தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இரகசிய இராணுவ நடவடிக்கையும் இந்தியாவின் பகிரங்கப் படுகொலைகளும் (பாகம்-7) –நிராஜ் டேவிட்

Go down

இரகசிய இராணுவ நடவடிக்கையும் இந்தியாவின் பகிரங்கப் படுகொலைகளும் (பாகம்-7) –நிராஜ் டேவிட் Empty இரகசிய இராணுவ நடவடிக்கையும் இந்தியாவின் பகிரங்கப் படுகொலைகளும் (பாகம்-7) –நிராஜ் டேவிட்

Post by இறையன் Sat Dec 17, 2011 12:18 pm

ஈழத்தமிழருக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் 1987 ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி முதல் ஒரு புதிய பரிணாமத்தைப் பெற ஆரம்பித்திருந்தது.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக அதுவரை இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளையே மேற்கொண்டுவந்த இந்தியா, அன்றைய தினம் முதல் ஈழத்தமிழருக்கு எதிரான படுகொலைகள் என்ற ஒரு புதிய அத்தியாயத்தை வரைய ஆரம்பித்தது.

ஈழத்தமிழர்களைக் காப்பாற்றப்போவதாகக்கூறி இலங்கை வந்த இந்தியப் படை வீரர்கள், கண்களில் அகப்பட்ட தமிழர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிய ஒரு கொடூர செயலைப் புரிய ஆரம்பித்திருந்தார்கள். புலிகளின் பூரண முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் யாழ் பிரம்படி ஒழுங்கையில் தளம் அமைத்திருந்த இந்திய பராக் கொமாண்டோக்கள், தமக்கு மேலிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவுகளின்படி கண்களில் அகப்பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்தார்கள்.

திருமதி விஸ்வலிங்கம் என்பவருடைய வீட்டில் தங்கியிருந்த பத்துப் பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அந்த வீட்டை அவர்கள் தமது தற்காலிக தளமாக ஆக்கிக்கொண்டு; அங்கு நிலை எடுத்திருந்தார்கள்.

காயப்பட்ட நிலையில் மணியம் என்பவர் தெரியாமல் அந்த வீட்டினருகே வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டார். அவரை உள்ளே அழைத்த இந்தியப் படைவீரர்கள், அங்கு அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.
மதிய வேளையில் தனது உறவினர் ஒருவரைத் தேடி அங்கு வந்த சோமசுந்தரம் என்பவரும் சுடப்பட்டார்.
தெரிந்தோ தெரியாமலோ திருமதி விஸ்வலிங்கத்தின் வீட்டைக் கடந்து சென்றவர்கள் அனைவருமே ஈவிரக்கம் இன்றிச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஸ்ரீலங்காப் படைகள் வழங்கிய உதவிகள்:
இதற்கிடையில் முற்றுகைக்குள் அகப்பட்ட இந்தியப் பராக் கொமாண்டோக்களுக்கு உதவியாக யாழ் கோட்டையில் இருந்து பரவலாக செல் தாக்குதல்கள் ஆரம்பமாகி இருந்தன. யாழ் கோட்டையில் இருந்து தொடர்ச்சியாக எறிகணைகள் ஏவப்பட்டபடியே இருந்தன. புலிகளின் கவனத்தைத் திசை திருப்பவும், புலிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தவும், செல்தாக்குதல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டபடியே இருந்தன. அந்த செல் மழையில் பல தமிழ் உயிர்கள் கொல்லப்பட்டன. பல வீடுகள் சேதமாக்கப்பட்டன. பலர் அங்கவீனமானார்கள்.
இந்த செல் தாக்குதல் விடயத்தில் வெளிவராத ஒரு உண்மையும் இருந்தது.

அதாவது இப்படியான ஒரு செல்தாக்குதலை மேற்கொண்டிருந்தவர்கள், கோட்டையில் இருந்த ஸ்ரீலங்காப் படையினர் என்பது, பின்நாட்களிலேயே தெரியவந்தது.
யாழ் கோட்டையினுள் தங்கியிருந்த இந்தியப்படையினரிடம் செல்கள் ஏதும் இருக்கவில்லை. அதேவேளை முற்றுகைக்குள் உள்ளாகி இருந்த இந்தியப்படையினரை உற்சாகப்படுத்த அப்பிரதேசத்தில் செல் தாக்குதல்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளுவதும் இந்தியப்படைத் தரப்புக்கு அவசியமாக இருந்தது. அதனால், இந்தியப்படை அதிகாரிகள் ஸ்ரீலங்காப் படையினரிடம் அந்த உதவியைக் கோரி இருந்தார்கள்.

ஷஒப்பரேஷன் லிபரேசன் நடவடிக்கையைத் தொடருவதற்கு உதவியாக ஏற்கனவே பெருமளவு செல்களை கோட்டையில் இருந்த ஸ்ரீலங்காப் படைகள் தமது களஞ்சியங்களில் சேமித்து வைத்திருந்தார்கள். இந்தியப் படைகளின் வருகையைத் தொடர்ந்து அவற்றைப் பாவிக்கும் நல்ல தருணம் கிடைக்காமல் அவர்கள் பொருமிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆவலைத் தீர்த்துவைக்கும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இந்தியப் படைத்துறைத் தலைமை வழங்கியதைத் தொடர்ந்து அவர்களது செல் தாக்குதல்கள் மிகுந்த உற்சாகத்துடன் மீண்டும் ஆரம்பமாகின.
யாழ்ப்பாணம் மீண்டும் செல்-வந்த(?) நாடாக மாற ஆரம்பித்தது.

புதிய திட்டம்:
புலிகளின் முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் நகரமுடியாதபடி பிரம்படி வீதியில் தற்காலிகத் தளம் அமைத்து தங்கியிருந்த இந்தியப்படை பராக் கொமாண்டோக்களை மீட்பதற்கு என்று ஒரு புதிய திட்டம் இந்தியப் படை அதிகாரிகளால் வகுக்கப்பட்டது. அந்த திட்டத்தின் விபரங்கள் சங்கேத வார்த்தைகளினுடாக பராக் கொமாண்டோக்களுக்கும் அறிவிக்கப்பட்டன. பராக் கொமாண்டோக்களை மீட்கும் பணி 12.10.1987ம் திகதி அதிகாலை 2 மணிக்கு ஆரம்பமானது.

அதிகாலை திடீரென்று வானில் தோன்றிய இந்தியப் படைக்குச் சொந்தமான ஹெலிக்கொப்டர்கள் 50 மி.மீ. இயந்திரத் துப்பாக்கியால் சகட்டுமேனிக்கு சுட்டுக்கொண்டு இங்கும் அங்கும் பறந்து திரிந்தன. ஹெலிக்கொப்டர்களில் இருந்து செல்களும் ஏவப்பட்டன. இந்தியப் படையினர் ஒரு புதிய தரையிறக்கத்தை மேற்கொள்வதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கான அனைத்து எத்தனங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தியப் படையினரின் தொலைத்தொடர்புச் சாதனங்களும், பிரம்படி ஒழுங்கைக்கு அருகில் உள்ள வீதிகளின் பெயர்களையும், தரையிறக்கத்தை மேற்கொள்ளுவதற்கு தோதான தரை அமைப்பைக் கொண்ட இடங்களின் பெயர்களையும் அடிக்கடி குறிப்பிட்டு, இந்தியப் படையினர் மற்றொரு தரையிறக்கத்தை மேற்கொள்ள இருப்பதாக புலிகளை நம்பவைக்கும் நடவடிக்கையில் இறங்கியிருந்தன.

இந்தியப் படையினரின் ஆரவாரங்களையும், பரிமாறப்பட்ட அவர்களது தொலைத்தொடர்பு பரிவர்த்தனைகளையும் அவதானித்த புலிகள், இந்தியப் படையினரின் புதிய தரையிறக்கம் ஒன்றை எதிர்கொள்ளுவதற்கு தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் இந்தியப் படையினர் தங்கியிருந்த கோட்டை முகாமில் இருந்தும் இந்தியப் படையினர் ஒரு நகர்வினை மேற்கொள்ள ஆரம்பிப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். அந்த நகர்வினை எதிர்கொள்ளவும் புலிகளின் ஒரு அணி அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் கவனத்தை பல திசைகளிலும் திருப்பிவிட்டு, இந்தியக் கமாண்டோக்களை மீட்பதற்கான ஒரு உண்மையான நகர்வினை மிகவும் இரகசியமாக இந்தியப் படையினர் மேற்கொண்டார்கள்.

புலிகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அந்த நகர்வு அமைந்திருந்தது.

இந்தியப் படையின் மேஜர் அனில்கவுல் என்பவர் தலைமையில் இந்தியப் படைக்குச் சொந்தமான இரண்டு யுத்தத் தாங்கிகள் காங்கேசன்துறை தளத்தில் இருந்து புறப்பட்டு தெற்கு நோக்கி நகர ஆரம்பித்திருந்தன. நள்ளிரவில் டாங்கிகளின் இரைச்சல் யாழ் மக்களுக்கு புதிதாக இருந்தது. புலிகளின் வாகன இரைச்சலாக இருக்கலாம் என்று எண்ணி மக்கள் அவ்வளவு அக்கறை காண்பிக்கவில்லை.

காங்கேசன்துறையில் இருந்து புகையிரதப்; பாதை வழியாகவே பயணம் மேற்கொண்ட அந்த இரண்டு யுத்தத்தாங்கிகளும் சந்தடியின்றி பிரம்படி ஒழுங்கையை வந்தடைந்தன.

ஏற்கனவே சங்கேத பாஷையின் மூலம் பரிமாறப்பட்டிருந்த அந்த மீட்பு நடவடிக்கை பற்றிய விபரத்தை அறிந்திருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்களும், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தில் இந்தியக் கொமாண்டோக்களின் அடுத்த கட்ட நடவடிக்கை மெதுமெதுவாக – அதேவேளை மிகவும் அழுத்தமாக எழுதப்பட்டது.

இரகசிய நடவடிக்கை
யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் ஒரு தற்காலிக தளத்தை அமைத்து நிலைகொண்டபடி புலிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டிருந்த பராக் கொமாண்டொக்களை மீட்பதற்காக, இந்தியப் படையினரின் இரண்டு யுத்த தாங்கிகள் காங்கேசன்துறை இராணுவ முகாமிலிருந்து புறப்பட்டன. வீதிகளில் புலிகள் சென்றி அமைத்து நிலைகொண்டபடி அனைத்து திசைகளிலும் இருந்து முன்னேற ஆரம்பித்திருந்த இந்தியப் படைகளின் பல்வேறு அணிகளையும் எதிர்த்துக் கடுஞ்சமர் புரிந்து கொண்டிருக்கையில், யுத்த தாங்கிகளின் மீட்பு நகர்வு மிகவும் இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டன.

அதேவேளை இந்த இரகசிய நடவடிக்கை பற்றிய விபரங்கள் சங்கேத மொழிகளில்; தொலைத்தொடர்பு கருவிகளின் ஊடாக பராக் கொமாண்டோக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர்களும் டாங்கிகளின் வருகையை எதிர்பார்த்து ஒரு பாதையில் நிலைகொண்டபடி தயார் நிலையில் இருந்தார்கள்.
காங்சேன்துறையில் இருந்து ரயில் பாதை வழியாக மெல்ல மெல்ல நகர்ந்த அந்த இரண்டு யுத்ததாங்கிகளும் பிரம்படி ஒழுங்கைக்கு அருகில் வந்ததும் திடீரென்று ஊருக்குள் திரும்பின.

நள்ளிருட்டு இந்த தாங்கிகளின் வருகையை மறைத்துவிட்டிருந்தது.
பல்வேறு திசைகளில் இருந்தும் யாழ்ப்பாணத்தை நோக்கிய இந்திய இராணுவத்தின் முற்றுகை நகர்வுகள் ஆம்பமாகி விட்டிருந்த நிலையில், புலிகளின் கவனம் முழுவதும் அந்த முன்நகர்வுகளை எதிர்கொள்வதிலேயே இருந்தன.

வானில் வட்டமிட்டபடி சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளிக்கொண்டிருந்த ஹெலிக்காப்டர்களை எதிர்கொண்டு சண்டையிடவேண்டிய தேவையும் புலிகளுக்கு உருவாகி இருந்தது. யாழ் கோட்டையில் இருந்து நிமிடத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் பொழியப்பட்டுக்கொண்டிருந்த செல் மழையில் இருந்து தப்பவேண்டிய கட்டாயமும் புலிகளுக்கு இருந்தது. ஏற்கனவே யாழ்க்குடாவில் ஆரம்பமாகி இருந்த மக்கள் இடப்பெயர்வுக்கு உதவவேண்டிய நெருக்குதல்களும் புலிகளது உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

அடுத்ததாக வானில் இருந்து மற்றுமொரு தரையிறக்கம் திடீரென்று இடம்பெறலாம் என்று எதிர்பாத்து புலிகளின் சில படையணிகள் பரவலாகவும் நிலைகொண்டு காத்திருந்தன.
புலிகளின் முக்கிய படையணிகளின் கவனம் பல்வேறு திசைகளிலும் திரும்பியிருந்த சந்தர்ப்பத்தில் சந்தடியில்லாமல் நகர்ந்து பிரம்படி ஒழுங்கையை வந்தடைந்த யுத்த தாங்கிகள் அங்கு தமது ருத்திர தாண்டவத்தை ஆரம்பித்தன.

இரயில் பாதையை அண்டி கட்அவுட் நிலை எடுத்திருந்த புலிகளின் ஒரு சிறு அணியால் முற்றிலும் இரும்பினாலான அந்த யுத்த தாங்கிகளின் நகர்வை எந்த விதத்திலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்களின் துப்பாக்கி வேட்டுக்கள் அனைத்தும் கடினமான உருக்கு இரும்பினாலான அந்த தாங்கிகளின் உடம்பில் பட்டுத் தெறித்தனவே தவிர பாதிப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தாங்கி வந்து சேர்ந்த இடம் எது என்று பார்ப்பதற்காக தனது தலையை வெளியே நீட்டிய மேஜர் அனில் கவுல் என்ற அதிகாரி சூட்டுக் காயத்திற்கு உள்ளாகி இருந்தார். அவரது ஒரு கண்ணில் காயம் ஏற்பட்டது. மற்றப்படி அந்த மீட்பு நடவடிக்கை இந்தியப் படையினருக்கு வெற்றிகரமானதாகவே அமைந்திருந்தது.

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய படையினர்
தமது உயிர்களைக் கைகளில் பிடித்தபடி பிரம்படி வீதிச் சுற்று வட்டாரத்தில் நிலையெடுத்திருந்த இந்தியப் பராக் கொமாண்டோக்கள், தமது மீட்பு உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் அதுவரை அடக்கி வைத்திருந்த தமது கோபத்தை அப்பிரதேச மக்களின் மீது செலுத்த ஆரம்பித்தார்கள்.
அங்கிருந்த வீடுகளை எரித்தார்கள். கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினார்கள்.
பிரம்படி வீதியை வந்தடைந்த யுத்த தாங்கிகள் சுமார் 40 நிடங்கள் வரை அப்பிரதேசத்தில் நின்றன. கொல்லப்பட்ட எட்டு இந்தியப் படைவீரர்களின் உடல்கள் மற்றும் படுகாமடைந்த ஆறு படைவீரர்கள் யுத்த டாங்களினுள்ளே ஏற்றப்பட்டும்வரை அங்கு கொடூரச் சம்பவங்கள் பல இடம்பெற்றன.

இந்திய இராணுவ வீரர்களால் தமது பாதுகாப்பிற்கென பணயக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டிருந்த பலரும் கயிற்றினால் பிணைக்கப்பட்டு தாங்கிகளின் சங்கிலிச் சில்லுகளின் கீழே கிடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் நசுங்கிச் சிதைந்தன.
ஏற்கனவே இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டவர்கள் மற்றும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களும் டாங்கிகளால் மிதித்து சிதைக்கப்பட்டார்கள்.
இந்தியப் படைக்கொமாண்டோக்களை ஏற்றிக்கொண்டு திரும்பிய டாங்கிகள் அங்கிருந்த சில வீடுகளையும், கட்டிடங்களையும் குண்டு வீசித் தகர்த்துவிட்டும் சென்றன.

பிணக் குவியல்களில் புலர்ந்த பொழுது:
மறுநாள் பொழுது பிணக் குவியல்களின் காட்சியாகவே புலர்ந்தது.
டாங்கிகள் வந்து சென்ற வீதிகள் முழுவதுமே பிணங்கள் சிதைவடைந்து சிதறிக் காணப்பட்ட காட்சி யாழ் மக்களுக்கு புதிதான ஒன்றாகவே இருந்தது.
ஸ்ரீலங்காப் படைகளுடனான இத்தனை வருட கால கொடிய யுத்தத்திலும், இதுபோன்ற ஒரு காட்சியை யாழ்மக்கள் காணவில்லை.
ஸ்ரீலங்கா விமாணங்களின் குண்டு வீச்சுக்கள், படுகொலைகள், சுற்றிவழைப்புக்கள், இனஅழிப்பு நடவடிக்கைகள் என்று எத்தனையோ அழிவுக் காட்சிகளை யாழ் மக்கள் பார்த்து அனுபவித்திருந்த போதிலும், அன்றைய நாளில் டாங்கிகளால் சிதைக்கப்பட்ட நிலையில் மனித உடல்கள் சிதறிக்கிடந்ததான அந்தக் காட்சி அவர்களுக்கு அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்துவதாகவே இருந்தது.
அதுவும் தங்களைக் காப்பதற்கென்று வந்திருந்த இந்தியப் படையினர் இப்படி ஒரு அட்டூழியத்தைச் செய்திருந்தார்கள் என்பதை அவர்களால் ஜீரனிக்கமுடியாமல் இருந்தது.

அப்பிரதேசத்தில் 40 இற்கும் மேற்பட்ட உடல்கள் டாங்கிகளினால் ஏற்றப்பட்டு சிதைந்து சின்னாபின்னமாகிப்போய் காணப்பட்டன.
அங்கும் இங்கும் சிதறிக்கிடந்த அந்த உடல்கள், உடலின் பாகங்கள், எஞ்சியிருந்த பிரதேசவாசிகளினாலும், சில விடுதலைப் புலி உறுப்பினர்களாலும் சேகரிக்கப்பட்டு ஒரு இடத்தில் குவிக்கப்பட்டு ஏரியூட்டப்பட்டன.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இந்தியப் படையினரின் படுகொலைகள் அன்றுடன் முடிந்துவிடவில்லை. இந்தியப் படைகள் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த அந்த இரண்டு வருட காலப்பகுதிகளிலும் அவை தொடரவே செய்தன.
அன்று எரிக்கப்பட்ட அந்தப் பிணக் குவியல்கள், அடுத்த சில நாட்களில் இந்தியப் படையினர் ஈழ மண்ணில் ஆட இருந்த கோரதாண்டவம் பற்றிய செய்தியை முன் அறிவித்தபடி எரிந்துகொண்டிருந்தது.
தொடரும். nirajdavid@bluewin.ch

இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அம்பலத்திற்கு வந்த இரகசிய இராணுவ நடவடிக்கை- (அவலங்களின் அத்தியாயங்கள்-3) –நிராஜ் டேவிட்
» அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம்-1) –நிராஜ் டேவிட்!
» பொட்டம்மான் படுகாயம்..(அவலங்களின் அத்தியாயங்கள்- பாகம்-6) –நிராஜ் டேவிட்
» ஒப்பரேஷன் பவான் இராணுவ நடவடிக்கை (அவலங்களின் அத்தியாயங்கள்- 4) நிராஜ் டேவிட்
» முதியவர்களை கொலைசெய்த இந்தியக் கொலைகாரர்கள் (அவலங்கள்- 9) –நிராஜ் டேவிட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum