தமிழ் மக்கள்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நம்பக் கூடாத கடவுள்-அரவிந்தன் நீலகண்டன்

Go down

நம்பக் கூடாத கடவுள்-அரவிந்தன் நீலகண்டன்  Empty நம்பக் கூடாத கடவுள்-அரவிந்தன் நீலகண்டன்

Post by இறையன் Mon Dec 19, 2011 11:38 pm

“நீங்கள் இறைவனை நம்புகிறீர்களா?”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனிடம் கேட்கப்பட்ட கேள்வி. கேட்டவர் ஒரு முக்கியமான யூத மத குரு.1929ம் ஆண்டு இந்த முக்கியமான கேள்வியை அவர் ஐன்ஸ்டைனுக்கு ஒரு தந்தியாக அனுப்பியிருந்தார். ஐன்ஸ்டைன் பதிலளித்தார்: “என் கடவுள், ஸ்பினோஸாவின் கடவுள். அக்கடவுள் உலகின் பேரொழுங்கில் தன்னை வெளிப்படுத்துபவர். தனி மனிதர்களின் விதிகளையும் கண்காணித்துக்கொண்டிருக்கும் ஓர் இறைவனல்ல.”

ஸ்பினோஸாவின் கடவுள்! யார் அந்த ஸ்பினோஸா?

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தத்துவஞானி பாரூக் ஸ்பினோஸா.

1632. கத்தோலிக்க சபை கலிலியோவை இரண்டாவது முறையாக புனித விசாரணைக்கு அழைத்து அவரை மண்டியிட வைத்தது. அந்த முதிய அறிவியலாளர் மதபீடங்களின்முன் மண்டியிட்டு, தன் மதவிரோதக் கருத்துகளைத் துறந்து சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது எனத் தலை தாழ்த்திக் கூறிய அந்த ஆண்டில்தான் ஸ்பினோஸா பிறந்தார். அவர் பிறந்த காலக்கட்டத்தில் புனித விசாரணையாளர்கள் ஊர் ஊராகச் சென்று மதவிரோதிகளைக் கட்டிவைத்து, நடுச்சந்தியில் எரித்துக்கொண்டிருந்தார்கள்.

அக்காலக்கட்டத்தில் ஐரோப்பாவில் புதிய சிந்தனைகள் உருவாகிக்கொண்டிருந்தன. கிழக்குடன் ஐரோப்பாவுக்கு ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, கிறிஸ்தவத்துக்கு முந்தைய தத்துவ தரிசனங்கள் மறுபிறப்பெடுத்து அறிவியலை வேகமாக முன்னகர்த்திக்கொண்டிருந்தன. அரிஸ்டாடிலின் தத்துவத்தை உறைய வைத்து, அதன்மீது எழுப்பப்பட்ட அதிகார இறையியல் ஆட்டம் கண்டிருந்தது. அதன் விளைவாக சமுதாயத்தின் அனைத்து அதிகார பீடங்களும் அச்சம் கொண்டிருந்தன. ஐரோப்பியப் பொதுபுத்தி, ஒரு வில்லனைத் தேடியது. எல்லாப் பிரச்னைகளையும் உருவாக்கும் சதிகாரர்களாக ஒரு குழுவை அடையாளம் காணவேண்டும்.

ஏற்கெனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக, ஏசுவைக் கொன்றவர்கள் என கொலைப்பழி சுமத்தி யூதர்களை அடக்கிச் சுரண்டிக்கொண்டிருந்த ஐரோப்பிய வரலாற்றில், புனித விசாரணை (Holy Inquisition) ஒரு புதிய அச்சுறுத்தலாக யூதர்கள்மேல் அனல் அலையடித்தது. கத்தோலிக்க நாடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள் கூட்டம் கூட்டமாக அதைவிடக் கொஞ்சமாவது பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்தார்கள். அப்படி ஸ்பெயினிலிருந்து ஹாலந்துக்கு ஓடிவந்த யூதக் குடும்பங்களில் ஒன்றுதான் ஸ்பினோஸாவின் குடும்பம்.

ஸ்பினோஸா யூத வழக்கப்படி அவர்களின் மத, தத்துவ, மறைஞானப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றார். அக்காலக்கட்டத்தில் ஐரோப்பாவில் தெகார்த் (Descartes) என்கிற தத்துவவியலாளரின் கருத்துகள் சிந்திக்கும் மக்களிடையே பெரும் செல்வாக்கு கொள்ள ஆரம்பித்திருந்தது. ஸ்பினோஸா தீவிரச் சிந்தனையாளர். நிறுவன மத நம்பிக்கைகளை மெல்ல மெல்லக் கேள்வி கேட்க ஆரம்பித்தார். ஹாலந்தில் இருந்தது புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவ அதிகாரம். ஆனால் அவர்களுக்கும் யூத வெறுப்பு இருந்தது. யூதர்கள்மீது சந்தேகம் இருந்தது. இவர்கள் சதிகாரர்கள். சமூகத்தில் குழப்பம் விளைவிப்பவர்கள். எந்தக் கலகக்காரச் சிந்தனையையும் ஒரு யூதன்தான் தூவுவான் என்கிற மாதிரியெல்லாம் பார்த்து வந்தார்கள்.சும்மா மெல்கிற வாய்க்குள் அவல் போட்டதுபோல ஸ்பினோஸாவின் செயல்கள் நடந்துகொண்டிருந்தன.

ஆம்ஸ்டர்டாம் நகரின் புரோட்டஸ்டண்ட் மதத்தலைமை, ஸ்பினோஸாவையும் அவரோடு சேர்ந்து யூத சமுதாயத்தையும் எரிச்சலுடன் கண்காணிக்க ஆரம்பித்தது. எப்போது யூதர்கள் ஹாலந்திலிருந்து வெளியேற்றப்பட்டு நம் கைக்குள் விழுவார்கள் என ஹாலந்தின் எல்லைக்கு வெளியே கத்தோலிக்க சபையின் புனித விசாரணையாளர்கள் நாக்கில் நீர் ஊற, கைகளை ஆர்வத்துடன் பிசைந்தபடி காத்திருந்தனர். பொதுவாகவே கல்வியையும் அறிவுலக விவாதங்களையும் பெரிதும் ஆதரிக்கும் யூத சமுதாயத்துக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே வழிதான் இருந்தது.

யூத மதத் தலைமை மிக அரிதாக மேற்கொள்ளும் ஒரு வழி. கொடுமையான வழி. ஒரு யூதனை அவன் யூதனல்ல என அறிவிப்பது. அவனுக்கு ஆன்ம ரீதியாக யூதச் சமுதாயத்திடம் எவ்விதத் தொடர்பும் இல்லை என அறிவிப்பது. அதை ஒரு சடங்காகச் செய்வார்கள். நமது திரைப்படங்களில் கோபத்தில் மகனோ மகளோ உயிரோடு இருக்கும்போதே பெற்றோர் தலை முழுகிவிட்டேன் என்று ஈமச்சடங்குகளைச் செய்வார்களே, அதைவிடவும் கொடுமையான சடங்கு யூத சமுதாயத்திலிருந்து ஒரு யூதனை விலக்குவது. தனிமையான இருட்டு அறையில் விவிலிய சாபங்கள் முழங்கும். சமுதாய விலக்கம் செய்யப்படும் நபரின் ஆன்ம வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்தைக் காட்டும் மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாக அணைக்கப்படும். அந்த நபருடன் அத்தோடு யூத சமுதாயத்தின் தொடர்பு அறுந்துவிடும். இந்தச் சடங்கின் மூலம் யூத சமுதாயத்துக்கு ஸ்பினோஸா என்ற நபரே இல்லாமல் ஆகிவிடுவார். எல்லாவற்றுக்கும் மேலாக கிறிஸ்தவ அதிகாரிகளுக்கு ஸ்பினோஸாவின் கருத்துகளுக்கும் யூத சமுதாயத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது புரிந்துவிடும்.

இது நடந்தபோது ஸ்பினோஸாவின் வயது 24.

அப்படி என்னதான் சொல்லிவிட்டார் ஸ்பினோஸா?

விவிலியம் இறை நூல் என்பதை அவர் மறுத்தார். எந்த நூலும் இறைவெளிப்பாடாக இருக்க முடியாது. அறிதலும் அறிவுமே முக்கியம். அறிவுக்குப் புறம்பாக இருக்கும் எந்த மத நம்பிக்கையும் மத நூலும் புறந்தள்ளப்படவேண்டியது.
எனில் ஸ்பினோஸா வறட்சியான அறிவுவாதியா? இல்லை. அதுதான் ஸ்பினோஸாவை மிகவும் ஆச்சரியமான மனிதராக்குகிறது. ஆழமான ஆன்மிக ஞானி அவர்.

ஒரு வஸ்து, சத்தியமாக அதுவே உலகமாகி இருக்கிறது. அதுவே தெய்வம். அதைப் பொருத்தமட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள், ஒரே குமாரன், இறுதி இறைத்தூதர் என்று எதுவும் கிடையாது. ஆனால் முடிவிலித் தன்மைகளுடன் குண வேறுபாடுகளுடன் அந்த ஒரே வஸ்து தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. அனந்த குணப் பரப்பு உதிக்கும் பொருள். அனைத்து உலகையும் தன்னிடத்தில் ஈண்டி இருந்து கறக்கும் பொருள். அந்தப் பொருளே இறை. ஆனால் இந்தக் குண வேறுபாடுகளும் எண்ணற்ற தன்மையில் வெளிப்படும் தோற்றங்களும் கடலில் எழும் அலைகளே. அவை கடலல்ல. ஆனால் கடலிலிருந்து பிரிந்து அவற்றுக்கு இருப்பும் இல்லை. இந்தச் சத்தியத்தை அறிவது – அதுதான் உண்மையான இறை அன்பு.

ஸ்பினோஸா ஒரு அருமையான சொற்றொடரை உருவாக்கினார். “அறிவுபூர்வமான இறை அன்பு” (intellectual love for God -“amor Dei intellectualis”). இது ஒரு பொருளுடன் ஓர் உறவினை ஏற்படுத்துவதல்ல. அறிவது. புத்தி அதன் பரிபூரண செயல்படு நிலையில் அதன் எல்லாச் சார்புத் தன்மைகளையும் சாய்வுகளையும் விட்டு அறியும் ஓர் நிலையில் இந்த அறிதல் ஏற்படுகிறது என்கிறார் ஸ்பினோஸா. இது அகமுகமாக ஏற்படும் பரிபூரண அறிதல் என்கிறார். இதற்கு அற்புதங்கள் தேவை இல்லை. நம்பிக்கை தேவை இல்லை. தொடர்ந்த ஞானத் தேடல் மட்டுமே தேவை. இந்த அறிவை மூன்றாவது அறிதல் என்கிறார். அதனை உருவாக்குவதே உண்மையான மதத்தின் ஒரே கடமை. அதனை நிச்சயமாக நிறுவன மதங்கள் (அதுவும் அவர் இருந்த ஐரோப்பிய சூழலில்) உருவாக்கவே முடியாது.

பொதுவாக பாரத ஞான மரபில் கடவுள் ஒரு வஸ்துவாகவே சொல்லப்படுகிறார். இறை நம்பிக்கையைவிட இறை அறிதலும் அதிலிருந்து தோன்றும் அன்பும் நம் மரபில் கூறப்பட்டு, ஒரு வாழ்க்கை முறையாகவே வடித்தெடுக்கப்பட்டுள்ளது. நம் புராணக்கதைகள் அனைத்தும் இந்தத் தேடலுக்கு நம்மைத் தள்ளுவதற்கும் நம் மனத்தைப் பக்குவப்படுத்துவதற்குமான கருவிகள் மட்டுமே. இறுதி நிலையில் இக்கருவிகள் அனைத்தும் உதிர்ந்து விழ அந்நியமின்மை என இறை அனுபவத்தை அறிவதே ஹிந்துப் பண்பாட்டில் வலியுறுத்தப்படுகிறது. மூன்றாவது அறிவு என மிக உயர்ந்த இறையறிதலை ஸ்பினோஸா கூறுவது வியக்கத்தக்க வகையில் சைவ சித்தாந்தப் பார்வையை ஒத்திருக்கிறது. “பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான தேசன்” என்றே நாம் சிறுவயது முதல் நம் தெய்வத் திருவுருவங்களை அறிந்து வருகிறோம். பதி அறிவு என அதற்குப் பெயர். ஊனக்கண் (பசு அறிவு) பாசம் (பாச அறிவு) உணராப்பதியை ஞானக்கண்ணினால் சிந்தை நாடி அறிய வேண்டும் என்பார் மெய்கண்டார்.

ஆனால் இத்தகைய அறிதலின் சாத்தியங்களின் தொடக்கம்கூட இல்லாத ஒரு பண்பாட்டில் உச்சவானில் ஞானச் சிறகு விரித்து தனியாகப் பறந்துகொண்டிருந்தார் ஸ்பினோஸா. உயர்ந்த சிந்தனை. ஆனால் மிக எளிய வாழ்க்கை. கண்ணாடிகளை உரைத்துத் தேய்த்து லென்ஸ்களை உருவாக்கும் வேலையை தினமும் செய்தே அவர் வாழ்ந்து வந்தார். தன் வாழ்நாளில் ஒரு நூலை மட்டுமே தனது பெயரில் வெளியிட்டார். மற்றொரு நூலைப் பெயரில்லாமல் வெளியிட்டார். அவரது ஆகச்சிறந்த நூலான ‘எதிக்ஸ்’ அவரது மரணத்துக்குப் பின்னரே வெளிவந்தது. ஸ்பினோஸா உயிருடன் இருந்தபோது அதைப் பிரசுரிக்க முயன்றபோதெல்லாம் மதவாதிகள் அதை மோப்பம் பிடித்துத் தடுத்துவிட்டார்கள். சில நேரங்களில் ஸ்பினோஸா “நான் ஒரு புத்தகமும் வெளியிடப்போவதில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்” என்று அதிகாரிகளிடம் சொல்லவேண்டியிருந்தது.

ஸ்பினோஸா தனது 44 ஆவது வயதில் இறந்தார். கண்ணாடித்தூசி சுவாசக்குழாய்க்குள் படிவதால் ஏற்படும் ஒரு வியாதியால் அவர் இறந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

இருக்கும்போது விலக்கப்பட்டு, ஒரு சிலரைத் தவிரப் பிறரால் வெறுக்கப்பட்ட அம்மனிதரின் சிந்தனைகளின் முக்கியத்துவம் அவரது மரணத்துக்கு பின்னர் வெளிவர ஆரம்பித்தது. அறிவொளி படரப் படர மதக்கட்டுப்பாடுகள் விலக விலக, ஸ்பினோஸாவின் மென்மையான அறிவு சார்ந்த ஆன்மிகத் தத்துவம் ஐரோப்பாவின் மிகச்சிறந்த மனங்களையெல்லாம் வசீகரிக்க ஆரம்பித்தது. “நாத்திக அதிகப்பிரசங்கி” என அழைக்கப்பட்ட ஸ்பினோஸா “இறையுணர்வுப் போதை ததும்பிய ஞானி” எனவும் அழைக்கப்பட்டார். வேர்ட்ஸ்வொர்த் இயற்கையின் இறையுணர்வு நிரம்பிய தன் வரிகளில் ஸ்பினோஸாவின் தத்துவத்தைக் கவிதையாக்கினார்.

ஐன்ஸ்டைனின் வார்த்தைகள், ஸ்பினோஸா அறிவியலுடன் இணைந்த ஆன்மிக தரிசனத்தை, ஆபிரகாமிய இறையியல் சிறையில் வாடும் மேற்கத்திய ஞானத் தேடலுக்கு அளித்திருக்கிறார் என்பதற்கான எடுத்துக்காட்டு. ஆனால் உண்மையில், விடுதலையாகி நிற்கும் இந்தக் கடவுளை நீங்கள் உணரத்தான் முடியும். அனுபவிக்கத்தான் முடியும். நம்ப முடியாது. நம்பவும் கூடாது.

ஏனெனில் ஸ்பினோஸாவின் கடவுள் ஊன்றுகோல் அல்ல, சிறகு.

மேலதிக விவரங்களுக்கு:

· வில் டூரண்ட், The Story of Philosophy, Pocket Books, 1991

· The Cambridge Companion to Spinoza (ed. Don Garret) , Cambridge University Press, 1996

· எஸ்.எம்.மெலாமட், Spinoza and Buddha Visions of a Dead God, READ BOOKS, 2007

· லெய்டெக்கர், KF, “Spinozism and Hinduism,” The Open Court, Vol. 48, October 1934

· க.வச்சிரவேல் முதலியார், சைவசித்தாந்த்த் திறவு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1980

source tamil paper.net

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நற்றுணையாவது நமச்சிவாயமே
இறையன்
இறையன்
Admin

Posts : 433
Join date : 11/12/2011

https://tamilan.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum