை தேடிக்கொண்ட, இங்கிலாந்திலிருந்து திரும்பியவர் என்று பெயர் பெற்று விடலாம் என்றெண்ணி, அதனை என் சகோதரன் பொறுப்பில் விட்டுவைத்தேன். ஆக்ரா சென்ற நான் என் சகோதரனிடம் "வீட்டை விற்று விடு. நான் இப்போது இங்கிலாந்து போக விரும்புகிறேன் என்றேன். "எந்த வீட்டை - அந்த லாயத்தையா? அதனை எப்போதோ விற்றுவிட்டு, பணத்தையும் செலவழித்துவிட்டேன். அதில் சிறிது உன் அண்ணிக்கு நகைகள் வாங்கப் பயன்பட்டது" என்றவன் பதிலளித்தான்.

அண்ணி அங்கிருந்தாள். இந்த விவகாரத்தில் என்னை இழுக்கவேண்டாம். உனக்குப் பணம் கிடைத்தது எங்கிருந்து என்று எனக்கெப்படித் தெரியும்?"என்றாள் அவள். ஆத்திரமுற்ற நான் "உனக்கெதிராக வழக்குத் தெடர முடியும்" என்றேன் என் சகோதரனிடம். "அப்போதுகூட உன்னால் பணத்தைப் பெறமுடியாது" என்றான் அமைதியாக "நீயே ஒரு வழக்குரைஞன். என் பணத்தை எப்படி வசூலிப்பது என்று கூறு" என்று அவனிடமே கேட்டேன். "உன்பொருட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிறேன். எனக்கான கட்டணத்தைத் தந்து விடு"என்று கூறியவன் சிறிது நேரங்கழித்து, இங்கிலாந்திற்குப் போவதில் குறியாக இருக்கிறாயா? அப்படியானால் நீந்திச் செல்லலாம்" என்றான். வழித்தடம், எங்கே நீந்துவது, எங்கே நிற்பது போன்றவற்றை விளக்கத் தொடங்கினான். அண்ணி இதுவரையும் கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தாள். "துணிமணிகள்" என்றாள் திடீரென அவற்றை நீர்புகா பாக்கெட் ஒன்றில் கட்டிவைத்துக் கொள்ளலாம்" என்றான். சிறிது நேரம் யோசித்துவிட்டுக் கேட்டாள். " பெரிய மீன்கள் இருக்குமே? அவை அவளை விழுங்கிவிடுமே? அப்படியானால் மீன்களைத் துரத்திவிட நீண்ட மூங்கில் கழி ஒன்றை எடுத்துப் போகவேண்டும்" என்றான். இப்படியாக எனது இங்கிலாந்துப் பயணம் முடிவின்றி ஒத்திவைக்கதாயிற்று.

"சாஹித் சாஹிபை அலிகார் பல்கலைக்கழகத்தில் சந்தித்தேன். அவர் எம்.ஏ. படித்துக்கொண்டிருந்தார் மற்றும் நான் பி.டி. படித்துக்கொண்டிருந்தேன். டெல்லியில் சில தடவை சந்தித்தோம். அதன் பின்பு பாம்பே டாக்கீஸில் 175 ரூபாய் சம்பளத்தில் கதை-வசனகர்த்தாவாகச் சேர்ந்தார். நான் பள்ளி ஆய்வாளராக மும்பையில் சேர்ந்து என் சகோதரனுடன் வசிக்கத் தொடங்கிய பின்னர், திரும்பவும் சந்தித்தோம். சாஹித் அடிக்கடி என் சகோதரனைப் பார்க்க வந்தார். அவர்கள் வெளியிடங்களுக்குப் போகையிலும், திரைப்படங்களுக்குப் போகையிலும் நான் உடன் சென்றேன். சாவ்பட்டியில் வெறுங்காலில் நடந்து போவதுண்டு. எங்கள் எழுத்தாளர் நண்பர்களையும் சந்திப்பதுண்டு, ஒரு முறை எனது கதையின் பொருட்டு சாஹித் பாம்பே டாக்கீஸிலிருந்து என்னை அணுகினார்.

என் சகோதரனுக்கு இது தெரியவந்தது. நானே 350 ரூபாய் சம்பளம் வாங்கும்போது, நான்கு இலக்கத்தில் ஊதியம் பெறும் ஒருவருக்கு என்னை மணமுடித்துத் தருவேன் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான். 175 ரூபாய் பெறுகின்ற ஒருவருடன் நான் செல்வதை அவன் நிறுத்திவிட முற்பட்டபோது, நான் ஒரு விடுதியில் வசிக்கத் தொடங்கினேன். அப்புறம் அதுவரையிலும் மணம் முடித்துக் கொள்ளாதிருந்த என் ஒன்றுவிட்ட சகோதரனுக்கு என்னை மணம் பேசிவிடலாம் என்று திட்டம் வகுத்தான். ஒருநாள் என்னிடம் வந்த அவன், "சாவ்பட்டிக்கு வருகின்றாயா?" என்றழைத்தான். அவனது திடீர் அழைப்பு திகைப்பைத் தந்தாலும் உடனே சம்மதித்தேன். அவன் சாவ்பட்டியில் நடுக்கத்துடன் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தான். வேர்த்து விறுவிறுக்க, சிறிது நேரம் கழித்து, "நீ சம்மதித்தால் நாம் மணம்முடித்து கொள்ளலாம் என்னும் ஆலோசனையை பாய் ஜான் தெரிவித்தான் என்றான். தௌபா-தௌபா, நீ எனக்கு நிறைய உதவியிருக்கிறாய், ஜர்எதிரி போல உனக்கு என்று என் மனதில் இருப்பவர் நானல்ல. அவள் எளிமையாக ஆனால் அழகாக இருக்க வேண்டும்" என்றேன். நல்ல சிநேகிதர்களாக நாங்கள் வீடு திரும்பினோம்.

"சாஹித் சாஹிபினை திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருந்தீர்களா?" என்று வினவினேன்.

"இல்லை, சாஹித்தின் உறுதியைக் குலைத்திட என்னால் ஆனதை முயன்று பார்த்தேன், என் நண்பராக இருந்தார். இத்திருமணம் ஒரு விபத்துதான். தன் வீட்டுக்கு அருகே ஒரு வாடகை வீட்டினை அப்பா ஏற்பாடு செய்தார். மோஹ்ஸின் ஒரு காஜியை அழைத்து வர எங்களுக்குத் திருமணம் ஆனது. நானொரு சிக்கலான பெண் என்று சாஹித்துக்குத் தெரிவிக்கவில்லை என்பதில்லை விஷயம். அவர் வருந்துவார். மீண்டும் அணிந்து கொள்வதில்லை என்று நான் தளைகளை நொறுக்கி எறிந்துள்ளேன். மரபார்ந்த, விசுவாசமிக்க மனைவியாக என்னால் ஆகமுடியாது. ஆனால் சாஹித் பிடிவாதமாயிருந்தார்.

இஸ்மத்தை மணந்து கொள்ள முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலை அவர் ஏற்றுக் கொண்டார். அது ஒரு மோசமான தமாஷ் என்று கருதி அவரைப் பார்த்து நகைத்தனர். "யாரும் நம்பவில்லை. ஆகவே உன்னை மணமுடிப்பது தவிர்த்து வேறுவழியில்லை" என்று சாஹித் என்னிடம் கூறினார். திருமணத்திற்கு ஒருநாள் முன்னர்கூட"இன்னும் காலம் உள்ளது! நான் சொல்வதைக் கவனியுங்கள்! நல்ல நண்பர்களாயிருப்போம்! என்று அவரிடம் கடைசியாகக் கூறினேன்." நிர்பந்தமில்லை திருமணம் வெற்றி பெறாவிட்டால் ஒரு வழி உள்ளது. தலாக்" என்று திருமணத்திற்குப் பின்னரும் சொன்னேன். தான் தலாக் தந்தால் கூட, இஸ்மத் தன்னைவிட்டுப் போய்விட்டாள் என்று நண்பர்கள் கூறுவார்கள் என்பதற்காக சாஹித் பயந்தார்."

"உங்கள் திருமணத்திற்கு சகோதரன் வந்தாரா?" என்று தயக்கத்துடன் வினவினேன்.

"சாகும்வரையும் என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று உறுதி எடுத்துவிட்டான். ஆனால் என் அம்மாவுக்கு இது தெரியவந்ததும், கேடு கெட்ட தன் மகள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று தன் கண்களாலேயே பார்த்து வரட்டும் என்று என் இளைய சகோதரனை அனுப்பியிருந்தார். ஆறடி மூன்று அங்குல உயரமுள்ள எனது சகோதரன் சாஹித்திற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, என்னை ஒரு ஓரமாக இட்டுச் சென்று, "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அவன் ஒரு எளிமையான இனிமையான பையன். உனக்குப் பைத்தியமா?" என்று திட்டினான். கள்ளங்கபடமற்றவளாக நான் கூறினேன். "நான் என்ன செய்வது? என் ஆலோசனைக்குஅவர் செவிசாய்க்கவில்லை. நீ ஏன் முயன்று பார்க்கக் கூடாது? சாஹித் எனக்கு விலையுயர்ந்த பேனாக்களைப் பரிசளிப்பதை விரும்பினார். விடாப்பிடியாக புத்தகங்கள் வாங்குபவராகவும் இருந்தார். இன்றைக்குக் கூட அவர் பரிசளித்த பேனாக்களைப் பயன்படுத்துகிறேன். ஓர் ஆண் பெண்ணொருத்திக்கு பேனாக்களைப் பரிசளிக்கலாம், அவளை நேசிக்கலாம், சமயங்களில் மரியாதை செலுத்தலாம், ஆனால் நண்பராக முடியாது.

அவரது படுக்கையின் பின்புறத்துள்ள அடுக்கில் அவர் குழந்தைப் பருவத்தில் திருடியிருந்த "சின்னக் கண்ணன்" அலங்கரித்தான். அத்துடன் குரு நானக் மற்றும் இயேசுவின் படங்களும், மதங்களுக்கு ஒற்றுமைக்கு அடையாளமென்று அவர் கருதிய சின்னஞ்சிறு பொருட்களும் இருந்தன. ஹாசன் மற்றும் ஸ்ரீசைனின் உயிர்த்தியாகம் என்பது கொடுங்கோன்மைக்கு எதிரான அவர்தம் எதிர்ப்பாகும்" என்று அவர் கூறியதுண்டு. அவர், எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு மனித உயிர். பாபர் அவரின் முதாதை. அவரின் மாமாக்களெல்லாம் பாரசீக மொழி பேசுவதுண்டு. அவர்களெல்லாம் கடந்தகாலத்தில் வாழ்ந்திருந்தனர் என்று அவர் கூறுவதுண்டு. கம்யூனிஸத்தில் அவர் ஒருபோதும் தவறு கண்டதில்லை. எழுத்தாளர்களிடத்தே பெருத்த நேசம் கொண்டிருந்தார். பாரதிஜி மற்றும் கமலேஸ்வர்ஜியிடம் தீவிர விவாதங்கள் நடத்திய போதிலும் அவர்களைப் பிரியமாக நடத்தினார். " மும்பையில் நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்வாய் அக்கா?" என்று அவர்கள் ஒருநாள் வேடிக்கையாக வினவினார்கள். "உங்களுக்கும் கமலேஸ்வருக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவிப்பேன். என் நண்பர்களைத் தாண்டி, என்னால் பார்க்க இயலாது. கடவுளிடம் உதவிகேட்டு மன்றாடுவேன் என்று கருதுகிறீர்களா?" என்று அவர் பதிலளித்தார்.

ஒருமுறை எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் குருகிரந்த் சாஹிப் வாசிப்பதற்கு ஏற்பாடு செய்தோம். அவர் தவறாக வந்து ஓதுதலைக் கவனித்துக் கேட்டார். "இந்தச் சடங்குகள் எதற்காக? உங்கள் வீட்டுச் சூழலைத் தூய்மைப்படுத்துவதில் இவை உதவப் போகின்றனவா?" என்று என் கணவரிடம் பேசினார். பாம்புகள் பற்றி அவர் கூறுவார். "இந்துஸ்தானம் என்னும் தேசத்திலே பாம்புகள் கூட வணங்கப்படும்."

சர்தார்ஜி அவரைப் பெரிதும் நேசித்தார். ஒருமுறை ராஜ்பேடியின் வீட்டில் பாரதிஜியுடனான விவாதத்தின்போது அவர் மடக்கப்பட்டுவிட்டார். என் கணவர் அவர் முன் மண்டியிட்டார். "நீங்கள் ஏன் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? நேராக அமர்ந்து பேசுங்கள்!" என்றார் அவர்.

என் கணவர் ஒரு சமயம் கூறினார். "அக்கா, உங்களுக்கு எதிராக ஆபாசம் தொடர்பாக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்." அவர் ஒரு மிடறு ஒயின் அருந்தியதும் தெரிவித்தார்." மாண்ட்டோ பிரியமான மனிதர் மற்றும் நல்ல நண்பர். சாஹித்திற்கு அவர்மீது பொறாமை. வழக்கு லாகூரில் தாக்கல் செய்யப்பட்டது. நாங்களெல்லாம் போயிருந்தோம். சூழல் ஒரு பிக்னிக் போன்றிருந்தது. வழக்குத் தடயமில்லாது அழிக்கப்பட்டு விட்டது. திரும்பிய நாங்கள் அனார்கலி மார்கெட்டில் ஷøக்கள் வாங்கினோம்.

நான் பாம்பே ஆஸ்பிடலில் கிடந்தபோது அவர் ஒருநாள் வந்தார். அவ்வளவு பதட்டமாக நான் அவரைப் பார்த்ததே கிடையாது. என்று நோயினைக் கண்டறிந்திருந்தனர் மருத்துவர்கள் மருத்துவமனையில் என்னைத் தேடிக் கண்டறிய அவர் மிகுந்த பிரயாசைப்பட்டிருக்கிறார். "உன்னைக் கண்டறிந்துவிட பாபா ஆஸ்பிடலின் ஒவ்வொரு அறையாகத் தேடினேன். இப்போது, சீமா இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறாள்" என்றார். அவர் முகத்தில் வழக்கமாகத் தெரியும் சந்தோஷத்தின் கலகலப்பின் தடயமே இல்லாதிருந்தது.

அவரை நான் கடைசியில் சந்தித்தபோது, நான் உடல் பரிசோதனைக்காக மும்பையில் இருந்தேன். அவரது அறைக்குள் நான் நுழைந்தபோது, ஆரஞ்சுப் பழங்களை உரித்தபடி, சுளைகளை மடியில் போட்டுக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் அவர் எழுந்துவிடவே, சுளைகள் பூக்களென அவர்பாதங்கள்மேல் விழுந்தன. என்னைக் கட்டிக்கொண்டு அழுதபடி ஓ எனது பொம்மையே! இவ்வளவு காலம் எங்கே இருந்தாய்?" என்று கூறினார். தன் குழந்தைப் பருவத்துச் சம்பவங்கள் பலவற்றை நினைவு கூர்ந்தார். ஒருமுறை அவரை டெல்லிக்குக் கூட்டிச் செல்லவேண்டும் என்றெண்ணினேன். அப்புறம் வேண்டாம் என்று தீர்மானித்தேன். என்னால் அவரைக் கவனித்து கொள்ள முடியாது போகலாம். இரண்டு மாதங்களுக்கு பின் அவர் இறந்துவிட்ட செய்தி வந்தது. சீமாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, "மூன்று-நான்கு நாட்களுக்கு முன்னர், மருந்து சாப்பிடுமாறு நான் வற்புறுத்தியபோது, என்னைக் கட்டாயப்படுத்தினால் டெல்லியிலுள்ள பத்மா வீட்டுக்குப் போய்விடுவேன்" என்று கூறினார் என்பதைத் தெரிவித்தாள்.

"எனக்குத் தெரிவித்திருந்தால் நான் மும்பைக்கு வந்திருப்பேன்" என்றேன். சந்தர்ப்பவசமாக அந்நாட்களில் என் கணவர் மும்பையில் இருந்தார். அவரது உயிலின்படி, மின்தகன மையத்தில் சீமா இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினாள். இவ்வளவு மதிப்பு வாய்ந்த ஓர் எழுத்தாளர், பெரியதொரு நண்பர், இவ்வளவு நல்ல மானுட உயிரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். டாக்டர் தரம்வீர் பாரதி, என் கணவர் சுரீந்தர் சிங், நவ்திவால், விஸ்வநாத் சச்தேவ், அவரது மகள் மற்றும் பேரன்-பேத்திகள் மட்டுமே. அக்காவைச் சூழ்ந்து இயங்குவது ஒரு பெருமை என்று கருதியவர்கள் சுகவீனமாயிருந்தனர், வெளியூர் போயிருந்தனர், படப்பிடிப்பொன்றில் (அ) வசனம் எழுதுவதில் மும்முரமாயிருந்தனர். உயிலில் குறிப்பிட்டுள்ளபடி, அஸ்தியை எடுத்துக்கொண்டு Way of India-வுக்கு அருகாமையில் உள்ள ஆழ்கடலுக்குச் சென்று பேரன் பேத்திகளைக் கொண்டு சீமா கரைந்தார். ‘அது பெரிய வேடிக்கையாக இருக்கும்! இந்த உலகிற்கு நான் திரும்பி வருவேன்! என் நண்பர்களைச் சந்திப்பேன்! மீண்டும்! மீண்டும்! மற்றும் திரும்பவும் கொண்டாட்டமும் சிரிப்பும் கூச்சல்களுமாய் இருக்கும். கதை நாயகர்கள் ஒருவர்பின் ஒருவராக விடைபெறுவார்கள். ஆனால், நாடகம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்’ என்று அக்கா எப்போதும் கூறுவதுண்டு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum