தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அதிர்ஷ்டத்தை 12 வழிகளில் அடைய முடியும்

Go down

அதிர்ஷ்டத்தை 12 வழிகளில் அடைய முடியும் Empty அதிர்ஷ்டத்தை 12 வழிகளில் அடைய முடியும்

Post by இறையன் Tue Apr 24, 2012 9:14 pm

அதிர்ஷ்டம்! நம் இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

அது இஷ்டத்திற்கு வருவது அதிர்ஷ்டமா?

இந்த அதிர்ஷ்டத்திற்கான காரணம்?

ஜாதகமா? வாஸ்துவா?

அதிர்ஷ்ட எண்களா? அதிர்ஷ்ட கற்களா?

அதிர்ஷ்டத்தின் மூலம் எங்கே?

அதை அடையும் வழி எங்கே?

ஒவ்வொரு மனிதனும் தேடித் தேடி அலைகிறான். ஆனால் ஏதோ சிலர் வாழ்வில் மட்டுமே அது முகம் காட்டுகிறது.

“எதுவுமே சுலபமாவதற்கு முன் கடினமாக இருக்கிறது”- ஷிவ்கரோ

1.பொறுத்திருக்க வேண்டும்:

அதிர்ஷ்டம் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொண்டிருக்கிறோம்? நாம் தொட்டதெல்லாம் துலங்க வேண்டும், தோல்வி என்ற வார்த்தையே வாழ்வில் தொல்லை தரக்கூடாது.

ஓடு தளத்தில் ஓடி, வானத்தில் ஏறிய விமானம் சுமாராக பத்து நிமிடங்களுக்குள் தான் அடைய வேண்டிய உயரத்தை அடைந்துவிடுவது போல வாழ்வில் தான் விரும்பும் உச்சத்தை சில மாதங்களில் அடைந்துவிட வேண்டும் என விரும்புகிறோம். அதையே அதிர்ஷ்டம் என போற்றுகிறோம்.

அதிர்ஷ்டம் யாருக்கும் வரலாம்! அதற்கான வரத்தை இறைவன் நமக்குத் தரலாம்! ஆனால் அதற்கான தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும்.

சிலர் ஒரே நாளில் வாழ்வின் உச்சத்தை அடைந்துவிட்டார்கள் என்று நாம் வியக்கிறோம். ஆனால் அவர்கள் இந்த நிலையை அடைய பல வருடங்களாக, நீங்கள் தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு இரவிலும் அவர்கள் கொட்ட கொட்ட கண் விழித்திருந்து தங்களை தாங்களே தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்ற உண்மையை நீங்கள் அறிவீர்களா?- லாங் பெல்லோ

2. உயர்வு உள்ளல் (Self Esteem)

“வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு”- திருக்குறள்

நீரின் மட்டம் எத்தனை உயரமோ அந்த அளவு உயரமான அதில் பூத்திருக்கும் தாமரைத் தண்டின் உயரம். அது போல மனிதனின் எண்ணங்களின் உயர்வுக்கு ஏற்ப அவனது வாழ்வின் உச்சமும் அமைகிறது.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய சில அளவீடை பெற்றிருக்கிறான். அவனது ஆழ் மனத்தில் அவனைப் பற்றிய சில வரையறைகள் சில அகல உயர நீளங்களை அளவீடாக உருவாக்கி இருக்கிறான்.

அதுவே அவன் தன்மதிப்பு, அதுவே அவன் தன்நிலை. அந்த அவனது சிகரத்தை தாண்டி அவன் அதற்கு மேலே செல்வதில்லை. வெறும் செல்வ வளம் மட்டமல்ல, சமுதாயத்தில் மனிதனது அங்கீகாரம், பொலிவான தோற்றம், உடல்நலம் யாவும் அந்த தன்மதிப்பை பொறுத்து அமைகிறது.

போர்க்களத்தில் போரிடும்போது மாவீரன் நெப்போலியன் நெஞ்சில் சில குண்டுகள் பாய்ந்துவிட்டன. அவனின் நெஞ்சை கீறி அதிலுள்ள குண்டுகளை மருத்துவர் அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது நெப்போலியன் கூறுகிறான். “டாக்டர் இன்னும் கொஞ்சம் ஆழமாக போய் என் இதயத்தை திறந்து பாருங்கள். அங்கே நான் காணும் பிரஞ்சு சாம்ராஜ்யத்தை நீங்களும் காணலாம்” என்றான்.

அவனது உள்ளத்தின் ஆழத்தில், அவனது ஆழ் மனதில், அவரது லட்சிய கனவுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதுவே அவனது சிகரம். அந்த கனவால் ஏற்பட்ட உக்கிரமான ஆசை அவனை ஆட்டிப் படைத்தது.

ஜுலியஸ் சீசர் என்ற ஆங்கிலப் படத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையான எலிசபெத் டெய்லர் கிளியோபாட்ராவாக நடித்தார். அப்போது அவருக்கு பல லட்சம் மதிப்புள்ள அணிகலன்கள் (தேவை என்று நினைப்பதற்கும் கூடுதலான அணிகலன்கள்) அணிவிக்கப்பட்டன.

அப்போது சிலர் படத்தின் இயக்குநரிடம் ஏன் இத்தனை நகைகள், இவைகள் படத்தில் தெரியவா போகிறது, படத்தில் அவைகளின் மதிப்பு பார்க்கும் ரசிகர்களுக்கு புரியவா போகிறது என்றார்களாம்.

அப்போது இயக்குநர் கூறுகிறார், பார்க்கும் ரசிகர்களுக்கு அதன் மதிப்பு தெரியாவிட்டால் பரவாயில்லை. ஆனால் கிளியோபாட்ராவாக நடிக்கும் எலிசபெத் டெய்லருக்கு அதன் மதிப்பு தெரியுமல்லவா? அதன் மூலம் அந்த பாத்திரத்தின் மிகப்பெரிய மதிப்பு அவருக்கு புரியுமல்லவா?

அப்படி கிளியோபாட்ராவின் அளவிலா பெருமையை மனப்பூர்வமாக உணர்ந்து கொண்டால் அதற்கு ஏற்ப தன் நடிப்பை கம்பீரமாக வெளிப்படுத்துவார் அல்லவா? என்றாராம்.

நமது உடலின் செல்களில் உள்ள டி.என்.ஏ.யில் நம் உடல் அமைப்பைப் பற்றி வரை படம் உள்ளது. அது போல நமது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு வரைபடம் பதிவு செய்யப் பட்டுள்ளது. அந்த பதிவுகளில் மாற்றம் செய்யும்போது அதற்கு ஏற்ப அவரவர் வாழ்வில் அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன.

3. வெற்றி மனப்பான்மை:

“பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்பது பழமொழி.

இதை நேர்மறையாக மாற்றினால் பணம் கொட்டும் இடத்தில் மேலும் மேலும் கொட்டும், வெற்றி மேலும் மேலும் வெற்றியையும், தோல்வி மேலும் மேலும் தோல்வியையும் இழுத்துக் கொண்டு வரும்.

நாம் பெறும் மிகச் சிறிய வெற்றிகூட நமக்கு வெற்றி மனப்பான்மையை உருவாக்குகிறது. அந்த வெற்றி மனப்பான்மை மேலும் பல வெற்றிகளை உருவாக்குகின்றன. அது போலவே தோல்வி, தோல்வி மனப்பான்மையை உருவாக்கி தோல்வியை இழுத்து வருகிறது.

பல வெற்றிகளை குவித்த வெற்றி வீரர்களின் முகத்தில் அந்த வெற்றியின் ரேகைகள் படர்ந்திருக்கின்றன என்கிறார் எமர்சன்.

அந்த வெற்றி ரேகைகள், அந்த வெற்றி நோக்கு மேலும் மேலும் வெற்றிகளை ஈர்க்கின்றன.

ஆக நாம் மிகுந்த முயற்சி எடுத்து வாழ்வில் சில வெற்றிகளை உருவாக்கிவிட்டால், அந்த வெற்றி தேவதை மேலும் பல வெற்றிகளை நம்மிடம் கொண்டு வருவாள்.

எதிர்பாராமல் சில தோல்வி நேர்ந்துவிட்டால் சற்று ஓய்வு எடுத்து நன்றாக சிந்தனை செய்து சில சிறிய காரியங்களை கையில் எடுத்து சிரத்தையோடு செயலாற்றி சில வெற்றிகளை பற்றிக் கொண்டுவிட்டால் அப்போது மீண்டும் வெற்றி முகம் காட்டும். அந்த வெற்றிகள் மூலம் அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.

4. மகிழ்ச்சியான மனநிலை:

“வாழ்வு வருங்கால் வராது கண் தூக்கம்” என்பது பழமொழி. மழைக்கு முன் குளிர்ந்த காற்று வீசுவது போல முன்னேற்றம்


அதிர்ஷ்டம் 12 வழிகள்
வருவதற்கு முன் ஓர் உற்சாகமான மனநிலை வந்துவிடும்.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு. இது செயல் விளைவு தத்துவம் (Cause and Effect) என அழைக்கப்படுகிறது. வெற்றியின் விளைவு மகிழ்ச்சி.

காற்று வீசினால் காற்றாடி சுற்றுகிறது. காற்றாடி சுற்றினாலும் காற்று வீசுகிறது.

அதுபோல வெற்றி மகிழ்ச்சியை தருகிறது என்பது உலக விதி. மகிழ்ச்சியான மனநிலை வெற்றியை ஈர்க்கிறது என்பது ஆன்மீக விதி.

ஒரு வெற்றிக்காக இறைவனை வேண்டிய பின் அது கிடைத்தது போன்ற பாவனை செய்யுங்கள். அந்த வெற்றி கிடைத்த உடன் எத்தனை மகிழ்ச்சியோடு இருப்பீர்களோ அத்தனை மகிழ்ச்சியோடு இப்போதே இருங்கள். அந்த மனநிலை வெற்றியை இழுத்துக் கொண்டு வரும் என்பது ஆன்மீக ஞானிகளின் அறிவுரையாகும்.

மகிழ்ச்சியான மனநிலை வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு திறந்துகொள்கிறது.

5. செயல் இன்றி பலன் இல்லை:

செல்வம் வேண்டும், வாழ்வு செழிக்க வேண்டும், வான்புகழ் பெற வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று வாயால் பேசிக் கொண்டிருந்தால் போதுமா?

படிக்க வேண்டிய நேரங்களில் முயற்சி செய்து படித்தால் மதிப்பெண் வரும் காலங்களில் அதன் பலன் கை மேல் கிடைக்கும்.
செய்யும் செயலை நன்றாக செய்தால் அதற்கான பலன் நம்மை தேடிக்கொண்டு வரும்.

நிழலை நோக்கிச் சென்றால் நிழலை பிடிக்க முடியுமா? ஒளியை நோக்கிச் சென்றால் நிழல் நம் பின்னால் வரும்.

“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை”- திருக்குறள்

எங்கே ஊக்கமும் அதன் பலனான விடாமுயற்சியும் இருக்கிறதோ, அங்கே செல்வம் வழி கேட்டுக்கொண்டு வரும். யாரிடம் விடா முயற்சி இருக்கிறதோ அவனிடம் இறைவனின் அருள் இருக்கிறது. அங்கே வெற்றி தேவதை வசிக்கிறாள்.
“முயலும் வரை முயல்வதல்ல முயற்சி
முடியும் வரை இடைவிடாமல் முயல்வதே முயற்சி”- எங்கோ கேட்டது

எங்கே இந்த விடா முயற்சி இருக்கிறதோ, அங்கே அதிர்ஷ்ட வாசல் திறந்து கொள்கிறது.

6. தரம் வளம் தரும் (சமரசம் செய்யாத தரம்)

“நிறைய வேலை செய்யாதீர்கள், ஆனால் நிறைவாக வேலை செய்யுங்கள் குறைவாக வேலை செய்யுங்கள், ஆனால் குறையில்லாமல் செய்யுங்கள்.”

அமைதியான மனதுடன் தெளிந்த சிந்தனையுடன் மிகுந்த நம்பிக்கையுடன் முக மலர்ச்சியுடன் அளவில்லா ஆர்வத்துடன் செய்யும் காரியங்கள் சிறக்கின்றன. சாதனைகளாகின்றன.

அநேகர் இந்த சம்பளத்துக்கு இந்த வேலை போதும், இந்த மனிதர் கொடுக்கும் பணத்துக்கு இந்த அளவு வேலை செய்தால் போதும் என்று தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள். இப்படி செய்வதால் அவர்களது தரம் தானாக கீழே இறங்குவதை அவர்கள் அறிவதில்லை.

ஆரம்ப காலங்களில் ஊதியம் குறைவாக இருந்தாலும், அதனால் நாம் சிரமப்பட்டாலும் தப்பில்லை. நம் தரம் மட்டும் எக்காரணம் கொண்டும் குறையக் கூடாது.

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்கு இசை அமைக்கும் முன் விளம்பரங்களுக்கு இசை அமைத்தார். சின்ன விளம்பரம் தானே என்று நினைக்காமல் அதையும் சிறப்பாக செய்தார். அந்த சிறிய விளம்பரங்களில் தன் முத்திரையை பதித்தார். அது மிகச் சிறப்பாக இருப்பதை கண்டு மணிரத்னம் அவரை ரோஜா படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் அவர் தன் தளரா முயற்சியில் உலகளாவிய சாதனை படைக்கிறார்.

சரவண பவனில் ஆரம்ப காலங்களில் கையைக் கடித்தாலும் பரவாயில்லை என்று குறைந்த விலைக்கு உணவுகளை வழங்கிய போதுகூட சுவையிலும் சுத்தத்திலும் எந்த குறையும் வைக்கவில்லை. இதனால் ஆரம்ப காலங்களில் அவருக்கு தினமும் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. காலம் செல்ல செல்ல சரவண பவனின் சுத்தமும், சுவையும் யாவரையும் கவர்ந்தது. இன்று அதன் சாதனை உலகளாவியது.

ஜெப்ரி ஆர்ச்சர், சிட்னி செல்டன் (Jeffery Archer, Sydney Sheldon) போன்ற ஆங்கில எழுத்தாளர்கள் தங்கள் கதைகளை சுமாராக ஏழு தடவையில் இருந்து பதினான்கு தடவைகள் மீண்டும் மீண்டும் திருத்தி எழுதுவார்களாம். அதனால் அவர்கள் கதைகள் சிறப்புற்று விளங்குகின்றன.

சில வேளைகளில் நம் செயல்கள் சிறப்பாக இருந்தாலும் சாமானியர்கள் அதன் மதிப்பை உணராதவர்களாக இருப்பார்கள்.

வைரத்திற்கும் சாதா கற்களுக்கும் உள்ள வேறுபாடுகளை புரிந்துகொள்ள முடியாத மாறுபட்ட மனிதர்கள் மத்தியில் நாம் அறிந்து கொள்ளப்படாமல் இருக்கலாம், உயர்த்தப் படாமல் இருக்கலாம்.

ஆனால் வைரத்தின் தன்மைகளை அறிந்த வைர வியாபாரியின் கண்களில் நாம் படும்போது உண்மையான நிலைக்கு உயர்த்தப்படுவோம். அந்த நாளில் நாம் வைரம் போல் ஜொலிப்போம். அதுவரை பொறுமையாக உழைத்து காத்திருப்போம். அப்போது அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன.

7. பயனில செய்யாமை:

நாம் எந்தச் செயலைச் செய்தாலும் எதைப் பற்றி பேசினாலும் அதன் மூலம் நமக்கோ பிறர்க்கோ சமுதாயத்திற்கோ ஒரு நன்மையாவது இருக்க வேண்டும்.

நமது கையின் ஒரு விரலை நீட்டினாலும், மடக்கினாலும்கூட அதற்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

ஒரே ஒரு வார்த்தை பேசினாலும் கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும்.

ஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால்கூட அதற்கு ஒரு தேவை இருக்க வேண்டும்.

ஓர் எண்ணத்தை மனதினால் எண்ணினால் கூட அதற்கு ஒரு பொருள் இருக்க வேண்டும்.

பயனற்ற செயல்கள், பயனற்ற வீண் உரையாடல்கள், பயனற்ற சிந்தனைகள் இம்மூன்றும் நம் நேரத்தை நம் சக்தியை வீணடிக்கின்றன.
Watch your WAT (Words, Action and Thoughts)

நமக்கு சம்பந்தம் இல்லாத வெட்டியான அரசியல், கிரிக்கெட், சினிமா, அண்டை வீட்டார் பற்றிய கிசுகிசுக்கள் இவைகளை பற்றிய விஷய ஞானமும் இவைகள் பற்றிய உரையாடல்களும் நமது பொன்னான நேரத்தை மண்ணாக்கிவிடுகின்றன.

அநேகருக்கு தங்கள் வருமானத்தைக் கூட்டுவது சம்பந்தமான சிந்தனையோ, தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் குடும்ப நலன் பற்றிய எண்ணமோ இருக்காது. ஆனால் சினிமாக்காரர்களின், கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், அவர்களின் சாதனைப் பட்டியல்களும் அத்துப்படி.

நாம் எதை எதைச் செய்யவேண்டும், எதை எதைச் செய்யக் கூடாது என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.

இன்னும் சிலர் விவரம் இல்லாமல் புடம் போடப்பட்ட தெளிவான சிந்தனை இல்லாமல் பழக்கம் காரணமாக யாருக்குமே பயன்தராத ஏதேதோ செயல்களை காலம் காலமாக செய்து கொண்டிருப்பார்கள்.

தண்ணீரே வராத கடும் பாறையில் போய் கிணறு தோண்டிக் கொண்டிருப்பார்கள். நாம் ஒரு செயலைச் செய்யும் முன் நன்றாக திட்டமிட்டு தெளிவான நோக்கத்தோடு சீரிய சிந்தனையோடு செயல்பட வேண்டும்.

அப்போது அதிர்ஷ்ட வாசல் நமக்காக திறந்து கொள்கிறது.

8. இக்கரைக்கு அக்கரை பச்சை:

மாற்றான் வீட்டு மல்லிகையின் மணம் மட்டும்தான் அநேகரின் மனம் கவரும். தன் தோட்டத்து ரோஜாவின் அழகை ரசிக்கும் கண்கள் அவர்களுக்கு இருப்பது இல்லை.

நாம் வெறுப்பாக செய்து கொண்டிருக்கும் அதே தொழிலை மிகப்பெரிய வாய்ப்பாக கண்டு வாழ்வில் வெற்றி பெற்றவர் அநேகர். எந்த தொழில் சிறப்பாக இருக்கிறது என்று நாம் நினைக்கிறோமோ அதே தொழிலில் தோல்வி கண்டு தங்கள் வசந்த வாழ்வை இழந்தவர்கள் அநேகர்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அங்கும் இங்கும் அலையக் கூடாது. தான் இருக்கும் இடத்தில் பச்சையை (வாய்ப்பை) கண்டு கொள்பவன் புத்திசாலி.

9. விழிப்புணர்வு:
தங்கசாமி ஒரு முக்கியமான வேலையாக சில மைல்கள் தூரத்திலுள்ள பொன்னுசாமியை பார்க்க அவர் விட்டிற்கு மிதிவண்டியில் சென்றார். அதே வேளையில் பொன்னுசாமியும் தங்கசாமியைப் பார்க்க தங்கசாமி வீட்டிற்கு மிதி வண்டியில் சென்று கொண்டிருந்தார். வழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளவில்லை.

இப்போது தங்கசாமி பொன்னுசாமி வீட்டிலும், பொன்னுசாமி தங்கசாமி வீட்டிலும் ஒருவருக்காக ஒருவர் இரண்டு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நினைத்தபடி சந்திக்க முடியாததால் இருவரும் ஒரே வேளையில் அவரவர் வீட்டை நோக்கி திரும்புகிறார்கள்.

வழியில் இருவரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்கிறார்கள். அப்போதும் இருவரும் ஒருவர் கண்ணில் மற்றவர் படவில்லை. மீண்டும் அவரவர் வீட்டில் போய் சேர்கிறார்கள். நினைத்தபடி ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை.

நாம் அதிர்ஷ்டத்தை தேடி அலைகிறோம். அதுவோ நம்மை தேடி வருகிறது. வரும் அந்த அதிர்ஷ்டத்தை கண்டு கொள்ளும் அளவற்ற விழிப்புணர்வு நமக்கு இருப்பதில்லை. விழிப்புணர்வோடு இருப்பவர்கள் திட்டமிட்டு செயலாற்றுபவர்கள் அதிர்ஷ்ட வாசலை கண்டு கொள்கிறார்கள்.

10. தீய பழக்கங்கள்:

நாம் அலட்சியமாக நினைக்கும் சில தீய பழக்கங்கள் நம் வாழ்வில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

சின்ன நூலிலை போல படரும் அந்த தீய பழக்கங்கள், காலப் போக்கில் நம்மையறியாமல் உடைக்க முடியாத சங்கிலிபோல வலுத்து விடுகின்றன.
தீவிர முயற்சி எடுத்து தீய பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவதே அறிவுடைமை. நாம் தீய பழக்கங்களை கண்டு அஞ்சி ஓட வேண்டும். அதன் தீவிரத் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படி நாம் தீய பழக்கங்களில் இருந்து வெளியே வரும்போது அதிர்ஷ்டத்தின் கதவு நமக்கு திறந்துகொள்கிறது.

11. எல்லாம் நன்மைக்கே:

நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரலாம், சாதகங்களும், பாதகங்களும் மாறி மாறி வரலாம். அதில் துள்ளுவதோ, துவளுவதோ கூடாது. எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பார்ப்பான் புத்திசாலி.

வெற்றியும் தோல்வியும் வீரருக்கு அழகு தோல்வியைக் கண்டு பயந்து பின்வாங்குவோரால் வெற்றிக்கனி பறிக்க முடியாது.

தோல்வி என்றால் அரை கிணறு தாண்டி இருக்கிறோம் என்பதே பொருள். அதாவது தங்கத்திற்குப் பதில் வெள்ளி கிடைத்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கும்போது வெற்றிக்கனி நம் கைக்கு எட்டும்.

12. தடைகள் தகர்க்கப்பட வேண்டும்:

கோழிக் குஞ்சுகள், தங்கள் சிறு அலகுகளால் தன்னைச் சுற்றியுள்ள முட்டை ஓட்டை உடைத்துக்கொண்டு வெளிவருகின்றன.

விதைகள், தங்களை சுற்றியுள்ள தோலை கிழித்துக் கொண்டு பூமியை பிளந்துகொண்டு மேலே முளைத்தெழுகின்றன.

இலையைத் தின்றுகொண்டு ஒரே செடியில் ஊர்ந்துகொண்டு வாழும் புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கி அந்த கூட்டுக்குள் பல நாட்கள் உண்ணாமல் தவம் இருந்து, பின்பு அந்த கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே பறக்கிறது. பட்டாம்பூச்சியாக புதுப் பிறவி எடுக்கிறது.

நாம் உடைத்து வெளியேற வேண்டிய சில கூடுகள் அல்லது கோட்டைகள் என்ற தடைகள் நம் முன்னே இருக்கலாம். அவைகளை உடைத்து வெளிப்பட வேண்டும்.

எத்தனை பெரிய பலமான தடைகளை நாம் உடைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதனைகள் சரித்திரம் படைப்பதாக இருக்கும். ஆகவே என் முன்னே இருக்கும் கோட்டை பலமானதாக இருக்கிறதே, நான் தாண்ட வேண்டிய மலை மிக உயரமாக இருக்கிறதே என மனம் கலங்க வேண்டாம்.

துணிச்சலோடு மோதுங்கள். மனிதனால் தாண்ட முடியாத மலைகளோ, உடைக்க முடியாத கோட்டைகளோ உலகில் இல்லை. – தே. சௌந்தர்ராஜன்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum