Latest topics
ராகுல் டிராவிட்டின் ஒருநாள் வாழ்க்கை-கிருஷ்ணன் சந்திரசேகரன்
Page 1 of 1
ராகுல் டிராவிட்டின் ஒருநாள் வாழ்க்கை-கிருஷ்ணன் சந்திரசேகரன்
ராகுல் டிராவிட் செப்டம்பர் 2011ல் தனது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அரணாக விளங்கிய டிராவிடின் திறமையை டெஸ்ட் போட்டிகளில் உலகம் அங்கீகரித்த அளவு, ஒரு நாள் போட்டிகளில் அங்கிகரிக்கவில்லை. கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் செய்பவர்களை ஆல் ரவுண்டர் என்று சொல்வார்கள். ஆனால் டிராவிடின் கிரிக்கெட் காலத்திற்குப்பின் அவர்களைப் பாதி ஆல்ரவுண்டர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், விக்கெட் கீப்பிங், பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என்று அனைத்துத் துறைகளிலும் அவர் இயங்கியிருக்கிறார்.
2007க்குப் பின்னர், திராவிடின் ஒருநாள் போட்டி வாழ்க்கை ‘உள்ளே வெளியே’ விளையாட்டுப் போல ஆகிவிட்டது. 2007இல் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என்றே பலரும் நினைத்தனர். ஆனால் 2009ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டார், ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் (பொதுவாகவே இந்தியர்களின் பலவீனமாக கருதப்படுவது) தடுமாறிய ரோகித் சர்மாவுக்குப் பதிலாக. அப்போது காயம் காரணமாக வெளியே இருந்த சேவாக்கும் மீண்டும் சேர்க்கப்பட முடியாத நிலையிலிருந்ததால் அந்த இடத்தை நிரப்ப டிராவிட்டின் உதவியையே இந்திய கிரிக்கெட் போர்ட் நாடியது.
பின்னர் தென்னாப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளிலும் அவர் விளையாடினார்.இந்த இரண்டு போட்டித் தொடரிலும் அவரது சராசரி முறையே 33 மற்றும் 40. அதற்குப்பின் அவர் அணியிலிருந்து விலக்கப்பட்டர். இங்கிலாந்தில் தட்டுதடுமாறிக்கொண்டிருந்த இந்திய அணியின் சரிவைத் தடுக்க மீண்டும் ராகுல் தேவைப்பட்டார். ஒருநாள் போட்டிக்கே தகுதியில்லாதவர் என்று வர்ணிக்கப்பவரை 20-20 போட்டிக்கும் சேர்த்துக்கொண்டது நகைமுரண்.
ராகுலை மீண்டும் ஒருநாள் போட்டியில் சேர்த்த செயல் ஏறக்குறைய அவரிடம் கிரிக்கெட் போர்ட் சரணாகதி அடைந்த செயலாகவே எனக்குத் தோன்றியது. மிகவும் சிக்கல் வாய்ந்த சூழ்நிலைகளில் தொழில் நுட்பமே முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நிருபிப்பதைப் போல இந்த நிகழ்வுகள் அமைகின்றன. இது திராவிடுக்குத் தனிப்பட்ட முறையில் வெற்றி என்றாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய தோல்வி. இந்த நிலை நீடிக்காமல் இருக்க ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் டிராவிட். திராவிட் அறிவித்திருக்கும் இந்த ஒய்வு அவருக்கு மிகத் தேவையானது, மரியாதைக்குரியது.
டிராவிட் ஒரு நாள்போட்டிகளுக்கும், T20 போட்டிகளுக்கும் லாயக்கற்றவர் என்ற பிம்பம் பொதுவாக எல்லோர் மனதிலும் உண்டு. ஆனால் ஒருநாள் போட்டிகளில் நீங்கள் டிராவிடின் ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால் அப்படிப் பேச முடியாது.
- 344 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவின் தொப்பி அவர் தலையில் இருந்திருக்கிறது
- மொத்தம் 10889 ரன்கள் எடுத்திருக்கிறார்
- மிகக் குறைந்த பந்துகளில் 50 அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாவது இடம் யாருக்குத் தெரியுமா – மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் – டிராவிட்டுக்குத்தான்.
- ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் மிக அதிக பேட்டிங் ஆவரேஜ் – தோனிக்கு அடுத்தபடியாக அவருக்குத்தான். இந்த வரியைப் படித்துப் புருவத்தைச் சுருக்குபவர்களுக்காக – (73 ஆட்டங்களில் இவர் விக்கெட்டின் பின் இருந்திருக்கிறார்; அந்த ஆட்டங்களில் மொத்தம் 2300 ரன்கள் – சராசரியாக 44.23.) முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கில்கிரிஸ்ட், சங்ககாராகூட இவருக்குப் பின்தான் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?
- ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த ஜோடிகள், இதுவரை இரண்டு முறைதான் வந்திருக்கின்றன – அவை இரண்டிலும் டிராவிட் இருந்திருக்கிறார்.
- இது தவிர இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டிற்கான ஜோடிகள் எடுத்த அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்புகள் இவருடையவை.
இப்படிப்பட்ட ஒரு ஆட்டக்காரரைத்தான் நாம் ஒருநாள் போட்டிக்கு லாயக்கற்றவர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்தக் கூற்று முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். நவின கால கிரிக்கெட் மாறி விட்டதுதான் இந்தப் பிம்பத்திற்குக் காரணம். கிரிக்கெட் மெல்ல மெல்ல அதிரடி மட்டையாளர்களின் ஆட்டமாக மாறிக்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்படும் சராசரி ரன்கள் முந்தைய பத்தாண்டுகளைக் காட்டிலும் உயர்ந்து இருக்கிறது. முக்கியமாக 2001 முதலான பத்தாண்டுகளில் நடந்த ஆட்டங்களின் சராசரி ரன் ஓவருக்கு 4.93 ரன்கள். இதுவரை நடந்திருக்கும் ஒருநாள் போட்டிகளில் ஏறக்குறைய 49% ஆட்டங்கள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆடப்பட்டிருக்கின்றன. இதுவரை ஒருநாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட ரன்களும் இதே விகிதத்தில்தான் இருக்கின்றன. இத்தனை அதிக ரன்களும், ஓவருக்கு 5 ரன்கள் விகிதத்தில் எடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் போட்டியின் தன்மை எப்படி மாறியிருக்கிறது என்பது புலப்படும்.
குறிப்பாக டிராவிட் ஆடவந்த 1996 முதலான ஆட்டங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்று பார்த்தால் கிட்டத்திட்ட ஓவருக்கு 4.9 ரன்கள் சராசரியாக ஒவ்வொரு ஓவரிலும் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் டிராவிடின் strike rate ஒருநாள் போட்டிகளில் 71%தான். அதாவது. அவர் ஒரு ஓவர் முழுவதும் விளையாடினால் அவரால் 4.3 ரன்கள்தான் எடுக்க முடிந்திருக்கிறது. அது மட்டுமன்றி, இந்திய மட்டையாளர்கள் மத்தியிலும் குறைந்தது 100 ஆட்டங்கள் ஆடி 2000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தவர்களின் பட்டியலில்கூட டிராவிட் மிகவும் பின்தங்கியே இருக்கிறார். இவருக்கும் கீழே பட்டியலில் இருப்பவர்கள், அவருக்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களே. (கீழே இருக்கும் பட்டியலில் அவரது கடைசி நான்கு ஒருநாள் போட்டிகள் கணக்கில் கொள்ளப்பட்டவில்லை.)
மட்டையாளர்களுக்குச் சாதகமான ஃபார்மெட்டாக மாறிக்கொண்டிருக்கும் இந்த ஆட்ட வடிவில், அவரது குறைவான ஸ்ட்ரைக் ரேட் அவருக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல், அவரது பிம்பத்துக்குக் காரணமாக அமைந்தது என்று நான் கருதும் மற்றொரு காரணி – அவர் சம்பிரதாய முறையிலிருந்து கொஞ்சமும் வழுவாமல் கிரிக்கெட் விளையாடுவதே. டெண்டுல்கருக்கு ஒரு பேடில் ஸ்வீப், சேவக்குக்கு ஒரு ஊப்பர் கட், தோனிக்கு ஒரு ஹெலிகாப்டர் ஷாட், பீட்டர்சனுக்கு ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் இருப்பது போல, டிராவிடுக்கு ஒரு முத்திரை ஸ்ட்ரோக் கிடையாது. அவர் புதிய ஸ்ட்ரோக் எதையும் ரன் எடுக்கும் பொருட்டு உருவாக்கவில்லை. ஒருநாள் போட்டியில்கூட கடைசி வரை அவர் ஆடியது காப்பி புக் கிரிக்கெட்தான். ஒரு கவர் ட்ரைவுக்கு, பந்தின் அருகாமை வரை காலை நகர்த்தி (lean for the drive என்று சொல்வார்கள்) இன்றும் ஆடும் மிகச்சில கிரிக்கெட்டர்களில் இவர் முக்கியமானவர்.
டிராவிட்டிற்குச் சமமானவர்கள் என்று நான் உலக கிரிக்கெட்டில் கருதும் சிலரின் சாதனைகளை கீழே தந்திருக்கிறேன் அதைப் பார்த்தால் டிராவிடின் ஒருநாள் சாதனை யாருக்கும் குறைந்ததில்லை என்பது புலனாகும்.
(மேலே இருக்கும் படத்தில் ஹாஷிம் ஆம்லா, பீட்டர்சன், ட்ராட் போன்றோரையும் நான் சேர்க்கவே விரும்புவேன் – ஆனால் அவர்கள் டிராவிடின் காலத்திற்குச் சற்று பின்னால் வந்தவர்கள் என்பதால் அவர்களது சாதனையை டிராவிடோடு ஒப்பிட விரும்பவில்லை.)
ஒருநாள் போட்டிகளில் டிராவிட்டின் சாதனைக்கான முக்கியமான காரணம் அவர் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு போராளியாகவே இருந்திருக்கிறார். கடினமான விளையாட்டுச் சூழ்நிலைகளிலும், அட்டம் கைநழுவும் சூழ்நிலைகளிலும் இந்தியாவின் வெற்றிக்காகச் சுழன்றிருக்கிறது அவர் மட்டை.
அவரது கேரியரின் துவக்கம் போற்றத்தக்க வகையில் அமையவில்லை. 1996ல் உலகக்கோப்பையை ஏந்திய கையோடு சிங்கப்பூருக்கு விமானம் ஏறிய இலங்கை அணிக்கு எதிராக, சிங்கர் கோப்பையில் அறிமுகமானார். உலகக் கோப்பை ஆட்டத்தின் அரை இறுதியில் தோற்ற கவலையில் அழுதுகொண்டே ஓடிய வினோத் காம்ப்ளிக்கு, பதிலாக அணியில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தார் டிராவிட். 2 ஆட்டங்களில் 7 ரன்கள் – மிகச்சிறிய படாங் மைதானத்தில். இந்த மைதானத்தில்தான் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 50 விளாசி உலக சாதனையை ஏற்படுத்தினார் ஜெயசூர்யா.
அதன் பிறகு சார்ஜா – பாகிஸ்தானுக்கு எதிராக. அந்தத் தொடரும் அவருக்கு எந்த வகையிலும் பெயர் தரவில்லை. இதே கதை கொஞ்சம் தொடர்ந்தது – அவர் தனது முதல் 8 போட்டிகளில் எடுத்திருந்தது 63 ரன்களே. இதற்கு மேலும் அவர் மேல் நம்பிக்கை வைத்துதான் இந்திய அணி அவரை டொரண்டோவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சேர்த்தது. இந்த நம்பிக்கைக்கான காரணம் இன்னதென தெளிவாகச் சொல்ல முடியாவிட்டாலும், ரஞ்சியில் அந்த வருடம்தான் அவர் அரை இறுதியில் 153 ரன்களும், இறுதி ஆட்டத்தில் 114ம் அடித்திருந்தார் – இவை காரணங்களாக இருந்திருக்கலாம். அவரது இந்த ஆட்டமே அதே வருடத்தில் ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம்பட்ட மஞ்ச்ரேக்கருக்கு பதிலாக டிராவிட் களம் புகக் காரணமாக இருந்தது. அந்த டெஸ்ட் போட்டியில் டிராவிடின் ஆட்டம் அபாரமாக அமைந்தது – இது குறித்து சவ்ரவ் கங்குலி Signature Sourav நிகழ்ச்சியில் பேசியிருப்பதை நீங்கள் கேட்கவேண்டும். மேலும், அப்போதைய இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தவர் குண்டப்பா விஸ்வநாத் என்பதை ஒரு செய்தியாக மட்டுமே பதிவு செய்கிறேன்.
டிராவிட் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து சேர்க்கப்பட்டதற்குக் காரணம் அவரது டெஸ்ட் ஆட்டங்கள் என்றால் மிகையில்லை. அப்போது டெஸ்டிற்கு தனி அணி, ஒருநாள் போட்டிகளுக்குத் தனி அணி, தனித் தனி அணித் தலைவர் போன்ற சித்தாந்தங்கள் எல்லாம் நிலை பெற்றிருக்கவில்லை. அதனாலேயே டிராவிட்டின் டெஸ்ட் போட்டி ஆட்டங்கள் அவரது ஒருநாள் போட்டிகளில் அவரது இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவியன. டொரண்டோ பயணம், டிராவிட்டுக்குச் சிறந்த மாற்றத்தைக் கொடுத்தது – 5 போட்டிகளில் 220 ரன்கள் – சராசரி 44 ரன்கள். இந்திய அணிக்கு மட்டுமல்ல டிராவிட்டுக்கும், தான் ஒருநாள் போட்டிகளில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது இந்தத் தொடர்தான்.
பின்னர் 1997 முதல் 1999 வரையிலான காலகட்டம் டிராவிட்டின் ஒருநாள் போட்டிகளில் காலூன்றுவதற்கு உதவிய காலம் என்று சொல்லாம் – மொத்தம் 2995 ரன்கள், 82 ஆட்டங்களில். இதில் டிராவிட் விஸ்வரூபம் எடுத்தது பெப்சி சுதந்திரக் கோப்பை. இந்தத் தொடர், கிரிக்கெட் ஆர்வலர்களால், சயித் அன்வரின் 194 ரன்களுக்காக நினைவில் வைத்துக் கொள்ளப்படுகிறது. (சென்னையில் ஆட்டத்திற்கு சில மணிநேரங்கள்முன் பெவிலியன் கடைக்குச் சென்று, வாங்கிய மட்டையால் இந்தச் சாதனையைச் செய்தார் என்பது பிரபலமான பேச்சாக இருந்தது.) அந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோற்றாலும் இந்தியாவின் பதிலடியை முன்னெடுத்துச் சென்றவர் டிராவிட். அவர் அடித்த 107 அன்வரின் மெகா ஸ்கோர் முன் மறைந்ததுவிட்டது. இந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்து ஒன் டிராப் இடத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டார். அதேபோல 1998ம் அண்டு இந்திய அணி நியூசிலாந்து பயணம் மேற்கொண்டபோது அதில் இந்தியாவின் பேட்ஸ்மேன்களில் பரிமளித்தவர் டிராவிட்.
இன்னுமொரு முக்கியமான ஆட்டம் 1999ல் நடந்த உலக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டம். இந்த ஆட்டம் மிக முக்கியமான ஆட்டமாக இருந்தது. இந்தப் போட்டியில் ஜெயிப்பவர்களுக்கு சூப்பர் சிக்ஸில் இடம் உறுதி என்ற நிலையும் தோற்றால் சூப்பர் சிக்ஸுக்குத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்ற நிலையும் இருந்தது. நடப்பு சாம்பியன்களாகவும், அட்டகாசமான ஃபார்மிலும் இருந்த இலங்கைக்கு எதிராக மிக அதிகமான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஒருநாள் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த ஜோடி என்ற பெருமையையும் டிராவிட் கங்குலி ஜோடி பெற்றது. காயமுற்ற மோங்கியாவுக்காக டிராவிட் விக்கெட் கீப்பிங்கும் செய்த போட்டி இது. பின்னர் இந்த பார்ட்னர்ஷிப் சாதனையை அவரே நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முறியடித்தார்.
கேரியரின் இரண்டாம் பகுதியில் அவரது பங்கு பெரும்பாலும் அணியை ஒருங்கிணைத்துச் செல்வதாகவே இருந்தது. ஒரு பக்கத்தில் விக்கெட் வீழ்ந்துகொண்டிருந்தாலும், மறுபக்கத்தில் அரணாக இருந்து பல போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெறச் செய்திருக்கிறார். இந்த பணியின்போது, மூத்த கிரிக்கெட்டர்கள் என்றில்லை, இளைய தலைமுறையினருடனும் பல முக்கியமான போட்டிகளில் ஜோடி சேர்ந்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல சில ஆட்டங்கள்.
2000ம் அண்டு சார்ஜாவில் நடந்த கோகோ கோலா சாம்பியன்ஸ் போட்டியில், இந்திய அணியில் பேட்டிங் முழுவதுமே டிராவிட்டைச் சுற்றிதான் நடந்தது. முதல் பந்தில் ஆடத்துவங்கிய அவர் 45ம் ஓவரில்தான் ஆட்டமிழந்தார். அவரது ஆட்டத்தினாலே வலுவான இலக்கை நிர்ணயித்ததுடன், இந்தியா வெற்றியும் பெற்றது.
2002ல் மேற்கத்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், 324 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக இந்திய அணி அடைய டிராவிடின் ஆட்டமே காரணம். இந்த போட்டியில், பெரிய ஆட்டக்காரர்கள் அனைவரும் ஆட்டமிழந்த பின்னரும் யுவராஜ் சிங், கைஃப், சஞ்சய் பங்கருடன் சேர்ந்து விளையாடி அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் ஆட்டமிழக்கமல் அவர் எடுத்த ரன்கள் 109.
அதே போல 2006ம் ஆண்டு மேற்கத்திய தீவுகளுக்கு எதிராக கிங்க்ஸ்டனில் நடந்த போட்டியில் கைஃபுடன் அவர் இணைந்து ஆடி 45 ஓவரில் 251 ரன்கள் என்ற இலக்கை இந்தியா அடைந்து வெற்றி பெற்றது. இதிலும் அவர் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் குவித்தார்.
பொதுவாகவே அவருடைய சாதனைகள் மேற்கத்திய தீவுகளுக்கு எதிராக நன்றாகவே இருந்திருக்கின்றன. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகவும் சராசரியாகவே இருந்திருக்கின்றது. 2007ல் அவர் அணியை விட்டு நீக்கப்படுவதற்கும் ஆஸ்திரேலியா சீரிஸும் காரணமாக அமைந்தது. அந்த தொடரில் அவர் 6 ஆட்டங்களில் மொத்தம் எடுத்ததே 51 ரன்கள்தான்.
ராகுல் டிராவிட் அளவிற்கு இந்திய கிரிக்கெட்டிற்கு முழுமையாக பங்களித்தவர்கள் யாரும் இல்லை – அணியின் தேவைக்கு ஏற்றபடி அவர் தன்னுடைய களங்களை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தார், அவை அவருக்கு சௌகரியமில்லாதவையாக இருந்தாலும். இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் கைகொடுத்ததிருக்கிறார் டிராவிட்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது ஒரு ஸ்பெஷலிஸ்ட்க்கான இடம். அவ்வளவு சுலபமான இடமல்ல. (இதன் அருமையை அறிந்தவர்களால் தோனியை குறை சொல்ல முடியாது.) பல காலம் இந்திய அணியில் விக்கெட் கீப்பர்க்கான இடம் சரியான ஆட்டக்காரரால் நிரப்பப்படாமலே இருந்தது. 2001ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஸ்டாண்டர்ட் பேங்க் மும்முனை போட்டியில், இந்திய அணிக்குக் கூடுதலான ஒரு பேட்ஸ்மேன் தேவைப்பட்டபோது, அந்தத் தொடருக்கான விக்கெட் கீப்பரான தீப் தாஸ் குப்தா அணியிலிருந்து நீக்கப்பட்டு லக்ஷ்மண் சேர்க்கப்பட்டார். அப்போது காலியாக இருந்த விக்கட் கீப்பர் பொறுப்பை ஏற்றுக்கொண்டர் டிராவிட். அதன்பிறகு தொடர்ச்சியாக அவர் விக்கெட் கீப்பிங் செய்திருக்கிறார். அவருக்கு அந்தப் பொறுப்பு அதீத கஷ்டம் கொடுப்பதாகவே இருந்தது. அவர் இது குறித்து வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். பின்னர் பார்த்தீவ் படேல் அந்த இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரும் சரி வராமல், தோனியால் அந்த இடம் இப்போது நிரப்பப்பட்டிருக்கிறது. இப்போதுகூட நடந்த டெஸ்ட் போட்டியில், டிரவிட் தோனி பந்து வீசும்போது டிராவிட் கீப்பிங் செய்த தருணத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருமே ரசித்திருப்பார்கள்.
டிராவிட் 2005 முதல் 2007 வரையிலான காலகட்டங்களில் இந்திய அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். சேப்பல் செய்த கூத்திற்குப்பின் கங்குலி கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர், இந்திய அணியை ஒருங்கிணைக்கும் சீனியர் ஒருவர் கேப்டனாக நியமிக்கும் தேவை ஏற்பட்டது. அந்த பொறுப்பு டிராவிட்டுக்கே கொடுக்கப்பட்டது. தோனி ஒரு ஸ்திரமான தலைவராக உருவாகும் காலம் வரை இந்தியத் தலைமை ஏற்றார் டிராவிட். அவர் தலைமையில் இந்தியா பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. உலகக் கோப்பையில், பங்களாதேஷிடமும், இலங்கையிடமும் உதை வாங்கினோம். சரியான சமயத்தில் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார்.
இந்திய கிரிக்கெட்டின் அடையாளம் என்று சச்சின் பார்க்கப்படுவது எவ்வளவு சரியோ அந்த அளவிற்கு சரி, டெஸ்ட் போட்டிகளின் அடையாளமாக டிராவிட் பார்க்கப்படுவதும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவருக்கான நியாயமான இடம் வழங்கப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. அவர் போன்ற ஒரு முழுமையான கிரிக்கெட் அளுமையை உலக அரங்கிலேயே அடையாளம் காட்டுவது அரிது. எதிர்காலத்தில், இந்தியாவிற்கு இன்னொரு சச்சின் கிடைக்கக்கூடும். பல சேவாக்குகளும், தோனிகளும் கிடைக்கக்கூடும். ஆனால், டிராவிட் போன்ற ஒரு ஆட்டக்காரர் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. Puristகளின் கடைசி பிரதிநிதியாக இந்திய அணியில் தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தை ஆடிவிட்டு ஓய்வில் திரும்பியிருக்கிறார்.
இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தத் தன்னை மற்ற ஆட்ட வடிவங்களிலிருந்து பிரித்துக்கொண்ட டிராவிட், இந்த முடிவை எடுத்திருக்கிறார். அவர் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெரும் அந்த நாளில்தான் anchor innings ஆடுபவர்களின் பங்கு கிரிக்கெட்டில் எவ்வளவு அளப்பரியது என்பதை நம்மால் உணர முடியும். ஆனால் அதுவரை டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்போடு இருக்கவேண்டும்.
-கிருஷ்ணன் சந்திரசேகரன்
source tamilpaper.net
Similar topics
» வேதகிரி -கிருஷ்ணன்
» அருணகிரிநாதர்-சிங்கை கிருஷ்ணன்
» சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.
» இடைக்காடர்- சிங்கை கிருஷ்ணன்
» குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன்
» அருணகிரிநாதர்-சிங்கை கிருஷ்ணன்
» சிவ வாக்கியர்-சிங்கை கிருஷ்ணன்.
» இடைக்காடர்- சிங்கை கிருஷ்ணன்
» குகை நமச்சிவாயர்-சிங்கை கிருஷ்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Thu Aug 28, 2014 10:03 am by கே இனியவன்
» ஒரு முக்கோணம் - தொலைந்து போகும் மனிதர்கள் - புரியாத மர்மம்
Thu Aug 28, 2014 10:01 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் மூன்று துறவிகள் -சுரா
Thu Aug 28, 2014 10:00 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் எலியாஸ் -சுரா
Thu Aug 28, 2014 9:59 am by கே இனியவன்
» டால்ஸ்டாயின் அன்பு எங்கு உள்ளதே - சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» கென்யா நாட்டு சிறுகதை தமிழில் சுரா
Thu Aug 28, 2014 9:58 am by கே இனியவன்
» இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதை
Thu Aug 28, 2014 9:57 am by கே இனியவன்
» பிரம்மராஜன் கவிதைகள்
Thu Aug 28, 2014 9:56 am by கே இனியவன்
» K Iniyavan
Thu Aug 28, 2014 9:41 am by கே இனியவன்
» K Iniyavan -karuththu
Thu Aug 28, 2014 9:37 am by கே இனியவன்