தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உலகின் ஆதிமொழி தமிழா? -அரவிந்தன் நீலகண்டன்

Go down

உலகின் ஆதிமொழி தமிழா? -அரவிந்தன் நீலகண்டன்  Empty உலகின் ஆதிமொழி தமிழா? -அரவிந்தன் நீலகண்டன்

Post by இறையன் Mon Dec 19, 2011 11:29 pm

லெமூரியா! கடல் கொண்ட குமரிக் கண்டம்! திராவிடக் கதையாடலில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு விஷயம். அண்மையில் முதல்வர் மு. கருணாநிதிகூட இதைக் குறித்துப் பேசியிருக்கிறார். தமிழ் பொதுப்புத்தியில் லெமூரியா குறித்து ஏறியிருக்கும் சித்திரத்தை இப்படிச் சொல்லலாம்:

குமரிக்கண்டம் ஒரு மிகப்பழமையான நிலப்பரப்பு. அங்கு தமிழன் தோன்றினான். அவனே உலகின் முதல் மனிதன். அவனே உலகின் அனைத்துப் பண்பாடுகளுக்கும் முன்னோடியான பண்பாட்டை உருவாக்கினான். தமிழிலிருந்தே அனைத்து மொழிகளும் தோன்றின. இவற்றையெல்லாம் பின்னாள்களில் வந்த ஆரியச் சதிகாரர்கள் மறைத்துவிட்டார்கள்.

வைகோ முதல் முதலமைச்சர் முக வரை, தேவநேயப் பாவாணர் முதல் அப்பாதுரைவரை முன்வைக்கும் சித்திரம் இதுதான்.

ஒரு அறிவியல் புனைவு லாகவத்துடன் இதற்கு அப்பாலும் போகக்கூடிய கற்பனையாளர்கள் உண்டு. உதாரணமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘குமரி மைந்தன்’ எனும் ஆராய்ச்சியாளரைக் குறிப்பிடலாம். குமரிக்கண்டக்காரர்கள் வெறுமனே மூதாதைகள் மட்டுமல்ல. அறிவியல் வல்லுனர்கள். ஆகாய விமானங்களை அப்போதே கண்டுபிடித்தவர்கள். விண்வெளிப் பயணம் மேற்கொள்ளத்தக்க தொழில்நுட்பத் திறனாளிகள். உலகெங்கும் பறந்து பண்பாட்டைப் பரப்பியவர்கள். உலகின் மற்ற பாகங்களில் வாழ்ந்த பண்பாடில்லாத மக்களுக்குப் பண்பாட்டையும் தொழில்நுட்பத்தையும் இவர்கள் அளித்தமையால் இவர்களை அம்மக்கள் ‘கடவுள்களாக’ வணங்கினர். இது குமரிமைந்தன் அளிக்கும் சித்திரம்.

2008-ல் இண்டர்நெட்டில் வெளியான தமிழ் கட்டுரைத் தொடர் ஒன்றில் லெமூரியா மக்கள் குறித்துப் பின்வரும் துல்லியமான சித்திரம் அளிக்கப்படுகிறது:

தோழி! லெமூரியா மக்கள் ஏழு அடிவரை உயரமாக இருந்திருக்கிறார்கள். உடலின் எடை மிகமிக அதிகம். கைகள் நீளமாக, பெரியதாக, சதைப்பற்று மிக்கதாக இருந்திருக்கிறது. கால்கள் இதற்கு ஏற்றதுபோல நீளமாக இல்லை. ஆனால் வலுவாகத் திரண்டு இருந்திருக்கின்றன. தலைமுடியைப் பின்னியிருந்தனர். இக்கால மனிதனைவிட அவர்களின் விரல்கள் நுண்ணிய வேலைகள் செய்யக்கூடிய அளவுக்கு இருந்தன. அவர்கள் உடலில் அதிசயமான விஷயம் நெற்றி. அது அகன்று உயர்ந்திருந்தது. மூக்குக்கு மேல் பாதாம் பருப்பு போல – நெற்றி நடுவில் ஒரு புடைப்பு இருந்தது. இது மூன்றாவது கண் எனப்படுகிறது. இது முக்காலங்களை, பிறர் எண்ணங்களை, தொலை நிகழ்ச்சிகளை அறியும் அறிவுக்கண் என்கிறார் அறிஞர் கார்லே.

இவற்றுக்கெல்லாம் ஆதாரம்? அபிதான சிந்தாமணியிலிருந்து எரிக் வான் டானிகன்வரை. கூடவே தமிழ்ப் பற்றையும் சம்மான அளவில் விரவிவிட்டால் நீங்கள் கேள்வி கேட்க முடியாது. கேட்டால், தங்களை ஆரியர்கள் என நினைக்கும் வடபுல சதிகாரர்களின் சதிவலைக்குள் அகப்பட்டுவிட்டவர்கள் ஆகிவிடுவீர்கள் நீங்கள். ஆனால் லெமூரியா குறித்த விஷயங்கள் எல்லாமே பொன்னுலகக் கற்பனைகள்தானா? எதிர்பார்ப்பு கலந்த ஊகங்கள் மட்டும்தானா? இவற்றிலெல்லாம் எந்த அளவு உண்மை இருக்க முடியும்? எந்த அளவு அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் இவை குறித்து மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன? இன்றைய தேதியில் இந்த விஷயம் குறித்து மிகவும் அறிவியல்பூர்வமாக எழுதப்பட்ட ஒரே தமிழ் நூல் சு.கி. ஜெயகரன் எழுதிய ‘குமரி நிலநீட்சி’ என்கிற நூல்தான். நிலவியலாளரான ஜெயகரன் ஏற்கனவே ‘மூதாதையரைத் தேடி’ என்னும் நூலின் மூலமாகத் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர்தாம். அவரது சகோதரர் தியோடர் பாஸ்கரன் என்றால் இன்னும் பரிச்சயமானவராகத் தெரிவார் ஜெயகரன்.

மிகுந்த அக்கறையுடன் பண்டைய இலக்கிய நூல்களில் உள்ள தரவுகளையும் நிலவியல் தரவுகளையும் நம் புவியின் பரிணாம வரலாற்றையும் இணைத்து, குமரி நில நீட்சியின் உண்மை என்ன என்பதை அவர் அறிய முயன்றிருக்கிறார். எப்படி ஐரோப்பியக் காலனியாதிக்கத்தின்போது அவர்களின் இனவாதக் கோட்பாடுகளும் மதநம்பிக்கைகளும், இந்த லெமூரியக் கண்டம் என்கிற கருத்தாக்கம் உருவாகப் பங்களித்தன என்பதையும், இதனுடன் எப்படி நம் பண்டைய இலக்கியங்களில் இருந்த சில நினைவுகள் இணைக்கப்பட்டு இன்று நாம் காணும் குமரிக்கண்டக் கோட்பாடு உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் விவரிக்கிறார். பிரம்ம ஞான சபையின் கட்டற்ற கற்பனைகளும் தமிழ்த் தேசியவாதிகளின் பிரசாரத் தேவைகளும் லெமூரியாவின்/ குமரிக்கண்டத்தின் வரைபடங்களைக்கூட உருவாக்கின. உதாரணமாக, புலவர் குழந்தை தமது ‘இராவண காவியம்’ என்கிற நூலில் அளித்த வரைபடம், தென்மேற்கே மடகாஸ்கர் வரையிலும் தென்கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் பரவியிருந்த ஒரு பெரும் நிலப்பரப்பைக் காட்டியது.

ஜெயகரன் பண்டைய தரவுகளை முழுக்க கற்பனை எனத் தள்ளவில்லை என்பது முக்கியமானது. அவை மிகைப்படுத்தப்பட்ட, ஆனால் உண்மையான ஒரு பேரழிவின் நினைவிலிருந்து உருவாகியிருக்கலாம் என ஊகிக்கிறார். அது எத்தகைய நிகழ்வு? மானுடப் பண்பாட்டின் எந்தக் காலகட்டத்தில் அது நிகழ்ந்திருக்கவேண்டும்?

குமரிக்கண்டம் போலவே மேற்கத்திய நாடுகளின் தொன்ம நினைவாக விளங்குவது அட்லாண்டிஸும் அதன் அழிவும். பிளேட்டோவின் குறிப்புகளிலிருந்து முளை விட்டு, பின்னர் பெரும் தொன்ம நினைவாக ஐரோப்பிய மனத்தை அது ஆக்கிரமித்து நிற்கிறது. இன்றைக்கும் அதனைத் தேடுகின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். மேற்கத்திய உலகின் பெரும்பாலான மறைஞான நம்பிக்கையாளர்களின் குறுங்குழுக்கள் – கல்ட்கள் – அட்லாண்டிஸைத் தம் தாயகமாகச் சொல்லிக்கொள்கின்றன. ஆனால், திரா தீவு ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைச் சீற்றத்தில் அழிந்த நிகழ்ச்சியே இந்த அட்லாண்டிஸ் தொன்மமாக மாறியிருக்கலாம் என தீவிரமான ஆராய்ச்சியாளர்கள் பலர் கருதுவதை ஜெயகரன் சுட்டுகிறார். இதைப் போல குமரி நிலநீட்சியின் அழிவு குறித்த தொன்மத்துக்கும் மைய வரலாற்று நிகழ்ச்சி இருக்கலாம் அல்லவா? அதை அவர் தேடுகிறார்.

பல அறிவியல் தரவுகளின் அடிப்படையில் பின்வரும் ஊகத்தை ஜெயகரன் முன்வைக்கிறார்:

பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் உலகம் இறுதியாகச் சந்தித்த பெரும்-பனிக்காலம் நிலவியது. அப்போது கடல் நீர் மட்டம் கணிசமாகத் தாழ்ந்திருந்தது – இன்றைக்கு இருப்பதைவிட 150—100 மீட்டர் தாழ்வாக இருந்தது. கண்டங்களின் கடலடித் தொடர்ச்சியான நிலப்பரப்புகள் பல அப்போது நீர்மட்டத்துக்கு மேலே இருந்தன. அவ்வாறு இலங்கையையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் நிலப்பரப்புகள் மேலே இருந்தன. ஆனால் அடுத்த எட்டாயிரம் ஆண்டுகளாக மெல்ல பூமி வெப்பமடைந்தது. பெரும் பனிப்பாறைப் பரப்புகளாக இருந்த நீர் உருக ஆரம்பித்தது. நீர் மட்டங்கள் உயரலாயின. பல நிலப்பரப்புகள் நீரில் அமிழ்ந்தன. அவ்வாறு அமிழ்ந்தவற்றில் இலங்கை இந்தியப் பிணைப்பு நிலப்பகுதிகளும் அடங்கும். இந்த நிகழ்ச்சியே நம் நினைவில் கடல் கொண்ட குமரி நிலநீட்சியாகப் பதிந்தது.

இது ஜெயகரன் முன்வைக்கும் ஊகம். அப்படியானால் சுமார் பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கடலுக்கு வெளியே இருந்த நிலப்பரப்பு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்? ஜெயகரன் கூறுகிறார்: “அன்று நிலப்பரப்பாக இருந்த இன்றைய பாக் நீரிணைப்பகுதி, வடகிழக்காக 250 கிமீ நீளமும் தென்மேற்காக 150 கிமீ அகலமும் கொண்டதாக இருந்தது.” தென்னிந்தியாவையும் இலங்கையையும் அன்று இணைத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 36,000 சதுர கிமீ. இது கணிசமான நிலப்பரப்பு என்பதைக் கவனிக்கவும். கன்னியாகுமரிக்குத் தெற்கேயும் கிழக்கேயும் மேற்கேயும் 80 கிமீ தள்ளி கடல் அமைந்திருந்தது. அதாவது கன்னியாகுமரியையும் தாண்டி தெற்கே ஏறத்தாழ 6500 சதுர கிமீ நீளம் அகன்றிருந்தது.

அங்கு எத்தகைய தாவரங்கள் இருந்தன, எத்தகைய விலங்கினங்கள் வாழ்ந்தன என்பதையெல்லாம், ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டும் முடிவுகளின் மூலம் விவரிக்கிறார். அவற்றைச் சேகரித்து உண்ட, வேட்டையாடிய மானுடச் சிறு குழுக்கள் அங்கு வாழ்ந்திருக்கவேண்டும். அவர்களே நம் மூதாதையர். அவர்களே இந்த நிலப்பரப்புகள் மூழ்கியதைக் குறித்த தொல்நினைவுகளைச் சுமந்து வந்திருக்கவேண்டும். அந்நினைவுகள் பின்னர் இலக்கியங்களில் தொன்மங்களாகப் பரிணமித்தன. சென்ற நூற்றாண்டில் கண்டம் என்று ஆக்கப்பட்டது. கறாரான அறிவியல் தரவுகளின் அடிப்படையில் இந்த ஊகங்களை உருவாக்கி முன்வைக்கிறார் ஜெயகரன். இதன் விளைவாக ஆஸ்திரேலியாவுக்கும் மடகாஸ்கருக்குமாகப் பரந்து விரிந்திருந்த குமரிக்கண்டம் குறித்த கற்பனை நிலப்பரப்பு குறைந்திருக்கலாம். அரசியல் நோக்கம் கொண்ட அதீதக் கற்பனைக் கதைகளும் சுருங்கியிருக்கலாம். ஆனால், குமரி நிலநீட்சி குறித்த நம் அறிவியல் அறிதல் கணிசமாக முன்னகர்ந்திருக்கிறது.

ஆனால் இத்தகைய ஆராய்ச்சிகளின் முன்னேற்றங்களில் தேவையற்ற குறுக்கீடுகளை உருவாக்குவது கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளின் அறிக்கை. அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் லெமூரியாதான் மனிதர்கள் உருவான இடம் என்று கருணாநிதி அறிவித்திருக்கிறார். அத்துடன் இது திராவிட இனப் பண்பாடு என்றும், இதனைப் பகுத்தறிவற்ற ஆரிய இனத்தின் பண்பாட்டிலிருந்து வேறுபடுத்தவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அண்மைக்கால ஆராய்ச்சிகள் குறித்து வயது முதிர்ந்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு எவ்வித அறிதலும் இல்லாதததை ஒரு தவறு எனச் சொல்லமுடியாது. ஆனால், குறைந்தது அறிவியலின் பாதை எத்தகையதாக இருக்கிறது என்பது குறித்த ஓர் அடிப்படை அறிவையாவது தன்னைப் பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொள்பவர்களிடமிருந்து தமிழகம் எதிர்பார்க்கிறது. அதிகாரத்தின் பீடத்தில் இருக்கும் ஓர் அரசியல்வாதி, 19-ம் நூற்றாண்டு கற்பனைகளையும் இனவாதக் கோட்பாடுகளையும் அறிவியல் என்றும் பகுத்தறிவு என்றும் முன்வைக்கும் அபத்தச் சூழலை, துரதிர்ஷ்டவசமாக தமிழகம் காணவேண்டியுள்ளது. ஆனால் இத்தகைய பகுத்தறிவற்ற அரசியல் முழக்கங்களைப் புறந்தள்ளிவிட்டு முன்னகர வேண்டியது தமிழனுக்கு ஏற்பட்டிருக்கும் மற்றொரு கடமைச்சுமை.

ஏனெனில் மரபணுவியலும் தொல்-மானுடவியலும் ஆப்பிரிக்காவிலிருந்து மானுடர்கள் உதயமானது முதல் அவர்களின் பரவுதலையும் புலப்பெயர்வுகளையும் மிகுந்த கவனத்துடன் ஆராய்ந்துவருகின்றன. இந்தச் சர்வதேச ஆராய்ச்சியில் தமிழகம் முக்கியமான பங்கை ஆற்றவேண்டியுள்ளது.

ஜெயகரன் முன்வைக்கும் ஊகம் இறுதி விடையல்ல. அது அறிவியல் தரவுகள் சார்ந்து முன்வைக்கப்படும் ஊகம். நாளைக்கு விரிவானதொரு தொல்-கற்கால நாகரிகமோ, அற்புதமான குகைச்சித்திரங்களை உருவாக்கிய ஒரு நாகரிகமோ, கடலடியிலிருந்து கிடைக்கலாம். ஆனால் சில விஷயங்களை நிச்சயமாக உறுதியாகக் கூறமுடியும். குமரிக்கண்டம் என்று மடகாஸ்கரையும் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. அதில் அணு ஆயுத, வானூர்தித் தொழில்நுட்பங்களும் இருக்கவில்லை. நெற்றிக்கண் புடைப்பால் முக்காலமும் அறியும் மனிதர்களும் வாழவில்லை. ஆனால் அதைவிட சுவாரசியமான விஷயங்கள் தொல்-வரலாற்றில் நிகழ்ந்திருக்கக்கூடும் என மரபணுவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஸ்டீஃபன் ஓபன்ஹெய்மர் குழந்தை நல மருத்துவர். மரபணு ஆராய்ச்சிகளில் தேர்ச்சி பெற்றவர். பல காலம் தென்கிழக்காசியப் பகுதிகளில் பணியாற்றியவர். இவர் முன்வைக்கும் சில அறிவியல் ஊகங்கள் உண்மையிலேயே குமரிக்கண்டக் கோட்பாட்டாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வண்ணம் உள்ளன. தென்கிழக்காசியப் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்து, அது மூழ்கியிருக்கலாம் என அவர் கருதுகிறார். இந்த நிலப்பரப்பு குமரிக்குத் தெற்கே இல்லை. மாறாக தென்கிழக்கே தொலைவில் இன்றைய மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றை இணைப்பதாக இருந்திருக்கக்கூடும் என அவர் கருதுகிறார்.

இன்றைக்கு 14,000 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது நிலவியலாளர்கள் ப்ளிஸ்டோஸீன் என்கிற நிலவியல் காலகட்டத்தின் இறுதித் தருணங்கள் எனக் கருதும் காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் உலகெங்கும் கடல்மட்டம் வேகமாக உயர்ந்து, பெரும் வெள்ள அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். கரையோரப் பகுதிகளில் இருந்த மக்கள் புலம் பெயரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும் 11,500 ஆண்டுகளுக்கு முன்னால் மற்றொரு கடல் மட்ட உயர்வும் வெள்ள அழிவும்; பிறகு, மீண்டும் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல். உலகமெங்கும் இந்த நீர்மட்ட உயர்வுகள் கரையோர மக்களுக்கு அழிவையும் புலம்பெயர்வுக்கான கட்டாயத்தையும் ஏற்படுத்தின. ஆனால், தென்கிழக்கு ஆசியாவில் இருந்ததாகத் தான் ஊகிக்கும் பெரும் நிலபரப்புதான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு என்கிறார் ஓபன்ஹெய்மர்.

பெரும் நீர் அழிவுகளால் பாதிக்கப்பட்ட இம்மக்கள் கடல் பயணத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இவர்கள் தொல்-கற்காலத் தொடக்கநிலைத் தொழில்நுட்பத்தையும் பண்பாட்டையும் பரப்பினார்கள் என்பது ஓபன்ஹெய்மரின் வாதம். இவர் தனது வாதத்துக்குப் பெரும் துணையாக முன்வைப்பது மரபணுவியல் தரவுகளை. ஆனால் ஓபன்ஹெய்மர் மிகவும் மேலோட்டமாகத் தெரியும் தரவுகளையே தமிழக தொல்-பழங்காலம் குறித்து முன்வைக்கிறார். அவரை இதற்காக நாம் குறை சொல்லமுடியாது. நெற்றிக்கண் லெமூரியர்கள் என்று தொடங்கி, ஆதி மனிதன் லெமூரியன்தான் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் யார் நம்மை சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள்!

ஓபன்ஹெய்மர் மற்றொரு முக்கிய விஷயத்தை முன்வைக்கிறார். ஆப்பிரிக்காவில் 1,60,000 ஆண்டுகளுக்குமுன் தோன்றிய மானுடத்தின் முக்கியக் கிளை (ஆப்பிரிக்காவிலிருந்து வெளியே புலம்பெயர்ந்த கிளை) 85,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியக் கடற்கரை வழியாகத் தென்கிழக்காசியா வரை வந்தடைந்திருந்தது. அப்போது மிகப்பெரிய அழிவு ஒன்று சம்பவித்தது. 74,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோபா என்கிற சுமத்திரா தீவின் எரிமலை வெடித்தது. கடந்த 20 லட்சம் ஆண்டுகளின் மிகப்பெரிய இயற்கை அழிவு நிகழ்ச்சி இதுவே ஆகும். எரிமலை சாம்பல்கள் சூரிய ஒளியை மிகப்பெரும் பரப்புக்கு மறைத்தன. பெருங்குளிர் யுகம் ஒன்று ஆரம்பித்தது. இங்கு கிளை பரவியிருந்த மானுடத்தை இப்பேரழிவு பெருமளவு அழித்தது. இந்திய மூதாதை மரபணுத் தனித்தன்மைகளுக்கு இந்தப் பேரழிவு காரணமாக இருந்தது என்கிறார் ஓபன்ஹெய்மர். பின்னர் இந்தியாவில் மீள் குடியேற்றமும் ஏற்பட்டது.

ஜெயகரனின் அறிவியல் ஊகங்களும் ஓபன்ஹெய்மரின் ஊகங்களும் இணைத்துப் பேசப்படவேண்டியவை. ஜெயகரனின் நூல் ஆங்கிலத்தில் வந்திருந்தால் ஓபன்ஹெய்மரின் நூலைப் போன்றே அது சர்வதேசப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். ஓபன்ஹெய்மருக்கு ஒரு மேற்கத்திய ஆராய்ச்சியாளருக்கேயான பல வசதிகள் உண்டு. ஜெயகரன் சர்வதேச அளவில் தலைசிறந்த நிலவியலாளர்களில் ஒருவரே என்றாலும், ஓபன்ஹெய்மருக்குக் கிடைக்கும் வசதிகளோடு ஒப்பிட்டால், ஜெயகரனுக்குக் கிடைக்கும் வசதிகள் குறைவு. ஊடக ஒளிவட்டங்களும் குறைவு. (ஆனால் ஒப்பீடளவில் ஜெய்கரனின் நிலைப்பாடுகள் மிகவும் கவனமாகவும் அதிக அறிவியல் கறார் தன்மையுடனும் இருக்கின்றன. ஓபன்ஹெய்மரின் தரவுகள் விரிவானவையாகவும், மரபணுவியல் தரவுகளை அதிகம் பயன்படுத்துவதாகவும் உள்ளன. இது எனது தனிப்பட்ட அவதானிப்பு.)

அண்மையில் ஒரு செய்தி 80,000 ஆண்டுகள் பழமையான கற்காலக் கருவிகள் காஞ்சிபுரத்தின் அருகில் கிடைத்துள்ளதாகக் கூறுகிறது. சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ வித்தியாலயாவின் பண்பாடு மற்றும் சமஸ்கிருதத் துறையைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் பேராசிரியர் ராமகிருஷ்ண பசுபதி இந்த ஆதி கற்காலக் கருவிகள் 100,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கக்கூடும் என்று கணக்கிடுகிறார். எனில் அவை தோபா எரிமலை நிகழ்வுக்கு முன்னர் அல்லது அந்த நிகழ்வின் கடுமையை அனுபவித்த மக்கள் பயன்படுத்தியவையாக இருக்கக்கூடும்.

தொல்-கற்கால மானுடம் நாம் நினைத்ததைக் காட்டிலும் விரிவான பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்ததா என்பது சுவாரசியமான கேள்வி. 20,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்களில் வானியல் தரவுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பின்னர் எழுந்த இலக்கியங்களான ரிக்வேதம் போன்றவற்றில் தொல்-கற்காலத்தைச் சார்ந்த சில வானியல் சுழல்கள் குறித்த தரவுகள் பதிவாகியுள்ளன. எனில் ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி இருக்கிறதா? ஆஸ்திரேலியப் பழங்குடிகளுடன் தென்னிந்திய மக்களுக்கும் அந்தமான் பழங்குடிகளுக்கும் உறவுகள் இருக்கின்றனவா? நம் பண்டைய இலக்கியங்கள், மரபணுவியல், நிலவியல் அனைத்துமாக இணைந்து ஒரு பெரும் மர்மத்தை மெல்ல மெல்ல முடிச்சவிழ்கின்றன. இன்றைய தமிழர்களுக்கு நிச்சயமாக அந்தச் சித்திரத்தில் பெரும் பங்கு இருக்கும். ஆனால் நம் அரசியல் சித்தாந்த அசட்டு மிகைக் கற்பனைகளின் சட்டகங்களுக்குள் அவை அடங்காது.

மேலதிக விவரங்களுக்கு:

* சு.கி.ஜெயகரன், குமரி நிலநீட்சி, காலச்சுவடு, 2002
* ஸ்டீபன் ஓபன்ஹெய்மர், Eden in the East: The Drowned Continent of Southeast Asia, Phoenix, 1999
* ஸ்டீபன் ஓபன்ஹெய்மர் முன்வைக்கும் மானுடகுலத்தின் தோற்றமும் பரவலும் குறித்த ஒரு பார்வை: ஓர் அருமையான கிராபிக்ஸ் உருவாக்கம்: http://www.bradshawfoundation.com/journey/
* மேலே கூறப்படும் நிகழ்வுகளில் நமக்கு முக்கியமான பகுதிகளின் விளக்கங்கள் இந்தச் சுட்டிகளில் உள்ளன:
* http://www.bradshawfoundation.com/journey/beach2.html
* http://www.bradshawfoundation.com/journey/australia2.html
* Evidences of Human activities since Early Stone Age at Kanchipuram, Archeology Daily News, 12-மார்ச்-2009
* http://www.archaeologydaily.com/news/20090312744/Evidences-of-Human-activities-since-Early-Stone-Age-at-Kanchipuram.html
* தெய்வத்தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே: http://www.andhimazhai.com/news/viewmore.php?id=8443
* எப்படி பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆராய்ச்சி போல் கோர்த்து அளிக்கிறார்கள் குமரிக்கண்ட ஆராய்ச்சியாளர்கள் என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டு: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20504083-edition_id=20050408&format=html

source tamilpaper.net

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum